காளிதாசனின் சாகுந்தலம் – 09

காளிதாசனின் சாகுந்தலம் : 09

அங்கே நதிக்கரையில் தோழியருடன் நடுவில் படுத்திருந்தாள் சாகுந்தலை, அவள் அருகே அமர்ந்தபடி விரிந்த மலரைப் போன்ற விசிறியினை கொண்டு காற்று வீசினார்கள் தோழியர்.

காவியத்தின் கனிச்சாறாய் அங்கு அவள் படுத்திருக்க‌, முறம் போன்ற தாமரை இலைகளை வைத்து அவளுக்கு சாம்ரம் வீசிகொண்டிருந்தனர் தோழியர் இருவர்.

“என்ன செய்கின்றீர்கள்?” என புரியாமல் கேட்டாள் சாகுந்தலை, “இந்த குளிர்காற்றாவது உன் வெம்மையினை போக்குமா என பார்க்கின்றோம்” என சொல்லி மெல்ல கொண்டார்கள் தொழியர்.

மறைந்திருந்து அதைக் கேட்ட துஷ்யந்தன் தனக்குள் சொல்லிக்கொண்டான்.

“என்னாயிற்று அவளுக்கு? கதிரவனின் வெம்மை தாக்கி உடல் நலிந்தாளோ இல்லை காமனின் அம்புபட்டு புதுமலர் மேனி வாடிற்றோ?

நார்த்தங்கனி போன்ற அவள் மார்புகளோடு கரங்களை இணைக்கும் அந்தத் தோள்கள் எவ்வளவு அழகானவை?

கொஞ்சம் களைப்படைந்தாலும் அவள் அழகு கொஞ்சம் கூடும், களைத்து கிடக்கும் பெண்களில் ஒரு அழகு மின்னும் அது இவளிடம் இன்னும் கூடி மின்னும்.

இப்போது இவள் மிகுந்த அழகோடு தோன்றுகின்றாளே மிகுந்த களைப்பு கொண்டிருப்பாளோ?

காதல் கொடுக்கும் வெம்மை, கதிரவன் கொடுக்கும் வெம்மை என இரண்டு வெம்மைகள் அவளைத் தாக்குகின்றனவோ?

கதிரவனின் வெப்பம் அழகைக் குலைக்கும், காமனின் வெப்பமோ அழகை அதிகரிக்கும், இவள் அழகைக் கண்டால் காமத்தினால் எழுந்த அழகுபோலவே தெரிகின்றது, காமத்தின் வெம்மையில்தான் அவள் அழகு ஜோதியாய் மின்னுதல் வேண்டும்”

அவன் அங்குத் தனக்குள் பேசிக்கொண்டிருக்க, தோழியர் இருவரும் அவளுக்குக் விசிறி வீசியபடி சொல்லத் தொடங்கினர்.

“ஏ அனுசூயை, வானில் நிலாவும் சூரியனும் எதிர் எதிரே வந்தால் நிலா ஒளியிழந்து போகும், அப்படி இவள் அந்த அரச அதிகாரியினைக் கண்டு ஒளியிழந்து போனாள், இவளிடம் ஏதோ மனவருத்தம் தொற்றியிருக்கின்றது, அது அவர் கொடுத்த பரிசோ என்னமோ?” என்றாள் பிரியம் வதை.

“பிரியவதை நல்லதை சொன்ன வாய்க்கு நான் என்ன தருவேன்? நானும் இதையேதான் சிந்தித்திருந்தேன், நாம் சகுந்தலையிடமே கேட்போம்” என்ற அனுசூயை மெல்லக் கேட்டாள், விசிறியபடியே கேட்டாள்.

“ஏ சகுந்தலையே, உன் கவலை நிலத்தைத் தாண்டி, கடலைத் தாண்டி நிலாவரை சென்றுவிட்டதை போலிருக்கின்றது, உன் மனதில் என்னதான் கவலைக் கொண்டிருக்கின்றாய் சொல்?”

