கர்வம் கொண்ட நாடெல்லாம் அலறி ஓய்ந்து வீழ்ந்து கொண்டிருக்கின்றன‌.

பணம், ராணுவம், பொருளாதாரம், ஒலிம்பிக், அதிகாரம் என எல்லாவற்றிலுமே முதலிடத்தில் இருக்க நினைக்கும் அமெரிக்காவினை கொரோனா விஷயத்திலும் அடித்து இழுத்து முதலிடத்தில் வைத்திருக்கின்றது கொரோனா

அமெரிக்கா கதறி மிரட்டி கெஞ்சி ஓடி ஒளிந்தாலும் விடாமல் நீதான் இதிலும் நம்பர் 1 , நீயேதான் இருந்தாக வேண்டும் என மிரட்டி அந்த சிம்மாசனத்தில் கட்டி வைக்கின்றது காலதேவனின் கயிறு

எழுத்தாளர் பாலகுமாரன் ஒரு சம்பவம் சொல்வார், பெரும் எழுத்தாளர் என அவரிடம் ஒரு கர்வம் வந்த நேரமிது, பார்ப்பவர் எல்லோரும் அவரின் ஆட்டோகிராப் வாங்கி சிலர் காலில் விழுந்தெல்லாம் வணங்கிய நேரமது

எல்லா விருதும் அவருக்கே, எல்லா பத்திரிகையும் அவருக்கே, எல்லா சினிமாவும் அவருக்கே, எல்லா பதிப்பகமும் அவருக்கே என அவர் கொடிகட்டி பறந்த காலம்

ஜெயா முதல் எல்லா பெரும் பிம்பங்களுக்கும் அவர் பிடித்தமான மனிதராயிருந்தார், தமிழகம் மட்டுமல்ல உலகெல்லாம் கொண்டாடபட்டார்

அந்த பாலகுமாரனின் உள் மனம் அறிந்த அவரின் குருநாதர் விசிறிசாமி சில பாடங்களை உணர்த்த விரும்பினார், அன்று பாலகுமாரன் ஒரு பாலிஸ்டர் வேட்டி கட்டி வந்திருந்தார்

வாருங்கள் பாலகுமாரன் திருவண்ணாமலை வீதிகளை சுற்றிவரலாம் என கிளம்பினார், இவரும் பின்னால் சென்றார், நேரே பூக்கடைக்கு அழைத்து சென்றார்

இவர் பாலகுமார் பெரிய எழுத்தாளர் மாலையிடுங்கள்

முதல் மாலை விழுந்தது

அப்படி வருவோர் போவோரிடமெல்லாம் இவர் எழுத்தாளர் மாலையிடுங்கள் என சொல்லி இழுத்து கொண்டே சென்றார், பாலகுமாரன் கண்ணை மறைக்கும் நிலைக்கு மாலை விழுந்தது

சாமி போதும் வீட்டுக்கு போகலாம் என பாலகுமாரன் சொல்ல “எப்படிபட்ட எழுத்தாளன் நீ, வா இன்னும் மாலை விழும்” என அழைத்து சென்றார் சாமி

அடுத்து விழும் மாலைகளை தலையில் வைக்க உத்தரவிட்டார் சாமி, கைகளை தலைமேல் மாலையுடன் வைத்து கொண்டு வந்தார் பாலகுமாரன்

அந்நேரம் பாலகுமாரனின் வேட்டி அவிழ்ந்தது

ஆனால் குருநாதரோ கைகளை தலையில் இருந்து எடுக்க கூடாது என மிரட்ட ஒரு கையால் தலையின் மாலை ஒரு கையால் வேட்டி என பிடித்து தர்ம சங்கடத்தில் நின்றார் பாலகுமாரன்

எந்நேரமும் வேட்டி அவிழ்ந்து கவுதாம்பினி கோலத்தில் தமிழகத்தின் பிரதான எழுத்தாளன் நடுதெருவில் நிற்கும் கோலம் நெருங்கி கொண்டிருந்தது

சாமியோ கொஞ்சம் அலட்டாமல் எப்படிபட்ட எழுத்தாளன் நீ, உன்னை போல் யாரால் எழுதமுடியும், இந்த மாலை உனக்கு போதாது வா என அழைத்தது

