கார்த்திகை தீபம்

தமிழ் மாதங்களில் தனிசிறப்புமிக்கது கார்த்திகை மாதம் பல வகையான சிறப்புக்களை கொண்டது, கார்த்திகை தீபமும், சொக்கபனையும் இன்னும் பலவகையான தனிசிறப்புக்களையும் கொண்டது.

கார்த்திகை தீபம் என ஒரு நாளில் வரும் பண்டிகை அல்ல அது, உண்மையில் அது அகில இந்திய தீப பண்டிகையாக 5 நாள் கொண்டாடபடும், தென்னாடு என்பது சைவ பூமி என்பதால் சிவனுக்குரிய அந்த கார்த்திகை நாள் தீபம் மட்டும் உற்சாகமாக கொண்டாடபடுகின்றது

இந்த விழா 5 நாள் கொண்டாடபடும், கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தில் காளிக்கு முதல் நாள் விளக்கு ஏற்றுவதுடன் அது தொடங்கும், ஆம் காளியே காவல் தெய்வம்.

மறுநாள் கார்த்திகை அன்று சிவன் ஆலயங்களில் தீபம் ஏற்றுவார்கள், நாம் கொண்டாடும் கார்த்திகை தீபம் அதுதான்

அடுத்தநாள் ரோகினி நட்சத்திரம் அன்று விஷ்ணு ஆலயங்களில் தீபம் ஏற்றுவார்கள்

4ம் நாள் மிருகசீரிடம் அன்று குடும்பத்தோடு கொண்டாடுவார்கள், வீடெல்லாம் விளக்கு வைப்பது அன்றுதான், கொழுக்கட்டை எல்லாம் அவித்து மகிழ்ந்தது அந்த நாளிலேதான்ம், அந்த நாள் குல தெய்வத்திற்கானது

5ம் நாள் திருவாதிரை நட்சட்திரத்தை தோட்ட கார்த்திகை என்பார்கள், அன்று தோட்டம் வயலில் கொண்டாடுவார்கள், சொக்கபனை என கொளுத்துவதெல்லாம் அன்றுதான் இருந்தது, அந்த நாளில் குளத்துகரை சாஸ்தா போன்ற வயல் காவல் தெய்வங்களுக்கு விளக்கு ஏற்றி வழிபடுவார்கள்

இப்படி 5 நாட்கள் கொண்டாடபட்ட கார்த்திகை விழா கால போக்கில் ஒரே ஒரு நாளாக சுருங்கிவிட்டது

எனினும் பாரம்பரியமிக்கோர் கார்த்திகை, ரோகினி, மிருகசீரிஷம் அதாவது கார்த்திகை தீபம் எனும் ஆலய தீபம் , மறுநாள் வீட்டு தீபம், அடுத்த நாள் குல தெய்வ வழிபாடு என செய்கின்றார்கள், குறைந்தது 3 நாள் கொண்டாடபட வேண்டும்

ஒரு சிலர் கார்த்திகை தீபம் மற்றும் தோட்ட தீபம் எனும் இரு நாட்களை கொண்டாடுகின்றார்கள்

எப்படியோ இந்நாள் தமிழர் கலாச்சாரத்தின் தனிபெரும் பண்டிகை, ஆலயமெல்லாம் தீபமும் வீடெல்லாம் வெளிச்சமும், ஓலை கொடுக்கட்டையும் முருகன் ஆலயங்களில் தெப்ப திருவிழாவுமாக கொண்டாடபடும்

இந்த நாள் முருகபெருமானுக்கும் உகந்தது

கார்த்திகை தீபம் என்பது மூன்று கடவுள்களில் யார் பெரியவர் என சோதிக்க சிவன் நெருப்பாய் நின்றதாகவும் பிரம்மன் அன்னபறவையாய் அவரின் முடியினை காண மேலே சென்று காணமுடியாமல் தோற்றதாகவும், விஷ்ணு வராகம் எடுத்து அவரின் பாதத்தை காணமுடியாமல் தோற்றதகவும், அடிமுடி காணமுடியா அளவு விஸ்வரூமாய் நின்ற சிவனி ஜோதி வடிவம் என நம்பபடுகின்றது

ஞானபூமியான திருவண்ணாமலையில் தீபம் ஏற்றபடும் தத்துவம் அதுவே, அந்த சிவாலயமே கார்த்திகை திருவிழாவில் மகா முக்கியமானது

சிவன் தீப உருவில் நின்றாரா பிரம்மாவும் சிவனும் தோற்றார்களா என்ற பகுத்தறிவு ஆய்வுக்கு விஞ்ஞானமே விடை தருகின்றது

ஆம் இந்த பிரபஞ்சம் தொடக்கமும் முடிவும் இல்லாதது, அதன் தொடக்கம் மற்றும் முடிவு புள்ளி என ஒன்று இல்லவே இல்லை

அந்த எல்லையற்ற பிரபஞ்சத்தை சிவன் என உணர்ந்து, அதன் ஒப்பற்ற சக்தி நெருப்பு அல்லது ஒளி என உணர்ந்து அதுவே தெய்வம் என இந்துக்கள் செய்த ஏற்பாடுதான் இந்த கார்த்திகை தீபம்

