ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 130 – கலை ஞானம் / குறள் : 09
ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 130 – கலை ஞானம் / குறள் : 09
“இரேசக மாற்றி யிடையறாதே நிற்கில்
பூரிப்ப துள்ளே சிவம்”
இந்த குறளை பார்க்கும் முன் ஓளவ்வை முன்பு சொன்ன சில யோக ரகசியங்களை மீள புரட்டிகொள்ள வேண்டும்
பூரகம் என்றால் உள்ளே இழுக்கும் மூச்சு ஒரு நாசியினை மூடி இன்னொரு நாசி வழியாக இழுப்பது, இழுத்த மூச்சை நிறுத்தி வைப்பது கும்பகம், பின் இன்னொரு நாசி வழியாக வெளியே விடுவது ரேசகம்
இந்த பூரகம் எனும் மூச்சை 16 மாத்திரை அளவு இழுத்து 64 மாத்திரை அளவு கும்பகம் செய்து 32 மாத்திரை அளவு வெளியே ரேசகம் செய்ய வேண்டும் என்பது யோகம்
(“கண்ணிமைப் பொழுதும், கைநொடிப்பொழுதும் மாத்திரைக்களவாம்.” என்பது மூலமொழி)
இதனைத்தான் பிரயாணம் என்பார்கள், மூச்சு பயிற்சி என்பார்கள், நாடி சுத்தி என்பார்கள்
இதனை செய்ய செய்ய யோகம் கைகூடும், உடலின் நாடிகள் சரியாகி சக்க்ரங்கள் இயங்க தொடங்கும், அந்த தெளிவில் சிந்தனை கூர்மையாகும், கூர்மையான சிந்தனையில் ஞானம் தெளியும், தெளிந்த ஞானத்தில் சிவனே எழுவார்
இதனைத்தான் இக்குறளில் சொல்கின்றார் ஒளவையார், நாசிகளை மாற்றி மாற்றி மூச்சுகாற்றை இழுத்து வெளிவிட்டு பயிற்சி செய்தால் சிவனை உணரலாம் என்பது குறளின் பொருள்
“ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே.” என திருமூலர் சொன்ன பாடலினை சுருக்கி இங்கு பாடுகின்றார் ஒளவை மூதாட்டி எனும் ஞான சித்தர்