காலம் அதன் கடமையினை..
காலம் அதன் கடமையினை எப்பொழுதும் சரியாக செய்யும், இந்த பிரபஞ்சம் எப்பொழுதும் சரியாக காலத்தின் சக்கரத்தை சுழற்றும், எல்லாவற்றையும் கவனிக்கும் ஒரு சக்தி உரிய நேரத்தில் தான் உலகை ஆளும் காட்சியினை சாட்சியாக சொல்லும்
இலங்கையில் இன்று சிங்களவர் தங்களுக்குள் அடித்து கொள்ளலாம், சிங்களவர் தரப்பே தங்கள் தலைவினை நாட்டை விட்டே அடித்துவிரட்டலாம், சிங்கள ராணுவமே சிங்களர் மேல் பாயலாம்
இன்று கொழும்பில் சிங்களவர்களுக்குள்ளே அடித்து கொண்டு சாகலாம், தேசம் ஸ்தம்பித்து நிற்கலாம் , சொந்த கொழும்பு குடிமக்களையே சொந்த நாட்டு அதிபரும் ராணுவமும் குதறலாம்
ஆனால் இவையெல்லாம் இன்று கொடுமையாக தெரிந்தாலும் அந்த கொடும் வரலாறு, அதாவது 40 வருடத்துக்கு முன்நடந்த கொடுமையினை நோக்கும் பொழுது தர்மத்தின் ஆட்டம் என புரியும்
மொத்த சிங்களமும் தமிழருக்கு எதிராக நடத்திய அழிவின் எதிரொலி காட்சி என்பது புரியும்
ஆம், அந்த வரலாறு அப்படியானது பெரும் கொடுமையானது
1983ல் இதே காலங்களில் கொழும்பு எரிந்துகொண்டிருந்தது, தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லபட்டிருந்தனர், இங்கே முள்ளிவாய்க்காலுக்காகவும், மாவீரர் நாளுக்காகவும் மல்லுகட்டும் இன உணவாளர்கள் எல்லாம் இந்நாளில் மல்லாக்க படுத்தாயிற்று
ஆனால் அந்த கொடூர நிகழ்வு மறக்க முடியாதது, இந்தியா ஈழவிவகாரத்தில் தலையிட இதுதான் காரணம், அந்த தமிழர்களுக்கு இந்த உணர்வாளர்கள் எல்லாம் அஞ்சலி செலுத்த வரமாட்டார்கள். பிரபாகரனுக்காக செத்தவர்கள் அல்லது பிரபாகரன் சொல்லி செத்தவர்கள் தான் இவர்களுக்கு தமிழர்கள்
34 ஆண்டுகளுக்கு முன்னால் கொல்லபட்ட அம்மக்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு நடந்த கொடூரத்தை பார்க்கலாம்
சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே ஏன் அதற்கு முன்பே சிலோன் என அழைக்கபட்ட பிரிட்டிஷ் காலத்திலிருந்தே இலங்கைக்கும் இந்தியாவிற்கும் அவ்வளவு சுமூக உறவு என சொல்லமுடியாது.
ஒரு கட்டத்தில் சிலோனின் தலமையகத்தை சென்னைக்கு பிரிட்டிசார் மாற்றிய பொழுதே, “ஐயகோ இது இந்திய இணைப்பின் முன்னோட்டம்” என வரிந்துகட்டி பிரித்து சென்றவர்கள் இலங்கையர், உபயம் அனாரிகா தர்மபாலா எனும் அவர்களின் புத்தனின் தூதுவன் + யாழ்பாணதமிழர்கள்.
நேருகாலத்தில் 5 லட்சம் இந்தியா வம்சாவழி தமிழரை திரும்ப அனுப்பியதிலிருந்து இலங்கை இந்தியா உரசல் தொடங்கியது, அதாவது இந்திய தரப்பில் முணுமுணுப்பு,இலங்கை தரப்பில் மாபெரும் வெற்றி. யாழ்பாணர் தரப்பில் ஒரு திருப்தி.
