ஒப்பற்ற தியாகி கஸ்தூரிபாய்

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்பும் ஒரு பெண் இருப்பாள் என்பது பொதுவான நியதி, ஆனால் பெரும் தியாகிகளின், போராளிகள் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்பது அபூர்வம்

மார்க்ஸுக்கு ஜெனி போல மிக சிலருக்கே அந்த யோகம் கிடைத்திருகின்றது, அதில் ஒருவர்தான் தேசப்பிதா மகாத்மா காந்தி

13 வயதில் அவருக்கு கஸ்தூரிபாயினை திருமணம் செய்துவைத்தார்கள். கஸ்தூரி சாதாரண குடும்பத்து பெண் அல்ல, சிலப்பதிகாரத்தில் கண்ணகி போல பெரும் வியாபார குடும்பத்து வாரிசு

அக்கால வழக்கபடி கஸ்தூரி கல்வி கற்கவில்லை, அவருக்கு எழுதபடிக்க சொல்லிகொடுத்தது யாரென்றால் காந்திதான், ஆம் படுக்கை அறையே அங்கு வகுப்பு கூடமும் ஆயிற்று, காரணம் பெண் கல்வி அன்று சொந்த வீட்டிலே மறுக்கபட்டது

காந்தி லண்டனில் படிக்கும்பொழுதும் இன்னும் எங்கெல்லாமோ சுற்றி திரியும்பொழுதும் அவருக்காக காத்தே இருந்தார் கஸ்தூரிபாய்

காந்தி தென்னாப்ரிக்கா வந்ததில் இருந்து ஒரு நொடி அவள் அவரை பிரியவில்லை, மூத்த குழந்தை இறந்தபொழுதும் அடுத்த 4 குழந்தைகளை கவனமாக வளர்த்தார்

காந்தி தென்னாப்ரிக்காவில் பொதுவாழ்க்கைக்கு திரும்பிய பொழுது, இனவெறிக்கு எதிராக போராடிய பொழுது பெண்கள் அணி திரட்டி களமிறங்கினார் கஸ்தூரிபாய்

ஆம், முதன் முதலில் இந்திய பெண்கள் போராட்ட களம் வந்தது, தென்னாப்ரிக்கவிலே, தில்லையாடி வள்ளியம்மை செத்தது அங்கேயே, கஸ்தூரிபாய் போராளியானதும் அங்குதான்

அங்கு சிறையிலும் அடைக்கபட்டார் , சைவ உணவு கேட்டும் கிடைக்காமல் அவர் பட்டபாடு கொஞ்சமல்ல, எல்லாவற்றையும் தாங்கினார், பட்டினி கிடந்து தாங்கினார்

அவரின் மன உறுதி எளிதானது அல்ல, அசாத்தியமானது

தென்னாப்ரிக்காவில் காந்தி தனியாக போராடவில்லை, கஸ்தூரிபாயின் பெரும் ஆதரவு இருந்தது. ஏன் களத்திற்கே குழந்தைகளோடு வந்தவர் கஸ்தூரிபாய்

இதைவிட ஒரு கணவனுக்கு என்ன வேண்டும்? அந்த உற்சாகத்தில்தான் காந்தியால் தென்னாப்ரிக்காவில் வெற்றி பெற முடிந்தது

அந்த வெற்றி அவரை இந்தியாவிற்கும் அழைத்து வந்தது, இங்கேயும் காந்திக்கு நிழலாக இருந்தார் கஸ்தூரி

எவ்வளவு போராட்டம்? எவ்வளவு சிக்கல்கள்? எல்லாவற்றிலும் காந்திக்கு துணையிருந்தார், துணை நடந்தார்

காந்தி நடந்த ஒவ்வொரு முள்பாதையிலும் கால்களிலும் மனதிலும் ரத்தம் வழிய நடந்தார்

பெண் விடுதலை, பெண் சுதந்திரம் என காந்தி பேச தொடங்கியதெல்லாம் கஸ்தூரிபாயின் அணுகுமுறையில் இருந்தே

காந்திக்கு ஞானம் கொடுத்தவர் கஸ்தூரிபாய்

அந்த சபர்மதி ஆசிரமத்தில் ஒரு வெள்ளையன் தங்கினான், அன்று கழிவறை வசதி எல்லாம் இல்லை எல்லாம் மட்பாண்டமே, அதை சுத்தம் செய்யும் தொழிலாளி வரவில்லை

காந்தி கஸ்தூரிக்கு ஆணையிட்டார், பெரும் குடும்பத்து வாரிசான கஸ்தூரி அதை செய்தார்.

