காளிதாசனின் ரகுவம்சம் : 16 to 20
காளிதாசனின் ரகுவம்சம் : 16
ரகுவுக்கு எல்லாப் பலமும் இருந்தது. அந்தப் பலத்தினை சரத்காலம் முடிந்த பருவம் இன்னும் பலமாக்கியது, மழைக்காலம் முடிந்ததால் ஆறுகள் கர்ப்பமான யானைகளின் வயிறு குட்டி ஈன்றதும் வற்றியதைப் போல் வற்றியது, அந்த ஆழம் சுருங்கிய ஆறுகளைக் கடப்பதும், தேங்கிய சேறு நிறைந்த இடம் உலர்ந்துபோனதால் படைநடத்துவதும் அவனுக்கு எளிதானது.
இதனால் படை நடத்தி திக் விஜயம் செல்ல விரும்பிய ரகு அதற்கான யாகமான வாஜிநிராஜனம் எனும் யாகத்தைச் செய்தான். அப்போது யாக குண்டத்து நெருப்பு எழும்பி வலப்பக்கமாக சுழித்தது, அது ரகு செல்லும் யுத்த விஜயம் பெரும் வெற்றியாகும் என்பதைக் கட்டியமிட்டுச் சொன்னது, அக்னி எழும்பி வலம் சுழித்த காட்சியானது அக்னி பகவானே தன் ஜூவாலை எனும் கரத்தால் ரகுவினை வாழ்த்தி ஆரத்தி எடுத்து வழியனுப்பியது போலிருந்தது.
திக் விஜயம் கிளம்பிய ரகு தன் நாட்டையும் அரண்மனையும் காக்க எல்லா ஏற்பாட்டையும் செய்தான். தான் முன்னோக்கிச் செல்லும் போது எதிரிகள் பின்னால் இருந்து தாக்கிவிடக் கூடாது என்பதால் அப்பக்கமும் காவலை வலுப்படுத்தினான், எல்லாக் காவலையும் ஒழுங்குச் செய்தவன் தன் ஆறுவகை சேனையுடன் கிளம்பினான்.
(வழிவழி வந்த மெய்காப்பாளர் படை, தன் நிரந்தர சேனை, கூலிக்கு வரும் ஒப்பந்தபடை, நம்பகமான நண்பர்கள், எதிரிகளிடம் இருந்து திரட்டப்பட்ட உளவுப்படை, கானக வாழ்வில் தேர்ந்த வேடுவர்படை என ஆறுவகை சேனைகள்)
அவன் செல்லும் வழியில் அந்த நகரின் பெண்களும் மூத்தவர்களும் வெள்ளைப பொரியினை தூவி நல்ல சகுனமாக வாழ்த்தினார்கள், பாற்கடலை கடையும் போது எழுந்து சிதறிய துளிகள் விஷ்ணுமேல் விழுந்ததை போல அவன் காணப்பட்டான்.
அவன் இந்திரனுக்குக் குறைந்தவன் அன்று என்பதால் இந்திரனின் திசையான கிழக்கு நோக்கிச் சென்றான், அப்போது காற்றும் சுபசகுனமாக கிழக்கு நோக்கி வீசிற்று. இதனால் அவன் கொடி கிழக்கு நோக்கிப் பறந்தது, அந்தக் கொடி பறந்த காட்சி ரகு தன் கையால் எதிரிகளை எச்சரிப்பது போலிருந்தது.
அவன் சேனை சென்ற வேகத்தின் புழுதியால் ஆகாயம் நிறைந்து அது தரை போலானது, அவனின் பெரிய யானைப்படை அணிவகுத்துச் செல்லும் காட்சி கார்மேகம் வானத்தில் ஊர்ந்து செல்வது போலிருந்தது, இதனால் ஆகாயம் தரையாகவும் தரை ஆகாயமும் அவனால் மாறிற்று.
அவனின் பெரும் சேனை வருகின்றது எனும் செய்தி முதலில் பகைவர்களை அச்சுறுத்தும், அவன் படையினரின் ஆரவார ஒலி அடுத்து அச்சுறுத்தும், அவன் படைகள் எழுப்பும் பெரிய புழுதி கூட்டத்தின் காட்சி அடுத்து மிரட்டும், கடைசியாக அவனின் நால்வகை சேனையும் வரும்.
