ஓளவை குறள் : 47

“அச்ச மாங்கார மகத்தடக்கி னாற்பின்னை
நிச்சயமா மீச னிலை”

அச்சத்தையும் ஆங்காரத்தையும் மனதுள்ளே அடக்கி தவம் செய்தால் பின்னர் நிச்சயமாக ஈசன் நிலையினை அடையலாம் என்பது குறளின் பொருள்

இங்கு அச்சம் என்பது ஆசையின் உச்சத்தை குறிப்பது, அச்சம் என்றால் பயம் என்றொரு பொருள் உண்டென்றாலும் அச்ச, அச்சன் என்பது தலைமை பதவியினை குறிப்பதும் அச்சு என்றால் எல்லாவற்றுக்கும் மையமான பொருளாக இருப்பதையும் குறிக்கும்

அச்சம், அச்சு,அச்சன் என்பதெல்லாம் கிட்டதட்ட ஒரே பொருளே. அச்சம் என்றால் பயம் என பொருள் கொண்டாலும் அந்த பயம் ஒரு விஷயத்தை காப்பதற்காக ஏற்படுவதே அன்றி , ஏதோ ஒன்றிடம் இருந்து தனக்கு விருப்பமான பொருளை காக்கவே விரும்புவதே அன்றி வேறல்ல‌

கொள்ளையர் மேல் பயம் என்றால் பொருளை காக்க என பொருள், நோய் மேல் பயம் என்றால் உடலை காக்க விருப்பம் என பொருள்

இந்த அச்சம் என்பதை போக்கும் தலைவன் அச்சன், பயமின்றி தாங்கி நிற்கும் பொருள் அச்சு

இங்கே அச்சம் எனபது உலக விஷயங்களின் மேலான பற்றை குறிக்கின்றது, இந்த சொத்து பதவி பணம் செல்வாக்கு அதிகாரம் என எல்லாமும் கைவிட்டு போய்விடுமோ என நடத்தும் போராட்டமே அச்சம்

ஆங்காரம் என்பது கர்வத்தையும் பேராசையினையும் ஆணவத்தையும் குறிப்பது

சுருக்கமாக சொன்னால் அச்சம் என்பது இங்கு தமஸ் குணமாகின்றது, ஆங்காரம் என்பது ரஜோ குணமாகின்றது

இந்த இரண்டு குணங்களையும் அடக்கி சத்வ குணத்தை எழுப்பினால் ஈச நிலை அடையலாம் என்பதே குறளின் பொருள்

இந்த வரிகள் ஒளவையாரால் மட்டும் பாடபட்டது அல்ல, பட்டினத்தாரே இந்த வரிகளை பாடுகின்றார்

“அச்சம் ஆங்காரம் அடங்கேனே என்குதே” இந்த பொருள் பற்றின் பயமும் கர்வமும் என்னை விட்டு அகலவில்லையே என புலம்புகின்றார் பட்டினத்தார்

பற்று நீங்கி, கர்வம் நீங்கி தான் ஒரு சாம்பலுக்கு சமம் தூசிக்கு சமம் என ஒருவன் மனதால் அடங்கினால் சிவனில் கலந்து பெரும் ஞானநிலையினை அடையலாம் என்பது குறளின் பொருள்