எரிகிறது தீ நகர் சென்னை சில்க்ஸ்..

Image may contain: outdoor

சென்னை சில்க்ஸ் சம்பவத்தை நினைக்கவே பயங்கரமாக இருக்கின்றது, தீ என்பது எவ்வளவு வலிமையானது என்பதும், எவ்வளவு எரித்தாலும் அதன் பசி அடங்காது என்பதும் கண்கூடாகவே பார்க்க முடிகின்றது

கட்டட அமைப்புகளில் நாம் எவ்வளவு அஜாக்கிரதையாக இருக்கின்றோம், தீ பாதுகாப்பு முறைகளில் எவ்வளவு அசட்டை என்பதை கண் கூடாக பார்க்கின்றோம்

இது ஒரு கட்டடத்தோடு நிற்பது அல்ல அதனருகில் உள்ள பல கட்டங்களை இது பாதித்திருக்கும் , அழிந்தது சென்னை சில்க்ஸ் மட்டும் அல்ல, மறைமுகமாக அழிந்திருப்பது ஏராளம் இருக்கலாம்

இன்னும் தீயினை முழுக்க அணைக்கவில்லை என்கின்றார்கள், கிட்டதட்ட 24 மணி நேரமாக எரிகின்றது, நிச்சயமாக இந்நேரத்தில் அணைக்கபட்டிருக்க வேண்டும்

தீயணைப்பு விஷயத்தில் நாம் அவ்வளவு பின் தங்கி இருக்கின்றோமா என்றால் ஆம் என்றுதான் சொல்லமுடியும்

இந்த தீயினை அணைக்கவே இப்பாடு பட்டால், பெரும் அசம்பாவித தீவிபத்துக்கள் வந்தால் எப்படி எதிர்கொள்ள போகின்றோம்???

ஒவ்வொரு வியாபார நிலையத்திலும் தீ தடுப்பு முறை உண்டு, வருடா வருடம் அதனை புதுப்பிக்கும் கட்டுப்பாடும் உண்டு, , இவை எல்லாம் லண்டன் பெரும் தீ விபத்திற்கு பின் உலகிற்கு வந்த நடைமுறைகள்

நம் அரசு இதனை எல்லாம் கவனிப்பதாக தெரியவில்லை, ஆனால் காப்புறுதி நிறுவணம் கவனித்திருக்கும், இவர்கள் செய்தார்களா என தெரியவில்லை

ஆக தீ பாதுகாப்பு விஷயம், தீயணைப்பு விஷயம் என இரண்டிலுமே தோல்வி ஏற்பட்டிருக்கின்றது, தமிழகத்தில் நிலை எவ்வளவு மோசமாயிருக்கின்றது என்பது புரிகின்றது

பெரும் காட்டு தீயினையே இரு நாட்களில் வெளிநாடுகள் அணைத்துவிடுகின்றன, நம்மால் ஒரு கட்டட தீயினை அணைக்க முடியவில்லை

ஒவ்வொரு விபத்திலும் பல அழிவுகளுக்கு மத்தியில் பாடம் படிக்கும் தேசமிது, சிலநேரம் பல உயிர்களை இழந்தே படிப்போம், பின் கொஞ்சநாளில் மறந்துவிடுவோம்

இந்த விபத்தில் யார் உயிருக்கும் ஆபத்தில்லை என்பதுதான் ஒரே ஆறுதல்..

தீயணைப்பில் ஹெலிகாப்டர் முதல் சகல நவீன வசதிகளும் பயன்படுத்தபடும் அளவு அந்த துறை நவீனபடுத்தவேண்டும், எந்த சவாலையும் எந்நேரத்திலும் எதிர்கொள்ள அது தயாராக இருத்தல் வேண்டும்

தகுந்த தீயணைப்பு ஏற்பாடுகள் இல்லாத கடைகளுக்கு உரிமம் கொடுப்பதை நிறுத்தவேண்டும்

வர்த்தக, நிலையங்கள் பெரும் அவசர அறிவிப்பினை சென்னை சில்க்ஸ் சம்பவம் சொல்கின்றது

அது வீடுகளுக்கும் பொருந்தும், காரணம் தீ எதற்கும் தாமதிப்பதில்லை , வாய்ப்பு கிடைத்துவிட்டால் கோர ஆட்டம் ஆடும்

வருமுன் காப்பது மிக நல்லது