ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 150 – முக்தி காண்டல் / குறள் : 05

“பெண்ணா ணலியென்னும் போரொன் றிலதாகி
விண்ணாகி நிற்கும் வியப்பு”

இக்குறள் “பெண் ஆண் அலி என்போர் அன்றி இலாதாகி விண்ணாகி நிற்கும் வியப்பு” என பொருள் பட பிரியும்.

அந்த பரம்பொருள் என்பது ஆணும் அல்ல பெண்ணும் அல்ல இரண்டும் அல்லாத திருநங்கை (அலியும்) அல்ல அது பிரபஞ்சம் முழுக்க பரந்து வியாபித்திருக்கும் பெரும் சக்தி என்பது பொருள்

ஆம், பரம்பொருள் எனும் தெய்வ சக்தி உருவமில்லாதது ஆண் பெண் அலிதன்மை என எல்லாவற்றையும் தாண்டிய ஒரு சக்தி அது

மானிடனின் அறிவும் சிந்தையும் மிக குறுகியது, உண்மையில் ஆத்மா என்பதும் அப்படி ஒரு சக்தியே பரம்பொருளில் இருந்து பிரிந்து வந்து மானிட உடலில் சக்தியாய் நிற்கின்றது

பூமியில் வாழும்படியும் மானிட உயிர்களை பெருக்கும்படியும் இங்கு சில கர்மாக்களை கழிக்கும்படியும் அது ஆண் பெண் அலி என சில உடல்களில் குடியிருக்கின்றதே தவிர ஆன்மா என்பதற்கு பாலினம் இல்லை

அந்த மானிடரின் சிற்றிவுக்கு புரியும்படி தெய்வத்தை ஆண் பெண் என சொல்வதெல்லாம் மானிடர் புரிந்துகொள்ள சொல்லபட்ட வழிகளே அன்றி வேறல்ல‌

இதை ஒளவையார் மட்டும் சொல்லவில்லை , வைணவ ஆழ்வாரான நம்மாழ்வாரும் பாடுகின்றார்

ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்
காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்
பேணுங்கால்பேணும் உருவாகும் அல்லனுமாம்
கோணை பெரிதுடைத்து எம்பெம்மானைக்கூறுதலே”

ஆம், பரம்பொருள் என்பதன் வடிவத்தை நம்மாழ்வாரும் அது ஒரு சக்தி மானிடர் கணிப்புக்கெல்லாம் அப்பற்பட்ட சக்தி என்கின்றார்.

பெரு ஞானியரும் அடியார்களும் சொல்லும் பரம்பொருள் தத்துவத்தை முதன் முதலில் மொழிந்தவர் அந்த ஒளவை..