அவன் மிகுந்த பலமுடையவன் என்பதால் அவன் கடந்த பாலைவனங்களில் தன் சேனை தங்கும்பொருட்டு கிணறுகளெல்லாம் அமைத்து சோலைகளாக்கினான், ஆற்றினைக் கடக்கப் பாலம் கட்டி போக்குவரத்தை எளிதாக்கினான், அடர்ந்த வனங்களில் மரங்களை வெட்டி பாதைகளை உருவாக்கினார். இதனால் அவன் செல்லுமிடமெல்லாம் மக்கள் வாழும்படியான வசதிகள் உருவாயின.
அவனின் பெரிய சேனை கிழக்கு நோக்கி சென்ற காட்சியானது பகீரதனின் தவத்தால் சிவனின் ஜடாமுடியில் இருந்து வீழ்ந்த கங்கை பெரும் பிராவகமாக கிழக்கே கடலைத் தேடிச் செல்லும் காட்சிபோல் பிரமாண்டமாயிருந்தது.
கானகத்தில் யானை சென்ற வழியினை அறிதல் எளிது. அது மரங்களை முறித்திருக்கும்; கிளைகளை ஒடித்திருக்கும்; செல்லும் வழிவெங்கும் கனிகளை உதிர்த்துப் போட்டு மலர்களைப் பறித்துப் போட்டபடி சென்றிருக்கும். அப்படியே ரகு செல்லும் பாதையெல்லாம் மன்னர்கள் முடியிழந்தனர்; செல்வமிழந்தனர்; எங்கும் அரசர்களின் வீழ்ச்சி இருந்ததால் அவன் செல்லும் வழியும் எளிதில் அறியும்படி இருந்தது.
கிழக்கு நோக்கிச் சென்ற ரகு வெற்றி ஒன்றையே பெற்றுக்கொண்டு சென்று கருமையாக காட்சி அளித்த கடலோரத்தை நோக்கிச் சென்றான். பனைமரங்கள் நிரம்பியிருந்த அக்கடற்கரை தொலைவிலிருந்து காணும்போது கருமை நிறமாகக் காட்சியளித்தது.
ஆற்றுவெள்ளம் பெருக்கெடுக்கும் போது அதற்கு வளைந்து கொடுக்கும் நாணல்கள், செடிகள் வாழும், வளையாத பெருமரங்கள் சாயும், அப்படி அவனுக்குப் பணியாத மன்னர்கள் அழிந்தார்கள், ஸும்ஹர்வர்கள் போல பணிந்தவர்கள் வாழ்ந்தார்கள்.
(ஸூம்ஹ தேசம் என்பது வங்கத்தின் கரையிலுள்ள நாடு)
வங்க நாட்டவர்கள் கங்கையின் கிளையாற்றில் தங்களுக்குள்ள படகு படையினைக் கொண்டு அவனைப் பல பக்கம் சூழ்ந்து வீழ்த்தலாம் என மோதினார்கள், அவர்களையெல்லாம் அடக்கியவன், கங்கையின் இடைப்பட்ட தீவுகளிலெல்லாம் தன் வெற்றிக்கொடி ஸ்தம்பத்தை ஸ்தாபித்தான்.
நீர் மிகுந்த வங்கத்தில் ஓரிடத்தில் வளர்க்கப்படும் நாற்று வேறு இடங்களில் நடப்பட்டு மிகுந்து விளையும், அப்படி நெல்முற்றிய கதிர்கள் அருகிருக்கும் தாமரையினை வணங்கியபடி சாய்ந்து கிடக்கும், அவ்வாறே ரகுவால் வேறு இடத்தில் அமர்த்தப்பட்டு பணி கொடுக்கப்பட்ட மன்னர்கள் பெரிய செல்வத்தை அவனுக்குக் கொடுத்து தாமரை போன்ற அவன் பாதத்தில் வீழ்ந்து கிடந்தார்கள்.
அவன் அப்பக்கமிருந்து கபிசை எனும் நதியினைக் கடக்க யானைகளைப் பாலமாக நிறுத்தினான், அப்படி நதியினைக் கடந்தவனை உத்கல தேசத்து மன்னர்கள் பணிந்து கலிங்க நாட்டுக்கு வழிவிடும்படி ஒதுங்கி நின்றார்கள்.
(உத்கலம் என்பது ஒரிசாவின் பகுதிகள்)
அடங்க மறுப்பதும் கட்டளைக்குக் கீழ்படியாதும் மதம்பிடித்ததுமான கம்பீரவேதி எனப்படும் யானை வகையினைப் பாகன் அங்குசத்தால் குத்தி கிழித்து ரத்தம் சொட்ட சொட்ட அடக்கி சங்கிலி இடுவது போல் மகேந்திரன் எனும் மன்னனை ரகு தன் பராக்கிரமத்தால் மோதினான்.
