உண்மையில் இது சினிமா மண்
இது பெரியார் மண், அண்ணா மண் என சொல்பவன் சொல்லிகொண்டே இருந்தாலும் உண்மையில் இது சினிமா மண்
ராமசந்திரன் என்பவர் 11 ஆண்டு முடிசூடா மன்னனாக ஆண்டிருக்க முடியாது
இது பெரியாரின் மண்ணாக இருந்திருந்தால் பிராமண ஜெயலலிதா 17 ஆண்டுகள் முதல்வராக ஆண்டிருக்க முடியாது
விஜயகாந்த் எதிர்கட்சி தலைவராக இருந்திருக்க முடியாது
இது பெரியாரின் மண்ணாகவே இருந்திருந்தால் பெரியாரின் சீட கோடிகள் இன்று அரசியலுக்கு வருமே தவிர சிஸ்டமும், மையமும் வந்திருக்க முடியாது
விஜயினை வைத்து அவரின் தந்தை கனவு கண்டுகொண்டிருக்க முடியாது
இது பெரியார் மண்ணாக என்றுமே இருந்ததில்லை, சினிமா சாயம் பூசபட்ட திராவிட மண்ணாக மாய கதைகள் சொல்லி ஆட்சிகள் மாற்றபட்டன
மற்றபடி இது முழுக்க முழுக்க சினிமாக்காரன் மண், அதை தொடங்கி வைத்த பெருமகனார் அண்ணா
சம்பத் போன்றவர்கள் பேச்சை கேட்டு அண்ணா இந்த சினிமாக்காரர்ளை விரட்டி இருந்தால் தமிழகம் இந்த சீர்ழிவினை கண்டிருக்காது
அந்த சனியனை “இதயகனி” என அண்ணா தூக்கி சுமக்காவிட்டால் , “இவன் நின்றால் பொதுகூட்டம், நடந்தால் ஊர்வலம், பேசினால் மாநாடு” என உச்சத்தில் வைத்திருக்காவிட்டால் இச்சோகம் நிகழ்ந்திருக்காது
ராமசந்திரனுக்கு பேச தெரியாது, ஆனால் அவன் முகம் காட்டினால் போதாதா என அவரை பெரும் பிம்பம் ஆக்காமல் இருந்திருந்தால் இன்று ஜெயக்குமார் எல்லாம் தமிழக நிதி அமைச்சராக இருக்க முடியாது
தினகரன் எல்லாம் எங்கிருந்திருப்பார் என்றே தெரியாது
இந்த தமிழகத்தை திராவிட மண், பெரியார் மண் என்று ஆக்கி இருக்க வேண்டிய தமிழகத்தை சினிமா மண் என ஆக்க விதை போட்டவர் அண்ணா, அதில் சந்தேகமே இல்லை
இதனால் என்னாயிற்று?
போர்கோலம் பூண்ட கட்சி, கூத்தாடி கூட்டமாயிற்று
வாளும், வேலும் ஏந்த வேண்டிய கைகள் அட்டை கத்தியும், வெற்று காகிதமும் ஏந்தின
ரத்தம் வழிய வேண்டிய முகங்கள் அரிதாரம் பூசி நின்றன
எங்கே பகைவர் என முழங்க வேண்டிய கூட்டம் பாட்டு பாடியது
எதிர்களை மிதிக்க வேண்டிய கால்கள் சலங்கை கட்டி ஆடின
இப்படியே திராவிடத்தை போராடி மீட்போம் என கிளம்பியவர்கள் பின் கூத்தாடி மீட்போம் என மாறிவிட்டார்கள்
இது திமுக அதிமுக என இருபக்கமும் நடந்தது, இவர்களை எதிர்த்து வந்த மூப்பனாருக்கு ரஜினி எனும் நடிகர் ஆறுதல் பக்கபலம்
இது இன்னும் மோசமாக தெரிந்தது, அதுவும் இப்பக்கம் வடிவேலு, பாக்யராஜ், குஷ்பு என திமுக பிரச்சாரமும், அப்பக்கம் குண்டு கல்யாணம், விந்தியா என வந்து நிற்கும் பொழுது, திராவிடத்தை மீட்க போன மாபெரும் இயக்கம், போரை மறந்து கூத்து கட்டி நின்ற காட்சிகள் எல்லாம் அழகாய் தெரிந்தன
இதில் எதிர்கட்சி விஜயகாந்த் என்பவர் இருந்த காலமும் உண்டு
இதெல்லாம் அண்ணா என்பவர் தொடங்கி வைத்த அட்டகாசம் என்பதில் மாற்று கருத்தே இல்லை
ஆக பெரும் படை திரட்ட போகின்றேன் தம்பி என கிளம்பியவர், பெரும் யுத்தம் நடத்தபோகின்றேன் என கிளம்பியவர் வெறும் கூத்தாடி படைகளை உருவாக்கிவிட்டு தீரா சோகத்திற்கு அடித்தளமிட்டிருக்கின்றார்
அந்த அடிதளத்தில் அவர் எந்த டெல்லியினை எதிர்த்தாரோ அது தமிழகத்தை காலில் போட்டு போட்டு மிதிக்கின்றது
ஏ தாழ்ந்த தமிழகமே என தமிழகத்தை அழைத்த அண்ணா, அதை இன்னும் தாழ வழிவைத்துவிட்டே சென்றிருக்கின்றார்
மாறி மாறி யோசித்தாலும் அண்ணா பிறந்தநாளில் இதுதான் நினைவுக்கு வந்து தொலைக்கின்றது