மலர்கள் மேல் படுத்திருந்த சகுந்தலை ஒரு கையினைத் தலைக்குக் கொடுத்து உயர்த்தியபடி கேட்டாள்.

“என்ன சொல்லச் சொல்கின்றாய்?”

“அன்றுமலர்ந்த மலர்கள் மேல் படுத்திருக்கும் அழகு மலரான சாகுந்தலையே, எல்லா மலர்களையும் ஒரே மலராக்கியது போன்ற அழகு மலரே.

நாங்கள் புராணத்தில், இதிகாசத்தில், காவியத்தில் காதலை படித்திருக்கின்றோம், அதைக் கொண்ட மாந்தரெல்லாம் படும் துயரமும் அறிந்திருக்கின்றோம்.

அதனால் சொல்கின்றோம், உன்னையும் அப்படி அந்தக் காதல்நோய் தாக்கியிருப்பதை அறிகின்றோம், உன் நடவடிக்கைகளெல்லாம் அந்த நோயின் தாக்கத்தை காட்டுகின்றது, இதன் மூலம் என்ன? எங்கிருந்து தொடங்கிற்று என மொத்தமும் சொன்னால் நல்ல மருந்தும் தருவோம், நோயில் தோழி வாடியிருப்பதை பார்த்துக் கொண்டிருப்பது எப்படி?” என்றாள் அனுசூயை.

மறைந்திருந்த துஷ்யந்தன் தனக்குள் சொன்னான், கொஞ்சம் மகிழ்ந்து பதற்றமாய்ச் சொன்னான்.

“எதனை நான் கேட்கவேண்டும் என நினைத்தேனோ அதையே அவள் கேட்கின்றாள், இனி அவள் பேசட்டும். நெஞ்சம் எனும் உருவத்தைக் காட்டும் கண்ணாடிதானே மொழி?
அவள் மொழியிலே அவள் மனதைக் காண்பேன்”

சகுந்தலை தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

“இவர்களிடம் என்ன சொல்வது, இது எளியவளின் மெல்லிய இழைபோன்ற காதல்தான், ஆனால் அது இமயத்தைக் கட்டி இழுக்கும் அளவு வலுவானது, உறுதியானது.

ஆனால், பெண்ணுக்குரிய நாணம் அல்லவா என்னை ஊமையாக்குகின்றது” என எண்ணியவள் அமைதியானாள்.

அவளின் அமைதிகண்டு பிரியம்வதை சொன்னாள்.

“சாகுந்தலை, அவள் கேட்டதற்கான பதிலை சொல்லிவிடு, உனக்கு அது நல்லதும் கூட ஏன் வீணாக எங்களிடம் மறைக்கின்றாய்.

தெளிவான உருவம் காட்டும் கண்ணாடி ஆவிபட்டு மங்கியிருப்பது போல் நீ உன் அழகெல்லாம் மங்கிச் சீர்குலைந்து கிடக்கின்றது, ஆனால் உன்மேல் தவம் செய்யும் அழகின் கவர்ச்சி மட்டும் அப்படியே ஒளிர்கின்றது.

பணம் மிகுந்தவன் ஏழைபோல தன் செல்வம் இழந்தாலும் அவனிடம் ஒரு தனித் தோரணையும் செல்வத்தின் சுவடும் எஞ்சியிருக்கும் அல்லவா? அப்படிப் பெரும் அழகியான நீ இந்த வெம்மையாலே அங்கமெல்லாம் கொஞ்சம் குலைந்தாலும் உன் அழகு குறையவில்லை”

அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே துஷ்யந்தன் அவளை உற்றுப்பார்த்தான். உடல் கொஞ்சம் மெலிந்திருந்ததைக் கண்டு வறண்ட நிலம் நோக்கிப் பெய்யும் மழைபோல் சொன்னான்.

