இந்நாட்டில் மக்கள் உயிரை காக்கும் ஒரே வழி..

இந்திய மாநிலங்களில் தனி சிறப்பு கொண்டது பீஹார்

அது மகத நாடு என அழைக்கபட்டது, மஹாபாரத காலத்திலே அது வாழ்வாங்கு வாழ்ந்திருந்தது

பவுத்தமும் சமணமும் அங்குதான் தோன்றின‌

புகழ்பெற்ற நாளந்தா பல்கலைகழகம் அங்குதான் இருந்தது

பாஹியானும், யுவான் சுவாங்கும் பல்லாயிரம் மைலுக்கு அப்பால் இருந்து அதை தேடிவந்து வணங்கினர்

குப்தர் முதல் அசோகர் வரை எத்தனையோ பொற்காலங்களை கண்ட பூமி அது

தரையில் கங்கையும் அதன் துணையாறுகளும் அதை செழிப்பாக்கின, தரைக்கு அடியில் கனிமவளங்களும் அள்ளி கொடுத்தன‌

ஒன்றா இரண்டா அதன் வளம்?

எல்லாம் நிறைந்த பொன்விளையும் பூமியாக அது இருந்தது, அந்த பூமி அப்படி கொழித்தது

அதன் அருமை எல்லோருக்கும் தெரிந்தது போலவே பிரிட்டிசாருக்கும் தெரிந்தது, கல்கத்தாவினை தன் தலைநகராக கொண்டிருந்தாலும் பீகாரை தன் வர்த்தக பூமியாக மாற்றினான்

அதன் சுரங்கங்களும் வயல்வெளிகளும் அள்ளி அள்ளி கொடுத்தன‌

1900களின் கடைசியிலே தடுமாற தொடங்கியது பீகார்

அதன் செல்வம் குவிந்த அளவு கல்வி வளரவில்லை, அதன் தன்மை அதற்கு வழிவிடவுமில்லை

சுல்தான்கள் போன்ற மன்னராட்சியும் அதன் விதிப்படி அதை நாசமாக்கின‌

“கடல் இல்லா நாடு குடல் இல்லா உடலுக்கு சமானம்” என்பது போல துறைமுகம் இல்லா பீகார் சரிவினை தொடர்ந்தது

அதை தூக்கி நிறுத்துவார் இல்லை

விவசாயம் எல்லோர் வாழ்விலும் மண்ணை அள்ளி போட்டது போல அவர்கள் வாழ்விலும் போட்டது, ஆனால் மண்ணுக்குள் இருக்கும் கனிமம் அவர்களை வாழவைக்க போதுமானது, அதை செய்யவும் ஆளில்லை

கல்வியறிவு இல்லா மக்கள், ஆளாளுக்கு தலைவர் என கிளம்பிய கூட்டம், இன்னும் பல்வேறு கும்பல்களின் கூலிபடைகள் எல்லாம் சேர்ந்து அதனை அதல பாதாளத்தில் தள்ளின‌

விவசாய தோல்வியும் பரகாசுர கம்பெனிகளின் சுரங்கங்களும் அம்மாநில மக்களை நாசமாக்கின‌

வறுமையும் துயரமும் அவர்களின் வாழ்க்கை சொத்தானது

எந்த அரசும் அவர்களை உயர்த்தமுடியவில்லை எல்லாம் தோல்வியிலே முடிந்தன‌

வாழ்வாங்கு வாழவேண்டிய மாநிலம் அவர்கள் அறியாமையாலும் அமைவிட தன்மையாலும் தாழகிடக்கின்றது

அறியாமையே அவர்கள் எதிரி

இப்பொழுது அந்த சாபம் வாங்கிய மாநிலத்தின் கூடுதல் சாபமாக குழந்தைகள் கொத்து கொத்தாக மடிந்து சாகின்றார்கள்

மூளை காய்ச்சலுக்கு இதுவரை 115 குழந்தைகள் பலி

அந்த மொட்டுக்கள் செத்துவிழும் மருத்துவமனையின் பெயர் கிருஷ்ணா மருத்துவமனை

குழந்தைகள் ஒருநாட்டின் வரம், எதிர்காலம்

அட பீகார் அரசுக்குத்தான் அக்கறை இல்லை, மத்திய அரசவாது உடனே களமிறங்கியிருக்க வேண்டாமா?

நோயும் காலமும் யாருக்கு காத்திருக்கும்?

ஆட்டு மந்தையில் வரும் நோய்களால் சாகும் ஆட்டுகுட்டிகள் போல அக்குழந்தைகள் செத்துகிடக்கின்றன‌

ஏன் இப்படி ஆயிற்று நிலை?

தெற்கின் தன்மை வேறு, இங்கு வெள்ளையன் மன்னர் ஆட்சி அல்லாமல் நேரடியாக கவர்னர் மூலம் ஆண்டான்

அதனால் நவீன கல்வி முதல் மருத்துவமனை வரை அன்றே இங்கு அவனால் கொண்டுவரபட்டது

கடற்புற மாநிலம் என்பதும் தமிழ்நாட்டுக்கு கூடுதல் பலம், துறைமுகங்கள் இருந்ததால் பல வசதிகள் கிடைத்தன‌

வெள்ளையன் காலத்து வளமான பீகார் பின்னாளில் நாசமானது போல இங்கு ஆகவில்லை

காரணம் இங்கு வளர்ச்சி சீரான வேகத்தில் இருந்தது குறிப்பாக கல்வி வெள்ளையன் காலத்துக்கு பின்பும் தடையின்றி வளர்ந்தது

அவ்வகையில் தமிழ்நாடு ஆசிபெற்றதே

எனினும் பள்ளிகள் வரை சென்னையில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்ட நிலையில் சென்னை மருத்துவமனைகளும் அப்படி ஆகிவிடுமோ என அச்சம் மேலிடுகின்றது

அதை அரசு விரைந்து தடுத்தாக வேண்டும் இல்லை பீகாரிய மருத்துவமனை அளவு சென்னையும் சென்றாகிவிடும்

பீகாரில் நடந்திருபது வதை கொலை, இந்த பாவத்துக்கு மத்திய அரசுக்கும் பங்கு உண்டு , மாநில அரசுக்கும் மீதி உண்டு

ஆறாது, அழுதாலும் தீராத சோகம் இது

இந்நாட்டின் பின் தங்கிய மாநிலத்தில் பிறந்து செத்துவிட்ட அந்த பிஞ்சுகளுக்காய் அழுவோம்..

அதை தவிர என்ன செய்யமுடியும்?

இனியாவது அரசுகள் விழிக்கட்டும், எஞ்சியிருக்கும் குழந்தைகள் விரைந்து காக்கபடட்டும்.

இந்நாட்டுக்கு நிச்சயம் ஏகபட்ட மருத்துவர்கள் தேவை

இந்த நீட் இம்சைகள் இல்லாமல் நல்ல மருத்துவர்களை உருவாக்கலாம், தேவை ஏற்படின் படித்து முடித்த பின் அவர்களுக்கு என்ன தேர்வையும் வைக்கலாம்

முதலில் செய்ய வேண்டியது விரைந்து மருத்துவர்களை உருவாக்குவது

இரண்டாவது செய்யவேண்டியது அரசு பணத்தில் படித்த மருத்துவர்கள் வெளிநாட்டுக்கு செல்லாமல் தடுப்பதும் இந்நாட்டின் அரசு மருத்துவமனையில் மட்டும் பணியாற்றுமாறு கட்டளை பிறப்பிப்பதுமாகும்

அதுவே இந்நாட்டில் மக்கள் உயிரை காக்கும் ஒரே வழி..