இந்தியாவுக்கே கோபம் வந்துவிட்டது

ரஷ்யா தன் ஆயுத விளையாட்டை இம்முறை வேறுமாதிரி ஆட இந்தியாவுக்கே கோபம் வந்துவிட்டது, சரிதான் போய்யா என பாதியில் கிளம்பிவிட்டது இந்திய குழு

அதாவது இந்திய ரஷ்ய கூட்டுதயாரிப்பான பிரம்மோஸ் போல இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து 5ம் தலைமுறை போர்விமானமான ஸெடெல்த் நுட்பத்துடன் கூடிய சு 57 ரக விமானங்களை தயாரிக்க முடிவு செய்தன‌

ஆனால் ரஷ்யா தொழிநுட்பத்தை தரமுடியாது, தகரமும் பெயின்டும் நீங்கள் கொண்டுவாருங்கள் இன்சினும் தொழில்நுட்பமும் நாங்கள் மாட்டுகின்றோம் ஆனால் விலையில் பாதியினை நீங்கள் கொடுக்க வேண்டும் என்றது

ஆகா பெயிண்டும் தகரமும் இன்னும் சிலவும் கொடுத்து பெரும் பணமும் கொடுத்து இவ்வளவு விலையில் விமானம் வாங்கவா? நாம் என்ன கேணையர்களா? தொழில் நுட்பம் தராமல் எப்படி என இந்தியா எதிர்த்தது

ரஷ்யாவோ நீ முறுக்கு கொண்டுவா நான் கல் கொண்டு வருவேன் இருவரும் சேர்ந்து இடித்து உண்ணலாம் என தன் வழக்கமான பிடிவாதத்தில் இருந்தது

அவர்கள் கேட்கும் பணத்திற்கு பத்து ரிசர்வ் வங்கியும் அதன் உபரி நிதியும் மொத்த நிதியும் இன்னும் கலாநிதி தயாநிதி உதயநிதியின் மொத்த சொத்தையும் கொடுத்தாலும் போதாது

அவ்வளவு விலை

இதனால் ஆட்டத்துக்கு நாங்கள் வரவில்லை என துண்டை உதறி தோளில் போட்டுவிட்டு கிளம்பியது இந்தியா

நீ வரலண்ணா போ, அதோ அவர் வருவார்ல என சீனாவினை இழுக்கின்றது ரஷ்யா

ஆம் சு 57 எனும் நவீன விமானத்தை சீனாவுடன் சேர்ந்து தயாரிப்போம் என்பது போல் பாவனை காட்டுகின்றது

அதாவது இப்படி சொன்னால் அய்யன்மீர் எவ்வளவு செலவானாலும் நாங்கள் தருகின்றோம் என இந்தியா ஓடிவரும் என்பது அவர்கள் கணக்கு

ஆனால் அவர்கள் சீனாவிடமே செல்லட்டும் நிச்சயம் இந்த விலைக்கு சீனா ஒத்துவராது, நம்மிடமே வருவார்கள் அப்பொழுது வைத்துகொள்ளலாம் என திட்டமிடுகின்றது இந்தியா

ஆக விவகாரம் பருத்திவீரன் பட பாணியில் செல்கின்றது

ஆட்டத்தின் பாதியில் இவனுக இன்னும் எத்தனை குடிய கெடுக்க போறானுகளோ என தலையில் அடித்தபடி வந்துவிட்டது இந்தியா

ரஷ்யாவோ “அண்ணே சீனா அண்ணே, கயிரோடு கிளம்பிட்ட‌ போறியாண்ணே, உலகத்த கட்டி இழுக்க போறியாண்ணே.. உனக்கென்ன ஒருநாளு உலக வல்லரசாயிருவ..” என்றபடி ஆட்டத்துக்கு சீனாவினை அழைக்கின்றது

சீனாவும் “ஐரோப்பாவுல தான் நீங்க கிங்கு, ஆசியாவுல நாங்கதான். உடனே பிளைட் செஞ்சி டிரம்ப் மூஞ்சில குத்தணும்..” என சொன்னபடியே செல்கின்றது

இருந்து பாருங்கள், அதே கயிரோடு சீனா கொஞ்ச நாளில் கயிரோடு அழுது கொண்டுவரும், யாராவது “என்னண்ணே உலகை கயிறு கட்டி இழுக்க போகின்றீர்களா” என கேட்டால் “ம்ம்ம் நாண்டுகிட்டு சாக, இவனுக இன்னும் எத்தனை குடிய கெடுப்பானுகளோ.. ” என தலையில் அடிக்கும் பதில் வரும்