“செழுமையான மலர்போலிருந்த அழகான கன்னங்கள் மிக மெல்லியதாக வாடியதேன்?

“உறுதியானதும் செருக்கும் கொண்டதுமாக உயர்ந்து மலைபோல் நின்ற தனங்கள் இப்படி நினைத்துப் பார்க்கமுடியா அளவு குலைந்துவிட்டதும் ஏன்?

முன்பு மேல்பாகம் கீழ்பாகம் என பிரித்துக்காட்டி நின்ற இடை இப்போது நூல்போல ஒரேபோல் எல்லாமே ஆகிவிடும் அளவு மெலிந்துபோனது ஏன்?

வண்ணமேனி வாடியதேன்? இனியதோள்களும் சுருங்கியதேன்?

இளவேனிற்காலத்தில் வாடிநின்ற மரங்கள் தளிர்விடும் காலத்தில் அந்தத் தளிரை கடும்காற்று ஒடித்துப் போடும்போது மரம்வாடி நிற்பது போல் அல்லவா அவள் வாடி நிற்கின்றாள்?

மிக அரிதான காட்டுமல்லி வாட வாட மணம் பெருகுவது போல அவள் தேய்ந்து கிடந்தாலும் அவள் முகமும் அழகும் கூடிக்கொண்டேதான் செல்கின்றன”

அங்கே சகுந்தலை பேசத் தயாரானாள், தன் மெல்லியக் கரங்களை அசைத்தபடி தயாரானாள்.

அதைக் கண்ட தோழியற்போல் துஷ்யந்தனும் பரபரப்பானான், அவன் கண்கள் ஆர்வமாய்க் குறுகுறுத்தன. அவன் காதுகள் பசுவின் காதுபோல் சீரானது.

அவள் சொன்னாள், “உங்களிடம் சொல்லாமல் யாரிடம் சொல்வேன், உங்கள் மனதில் சிறுவருத்தம் தந்துவிட்டேன், இப்போதே மெல்லியப் புயல் ஒன்றை எழுப்ப போகின்றேன். பொறுப்பீர்களாக.

பாசம்வைத்து வளர்க்கும் பெற்றோர்க்குக் குழந்தைகள் தாங்களே நோய்பெற்று கவலைக் கொடுப்பது போல நான் இந்நிலை அடைந்து உங்களுக்குக் கவலையாகிவிட்டேன், என்னால் அதனைத் தாங்க முடியவில்லை”

தோழியர் இருவரும் சொன்னார்கள், “சாகுந்தலை, அதனால்தான் சொல்கின்றோம், மிக்க வெம்மையில் வேதனையுடன் கடலின் மேல் உருவாகும் கருத்த‌மேகம், தன் வேதனை வலி எல்லாம் மலை நிலமெங்கும் கொட்டிவிட்டு வெளிறி இலகுவாகி செல்வது போல நீயும் உன் மனதால் உருவான வலியினை எங்களிடம் கொட்டிவிடு.

நெஞ்சத்து கவலையெல்லாம் அன்புடையவர்களிடம் பகிர்தல் போல வேறேதும் நிம்மதி உண்டோ?”

அதனைக் கேட்டுக்கொண்டிருந்த துஷ்யந்தன் தனக்குள் சொன்னான், “இந்தத் தோழியர்கள்தான் எவ்வளவு நல்லவர்கள். இன்பமான நேரம் அவளின் ஒரு தோளைத் தாங்குகின்றார்கள், துன்பமான நேரம் அவளின் இன்னொரு தோளைத் தாங்குகின்றார்கள்.

இவர்களின் அன்பெனும் நிலவொளியில் அவள் நெஞ்சம் இனித் தெரியும், அது அவளின் கனியிதழின் வாயினால் வார்த்தையாய் வெளிவரும்.