படிப்பறிவில்லை,நாகரீகமில்லை பஞ்சம் பிழைக்கவந்த பரதேசி வம்சம் விட்டால் மக்கள்தொகை கூடி வோட்டுவங்கிக்கு வந்து நமக்கு சரிக்கு சரியாக அமர்ந்தால் எப்படி? சீ சீ விரட்டியாயிற்று. நாகரீகம் முக்கியம், கல்வி முக்கியம் தமிழரவாது? தொப்புள்கொடியாவது? வெட்டிவிட்டாயிற்று.
நேரு அப்போது இந்தியபிரதமர், ஆசிய ஓற்றுமை, பஞ்சசீலம்,அணிசேரா கொள்கை என என்னவெல்லாமோ சொல்லிகொண்டிருந்தார். சீனா பின்மண்டையில் அடிக்கும்வரை அவருக்கு உரைக்கவில்லை, அடிபட்டதும் அப்படியே கோமா நிலை.
அதன்பின் இந்திய தலையீடு இலங்கையில் இல்லை, ஆனால் வாய்ப்பு கம்யூனிஸ்டுகள் வடிவில் வந்தது.
உலகெல்லாம் கம்யூனிசதாக்கம், இலங்கையிலும் வந்தது. கட்சியின் பெயர் சிங்களத்தில் ஜனதா விக்தி பிரமுணா சுருக்கமாக ஜேவிபி , தமிழில் மக்கள் விடுதலை கட்சி. கட்சி 1971ல் திடீர் புரட்சி செய்து கொழும்பை முடக்கியது. பெயருக்கு ஒரு ராணுவம் இருந்த இலங்கை கையை பிசைந்து நின்றது, உலகநாடுகளுக்கு உதவிகரம் கேட்டது.
இந்தியபடைகள் அனுப்பபட்டன, முதல் முறையாக இந்தியராணுவம் இலங்கைக்குள் கால்பதித்து, கிளர்ச்சியை அடக்கி மறுபடியும் பண்டாரநாயகாவினை ஆட்சியாளராக்கிவிட்டு திரும்பியது, எந்த இலங்கையரும் அப்போது அதனை ஆக்கிரமிப்புபடை அல்லது கற்பழிப்புபடை என சொல்லவே இல்லை.
கலவரம் ஓய்ந்ததும் வாழ்த்தி அனுப்பினர் இந்தியபடைகளை.இந்தியா நேரடியாக இலங்கையில் தலையிட்ட முதல் நடவடிக்கை இதுதான், ஆனாலும் அந்த கிளர்ச்சி அடக்குவதில் பாகிஸ்தானும் படைகளை அனுப்பியிருந்ததால் லங்கா பாகிஸ்தான் உறவும் வலுத்தது.
சிங்களம் பாகிஸ்தானுடனேதான் உறவாடியாது. இந்தியா கச்சதீவை கொடுத்து வேறுமாதிரி உறவினை வளர்க்க நினைத்த காலமிது.
அதன் பின் இலங்கையில் மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் சிங்களருக்கு சலுகைகள் அள்ளிகொடுக்கபட ( அதேதான் நமது ஊரில் தாழ்த்தபட்ட மாணவனுக்கும் பிராமண மாணவனுக்கும் இட ஒதுக்கீடு உண்டல்லவா? அப்படித்தான் புரியவில்லை என்றால் தமிழக வேலை வாய்ப்பினினை, கல்லூரி அட்மிசனை சென்றுபார்க்கவும்) தமிழ் மாணவர்கள் போராட கிளம்பினர்.
அதுவரை சாத்வீகமாக நடந்த எதிர்ப்புகள் அதன்பின் வன்முறையாக மாறின, அதனை ஈழதமிழ் அரசியல்வாதிகளும் பயன்படுத்திகொள்ள அதுபெருநெருப்பாக வளர்ந்தது.
