ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 7 – அமுத‌ தாரணை/ குறள் : 04

“ஆனகலசத் தமிர்தை யறிந்துண்ணில்
போனகம் வேண்டாமற் போம்”

“ஆன கலசத்து அமிர்தை அறிந்து உண்ணில் போனகம் வேண்டாம் உயிர்க்கு” என்பது பொருள்

தவயோகத்தின் உச்சியில் உருவாகும் அமிர்தத்தை உண்டால் அந்த யோகிக்கு உணவும் நீரும் கூட வேண்டாம், தவத்தின் சக்தியிலே அவனால் ஆயுள் முழுக்க வாழ உணவே தேவை இல்லை என்கின்றார் ஒளவையார்.

இது யோகிகள் வாழ்வில் சாதாரணமாக காணப்படும் விஷயம்

விசுவாமித்திரர் வாழ்வில் இருந்து ரமண மகரிஷி காலம் வரை இதனை காணலாம், ரமண மகரிஷி பாதாள குகையில் பல நாள் உணவின்றி தவம் செய்ததெல்லாம் நடந்த கதை

இன்னும் காஞ்சி பெரியவர் போல ஒரு பிடி அவலில் மட்டும் வாழ்ந்தவர்களும் உண்டு எல்லாம் யோகம் கொடுக்கும் பலன்

இந்த உடலின் ஒவ்வொரு விஷயமும் ஆச்சரியம், ஒரு துளி விந்தில் உயிர் கொண்ட உடலே உருவாகி வருதல் போல காலத்துக்கும் தேவையான சக்தியினை உடலின் உள்நாக்கில் ஊறும் அந்த அமிர்தம் கொடுக்கின்றது

இமயமலை ரிஷிகள் பல்லாண்டு காலம் உணவின்றி வாழ்கின்றார்கள், தமிழக சித்தர்கள் கூட பலர் அன்றும் இன்றும் உண்டு, வெளிபார்வைக்கு பிச்சைக்காரன் போல வெகு குறைவாக உண்பது போல் காட்டிகொண்டாலும் அந்த உணவு கூட அவர்களுக்கு தேவை இல்லை என்பதே நிஜம்

யோகத்தில் நிலைத்தவர்கள் அமிர்தம் ஊறும் நிலையினை எட்டும்பொழுது உணவு வேண்டாம் நீர் வேண்டாம் என்பதே ஓளவை சொல்லும் போதனை

பசி என்பது உணவு தேவை அல்ல அது ஒரு உணர்வு , மாய உடலுக்கு அது ஒரு உணர்வு அந்த உணர்வினை துறந்து உடலுக்கு தேவையான சக்தியினை காற்றிலும் பிரபஞ்சத்திலும் இருந்தே பெறலாம் என்பது சித்தர்கள் செய்துகாட்டிய விஷயம், அதைத்தான் ஓளவை மூதாட்டியும் இங்கு சொல்கின்றார்

மானிட ஆன்மா தடுமாற முதல் காரணம் உடல் பசி, அந்த பசிக்காக தொடங்கும் உழைப்பு பேராசையில் சென்று முடிகின்றது, அதில் ஆனமா தடுமாறி திசைமாறுகின்றது

பசி என்பதை துறந்தால் எல்லாவற்றையும் துறக்கலாம், அதனால் முக்தி வசமாகும். அந்த பசியினை தீர்க்கும் அரும்மருந்து உடலிலே உள்ளது என்பதுதான் நுணுக்கமான பொருள்