காந்தி என்னவெல்லாமோ யோசித்தவர், ஒரு கட்டத்தில் பெண்கள் ஏன் பொதுவாழ்க்கைக்கு வருவதில்லை என கஸ்தூரியிடம் விவாதித்தபொழுது சட்டென சொன்னார் கஸ்தூரி

“பெண்கள் பாதுகாப்பினை தேடுபவர்கள், துறவறம் ஏற்காத பிரம்மசரியத்தை பேணாத எந்த தலைவனை நம்பி அவர்கள் வருவார்கள்?”

அதிலிருந்துதான் பிரம்மசரியத்தை ஏற்றார் காந்தி, ஆம் நாட்டுக்காக ஏற்றார். சொந்த கணவனையே நாட்டுக்காக கொடுத்தவர் கஸ்தூரிபாய்

1915 முதல் காந்தி இந்தியாவுக்கு தன் வாழ்வினை அர்பணிக்க ஒரு பக்கம் அவரையும் மறுபக்கம் குடும்பத்தையும் கவனித்து தியாக வாழ்க்கை வாழந்தவர் அவர்

இறுதியாக 1942ல் தேசம் வெள்ளையனே வெளியேறு என கொந்தளித்தபொழுது காந்தி தீவிரமாய் களமிறங்கினார், அவரோடு கஸ்தூரிபாயும் போராட வந்தார்

பெரும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார் காந்தி

வெள்ளை அரசு காந்தியினை கைது செய்து சிறையில் போட்டது, கூட்டம் இனி நடக்குமா என மக்கள் திகைத்த பொழுது, அட்டகாசமாக பேச்சினை தொடக்கினார் கஸ்தூரிபாய்

அவருக்கு தென்னாப்ரிக்க சிறையிலே நோய் இருந்தது, கூடவே பஜனை பூஜை என தன்னை வருத்திகொண்டார், அந்நிலையிலும் உணர்ச்சி பொங்க பேசினார்

கூட்டத்தில் பெரும் எழுச்சி உண்டாயிற்று, அந்த நெருப்பே நாடெங்கும் பரவிற்று

விடுவானா வெள்ளையன் காந்தியினை விட கஸ்தூரிபாய்க்கு அஞ்சினான், நோயாளி என பாராமல் சிறையிலிட்டான்

எரவாடா சிறையில் அடைக்கபட்டார் கஸ்தூரி , உடல் இன்னும் நலிவுற்றது , காந்தி சிறையில் இருக்கும் பொழுதே 1944ல் மரணமடைந்தார் கஸ்தூரிபாய்

உண்மையில் தியாக தலைவி என இந்தியாவில் ஒருவரை சொல்லமுடியுமென்றால் முழு தகுதி கஸ்தூரிபாய்க்கும் உண்டு

விஞ்ஞானிகள், பொதுநல பித்தர்களோடு வாழ்வது என்பது சாபம், எடிசனையும் ஐன்ஸ்டீனையும் விட்டுவிட்டே மனைவி மார் தலைதெறிக்க ஓடினர்

பாரதியினை கட்டி கொண்டு அழுது செத்தார் செல்லம்மாள்

காந்திக்கு மனைவியாக வாழ்ந்தது பெரும் கொடுமை, நாட்டிற்காக அந்த சுமையினை சுமந்தார் கஸ்தூரி. அந்த மாபெரும் தியாகத்திற்கு ஈடாக சாஸ்திரியின் மனைவி லலிதா அம்மையாரையும் சொல்லலாம்

நிச்சயம் கணவனால் அவர்களுக்கு கிடைத்தது பிள்ளை செல்வம் என்பதையன்றி வெறொன்றும் அல்ல, தங்கம் உட்பட இருந்ததை பறித்தார்களே அன்றி கொஞ்சமும் வளமாக வாழவைத்தவர்கள் அல்ல‌

ஆனால் நாட்டுக்காக அந்த வலியினை தாங்கினார்கள், இந்த தேசத்திற்காக எல்லாவற்றையும் அர்பணித்தார்கள்

கஸ்தூரிபாய் ஒருவகையில் நல்மரணம் அடைந்தவர்

ஆம் தேசம் பிரிவதையோ, காந்தி சுட்டுகொல்லபடுவதையோ இங்கு மதவாதம் தாண்டவமாடுவதையோ அவர் காணவில்லை