போராளிகுழுக்கள் தோன்றின, 30க்கும் மேற்பட்ட குழுக்கள் தொடக்கத்தில் இருந்தது. போராளிகள் என்றால் பகலில் ஒழுங்காக வேலைக்கு சென்றுவிட்டு வார இறுதியிலோ அல்லது நள்ளிரவிலோ போராடமுடியாது. அவர்களுக்கு பணம் வேண்டும், ஆயுதம் வாங்க, பதுக்க,உண்ண, உறங்க,அறிக்கை விட, பேப்பர்வாங்க என ஏராளமான பணம்வேண்டும்.
அதற்காக அரசுவங்கிகளை குறிவைத்தார்கள். அக்கால வசதியான பகுதி யாழ்பாண பகுதி, வங்கிகள் எல்லாம் கொள்ளைஅடிக்கபட்டன, அரசு கருவூலம் கொள்ளையடிக்கபட்டது இன்னும் ஏராளம்.
அடகுகடைகளும் தப்பவில்லை. இதில் பெரியகொடுமை என்னவென்றால் திருடர்களும் தாதாக்களும் திடீர்போராளிகளாகி கொள்ளையடித்துவிட்டு, அப்பணத்தில் பென்ஸ்காரில் போய்கொண்டிருந்தார்கள்.
அன்று வெள்ளையர் விட்டுசென்ற ஆட்சிமுறைபடி சிங்களர்பகுதியில் தமிழ் போலிசாரும், தமிழ்பகுதியில் சிங்களபோலிசாரும் அதிகம். வங்கிகொள்ளை என்றால் போலீஸ்தானே காவலுக்கு வரும். போராளிகளின் அடுத்தகுறி காவல்நிலையம் மீது திரும்பிற்று, சிங்கள போலிசார் பலியாக ஆரம்பித்தனர்.
இது சிங்களர் அதிகம்வாழும் பகுதிகளில் ஆத்திரத்தை கிளப்பிற்று, கொஞ்சம் கொஞ்சமாக பதற்றம் கூடிற்று.
ஆனால் போராளிகளோ காவல்துறையினர கிட்டதட்ட முடக்கும் நிலைக்கு வந்தாயிற்று. போலீஸ் என்றால் எத்தனை திருடர்களுக்கு, கடத்தல்காரர்,சாராயவியாபாரிகளுக்கு கசக்கும், அவர்களும் போலீசாரை தீர்த்துகட்டிவிட்டு நாங்கள் போராளி என சொல்லிகொண்டனர்.
போலீஸ் முடியாவிட்டால் ராணுவம்தான் வரும், வந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் ராணுவம் மேல் தாக்குதல் நடந்தது. ஒன்றும் உருப்படியில்லை.
கண்ணிவெடி ராணுவத்திற்கு வைத்தால் செம்மறிஆட்டு கூட்டம் சிதறும், என்னசெய்ய உப்புகண்டம் போடவேண்டியதுதான்.
இந்நிலையில் புலிகள் அமைப்பு பெரும் தாக்குதலுக்கு திட்டமிட்டது, பெரும் மிரட்டல் அதிகாரி பஸ்தியாம்பிள்ளை கொலைவழக்கில் தப்பிசென்ற செல்லகிளி பம்பாயிலிருந்து யாழ்பாணம் திரும்பியிருந்தார், அவர்தான் தாக்குதலுக்கு தலமை பொறுப்பு.
கொழும்பில் அமைச்சர்கள்,சிங்கள ரவுடிகள் எல்லாம் ஒரு கூட்டம்போட்டு முடிவெடுத்தனர். அதாவது இனி வடக்கில் சிங்கள் மீது தாக்குதல் நடந்தால் கொழும்பிலும் தென்னிலங்கையிலும் பெரும் தாக்குதலை நடத்தவேண்டும், அது தமிழரின் வாழ்வில் மறக்கமுடியாத அடியாக அமையவேண்டும். ஆனால் முந்தகூடாது ஆனால் வாய்ப்பு வரும்பொழுது விடவும்கூடாது.
