ஏலேய்ய் ரஞ்சித்து..நம்ம நிலத்தை மீட்டாகணுமுல்ல..
இந்த உடையார் நாவலை படிக்க தொடங்கியதில் இருந்து சோழநாட்டில் வசிப்பது போல் தோன்றுகின்றது, தூரத்தில் தெரியும் கோலாலம்பூர் இரட்டை கோபுரம் மாமன்னன் கட்டிய ஆலயம் தானே? இல்லை அது கற்றளி இது சிமென்ட் அளி என உணர்ந்து கொள்ளவே கொஞ்ச நேரம் எடுக்கின்றது
பக்கத்தில் ஓடும் ஆறு காவேரி போலவே தெரிகின்றது, “ஏ காவேரியே சித்திரை மாதமும் வற்றாமல் ஓடுவாயா? எப்படி” என தானாகவே கேட்கின்றது மனம்
பென்ஸ்கார்களை கண்டால் உயர்தர அரபு குதிரைகள் போல தோன்றுகின்றது, ஆங்காங்கே உலாவும் ஜெசிபி எந்திரங்கள் யானைகளாக தோன்றுகின்றன
காவலர்கள் வாளேந்திய வீரர்கள் போலவே தெரிகின்றார்கள், தூரத்தில் கட்டபடும் பெரும் உயர கட்டங்களை கண்டால் இது 7 பனை உயரம் அல்லவா? என மனம் சிந்திக்கும் பொழுதெ காதோரம் “தென்னாடுடைய சிவனே போற்றி” என யாரோ கும்பலாக கத்துகின்றார்கள்.
ஊரை பற்றி நினைத்தால் ரவிதாஸன் கும்பல் வாளோடு அலைவது போலவும், சேர நாட்டு காட்டுக்குள் பைசாச பூஜைகளை செய்வது போலவுமே தோன்றுகின்றது
நல்ல வேளையாக கண்முன் நடமாடும் மங்கையர்கள் இன்னும் தேவரடியார்களாக தெரியவில்லை அதுவரை நினைவு தப்பவில்லை
எனினும் கண்ணை மூடினால் கனவு வருகின்றது, அதில் மேலை சாளுக்கிய மன்னரான பா.ரஞ்சித்தனாரை போரில் வென்று இழுத்து வருகின்றார் ராஜராஜ உடையார், அவனை பிடித்து வந்து , முன்பே கைது செய்யபட்ட பாண்டிய மன்னனான என் அருகே கட்டி வைக்கின்றார்கள்
மதுரையில் சோழர் ஆடிய வெறியாட்டத்தையும் அந்த ஆதித்த கரிகாலனின் அட்டகாசத்தையும் கோபத்தோடும் கண்ணீரோடும் நான் ரஞ்சித்தனாரிடம் சொல்கின்றேன்
“கற்பி.. ஒன்றுசேர்..புரட்சி செய்” என சொல்லிகொண்டே இருக்கின்றார் ரஞ்சித்தனார்
“ஏலேய்ய் ரஞ்சித்து, இவனுகள விட கூடாதுல , எத்தன ஜெனமானாலும் சரி நீ வடக்க இருந்து வரணும் நான் தெற்கே இருந்து வரணும், இவனுகள சமுட்டி மிதிச்சி அடக்கி விலங்கு போட்டு இதே மாதிரி பழிவாங்கணுமுல..
நம்ம நிலத்தை மீட்டாகணுமுல்ல.. விட கூடாதுல …
கும்பகோணம் எனக்கு, சிதம்பரம் உனக்க்கு. அதாம்ல ஆத்துக்கு அந்தபக்கம் உனக்கு, தெற்கு பக்கம் எனக்குல, விட கூடாதுல, எத்தன ஜென்மம் ஆனாலும் விட கூடாதுல, எலேய் இது அந்த கருவூர் சித்தன் தாடில மேல உன் தாடி மேல சத்தியம்ல சவத்து மூதி..” என சொல்லிகொண்டிருக்கும் பொழுதே கனவு கலைந்தது