எம்மை புரிந்துகொள்ள முடியாவிட்டால் விலகிவிடுங்கள்

நாட்டுக்காகவும் அதன் வளப்பத்துக்கும் அமைதிக்கும் நிலைப்புதன்மைக்கும் சில விஷயங்களை சொல்வதால் நாம் சங்கி என்றாலோ பாஜகவின் கூலி என்றாலோ நாம் அப்படியே இருந்துவிட்டு போகின்றோம் ஒன்றும் சிக்கல் இல்லை

எம்மை புரிந்துகொள்ள முடியாவிட்டால் விலகிவிடுங்கள்

இது நம் நாடு, ஒரு இந்தியனாக அகில உலகுடன் ஒப்பிட்டுத்தான் எம்மால் பேசமுடியுமே தவிர நான் தமிழன், நெல்லைக்காரன் என்றெல்லாம் குறுகிய வட்டத்தில் இருக்க முடியாது

பாரதி போன்று மிக உயரத்தில் இருந்து தேசத்தை பார்த்திடல் வேண்டும்

இந்த பரந்த உலகினை சுற்றிபாருங்கள் , கம்யூனிச நாடுகள் என சொல்லபட்டவை கூட மாறி மத அடையாளம் ஏற்றுகொண்டன

இந்நாடு இந்து நாடு, அதில் துளியும் சந்தேகமில்லை, அந்த மதமும் அவ்வளவு கொடூரமான மதம் அல்ல. காலத்துக்கு ஏற்ற சீர்திருத்தங்களை அது செய்துதான் வருகின்றது இன்னும் வரும்

உலகில் இந்த இடத்தினை தவிர எதை யூதநாடு என சொல்லமுடியும் என சொல்லும் யூதனை போல இதனை தவிர இந்துநாடு என எதை சொல்லமுடியும்?

அந்நிய படையெடுப்பு , சுதந்திர போராட்ட காலம் அது முடிந்த பின்பு இருந்த ஆசுவாசம் என அந்த மதஅபிமானம் கொஞ்ச காலம் அடங்கி இருந்திருக்கலாம்

இதோ மறுபடியும் அது எழும்பிற்று தேசம் அவர்கள் கைகளில் விழுதுவிட்டது

தேசத்தை யாரும் ஆளட்டும், ஆனால் அதற்கு நல்லது செய்கின்றார்களா இல்லையா என்பதை பார்க்கும் பொழுது எதெல்லாம் சரியான விஷயமோ அதை எல்லாம் வரவேற்பதும், எதெல்லாம் சரி இல்லையோ அதை கண்டிப்பதும் நல்ல இந்தியனின் கடமை

எதை எடுத்தாலும் மதவாத மொழிவாத கண்ணாடி போட்டுகொண்டு பார்ப்பவர்கள் நடையினை கட்டவும்

பாரதி போல விவேகாந்தர் காமராஜர் போல மனது விசாலமாக இல்லாமல் திராவிட தலைவர்கள் போல குறுகிய வட்டம் கொண்டவர்கள் தயவு செய்து கிளம்புங்கள் இது உங்களுக்கான இடம் அல்ல‌

புரட்சி புண்ணாக்கு எல்லாம் இனி எங்குமே உலகில் சாத்தியமில்லை

எல்லா நாட்டையும் உலகின் ஒவ்வொரு புள்ளியினையும் வரலாற்றினையும் படிப்பது போலவே மதங்களையும் படிக்கின்றோம்

அதில் இறுக்கமில்லாத மதமாக , இப்படி செய்யாவிட்டால் நரகத்திற்கு செல்வாய், இவரை பிடி அவரை பின்பற்று இல்லாவிட்டால் உனக்கு நரககமே என பயமுறுத்தும் மதமாக இல்லாமல், “நீ எந்த வடிவில் என்னை வணங்குகின்றாயோ அந்த வடிவிலே என்னை காண்பாய்..” என பெருந்தன்மையாக சொல்லும் இந்துமதம் வித்தியாசமாகத்தான் தெரிகின்றது.

ஒவ்வொரு நாட்டையும் கவனித்தால் பெரும்பான்மை மதம் தேசிய மதமாக அறிவிக்கபட்டு கொண்டாடபடும், அது உலக நியதி

அதே நேரம் சிறுபான்மை மதத்தவர்களின் நலன்களும் பாதுகாப்பும் உறுதி செய்யபடுகின்றன அதுவும் நியதி

சமயசார்பற்ற நாடு என்பதெல்லாம் இங்கு நெடுநாளைக்கு சாத்தியமில்லா ஒன்று.

அதுவும் ஒன்றுபட்ட நாட்டை பிளந்து அவர்களுக்கு தனிநாடு கொடுத்துவிட்டபின்பும் இது சமயசார்பற்ற நாடு என்பதை பெரும்பான்மை இந்து சமூகம் ஏற்காது, அதில் ஒரு நியாயம் இருக்கின்றது

மாநிலங்களுக்கு அதிக உரிமைகள் கொடுப்பதும் , மாநில அழிச்சாட்டிய கட்சிகளின் குரலுக்கு அதிகமாக செவிசாய்ப்பதும் நாட்டை பலவீனபடுத்தி பிரிவினை குரலை ஏற்படுத்திவிடும்

ஒருவிதமான இறுக்கமும் கட்டுபாடும் தேவை

இந்திரா மாநில கட்சிகளை ஒழிக்கும் முடிவில் இருந்தார் ஆனால் சில காரணங்களுக்காக ஒத்திவைத்திருந்தார் அதற்குள் அவர் கொல்லபட்டுவிட்டார்

இன்று இந்த அரசு துணிச்சலாக இந்திரா விட்டுசென்ற பணிகளை தொடர்கின்றது, அதை வாழ்த்தி வரவேற்கத்தான் செய்ய வேண்டும்

நாம் அதை வரவேற்போம், அதை பிடிக்காவிட்டால் உங்களுக்கு இந்த தேசத்தை விட உங்கள் மதமும் இனமும் முக்கியம் என கருதுகின்றீர்கள் என பொருள்

அப்படிபட்ட சுயநல கும்பல் உடனே நடையினை கட்டலாம்

1965ல் தலைவன் காமராஜ் காஷ்மீர் எல்லையில் சொன்னதைத்தான் நாமும் சொல்கின்றோம், பாஜகவும் சொல்கின்றது

“காஷ்மீர் நம்ம பூமிண்ணேன், இந்நாட்டோட மாநிலம்ணே. தலையே போனாலும் அத விட்டுகொடுக்க முடியாதுண்ணேன்”