அப்படி அடிக்காவிட்டால் சிங்கள மக்களின் அபிமானத்தை இழந்துவிடுவோம், பெரும்பான்மை இனம் சிறுபான்மையினரிடம் அடிவாங்கினால் அது தற்கொலைக்கு சமம் அல்லவா? என்றெல்லாம் வெறியேற்றிகொண்டார்கள்.
இருபக்கமும் அடிப்பதில் தீர்மானமானமானர்கள், புலிகளுக்கோ ஏராளமான ராணுவத்தினரை கொன்று கவனத்தை திருப்பும் நோக்கம். சிங்களருக்கோ கொழும்புவாழ் தமிழரை மொத்தமாக கொல்லும் பயங்கரதிட்டம், காரணம் போலீஸ் பிணங்களாக சிங்களபகுதிக்கு வந்துகொண்டிருந்தன.
தமிழகத்திலோ ஈழ அரசியல் அப்போது அறவே இல்லை, கச்சதீவு பிரச்சினை இல்லை இருந்தாலும் இந்திராவினை தாண்டி பேச தமிழகத்தில் யாருமில்லை.
எம்.ஜி.ஆர் முதல்வர், கருணாநிதி எதிர்கட்சி. காங்கிரஸ் இந்திரா புண்ணியத்தில் உயிரோடு இருந்தது. கருணாநிதியும் எம்ஜிஆரும் அறிக்கையில் மோதுவார்கள், மக்கள் பார்த்துகொண்டு எம்ஜிஆருக்கு வோட்டளிப்பார்கள், கருணாநிதி கடுப்பில் “தமிழன் சோற்றுபாணை”, “பிண்டம்” என முரசொலியில் தீட்டிகொண்டிருப்பார்.
மொத்த இந்தியகவனமும் பஞ்சாபில் இருந்தது, பிந்திரன்வாலே குழு அப்படி அட்டகாசம் செய்துகொண்டிருந்தது.
இந்திராகாந்திக்கோ இலங்கைமேல் திரிகோணமலை விவகாரம் தொடர்பாக கடுப்பு இருந்தது, வாய்ப்பு கிடைத்தால் ஆட்டம் ஆட தயாராக இருந்தார்.
புலிகள் தாக்குதலுக்கு நாள்குறித்தனர் ஜீலை 23 என முடிவெடுத்தனர் (தயாராக பாறைகளை உடைக்கும் வெடிமருந்தை சிங்கள சிமெண்ட் ஆலையிலிருந்து கடத்தினர்). தலமை செல்லகிளி, கிட்டு,மாத்தையா,விக்டர்,பிரபாகரன் என ஆரம்பகால புலிகளின் டீம் களத்தில் இறங்கியது.
ராணுவதாக்குதலில் நேரடியாக பிரபாகரன் பங்கெடுத்த ஒரே தாக்குதல் இதுமட்டுமே.
பின்னாளில் திட்டம் மட்டும் அவருடையது, யாராவது தளபதிகள் திறமையாக தாக்குவார்கள்.
யாழ்பாணம் திருநெல்வேலி சந்திப்பில் டெலிபோன் டிபார்ட்மெண்ட் வெட்டிவைத்த குழியில் கன்னிவெடி வைத்து காத்திருந்தார்கள். இரவில் இரு ராணுவ வாகனங்கள் ரோந்துவந்தன, எல்லா புலிகளும் பொசிஷனில் தயாராக இருந்தார்கள், கையில் இருந்த விசையை ( நமது ஊரில் கிணறுதோண்ட வெடி வைப்பார்கள் அல்லவா? அதே கருவி) செல்லகிளி இயக்க முதல்வாகனம் தப்பி இரண்டாம் வாகனம் சிக்கியது.
குறிவைத்தது முதல்வாகனத்திற்கு, சிக்கியதோ இரண்டாம் வாகனம், ராணுவத்தார் சுதாரிப்பதற்குள் புலிகள் தாக்கினர், 13 பேர் பலி இருவர் ஓடிவிட்டனர்.