தன் சிறகுகளை வெட்ட முயன்ற இந்திரன் மேல் கல்லையும் பாறையினையும் வீசிய மலையினைப் போல கலிங்க மன்னன் ரகுவுடன் ஆவேசமாக தன் யானைப்படையுடன் மோதினான்.
சுகுத்ஸன் வழி வந்த ரகுமேல் கலிங்க மன்னன அம்புமழை பொழிந்தான். அது அரசன் முடிசூடும் முன் எடுக்கும் “மங்கள ஸ்நானம்” போல் இருந்ததால் அடுத்து வெற்றி எனும் மகுடம் அவனுக்கு வந்தது.
கலிங்கத்தை வென்ற அவன் படையினர் கொண்டாட்டம் தொடங்கினர், பாதுகாப்பான இடத்தில் வெற்றிலைகளைத் தைத்து செய்த கலனில் கள்ளை நிரப்பி அருந்தியவர்கள் பின் அந்த வெற்றிலையினைச் சுவைத்து மகிழ்ந்தனர், வெண்ணிறமான கள்ளுடன் முன்னோர்கள் புகழையும் சேர்த்து அவர்கள் பருகினார்கள், அந்த மகிழ்ச்சி போதை பெரியதாக இருந்தது.
ரகு நாடுபிடிக்கும் ஆசையில் கலிங்க மன்னனை வெல்லவில்லை. மாறாக, அவன் செய்தது தர்ம விஜயம் எனும் தர்மகாரியங்களுக்கான நிதிக் குவியலை தேடிய விஜயம், இதனால் கலிங்க மன்னனுடைய செல்வத்தை மட்டும் பெற்றுக்கொண்டு அவன் நிலத்தையும் அவன் ராஜ்ஜியத்தையும் அவனுக்கே திரும்ப அளித்தான்.
கலிங்க தேசத்தை வென்ற ரகு தன் பெரிய சேனையுடன் தெற்கு நோக்கி கடற்கரை வழியாக அகத்தியர் வாழும் பொதிகை மலை நோக்கிச் சென்றான். செல்லும் வழியெல்லாம் பாக்குமரங்கள் பெரிய குலைகளுடன் அவனை வரவேற்றன, வெற்றியினைத் தேடி ரகு செல்லவேண்டியதில்லை வெற்றி அவனைத் தேடிவரும் என்பதை அவைகள் அசைந்து அசைந்து சொன்னது.
அவன் சேனை காவேரிநதியினைக் கண்டதும் நீராடி மகிழ்ந்தன, அப்போது அவன் யானைகளின் வாசமிக்க மதநீரானது காவேரியில் கலந்து பெரும் மணம் கொடுத்தது, அந்தக் காவேரி கடலுக்குச் சென்றபோது சமுத்திரராஜனுக்கே அவளின் புதுமணத்தினை முகர்ந்து அவள் மேல் சந்தேகம் வந்தது.
வெகுதூரம் நடந்த அவன் சேனை காவேரியினைக் கடந்து வந்து மலைகள் அருகே ஓய்வெடுத்தது, அங்கே நல்லமிளகு கொடிகள் நிரம்பிய கொடிகள் அடர்ந்து கிடந்தன. அழகிய பசுமையான கிளிகள் அங்குமிங்கும் பறந்துகொண்டிருந்தன.
அக்காடுகளில் ரகுவின் குதிரைகளால் மிதிபட்ட ஏலக்காய்களின் மணம் பெரிதாகப் பரவிற்று, அவற்றின் துகள்கள் காற்றில் ஏறி யானைகளின் கன்னங்களில் படிந்தது, யானையின் மதநீர் போன்ற வாசனையுடைய அந்த மணம் இவை மதநீரோ எனும்படியான யோசனையினைக் கொடுத்தன.
அங்கே உலகின் தனித்துவமான சந்தன மரங்கள் நிறைந்திருந்தன. பெரிய நாகங்கள் அடிக்கடி அம்மரத்தினை அதன் இனிய மணத்துக்காக சுற்றிக்கிடப்பதால் வரியான பள்ளங்கள் இருந்தன.
யானைகளைச் சங்கிலியால் கட்டி அந்த மரங்களில் பாம்பினால் உருவான பள்ளங்களில் பிணைத்தார்கள். வழமையாக சங்கிலியால் கட்டிப்போட்டால் திமிறும் யானைகள் சந்தனமரத்தின் இனிய வாசனையால் கவரப்பட்டு மிக அமைதியாக அந்த மணத்தில் கட்டுப்பட்டுக் கிடந்தன.