அந்த ஈட்டி வீசும் பார்வையிலே என் மனதை சல்லடையாய்த் துளைத்துப்போட்ட அந்தக் காதலை இனியாயின் சொல்வாளா? இல்லை சரிந்த மலைச்சிகரம் போல் அழகு கொண்ட கொங்கைகளின் உள்ளே இருக்கும் மனதின் அழகான ஓவியங்க்ளைத் தன்னுள்ளே மறைப்பாளா?

பாசமாய் நான் பார்க்கும்போதும் சொல்லாத காதலை இனியாவது சொல்வாளா?” எனத் தவித்துக் கொண்டிருந்தான்.

அவளோ அங்குச் சொல்லேதும் இல்லாமால் நாணத்தால் தலைகுனிந்திருந்தாள், தோழியர் சொன்னார்கள்.

“நாணம் எனும் புற இதழால் மூடியிருக்கும் மொட்டு போன்ற உன் முகம் மலரட்டும், இன்பம் எனும் மணம் வீசட்டும், நெஞ்சத்தின் தேன் துளி சிதறட்டும் என்றுதான் விரும்புகின்றோம் சகுந்தலையே”

சாகுந்தலை மெல்லச் சொன்னாள், ” நாணமுற்ற என் நெஞ்சம் கண்கள் எனும் கரங்களால் அவருக்கு மாலையிட்டு தழுவி என்னை அவருக்கு தந்த அந்த முதல் நாளிலே மெலியத் தொடங்கினேன்.

அந்தக் காதலால் எழுந்த வெம்மையால் என்னுள் சீறிய‌ பெரும் வெப்ப மூச்சினை மட்டும் அவர் என்னிடம் வந்து சேரும்படி தூதாகக் காற்றில் அனுப்பினேன்”

நொடி நிசப்தம் எல்லோர் முகத்திலும் நிலவிற்று, மழையில் நனைந்த மலர் மீண்டும் குலுங்கிக் கவிழ்வது போல் முகம் கவிழ்ந்தாள் சாகுந்தலை.

வரம்பெற்ற பக்தன் போல் துஷ்யந்தன் மகிழ்ந்து மனதினில் ஆர்ப்பரித்து, பெரு உவகையும் ஆனந்தமும் பொங்க சொல்ஙலி கொண்டான்.

“எந்தன் காதில் எதைக் கேட்டுவிடவேண்டும் என இத்தனை நாட்கள் துடித்தேனோ அதை நான் இன்று கேட்டுவிட்டேன், என் வாழ்நாளில் சிறந்தநாள் இந்நாள்.

கொடும் வெப்பத்தில் கடல்நீரை வானம் பருகும் அப்படியே கறுக்கும், பின் உலகில் மழையாக அது பெய்து உயிர்களை வாழவைக்கும், அப்படிக் கடும் வெம்மைக்கு பின் இங்கே காதல் மழை பொழிந்து என்னை வாழவைக்க நனைக்கின்றது”

சொன்னவன் சாகுந்தலை ஏதோ சொல்வதை எண்ணி காதுகளைக் கூர்மையாக்கினான், அவள் சொன்னாள்.

“தோழியரே, நான் எல்லாம் சொல்லிவிட்டேன், உங்களுக்குச் சரியென பட்டால் அந்த அரச அதிகாரிக்கு என்னை ஒப்படைக்க தயாராகுங்கள். என்னால் தாளவில்லை.

இந்த நெஞ்சமெனும் மலர் அந்த வண்டுக்காக மட்டும் அவர் ஒருவருக்காக மட்டும் மலர்ந்ததே அன்றி வேறு எவர்க்குமல்ல‌.

அதனால் இந்த மலரைப் பறித்து அவரிடமே கொடுத்துவிடுங்கள்” என்றவள் கொஞ்சம் விக்கிச் சொன்னாள்.

