இரட்டை குடியுரிமை

இனியும் நாம் குடியுரிமை மசோதா பற்றி ஒன்றும் சொல்லாவிட்டால் நாம் இருப்பதையே மக்கள் மறந்துவிடுவார்கள் என அஞ்சிய பழனிச்சாமி கோஷ்டி, அவசரமாக வந்து எதையோ சொல்லிகொண்டிருகின்றது

வழக்கமாக திமுகவினை சரியாக சாடினார்கள், 15 வருடம் மத்தியில் இருந்த திமுக ஈழமக்கள் குடியுரிமைக்கு என்ன செய்தது என சீறினார்கள்

அத்தோடு முடித்திருந்தால் அவர்களுக்கு அறிவு இருக்கின்றது என பொருள்

ஆனால் திமுக அளவு நாங்களும் அடிமுட்டாள்கள் என காட்டவேண்டாமா என்ன?

ஈழதமிழருக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என சொல்லிவிட்டு அவர்கள் போக்கில் சென்றுவிட்டார்கள்

இரட்டை குடியுரிமை என்றால் இரட்டை இலைக்கு வாக்கு போல எளிதாக எண்ணிவிட்டார்களோ என்னமோ?

இதெல்லாம் எவ்வளவு பெரிய விவகாரம் என தெரியாமலே சொல்லியாயிற்று, அவர்களுக்கென்ன? ஆட்சி என்றால் என்ன தெரியாமலே அதை நடத்துவார்கள்

கொள்கை இல்லாமலே கட்சியும் நடத்துவார்கள்

இனி ஐரோப்பிய ஈழதமிழர்கள் ” ஜெயகுமார் அண்ணை, நாங்களும் தொப்புள் கொடியளே எங்களுக்கும் தமிழகம் வர ஆசை இருக்குமே, என்ன செய்ய போறியள்” என கேட்டால் “அவ்வளவுதானே முக்குடியுரிமை வழங்க வலியுறுத்துவோம்” என மிக இயல்பாக சொல்லிவிட்டு செல்வார்கள்

ஆக தமிழக ஈழவாசிகளுக்கு இரட்டை குடியுரிமை , ஐரோப்பிய ஈழத்தவருக்கு முக்குடியுரிமை , அமெரிக்க ஈழதமிழருக்கு சர்வ கண்ட‌ குடியுரிமை என பல திட்டம் வைத்திருக்கின்றது அதிமுக