இளையராஜா போல எழுந்த ரகுமான் அவரைபோலவே சரிவார் என்பதை காலம் விரைவில் சொல்லும்..

அந்த வைரமுத்து இளையராஜா மேல் அன்று கொந்தளிப்பில் இருந்தார், தன்னாலும் இளையராஜா இல்லாமல் நிற்கமுடியும் என நிரூபிக்க வேண்டிய வெறியும் அவசியம் அவரிடம் இருந்தது

அந்த ஏ.ஆர் ரகுமானும் போராடிகொண்டிருந்தார் தன்னை உலகுக்கு காட்ட வேண்டிய அவசியம் அவருக்கும் இருந்தது

இரு ஜாம்பவான்கள் ஒன்றாக களத்துக்கு வந்த காட்சி மோடி அமித்ஷா போல இல்லை இல்லை அர்ஜூனனும் கண்ணனும் போல அப்படி கலக்கியது

இதே காலத்தில் வாலியும் ரகுமானும் இணைந்தது கண்ணனும் பலராமனும் போன்ற காலங்கள்

ஆம் அந்த தமிழும் ரகுமானின் இசையும் அப்படி பொருந்தின‌

தேனும் திணைமாவும், தென்றலும் சாரலும் என்பது அதுதான், அவ்வளவு அழகு

விதி இப்பொழுது ரகுமானுக்கு இந்த பாடலாசிரியர் விவேக் என்பவர் வடிவில் வந்திருக்கின்றது

நிச்சயம் ரகுமான் என்பவர் பெரும் வித்தகர் சந்தேகமில்லை , ஆனால் சரியான தேரோட்ட்டி இல்லா வீரன் என்ன செய்யமுடியும்

அலெக்ஸ்டாண்டராயினும் குதிரை சரியாக அமையவில்லையேல் ஒன்றுமில்லை

கடல் பெரிது ஆனால் காற்றில்லா கடல் என்ன அலையினை கொடுத்துவிட முடியும், மலை உறுதியானது ஆனால் மேகம் கொட்டாவிட்டால் ஏது அருவி?

இணைய வேண்டியவை இணையாமல் நல்ல விஷயம் வாரா

கற்பூரமாயினும் தீக்குச்சி வேண்டும் இல்லாவிட்டால் ஜோதி இல்லை, சாம்பிராணி மணக்க கூட நெருப்பு வேண்டும்

இளையராஜாவின் சரிவு இசையால் அல்ல, அல்லவே அல்ல‌

மாறாக நல்ல கவிஞர்களை சேர்க்காமல் அவர் சரிந்தார், வைரமுத்து வாலி என அவரைவிட்டுவிலகியதே அவரின் வீழ்ச்சிக்கு காரணம்

கங்கை அமரன் எனும் கவிஞன் கூட பின்னாளில் இளையராஜாவிடம் இல்லாமல் போனது சோகம்

இளையராஜா போலவே ரகுமானும் சரியான கவிஞர் இல்லாமல் வீழ்கின்றார் என்பதுதான் சோகம்

நல்ல கவிஞர் இல்லாமல் விஸ்வநாதன், இளையராஜா என பலர் பின்னாளில் தவித்து அழிந்தது போன்ற பாதைக்கு செல்கின்றார் ரகுமான்

இசை அமைப்பாளனுக்கு ஆர்மோனியமும் பியாணாவோவும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் நல்ல கவிஞன்

நல்ல கவிஞன் இல்லா இசை அமைப்பாளன் அரை மனிதன், அவன் இசை முழுமை பெறாது

ரகுமான் பழைய ரகுமானாக நீடிக்க முதலில் செய்யவேண்டியது பக்கத்தில் இருக்கும் கிடாரை எடுத்து இந்த விவேக் மற்றும் அவரை போன்ற இம்சைகள் முதுகில் சாத்தி விரட்டிவிட்டு வைரமுத்து போன்ற அட அவர் இல்லாவிட்டால் Kavignar Thamarai போன்ற நல்ல கவிஞர்களை சேர்த்துகொள்வது

கபாலியில் பாடல் எழுதிய அந்த பெண்மணியின் வரி கூட பரவாயில்லை, அவரை போன்றவர்களை சேர்க்கலாம்

விவேக் போன்றவைகள் கவிஞர்களே அல்ல, தமிழும் இல்லை பொருளும் இல்லை, உவமையும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியுமில்லை

ரகுமானின் டியூனை கொடுத்து ஒரு வடமாநில பாணி பூரி விற்பவனிடம் வார்த்தைகளை நிரப்ப சொன்னால் கூட விவேக் பாடலை விட அழகாக வரும்

ஆம் காலி சில்வர் தம்ளரை கீழே விட்டால் கூட வார்த்தை ரெடி

அது அல்லாமல் ” நான் யார் தெரியுமா? என் இசைக்கு தமிழ்நாடே அடிமையப்பா..” என ஹேமநாத பாகவதர் போல இறுமாப்பில் இருந்தால்….

இளையராஜா போல எழுந்த ரகுமான் அவரைபோலவே சரிவார் என்பதை காலம் விரைவில் சொல்லும்..