அழுதே விட்டார் பாலகுமாரன் , அவரின் கர்வம் அன்றே உடைந்தது

அதுவரை அரைகுறை சித்தனாக இருந்த பாலகுமாரன் அதன் பின் முழு ஞானியானார்

ஆம் கர்வங்களும், தலைகணங்களும் உடைய ஒரு காலம் எல்லோருக்கும் வரும், நம்பர் 1 நான் என ஆடா ஆட்டமெல்லாம் ஆடுபவர்கள் எல்லோருக்கும் ஞானம் பெற ஒரு காலம் வரும்

அமெரிக்கா அப்படி சரிகின்றது, 3 லட்சம் பேரை நோக்கி செல்கின்றது எண்ணிக்கை, சாவு கணக்கு ஐந்தாயிரத்தை விரைவில் எட்டும்

காவலர்களுக்கும் மருத்துவர்களுக்கும் ராணுவத்தாருக்கும் ஏற்பட்ட தாக்குதலால் அந்நாடு விபரீத விளைவுகளை நோக்கி செல்கின்றது

இதன் விளைவுகள் சாதாரணமாயிராது என்பது உணரபடும் பொழுது அமெரிக்க மேலிடம் ஆடி அதிர்ச்சியில் வீழ்ந்து கொண்டிருக்கின்றது

நியூயார்க் மூடிகிடக்கின்றது , மூடியே விட்டார்கள். சில மாகாணங்கள் கடும் பதற்றம் அதுவும் லூசியானா நிலை மோசம் இது இன்னும் பரவலாம்

உன்னிப்பாக கவனியுங்கள் அலறி கொண்டிருப்பவர்கள் யார்?

பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா, ஜெர்மன்

இவர்களுக்குள்ளான பொது ஒற்றுமை என்ன? நாம் ஆளபிறந்தவர்கள் கருப்பர்களும் ஆசியர்களும் நாயினும் கீழானவர்கள் எனும் அந்த கர்வம்

வெள்ளை இனமே அறிவும் அழகும் மானமும் நாகரீகமும் மிக்கது வேறு எல்லோரும் காட்டுமிராண்டிகள் எனும் கர்வம்

உலகையே நாம் ஆட்டி வைக்கின்றோம் எனும் கர்வம்

சீனாவுக்கோ ஆசியாவிலே நாம் பெரும் தாதா எல்லா நாடும் எம் காலுக்கு கீழே எனும் கர்வம்

இப்படி கர்வம் கொண்ட நாடெல்லாம் அலறி ஓய்ந்து வீழ்ந்து கொண்டிருக்கின்றன‌

விஞ்ஞான முன்னேற்றமும் மருத்துவமும் மானிட குலத்தை காக்காது என அவை உணர்கின்றன, நமக்கு மேலான சக்தியே நம்மை நடத்தியது தவிர நாமெல்லாம் கருவிகள் என நம்ப தொடங்கிவிட்டன‌

அந்த சக்தியின் பொம்மைகள் நாம், நம்மை நேராக வைத்து ஆட்டிய சக்தி இப்பொழுது தலைகீழாக ஆட்டுகின்றது என நம்புகின்றன‌

அவைகளின் கர்வம் உடைந்து கொண்டிருக்கின்றது, அவை உடைந்து சுத்தமாக ஒழியட்டும் இனியாவது அவைகள் உண்மை ஞானத்தில் கரைந்து உலகை சமத்துவ சகோதரத்துவத்தில் வளர்க்கட்டும்

கர்வம் உடைந்த எவனையும், நான் எனும் அகம்பாவம் அழித்து தன் பாதம் பணிந்த‌ எவனையும் பகவான் கைவிடுவதில்லை என்பது வரலாறு

பட்டினத்தாரின் வரிக்கு ஏற்ப கைவிரித்து நிற்கின்றது அமெரிக்காவும் அதன் அடிப்பொடிகளும் என்ன வரி?

“என் செயலால் ஆவது யாதொன்றும் இல்லை இனித் தெய்வமே உன் செயலே என்று உணரப்பெற்றேன்”