“இல்லை எள்ளும் நீரும் இறைத்து இந்த மலரை எறிந்துவிடுங்கள்”

அவளின் மொழி கேட்டுத் துஷ்யந்தன் சொன்னான், “இதுவரை என்ன சொல்வாளோ என இருதலை கொள்ளிப் பாம்பாக நெளிந்துகொண்டிருந்தேன், கருடன் போல் வந்தவள் ஒரு தலையினைக் கிள்ளி என்னைக் காத்துவிட்டாள்”
என்றவன் இன்னும் அவளை உற்றுநோக்கினான்.

பிரியம்வதை சொன்னாள், “அனுசூயை இவள் காதல் எப்படி வலுத்துவிட்டது என்றால் ஆலமரத்தின் விழுது பூமியினைத் துளைத்து இந்தப் பூமிதாங்கும் ஆதிசேஷன் தலைக்கே என்றது போல் ஆழமாகிவிட்டது.

இதனை இனி எப்படி எடுக்கமுடியும்? ஆழம் காணமுடியா அளவு சென்றுவிட்டது.

அந்தப் புரு வம்சத்து மன்னனிடம் வேலைபார்ப்பவன் எனும் வகையில் நமக்கும் அது நல்லதுதான்”

“பிரியம்வதை நீ சொன்னவாறே இவள் காதல் செழித்தோங்கட்டும், உயர்காதல் உன்னதமாகட்டும்.

மலைமேல் தோன்றும் கங்கை வெள்ளம் கடலைச் சென்று சேராமல் எப்படித் தப்பமுடியும்? உன் காதலும் அந்தப் புரு மன்னனின் வேலையாளனோடு சென்று கலக்கட்டும்” என்றாள் அன்சூயை.

“மாதவி கொடியினைத் தாங்க மாமரம் அன்றி வேறு எம்மரத்தால் முடியும்? இவளுக்கும் அவர்தானே பொருத்தம்” என்றாள் பிரியம்வதை.

துஷ்யந்தன் சொல்லிக்கொண்டான், “வானில் விசாக நட்சத்திரம் மூன்றாம் நாள் பிறையின் பின்னாலே ஓடுவதில் என்ன வியப்பு?

கடலில் கலனுக்கு வழிகாட்டும் கருவியின் முனை வடக்குநோக்கியே இருப்பதில் என்ன ஆச்சரியம்? அது அத்திசை அன்றி வேறு எங்கு நோக்கும்?

அப்படித்தானே என் இயல்பில் நான் அவளை நோக்கியே இருக்கின்றேன்”

அங்கே அனுசூயை தொடர்ந்தாள். “பிரியம்வதை இவளின் ஏக்கம் நிறைவேற விரைவாய் நாம் ஏதும் செய்தல் வேண்டும்”

பிரியம்வதை புன்னகைத்துச சொன்னாள். “விரைவாக என நீ சொன்னது சரி, அது தானாக நடக்கும். மலராத அரும்புகளைக கட்டி மாலையாக வைத்தால் மாலை மலர்ந்து மணம் வீசத்தான் செய்யும், இங்கே எல்லாம் எளிது, ஆனால் மறைக்கத்தான் முடியாது.

பூவை மறைக்கலாம் வாசத்தை என்ன செய்வாய்?”

“எது எளிது என்றாய் பிரியம்வதை?” என்றாள் அனுசூயை.

“குவியாடி சூரிய கதிர்களை ஒரே புள்ளியில் குவிப்பதைப் போல இவள் விழிகள் எனும் ஆடி அவன் எண்ணம் முழுக்க இவளுக்குள் குவித்திருக்கின்றன‌.

இவள் எரிகின்றாள் என்றால் அவரும் எரியவேண்டும் அல்லவா? வெம்மையில் இருந்துதானே வெம்மை வரும், அவர் மனமும் மெழுகு போல் உருகி நிற்கவேண்டும், அவரும் உறக்கமின்றித்தான் இருப்பார் அதனால் எளிது” என்றாள் பிரியம்வதை.