புலிகள் தரப்பில் செல்லகிளி பலியானார்
சிங்கள தரப்பு கொந்தளிக்க தொடங்கிற்று, வதந்திகளும் இன்னும் பரப்பபட்டன
வாய்பினை எதிர்பார்த்திருந்த சிங்கள குழு நெட்டிமுறித்து கிளம்பினர், சும்மா அல்ல 13 பேர் உடலும் ரத்தம் வடிய வடிய மேலும் சிதைக்கபட்டு மக்களின் பார்வைக்கு வைத்தனர், இன்னும் சிங்கள் உடல்கள் வருவதாக பிரச்சாரமும் நடந்தது, ஜெயவர்த்தனே சிக்னல் கொடுத்துவிட்டு அமைதியானர், சிங்கள வெறிகூட்டம் கிளம்பிற்று
உலகின் அனைத்து தெய்வங்களும் கண்களை மூடிகொள்ள, அந்த பயங்கரம் தொடங்கியது, யூதர்களுக்கு நாசிகள் செய்ததற்கும், பிரிவினை காலத்தில் இந்திய எல்லையில் நடந்த ரத்தகளறிக்கும் கொஞ்சமும் குறையில்லா கொடுமை அங்கு தொடங்கிற்று.
இலங்கை தமிழருக்கு கருப்பு நாட்கள் அவை. அந்த கருப்பு ஜூலை நெருப்பாய் எரிய ஆரம்பித்தது.
அந்த கலவரம் பெரும் கொடியவன்முறை, நாட்டின் குடிமக்களை அரசே கொன்றுகுவித்த பயங்கரம். அதுதான் உண்மையில் “இனபடுகொலை”, நடந்த கொடூரங்கள் அப்படி.
தமிழர்களின் வீடுகள், அரசின் வாக்காளர் அடையாள பட்டியலின் நகலாக எல்லா ரவுடிகளின் கையிலும் கொடுக்கபட்டது, பெட்ரோல்கள் ரகசிய இடங்களில் சேமிக்கபட்டது. பாதாள உலக குண்டர் தலைவர்கள் எல்லாம் சிங்கள அமைச்சர்களோடு பேசிகொண்டே இருந்தார்கள்.
அதாவது கொஞ்சகாலமாகவே முன் தயாரிப்புகள் மிக கடுமையாக நடத்தபட்டிருந்தது. முதல் ஆயுதபோராளியான குட்டிமணிகுழு சிறையில் இருந்தது, அவர்களையும் கும்பல் மனதில் வைத்திருந்தது.
ஜூலை 23 அன்று, கிட்டதட்ட 50 வருடங்களாக அனாரிகா தர்மபால ஊட்டிய அந்த ஈழதமிழர் வெறுப்பு, அன்று மொத்தமாக கொழும்பில் தீயாக இறங்கியது. பாதிக்கபடாத தமிழர் இல்லை. எரியாத தமிழர் சொத்துக்கள் இல்லை.
தமிழர் எரிந்துகொண்டிருக்கும் பொழுது வழியில் சென்ற சிங்கள்ருக்கு எல்லாம், தமிழரின் பணமும்,நகையும் அள்ளிகொடுக்கபட்டன. அந்த உற்சாகத்தில் அவர்கள் 2 லிட்டர் பெட்ரோலை கூடுதலாக ஊற்றிவிட்டு சென்றார்கள்.
வெலிக்கட சிறையில் குட்டிமணி குழு கொடூரமாக சிதைக்கபட்டு கொல்லபட்டது, இன்னும் ஏராள படுகொலைகள். இந்திய தூதரே கொழும்பில் அபூர்வமாக உயிர்தப்பிய பின் சொல்வதற்கு என்ன இருக்கின்றது?
