உனக்குள் பேசிவிடலாம், தைரியமாக எழுதிவிட முடியுமா?
“நீ உன் கருத்தை உனக்குள் பேசிவிடலாம், தைரியமாக எழுதிவிட முடியுமா?
ஆம் எழுதுவேன் என்ன செய்வாய்
தமிழகத்தில் இருந்து எழுதிவிடுவாயோ
கண்டிப்பாக எழுதுவேன்
எப்பொழுது எழுதுவாய்
இதோ பதில் சொல்லிகொண்டிருக்கின்றேனே, இந்த நொடியில் இருந்து பத்திரிகையாளனாகிவிட்டேன்”
இப்படித்தான் 50 ஆண்டுகளுக்கு முன்பு துக்ளக் பத்திரிகையினை தனி துணிச்சலுடன் தொடங்கினார் சோ, அதன் முதல் பத்தி கூட இப்படித்தான் இருந்ததாக நினைவு
“நாட்டில் தேசபற்றும் உண்மையும் கொண்ட பத்திரிகைகள் எதுவுமில்லை, எல்லாம் சம்பாத்தியம் ஒன்றை கொண்டு பொய்யும் புரட்டும் கொண்டு நடத்தபடுகின்றன. எதிலும் உண்மை இல்லை நேர்மை இல்லை.
இதனால் மனம் வெதும்பிய நான் பேனா எடுத்து எல்லோரையும் கிழித்தெறிந்து உண்மையினை சொல்ல பத்திரிகை நடத்த போகின்றேன்
அப்படி எல்லாம் நான் சொல்லமாட்டேன் நீங்களும் நினைத்து கொள்ளாதீர்கள், தோன்றுவதை எழுதுவேன். யார் யாரோ பத்திரிகை நடத்தும் தமிழ்நாட்டில் என் பத்திரிகையும் வந்தால் என்ன குறைந்துவிடும் அல்லது குறைய என்ன இருக்கின்றது?”
ஆம் அந்த துக்ளக் அப்படித்தான் தொடங்கபட்டது, தமிழ்நாட்டில் அது தொடங்கபட காலமும் அவசியமும் இருந்தது
திராவிட மாயை காமராஜரை வீழ்த்தி அண்ணாவும் இல்லா இருட்டான நிலையில் அது காலத்தால் தொடங்கபட்டது
தமிழ்நாட்டில் பாரதியர் காலத்துக்கு பின் தேசபற்றை தாங்கி வந்த இதழ் அதுதான்
இந்துமதத்தின் சாத்வீக உண்மைகளை ஊரெல்லாம் எடுத்து வந்த ஏடு அதுதான்
திராவிடத்தின் பொய்முகத்தை முதலில் தொட்டு கிழித்த கத்தி அதுதான்
அது சந்தித்த சவாலும் கொஞ்சமல்ல, இந்திராகாந்தி அதை ஒழிக்க நினைத்தார் உண்மையும் தர்மமும் அதை காப்பாற்றியது
ஈழபுலிகள் துக்ளக்கையும் சோ.ராமசாமியினையும் மொத்தமாக முடிக்க தருணம் பார்த்தனர், கொஞ்சமும் அஞ்சாமல் துணிந்து நின்றது துக்ளக்
காலம் அதை காப்பாற்றிகொண்டே வந்தது, உண்மை அப்பத்திரிகையால் உலகுக்கு விளங்கிற்று
உண்மையினை நியாயத்தினை தேசத்தின் நலனை தனி ஒரு குரலாக சொல்லிகொண்டிருந்தது துக்ளக், அந்த காரிருளில் இந்த விளக்கு மட்டும் தனியே எரிந்து வழிகாட்டியது
பெரும் இருளை ஒரு விளக்கு விரட்டுவது போல அந்த ஒரே ஒரு பத்திரிகை மொத்த அரசியல் இருட்டையும் கலைத்துபோட்டது
தங்களுக்கு இனி எதுவுமில்லை எதிர்காலமில்லை தங்கள் குரலை சொல்ல யாருமில்லை என நல்லோர் தவித்திருந்த வேளையில்தான் அது பரமாத்மாவின் கையாக வந்து கண்ணீரை துடைத்தது
இந்துமத தத்துவங்களை அது சொன்ன அளவு இன்னொரு பத்திரிகை சொல்லவில்லை. பிராமணர் பக்கமிருக்கும் நியாயங்களை யாரையும் வெறுக்காமல் தற்காத்து சொன்னவிதம் சிலாகிப்பானது.
