ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 190 – சதா சிவம் / குறள் : 05
“எண்ணிறந்த யோனி பலவாய்ப் பரந்தெங்கும்
உண்ணிறைந்து நிற்குஞ் சிவம்”
இக்குறள் “எண்ணிறைந்த யோனி பலவாய் பரந்தெங்கும் உள் நிறைந்து நிற்கும் சிவம்” என பொருள் தடும்
இந்த உலகில் இருக்கும் எல்லா உயிர்களிலும் அது இன்னும் பரவ வழிசெய்யும் அல்லது உயிர் ஜெனிக்கும் இடமான யோனிகளின் தன்மையாக இருப்பது சிவமே என்பது பொருள்
இத உலகில் உள்ள எல்லா உயிர்களும் தன்னை பெருக்கும் சக்தி கொண்டவை, அந்த சக்தியாக நிற்பவன் சிவன் , உலகில் உயிர்கள் நிலைபெற்ற் நிற்க காரணமே சிவன் என்கின்றார் ஒளவையார்
இந்த குறளை திருமந்திர பாடல் ஒன்றும் சொல்கின்றது
“அஞ்செழுத் தால்ஐந்து பூதம் படைத்தனன்
அஞ்செழுத் தால்பல யோனி படைத்தனன்
அஞ்செழுத் தால்இவ் வகலிடம் தாங்கினன்
அஞ்செழுத் தாலே அமர்ந்துநின் றானே”
இந்த பாடலில் ஒளவையின் குறள் அப்படியே பிரதிபலிப்பதை காணலாம், எல்லா வகை உயிரினமும் யோனி வழியாக பெருக காரணமான பெரும் சக்தி சிவன் என்கின்றார் திருமூலர்
எத்தனை வகை யோனிகள் உண்டு அதாவது எவ்வளவு வகையான உயிர்கள் உலகில் உண்டு என்பதையும் இந்துமதம் சொல்லிற்று, சம்பந்தர் தன் பாடலில் சொல்கின்றார்
“உரைசேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனி பேதம்
நிரைசேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய் அங்கங்கே நின்றான்கோயில்
வரைசேரும் முகில்முழவ மயில்கள் பல நடமாட வண்டுபாட
விரைசேர் பொன்னிதழிதர மென்காந்தள் கையேற்கும் மிழலையாமே”
ஆம் 84 லட்சம் வகையான யோனிகள் உலகில் உண்டு என்கின்றார், அதாவது 84 லட்சம் வகையான உயிர்கள் உலகில் உண்டு
இந்த 84 லட்ச வகை உயிர்களும் யோனி வழியாக பெருக சிவனே சக்தியும் உயிருமாய் இருக்கின்றார் என்பதுதான் இங்கு எல்லா ஞானியராலும் சொல்லபடும் விஷயம்
இதை இன்னும் கொஞ்சம் நோக்கினால் சில உண்மைகள் தெளியும், அது ஆபாசம் அல்ல, சபையில் பேசகூடா பொருளும் அல்ல, அது ஒரு படைப்பின் பெரும் தத்துவம்
அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உள்ளது என்பார்கள் ஞானிகள், அப்படி இந்த முக்கோண வடிவம் என்பது ஒரு சக்தி உற்பத்தி செய்யும் இடமாகவே காணபடுகின்றது
அண்டத்தில் ஒவ்வொரு சக்தி வடிவத்துக்கும் அல்லது சக்தி பெறும் வழிக்கும் ஒவ்வொரு வடிவங்கள் உண்டு, இந்த பிரபஞ்சத்தின் அமைப்பு அது, அந்த தத்துவத்தில்தான் யோக குண்டங்கள் அமைத்து பலன்பெறும் வழியினை இந்துமதம் போதித்தது
ஐம்பெரும் பூதங்களைக் காணுதல் அவற்றின் வடிவாய் அமைந்த குண்டங்களை அமைத்து வழிபட சொன்னார்கள்
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களின் வடிவமே நாற்கோணம், பிறை, முக்கோணம், அறுகோணம், வட்டம் என வரையறுத்தார்கள்
இதனுள் பிறை வடிவம் சந்திரனுக்கு ஆகும். சூரியனுக்கு வட்டத்தின் வகையாகிய தாமரை ஆகும்.
முக்கோணத்தைச் சிறிது வேறுபடுத்தி யோனி வடிவாக்கச் சத்தி வடிவுக்கு சொன்னார்கள், யோனி குண்டம் என்பது அதுதான்
ஒரு சதுரத்தின் மேல் மற்றொரு சதுரம் வடக்கு முதலிய திசைகளை நோக்கி அமைந்த மூலைகளை உடையன போல அமைக்க அட்டகோணம் அட்டமூர்த்தி வடிவினனாகிய சிவபிரானுக்கு என்றார்கள்.
பஞ்சமுகம், பஞ்சாக்கரம், பஞ்சக்கிருத்தியம், பஞ்ச மூர்த்திகள் முதலியன பலவற்றிற்கும் இயைபுடைய பஞ்சமுக குண்டம் அமைத்து வழிபட சொன்னார்கள்
இது மிகபெரிய விஷயம் என்பதால் நாம் முக்கோணம் மட்டும் எடுத்து கொள்ளலாம்
ஆம், முக்கோணம் சக்திக்குறியது, இந்த முக்கோணங்களை பலவாறு அடுக்கித்தான் சக்கர வழிபாடு அல்லது இதர சக்தி வழிபாட்டின் வழிகளை சொன்னார்கள் ரிஷிகள், ஆதிசங்கரர் கொடுத்த சக்கரங்களில் இப்படி பல வகையாக அடுக்கபட்ட முக்கோணங்களை காணலாம்
ஆம், முக்கோணம் என்பது சக்தி பிறக்குமிடம், ஒரு சக்தி உருவாகுமிடம்.
இந்த அண்ட தத்துவவே யோனிவடிவாக உடலிலும் இருந்தது, அது உயிர் உருவாகும் இடம் அல்லது உயிர்சக்தி உருவாகும் இடமாகவும் அமைந்தது
இந்த வடிவினை யோகத்தில் கரங்களை குவித்து செய்ய சொன்னார்கள் ரிஷிகள்
யோகத்தில் யோனி முத்திரை என்பது இப்படி ஆகாய தத்துவத்தில் இருந்து வந்ததே, அவ்வகையில் கைகளை குவித்து தியானம் செய்தால் சில பலன்களை அடையலாம், உயிர்சக்தி இயக்குசக்தி உடலில் அதிகரிக்கும் என்பதால் அந்த அடையாளத்தை யோகத்தில் செய்ய சொன்னார்கள் ரிஷிகள்
ஒளவை இந்த குறளில் இரு பொருளை சொல்கின்றார், முதலாவது எல்லா உயிர்களிலும் 84 லட்சம் வகை உயிர்களிலும் வாழ்வதும் பெருகுவதும் சிவமே என்கின்றார்
இரண்டாவது யோகத்தில் யோனி முத்திரையில் அமர்ந்தால் சிவனை உணர்தல் எளிது, மூல சக்தியினை உணர்தல் எளிது என்கின்றார்