அதைக் கேட்டு துஷ்யந்தன் சொன்னான், “ஏக்கத்துடன் கைகளைத் தலைக்கு வைத்து படுத்திருப்பேன், அதையும் என் கண்களின் நீர் உடலெல்லாம் வழிந்தோடும், என்னை அணைக்கவரும் நித்திரை தேவியும் இதனால் ஈரமாகி விலகிச் சென்றுவிடுவாள்.

வில்லின் நாணினால் காழ்ப்பேறி உரமேறி நின்ற என் தோள்கள், மணிகள் அணிந்து சிறந்த என் தோள்கள், இப்போது நான் நடக்கையில் கண்ணீரால் நனைந்து பின் கண்ணீரும் அற்றுப் பாலைநிலம் போலாயிற்று.

நானோ உறக்கமற்று போனேன், ஆனால் என் வில்லும் அம்பும் நன்றாக உறங்கிக்கொண்டே இருக்கின்றன”

“அனுசூயை, இவள் தன் மனதை ஒரு மடலில் எழுதட்டும், அதைப் பூக்களில் வைத்து தெய்வத்துக்கு அனுப்பும் பக்தையின் வேண்டுதல் போல அவருக்கு அனுப்பிவிடலாம்.

நினைத்தறியா கொடை இது என்றே அனுப்பிடலாம்” என்றாள் பிரியம்வதை.

“கனவு நனவாக இதுதான் வழி, ஆனாலும் இந்தக் கலைமேனியாள் என்சொல்வாளோ?” என்றாள் அனுசூயை.

சாகுந்தலை மெல்லச் சொன்னாள், “அன்புடை நட்பு என்பது என்ன? நண்பர் ஒன்றை நமக்காக செய்யும் போது சந்தேகம் கொள்வதோ? எல்லாம் கேள்விக் கேட்பதோ? அது நட்புக்கு முரண் அன்றோ?”

தன் காதலை அவனிடம் தோழியர் சொல்லப் போவதைக் குறிப்பால் அனுமதித்தாள் சாகுந்தலை, துஷ்யந்தன் அந்தச் சாதுர்யம் பற்றிச் சிரித்துக்கொண்டான்.

“இனியும் என்ன தாமதம்? தென்றலை வடித்துதெடுத்து, தேனில் தொட்டெடுத்து, தெய்வீக மொழியில் கனியின் சாறுதடவி என்றென்றும் இனிக்கும்படி, கொஞ்சமும் எப்போதும் திகட்டாதபடி ஒரு மடலை அவருக்கு எழுது சாகுந்தலை” என்றாள் பிரியம்வதை.

‘தேன்குடத்தில் ஊறும் பலாச்சுளையினைத் தெவிட்டாமல் உண்ண என்ன தடை? ஆனால் நான் அவர்மேல் கொண்ட பெரும் காதலில் கொஞ்சமேனும் அவருக்கு இல்லையெனில் நான் என்ன செய்வேன்?

அதை நினைத்தாலே நடுங்குகின்றேன்.

கற்பக மரத்தடியில் நின்று எது கேட்பினும் அது கிடைக்கும்தான், அவர் கற்பகமரமேதான் ஆனாலும் அஞ்சுகின்றேன்”

துஷ்யந்தன் தனக்குள் சொல்லிக்கொண்டான், “கனியே நான் கசப்பேன் என நினைந்தாயோ? உன்னைத் தழுவ தனியே காத்திருக்கின்றேன் என்பதை மறந்தாயோ?

பொன்னும் பொருளும் அள்ளித்தரும் திருமகள் தன்னை விரும்பும் ஒருவனை வலிய சென்று அடையமாட்டாள். ஆனால், அவள் விரும்பும் ஒருவனைத் தேடி செல்லும்போது மறுப்பது யார்?

என் திருமகளே நான் பாக்கியம் செய்தவன் அல்லவா? அதை உணராமலா பேசிக்கொண்டிருக்கின்றாய்?” எனச் சொல்லிக்கொண்டான்.

