ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 7 – அமுத‌ தாரணை/ குறள் : 07

ஒளவையரின் ஞானகுறள்/ வீட்டு நன்னெறிபால்/ அதிகாரம் 7 – அமுத‌ தாரணை/ குறள் : 07

“மேலையமிர்தை விளங்கா மற்றா னுண்ணில்
காலனை வஞ்சிக்க லாம்”

இக்குறள் “மேலை அமிர்ததை விளங்கா மாற்று உண்ணில் காலனை வஞ்சிக்கலாம்” என பொருள் தரும்

மேல் அமிர்தம் என்றால் அன்னாக்கில் ஊறும் அமிர்தம், விளங்கா என்றால் உருண்டை சோறு அல்லது உணவு என பொருள், இன்றும் பொரி விளங்கா உருண்டை என்றொரு உணவு பண்டம் வழக்கில் உண்டு

இங்கு விளங்கா என்பது சோற்று உருண்டை என பொருளாகின்றது

சோற்றுக்கு பதிலாக அமிர்தத்தை உண்டால் போதும் எமனையும் ஏமாற்றும் அளவு உடல் சக்தி பெறும், நீண்ட ஆயுள் கிடைக்கும் என்கின்றார் ஒளவையார்

ஒளவையார் இதுவரை நாம் கண்ட குறளில் பல இடங்களில் உடலிற்கான சக்தி உணவில் மட்டும் இல்லை, அது காற்றில் இருக்கின்றது மூச்சு பயிற்சி முலம் அதனை பெறலாம் என்றார்

இன்னும் பல இடங்களில் உணவில்லா வாழ்வினை குறிப்பிடும் ஓளவை இங்கு அந்த அமிர்தம் சுரந்தால் அதை உண்டால் உணவே தேவை இல்லை என்கின்றார்

இங்கு ஒரு மெல்லிய கேள்வி அல்லது தெளிவு எழும்?

ஞான குறளில் ஏன் உணவை தவிர்க்கும் விஷயங்களை ஒளவை சொல்கின்றார்? அதில்தான் இருக்கின்றது விஷயம், மானிட வாழ்வில் எல்லா தேவையும் ஆசையும் உணவில் இருந்துதான் தொடங்குகின்றது

உடலுக்கு உணவு என தொடங்கும் ஆசை பின் நல்ல சாப்பாடு, நல்ல சாப்பாட்டுக்கு வருமானம், நல்ல சாப்பாட்டுக்கு நல்ல வீடு, நல்ல சமையல்காரன் என எங்கோங்கோ மனிதனை இழுத்து சென்று மாயையில் வீழ்த்திவிடும்

இதனால்தான் உணவில் கட்டுபாடு வேண்டும் என்றார்கள் ஞானியர்கள், கங்கை கரையில் பிணமும் உணவும் ஒன்று எனும் அளவு அகோரிகளால் உணவு வெறுக்கபட்டது, ஞான அடையாளம் அது

உணவு எனும் தேவையில் இருந்து தன்னை துண்டித்துகொள்ளும் ஒருவனுக்கு எதுவுமே தேவையில்லை, அவன் எதற்கும் அடிமையாக போவதுமில்லை, உணவு தேடல் முடிந்த நிலையில் அவன் ஞானதேடல் ஆரம்பமாகி அவனால் எளிதில் முக்தி அடைய முடியும்

இதனாலே உணவை தவிர்க்கும் வழியினை சொல்லும் ஒளவை இப்பொழுது யோகத்தின் உச்சியில் சொட்டும் அமிர்தத்தால் உணவை தவிர்த்து வாழலாம் என்கின்றார்

வேதத்தில் ஒரு வரி உண்டு

“சூரியனிடத்தே இருந்து மூன்று உளுந்து அளவு நீரை வரவழைத்து, சுவீகரிக்க வேண்டும்” என்பது, சில சம்பிரதாயங்களில் மூன்று சொட்டு நீர் பிராமண குருக்கள் அருந்துவதை காணலாம்

இதன் சம்பிரதாய பொருள் மூன்று சொட்டு நீர் என இருந்தாலும், அதன் தத்துவ பொருள் சூரிய கலையின் உச்சியில் யோகத்தில் துலங்கும்பொழுது உருவாகும் அந்த அமிர்ந்தத்தை மூன்று துளி உண்ண வேண்டும் என்பது

அதைத்தான் இங்கு ஒளவை தன் ஞான குறளில் தெரிவிக்கின்றார்