கற்று கொள்ளவும் : கலைஞர் , ஜெயாவிடமிருந்து ….

முன்பெல்லாம் உடல்நலம் பற்றி அவ்வளவு கவலை இருக்காது, ஆனால் சமீபத்திய சில விஷயங்கள் உடல்நலம் எவ்வளவு முக்கியமென்று எல்லோருக்கும் சொல்லிகொண்டிருக்கின்றன‌

ஜெயலலிதா 106 கிலோ இருந்தாராம், அவர் நடக்க தடுமாறியது கடந்த வருட‌ வீடியோக்களில் இருந்தது. அவர் மரணமடைந்த விவகாரத்தில் மர்மங்கள் இருக்கலாமா? என்பது தெரியாது

ஆனால் அவர் உடலை கவனிக்காமல் விட்டு அது பெரும் சிக்கலை அவருக்கு கொடுத்திருந்தது என்பது உண்மை. 3 வருடம் முன்பே பலவித செய்திகள் வந்தன, BMI அளவு பெரும் ஆபத்து என எச்சரித்தார்கள், முடிவில் அது பல விதமான சிக்கல்களை அந்த உடல்பருமன் அவருக்கு கொண்டுவந்து, அப்பல்லோவிலும் சேர்த்துவிட்டது.

இப்பக்கம் பாருங்கள், கலைஞரை விட மூத்தவரான அன்பழகன் நலமாக இருக்கின்றார், ஆனால் கலைஞரால் முடியவில்லை.

உடல்நலனில் பெரும் அக்கறை எடுப்பவர் கலைஞர், ஆனால் சக்கரநாற்காலியில் அவர் அமர்ந்தபின்பு அவரின் உடலும் எடை கூடிவிட்டது

விஜயகாந்த் நிலை சிக்கலானதற்கு அவரின் உடலும் , தொண்டையும் பேச கூட ஒத்துழைக்காததும் காரணம், மூப்பனாரும் இதே சிக்கலில் சிக்கியிருந்தார்

பெரும் குழப்பவாதி என்றாலும் இன்றளவில் மகா ஆரோக்கியமான உடலை பெற்றிருப்பவர் வை.கோ.

ஆக ஜெயலலிதாவும், கலைஞரும் தங்கள் இறுதிகாலங்களில் சொல்ல வந்திருக்கும் விஷயம் இதுதான், உடல் நலம் மகா முக்கியம்

இவர்களை எல்லாம் கவனித்ததிலிருந்து உடல் நலம் மீது அக்கறை வருகின்றது, அதிமுக எம் எல் ஏக்கள் சொத்துமதிப்பு போல பெருகிவிட்ட இந்த உடல் எடையினை குறைத்தே தீரவேண்டும் என்று முடிவாகிவிட்டது

அளவுக்கு அதிகமான இந்த “சதைகுவிப்பு” எப்படி வந்தது என தெரியவில்லை, ஆனால் கரைப்பது நீதிமன்றத்தாலும் முடியாத விஷயம் போலிருக்கின்றது.

பேலியோ எனும் உணவுமுறை மீதெல்லாம் கவனமில்லை, மண்பானை மீன்குழம்பும், சம்பா அரிசி சோறும் இல்லாத. வெண்கல சட்டியில் வதக்கிய கோழி இல்லாமல் என்ன வாழ்வு?

அப்படி ஒரு வாழ்வு வாழ்வதை விட நெருப்பில் வீழ்தல் நேர்

இப்பொழுதெல்லாம் சீன மக்களை பார்க்க பொறாமையாக இருக்கின்றது, உடலை அப்படி பராமரிக்கின்றார்கள், ஆனால் 6 வேளை எல்லா உயிரினமும் அவர்கள் வாயில் நுழைந்துகொண்டுதான் இருக்கின்றது

காலை , மாலை நடந்து ஓடி ஆடி உடலை வருத்து நூடுல்ஸ் போல வைத்திருக்கின்றார்கள், முதியவர்கள் கூட கையில் கம்பு ஏந்தி வாக்கிங் வருகின்றார்கள்

நாமும் நடக்கலாம் ஆனால் சும்மா நடப்பதில் என்ன இருக்கின்றது? குஷ்பூ வீடோ, அலுவலகமோ அப்பக்கம் இருந்தால் எத்தனை முறையும் நடக்கலாம், அட மைதானத்தில் குஷ்பூ சிலை இருந்தாலும் எத்தனை முறையும் சுற்றி சுற்றி வரலாம்

இங்கு அப்படி எல்லாம் இல்லை, எனினும் விட்டுவிட முடியாது, ஏதாவது செய்து உடல் எடையினை குறைக்க வேண்டும்.

“விசையுறு பந்தினைப் போல் – உள்ளம் வேண்டிய படி செல்லும் உடல் கேட்டேன்” என்றான் பாரதி

மிக அர்த்தமுள்ள மன்றாட்டு அது, மனம் சொன்னபடி செல்லும் உடல் எவ்வளவு அவசியம், அது உடல் எடையினை குறைக்க பாடுபடும் பொழுதுதான் தெரிகின்றது

மனம் என்ன சொன்னாலும் உடல் சோர்ந்துவிடுகின்றது

இயேசுவும் அதனையே சொன்னார், “ஆன்மா வலுவுள்ளது உடல் வலுவற்றது”

ஆக இனி பாரதியும், இயேசுவும் சொன்னது போல மனம் சொன்னபடி கேட்கும் உடல் வரும்வரை ஏதாவது செய்தாக வேண்டும்

பாரதி பராசக்தியிடம் கேட்டான் , நாமும் மேரிமாதாவிடம் கேட்டுவிட்டால் நடக்காது, அதற்கு நிறைய அனுதினமும் ந‌டக்க வேண்டும்.

நடக்கலாம்

தமிழர்களே ஜெயாவிடமும், கலைஞரிடமும் இருந்து எதனை கற்றுகொள்ளலாமோ தெரியாது, ஆனால் உடல்நலம் எவ்வளவு முக்கியம், உடல்பருமன் எவ்வளவு ஆபத்தானது எனபதை அவர்களிடமிருந்தே கற்றுகொள்ளவேண்டும்

சமீபத்தில் அவர்களிடமிருந்து நாம் கற்றுகொண்டது அதுதான்