அங்கே அனுசூயை தொடர்ந்தாள்.

“தன்னுடைய நலங்களைச் சுகங்களைத் தானே தள்ளிவிட்டு தவிப்பவர் உலகில் உண்டோ, கொடிய கதிர்வானின் வெம்மையால் வதைந்தவர் இரவில் வரும் முழுமதியின் குளிர் ஒலிக்குத் தன் மேல் துணிமூடி மறைப்பாரோ சொல்?

மின்னல் வெட்டும்போது மெல்ல பூக்கும் தாழம்பூ போல் சிரித்துச் சொன்னாள் சாகுந்தலை.

“தோழியரே, என் காதலைச் சொல்ல மடல் எழுதுகின்றேன், அது அழகான கவிதையாய் அமைதல் வேண்டும் என எண்ணி எழுதுகின்றேன்.

என் நெஞ்சத்தில் ஊறும் அன்பை காதல் மை தொட்டு எழுதுகின்றேன்”

அதைக்கேட்ட துஷ்யந்தன் மனதில் காதல் கங்கை பொங்கச் சொன்னான்.

“இதுவரை உதிக்கா நிலவே உன்னை இமைக்காத கண்களோடு பார்க்கின்றேன்.

உன் தூய நெஞ்சத்தில் சுமையாய்க் கிடந்த சொற்களை நீ தேடி எடுக்கும் பொது, உன் இரு புருவமும் கொடிபோல் ஆடுவதனைக் காண்கின்றேன்.

அது கதிரவன் முன்னால் வானவில் போல் குவிவதையும் அழகுறக் காண்கின்றேன், என் எண்ணத்தையெல்லாம் அள்ளும் நினைவுகள் நீரின் சுழல் போல அவள் கன்னக்குழியில் சுழல்வதைக் கண்டு சிலிரிக்கின்றேன்”

சாகுந்தலை நாணமும் ஆசையும் அச்சமும் பதற்றமும் கண்களில் வெட்கமும் கலக்கமும் குறுகுறுப்பும் கொண்டிருந்தாள். அது கன்னத்திலும் உதட்டிலும் தெரிந்தது.

பதற்றமாய் நீர் அருந்தும் மான் ஓரக்கண்ணால் அக்கம் பக்கம் பார்ப்பதுபோல் தோழியரைப் பார்த்துக்கொண்டாள்.

நாணிய முகத்துடன் மெல்லியக் குரலில் அன்னம் போல் சொன்னாள்.

“என் எண்ணமெல்லாம் குவிகின்றது, அழகான வரிகள் எழுகின்றன, இனிய தேனோடை போல நான் என் அன்பினை எழுதி கொட்ட எழுதுபொருள் தருவீர்களா”

“சாகுந்தலையே, நீரின் மேல் கிடக்கும் அந்த இலையில், இளங்கிளியின் மார்பு போல் மென்மையான தாமரையின் வட்டமான‌ இலையில் செங்காந்தள் பூ போன்ற உன்விரலின் நகத்தால் எழுதலாமே?” என்றாள் அனுசூயை.

“மழைகொட்டுமுன் இடியோசை போல, தொலைதூர இசையினைச் சொல்லும் மெல்லிய ஓசை போல, தூரத்து கனிச்சோலையினைக் காட்டித்தரும் குயிலோசைப் போல‌ நான் எழுதுமுன் இந்தச் சொற்களை ஒருமுறை கேளீரோ?” என்றாள் சாகுந்தலை.

அவர்கள் கேட்கத் தயாரானார்கள், தெய்வத்தின் மொழிகேட்கத் தயாராகும் பக்தன் போல அவள் மொழியும் ஒலி மட்டும் கேட்கும்படி காதினைக் கூர்மையாக்கினான் துஷ்யந்தன்.

(தொடரும்..)