அதில்தான் திராவிட கொடும் மேகம் கலைந்து தெளிவான தேசியம் தமிழருக்கு தெரிந்தது
டெல்லியில் காங்கிரசும் இங்கு திமுகவும் இருந்த அதிபயங்கர நிலையிலும், தனக்கு துணையுமின்றி சமூக ஊடகங்களுமின்றி ஒரு ஆதரவுமின்றி இருந்த அந்த அந்தகார காலத்திலும் தனி நடையினை தைரியமாக போட்ட பத்திரிகை அது
அந்த தைரியமும் எழுத்தும் நிச்சயம் ஆச்சரியமே, நிச்சயம் கடவுளின் தனிபெரும் கருணை. ஆண்டவன் தமிழ்சமூகம் மேல் கொஞ்சமாவது இரக்கம் வைத்திருக்கின்றான் என்பதற்கு துக்ளக்கே சான்று
தமிழகம் அப்பத்திரிகை உண்மை மட்டும் பேசுவதாக என்றும் கருதுவதுதான் அதன் மாபெரும் வெற்றி
விமர்சனத்துக்கு அது தயாராய் இருந்தது, தன்னைதானே கலாய்த்துகொள்ளவும் அது தயங்கவே இல்லை. அதுதான் அதன் தனித்துவம்
தமிழ்நாட்டில் காலம் மாறியது, ஜெயகாந்தனின் பேனா கூட மாறியது இன்னும் என்னென்ன மாற்றமெல்லாமோ வந்தது
கடைசிவரை தன் நிலையில் மாறாமல் 50 வருடமாக இயங்கும் ஒரே பத்திரிகை துக்ளக். அதன் உண்மை பாதையில் இருந்து அது நகரவே இல்லை
நாம் ஆச்சரியபடும் விஷயம் ஒன்றுதான்
எதெல்லாம் துக்ளக்கினால் ஆபத்து என முதலிலே சொல்லபடுமோ அதெல்லாம் பின்னாளில் பெரும் ஆபத்தாக உருவெடுக்கும்
எதெல்லாம் நாட்டுக்கு நன்மை என முதலிலே அது சொல்லுமோ அதெல்லாம் நாட்டின் நலனாக வந்து முடியும்
இந்த தீர்க்கதரிசனம் உண்மையான நாட்டுபற்றின்றி சாத்தியமே இல்லை, தெய்வம் அதை நடத்திற்று
50 வருடத்திற்கு முன் எதை அந்த ஏடு எழுதியதோ, அதெல்லாம் இன்று நிறைவேறிகொண்டிருக்கின்றன
அடுத்த 50 வருடம் கழித்து நடக்கவேண்டிய நல்ல விஷயங்களை அந்த ஏடு இப்பொழுது எழுதட்டும், தேசம் செழிக்கட்டும்
எல்லா இடத்திலும் புன்னகைத்தபடி பெரும் யுத்தம் நடத்தி நியாயதை அரங்கேற்றிய கண்ணனை போல, சுவாரஸ்யமான புன்னகையினை சிந்தியபடி எல்லோரையும் சிரிக்க வைத்தபடி துக்ளக் அதன் போரினை நடத்தியது
எம்மை பொறுத்தவரை கண்ணன் கையில் இருந்த சங்கும், தமிழ்நாட்டு துக்ளக்கும் ஒன்று.
இரண்டும் நியாயத்துக்காக எக்காலமும் ஒலிக்கும்
விளைவுகளை பற்றி அவை கவலை கொள்வதில்லை, தர்மம் சபையேற நியாயம் நிலைக்க அவை ஒலித்துகொண்டே இருக்கும்
50 ஆண்டுகளாக ஒலிக்கும் துக்ளக் இன்னும் தொடர்ந்து ஒலிக்கட்டும், தேசம் செழிக்கட்டும்