அவ்வகையில் அந்த மாதரசி நல்மரணம் அடைந்திருக்கின்றார்

கஸ்தூரிபாயின் வரலாறு இந்திய வரலாற்று பக்கங்களில் குறிப்பிடதக்கது, காந்தி கூட அவரின் வரலாற்றில் கொஞ்சத்தைத்தான் பகிர்ந்திருக்கின்றார்

உண்மையில் அந்ததாய் செய்த சேவையும் தியாகமும் ஏராளம், ஏராளம்

காந்தி என்ற மனிதரை மகாத்மா ஆக்கியதில் அவருக்கு பெரும் பங்கு உண்டு, அவரால்தான் காந்தி அவ்வளவு பெரிய இடம் அடைந்தார்

நாடாவது மண்ணாவது? ஒழுங்காக சம்பாதித்து கொட்டு மகனுக்கு சேர்த்துவை என சாதாரண மனைவி போல காந்தி கழுத்தில் துண்டு போட்டு அவர் இழுத்து சென்றிருந்தால் இன்று காந்தி எனும் மாமனிதர் இல்லை

இதென்ன இம்சை? என் தந்தையின் வியாபாரத்தை கவனி என கஸ்தூரி காந்தியின் காதை திருகியிருந்தால் அந்த மாமனிதன் உருவாகியிருக்கமாட்டான்

கஸ்தூரி பாயின் தன்னலமற்ற தியாகமே அந்த மகாத்மா எனும் மாமனிதனை உருவாக்கிற்று

கணவனுக்கே பிரம்மசரியம் கொடுத்து அவரை மகாத்மாவாக உருவாக்கிய இன்னொரு தாய் அவர்

கஸ்தூரிபாயின் வாழ்க்கை கண்களை கலங்க வைக்க கூடியது

கஸ்தூரிபாய் இறந்ததுமே மனமுடைந்தார் காந்தி “என்னில் பாதி சிதைந்து போனது, மீதம் இனி இருந்து என்ன செய்ய போகின்றது?” என வாய்விட்டு சொன்னார்

ஆம் 65 ஆண்டுகள் காந்தியோடு இருந்து அவரை காத்து உருவாக்கியவர் கஸ்தூரிபாய்.

கஸ்தூரிபாயின் மறைவுக்கு பின் காந்தி சாக தயாரானார், தனக்கு கொலைமிரட்டல் இருந்தும் கொலை முயற்சி நடந்தும் கொஞ்சமும் அஞ்சவில்லை, பாதுகாப்பும் கோரவில்லை

ஆம் சாவை தேடிகொண்டிருந்தார், கஸ்தூரிபாய் இல்லா வாழ்வு அவருக்கு மனமார பிடிக்கவில்லை

அந்த காந்தியினைத்தான், மனமார சாகதுணிந்த காந்தியினைத்தான் கொன்றது இந்துமகா சபை கும்பல்


பொதுவாக கவிஞர்கள் மனம் மென்மையானது, சில விஷயங்கள் அவர்களின் மனதை பாதித்துவிடும்

கண்ணதாசனும் சத்திய சோதனை எல்லாம் படித்தவர், அவரின் பாடலிலும் கஸ்தூரிபாயின் வலியும் தியாகமும் வரும்

பாரதியின் செல்லம்மாள் , கஸ்தூரிபாய், கமலா நேரு, லலிதா சாஸ்திரி என தியாக செம்மல்களின் தியாகத்தை வியட்நாம் வீடு படத்தில் அட்டகாசமாக எழுதியிருப்பார்

“உண் கண்ணில் நீர் வழிந்தால்..” என தொடங்கும் பாடலது

“உன்னை கரம்பிடித்தேன் வாழ்க்கை ஒளிமயமானதடி
பொன்னை மணந்ததினால் சபையில் புகழும் வளர்ந்தடி”

“ஆலம் விழுதுபோல் உறவுகள் ஆயிரம் வந்துமென்ன 
வேரேன நீ இருந்தாய் அதில் நான் வீழ்ந்துவிடாதிருந்தேன்”

“என் தேவையாய் யார் அறிவார்?
உன்னை போல் தெய்வமொன்றே அறியும்”

இதெல்லாம் காந்தியின் மனமொழியில் கஸ்தூரிபாய்க்கும் பொருந்தும்

இன்று கஸ்தூரிபாய் இறந்த தினம்

சுதந்திர போராட்ட தியாகியும், காந்தி எனும் மாமனிதனை உருவாக்கிய அந்த தியாக சுடருமான இந்தியாவின் தலை மகளுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்