ஏன் புத்தகம் எழுத கூடாது?

நீங்கள் ஏன் புத்தகம் எழுத கூடாது, சம்பாதிக்க கூடாது என சிலர் கேட்டுகொண்டே இருக்கின்றார்கள்

நமக்கு அதிலெல்லாம் கொஞ்சமும் விருப்பமுமில்லை, அப்படி ஒரு தகுதி இருப்பதாக கருதவுமில்லை

இதில் வீணாக எழுதுவதால் உனக்கென்ன லாபம் என்பது அவர்களின் அக்கறை..

தமிழக புராணங்களில் இரு காட்சிகள் உண்டு

ஒன்று பாஞ்சாலியின் அட்சய பாத்திரம், இன்னொன்று மணிமேகலை கையில் இருந்த பாத்திரம்

இரண்டும் அள்ளி அள்ளி கொடுக்குமாம்

ஆனால் அது பாஞ்சாலி படைத்ததும் அல்ல, மணிமேகலை உருவாக்கியதும் அல்ல‌

எங்கிருந்தோ அவர்களுக்கு கிடைத்தது, அதில் அள்ளி கொடுக்க அவர்களுக்கு சிக்கலே இல்லை

அட்சய பாத்திர உணவை மணிமேகலை காசாக்கினாளா?

இல்லை அது அவளின் தர்மம்

அள்ளி அள்ளி கொடுத்த கர்ணன் ஒரு இடத்தில் சொன்னான் “இந்த செல்வம் என்னுடையதல்ல என் நண்பர் துரியன் கொடுத்த செல்வம், இந்த புண்ணியமெல்லாம் என்னை சேராது அவனையே சேரும்”

ஆம் எல்லா காரணங்களுக்கும் மூலம் எதுவோ அதுவே கவனிக்கதக்கது, போற்றதக்கது

இதைத்தான் தன் சீடர்களுக்கு இயேசு சொன்னார், ஆம் இயேசு காலத்தில் அவரின் சீடர்களில் யூதாஸ் போல சில பணத்தை பிரதானமாக எண்ணும் சில சீடர்கள் இருந்தார்கள்

இயேசு தன் சீடர்களுக்கும் அற்புதம் செய்யும் வல்லமையினை கொடுத்தபின் அதை பணத்திற்கு செய்ய சிலருக்கு எண்ணம் உதித்தது

இயேசு உறுதியாக சொன்னார்

“இலவசமாய் பெற்று கொண்டீர்கள், அதனால் இலவசமாய் கொடுங்கள்”