ஆயினும் ஏராளமான சிங்கள மக்கள் அப்பாவி தமிழர்களை தங்கள் வீடுகளில் வைத்து காப்பாறியதையும் மறக்கமுடியாது, உண்மையான பவுத்தர்கள்.
கிட்டதட்ட 10,000 தமிழர்களுக்கு மேல் இறந்திருக்கலாம், ஆனால் அவர்களின் சொத்துக்கள் முழுமையாக அழிக்கபட்டன, தமிழ்பெண்களின் நிலை, இரண்டாம் உலகபோரில் சீனபெண்களின் நிலையில் இருந்தது.
உலகம் கொந்தளித்தது,
ஜெயவர்த்தனே அமைதியாக சொன்னார் “புலிகள் வடக்கில் எமது மக்களை கொன்றதன் சிங்கள எழுச்சி இது, அரசு என்ன செய்யமுடியும்?”
உண்மையில் ஜெயவர்த்தனேவும் கைதியாக்கபட்டுதான் இருந்தார், காரணம் அரசியல், அடுத்த சிங்களமக்களின் நம்பிக்கையை பெறுவது யார்? எனும் இரண்டாம் தலைவர்களின் அரசியல் விளையாட்டு.
மனிதாபிமான அடிப்படையில் இந்தியா களமிறங்கியது, களமிறக்கபட்டவர் அந்நாளைய வெளியுறவுதுறை அமைச்சர் நரசிம்மராவ்.
ஆனாலும் கிட்டதட்ட அவமானபடுத்தபட்ட நிலையில் திரும்பினார். கொழும்பு எரிவதை நேரில் கண்டவர் அவர், காரணம் கலவரம் 1 வாரம் நீடித்தது.
இனி அழிக்க ஒன்றுமில்லை என்பதால் கொழும்பில் கலவரம் ஒய்ந்தது அல்லது கொன்று கொன்று சிங்களர் களைத்துவிட்டார்கள், ஆனாலும் பின்னர் உயிர்தப்பிய தமிழர்களை வடக்கே அனுப்ப அரசு தயாரானாது.
நரசிம்மராவிற்கு நடந்த அவமானத்தை, தனக்கே நடந்ததாக பொறுமினார் இந்திரா, விளைவு போராளிகளுக்கு பயிற்சிகள் இந்தியாவில் பயிற்சிகொடுக்க உத்தரவிட்டார்
அதன்பின்பு நடந்தவை எல்லோரும் அறிந்தது
40 வருடங்களுக்கு முன்பு நடந்த கொடும் வரலாற்றினை திருப்பி நோக்கினால் இன்று இலங்கையில் நடந்து கொண்டிருப்பது காலத்தின் சுழற்சி என புரியும்
இரு கொடும் நினைவுகளிலிருந்தும் உண்மையினை அறிந்து தங்களின் ஒற்றுமையே தங்களுக்கான வாழ்வு என்பதை உணர்ந்து அவர்கள் மீண்டெழ பிரார்த்தனைகள்
அன்று ஈழதமிழர் உயிர்காக்க களமிறங்கிய இந்தியாதான் இன்றும் களமிறங்கி இலங்கையின் நிலையினை காத்து கொண்டிருக்கின்றது, இனியாவது அந்த தீவின் மூவினங்களும் இந்திய திருநாட்டோடு நல்லுறவு கொண்டு நல்ல அமைதியான வாழ்வினை வாழட்டும்
காலத்தின் வடிவில் சாட்சியாய் நின்று பார்த்தது போல அனைத்து சம்பவங்களையும் மிக
நேர்த்தியாக ஒரு capsule போல வழங்கும் பிரம்ம ரிஷியின் முத்திரை அபாரம்.
நம் அக்கம்பக்கத்தினர் நன்றாக வாழ்ந்தா தான் நாம் நிம்மதியாக தூங்க முடியும். இலங்கையும் சீக்கிரம் இந்த குழப்பங்களில் இருந்து மீண்டு வர கடவுள் அருள் புரியட்டும்.