மதங்களுக்குள் எவ்வளவோ வேறுபாடு இருப்பினும் எல்லா மதமும் ஒப்புகொள்ளும் விஷயம் கடவுள் ஓளிவடிவானவர், பேரோளியில் அவர் வாசம் செய்கின்றார்

யூதமும் கிறிஸ்தவமும் இன்னும் பல மதமும் அதை ஒப்புகொள்கின்றன‌

பழைய ஏற்பாட்டில் கடவுள் காட்சிதரும்பொழுதெல்லாம் நெருப்பு பிம்பமாக வந்திருக்கின்றார், பரிசுத்த ஆவி கூட நெருப்பு வடிவில் ஒளியாக வந்திருக்கின்றது

அந்த ஒளியினைத்தான் இந்துக்களும் தீபம் என ஏற்றி வழிபடுகின்றனர்

கார்த்திகை தீபம் என்பது இந்துக்களுக்கான பண்டிகை மட்டும் அல்ல, ஆழ நோக்கினால் எல்லா மதங்களுமே ஒப்புகொள்ளும் தத்துவம்

சிலப்பதிகார காலத்தில் இருந்தே கார்த்திகை தீபம் கொண்டாடபடுகின்றது, இன்னும் பல பண்டைய இலக்கியங்களிலும் அது காணப்படுகின்றது. கார்த்திகை மாதம் என்றவுடன் திருவண்ணாமலை தீபத்தை அடுத்து நினைவுக்கு வரும்விஷயம் இந்து நண்பர்களின் தெய்வம் முருகன், அவரை வளர்த்த கார்த்திகை பெண்கள்.

தமிழர் கடவுளான முருகனுக்கு மட்டும் மூன்று நட்சத்திரங்கள் உகந்தது, ஒன்று விசாகம் இன்னும் இரண்டு கார்த்திகையும் பூசமும், தை பூசமும் வைகாசிவிசாகமும் கார்த்திகை மாத பவுர்ணமியும் முருகனுக்கு மிக மிக உகந்த நாட்கள்.

அவ்வகையில் எல்லா முருகன் ஆலயங்களும் இன்று சிறப்பு பெறும்

ஆழ கவனித்தால் அக்காலத்தில் செய்த அற்புதமான ஏற்பாடுகள் கண்முன் வரும்

ஆம், கார்த்திகை என்பது கனமழை மாதம். அந்த மாதத்தில் ஏரிகளும் கண்மாய்களும் நிரம்பி இருக்கின்றன, கடும் விவசாய வேலைகள் ஆரம்பிக்க போகும் காலம்

அந்நேரம் குளிர் தழுவும் காலம்

விவசாய பணிகள் ஆரம்பிக்கும் முன் தெய்வத்துக்கு நன்றி சொல்ல கோவிலெல்லாம் விளக்கு வைத்தார்கள், நல்ல மழைக்கும் நிறைந்த நீருக்கும் நன்றி என்பது அது

சொந்தபந்தமெல்லாம் கூடி மகிழ்ந்து விளக்கேற்றினார்கள், தெய்வம் நீரை கொடுத்துவிட்டது இனி விளைச்சல் நிச்சயம் என மகிழ்ந்தார்கள்

5ம் நாள் தோட்டத்தின் காவல் தெய்வத்துக்கும், நீர் நிலை காவல் தெய்வங்களுக்கும் விளக்கிட்டு படையில் இட்டு அதனிடம் ஆசிபெற்று அதை குளிர்வித்து விவசாய வேலைகளை தொடங்கினார்கள்

ஒரு வகையில் இது கடவுளை அக்னி வடிவில் மட்டும் வணங்கும் தீப விழா அல்ல‌

கவனியுங்கள், நீர், நெருப்பு, முடிவில்லா ஆகாயம், நிலம், காற்று என எல்லாவற்றையும் வணங்கும் விழா

பஞ்சபூதங்களில் இருக்கும் கடவுள் தன்மையினை உணர்ந்து வணங்கும் விழா

தீபமேற்றி நெருப்பினை வணங்கி, குளத்துகரை நீரை வணங்கி, நிலத்தினை வணங்கி , காற்றில் தீபத்தை கலந்து, ஆதி அந்தம் இல்லா சிவன் என வானத்தை வணங்கி நன்றி தெரிவித்தார்கள்

சிந்திக்க சிந்திக்க ஏராளமான தத்துவங்கள் இந்நாளில் தோன்றும்

ஏற்றபடும் தீபம் போல் நாடு ஒளிரட்டும் , நாடும் மக்களும் நலம்பெற ஏற்றிய தீபத்தில் மனதை வைத்து பிரார்த்திப்போம், அந்த ஏக நாதன் ஆதியும் அந்தியுமில்லா பரம்பொருள் எல்லோரையும் ஆசீர்வதிக்கட்டும், எல்லோர் வாழ்விலும் தீபம் ஏறட்டும்

கடவுளிலே இயற்கையினையும், இயற்கையிலே கடவுளை காணும் இந்த சனாதான தர்மம் செழிக்கட்டும், வையகம் வாழட்டும்