ரகு அடுத்து தெற்கே பாண்டியர்களை நோக்கிச் சென்றான். பாண்டியர்கள் எப்படியானவர்கள் என்றால் அவர்களைக் கண்டு சூரியனே தென்முனையில் தன் ஒளியினை வெப்பத்தை குறைத்துக் கொள்ளும் அளவு பலமானவர்கள், அவர்கள் இருப்பதாலே தெற்கே சூரிய ஒளி மற்ற இடங்களை விட மங்கலாய் தெரிகின்றது, அப்படியான பாண்டியர்கள் அவனுக்கு எளிதல்ல.
(தொடரும்)
காளிதாசனின் ரகுவம்சம் : 17
ரகு வருகின்றான் என்றதும் பாண்டியர்கள் தாமிரபரணி ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் கிடைக்கும் ஒளிமிகுந்த முத்துக்களின் குவியலோடு அவனை எதிர்கொண்டார்கள். தங்கள் பெரும் புகழையும் அதனோடு சேர்த்து அவனுக்குப் பணிந்து கொடுத்தார்கள்.
தாளாத கீர்த்தியுடையவனான ரகு அப்பக்கம் எல்லா வளங்களையும் பெற்றுக்கொண்டான். அங்கே மலையம் , சர்துரம் எனும் இரு மலைகளில் சந்தனமரங்களும் இன்னும் பல செல்வமும் நிறைந்து கிடந்தன, அம்மலைகளில் இளைப்பாறிய ரகு மேற்கு நோக்கி திரும்பி கடலினால் விலக்கப்பட்ட ஹஸ்ய மலையினைத் தாண்டிச் சென்றான்.
அவன் அந்த மேலை நாட்டை வெல்லச் செல்லும் போது அவன் சேனை தரையில் கடல் போல் பரவி நின்ற காட்சியானது முன்பு ஹஸ்ய மலையில் இருந்து பரசுராமனின் அஸ்திரத்தால் விலக்கப்பட்ட கடலானது மீண்டும் மலையோடு சேர்ந்துவிட்டதோ எனும்படி இருந்தது.
(பரசுராமரே கடலை விலக்கி மலையாள தேசத்தை உருவாக்கினார் என்பதைச் சொல்லும் இடம் இது.)
எப்போதும் அழகான வாசனை தைலங்கலாலும் மணமிக்கப் பொடிகளாலும் இன்னும் ஆபரணங்கள் பலவாலும் அலங்காரத்தாலும் கொள்ளும் அழகான அந்தத் தேசப் பெண்கள் ரகுவின் படையினைக் கண்டு ஆபரணங்களைக் கூட அணிய மனமின்றி நின்றார்கள், ரகுவின் சேனை எழுப்பிய பெரும் புழுதி அவர்களின் கேசத்தில் வாசனைப் பொடிக்குப் பதிலாகப் படிந்தது.
அந்தக் கேரள தேசத்தின் முர்ளா ஆற்றின் நதிக்கரையில் இருந்து எழுந்த காற்று செந்தாழம்பூவின் மகரந்தப் பொடிகளை ரகுவின் சேனையர் மேல் தூவிற்று, எந்த முயற்சியும் எடுக்காமலே அவர்கள் நறுமணமிக்கவர்களாக மாறிப்போனார்கள்.
ரகுவின் குதிரைகளின் கவசத்தில் இருந்த ஒலி அவை செல்லும் பாதையில் இருந்த ராஜதாளி (பெரிய மட்டைகளைக் கொண்ட பனை மரங்கள்) காற்றினால் அசைந்து எழும் சலசலப்பான ஒலியினைத் தோற்கடிக்கும்படி பெரிய வல்லமையாய் இருந்தது.
ஈச்சமரத்தின் அடியிலே அவனின் யானைகள் கட்டப்பட்டிருந்தன. அவை கொட்டும் மதநீரின் மணம் கண்டு மகிழமரம், புன்னை மரங்களின் இனிய பூக்களை விட்டு தேனீக்கள் ஈச்சமரம் நோக்கி வந்து யானைகளின் கன்னங்களில் விழுந்தன.
பரசுராமர் வேண்டிக்கொண்டதால் நிலம் கொடுத்த சமுத்திரராஜன் ரகு வேண்டாமலே அவனுக்கு நிறைய செல்வத்தை அந்த மன்னர்கள் மூலம் கொடுத்தான். சமுத்திரத்தால் வந்த செல்வத்தையெல்லாம் அந்நாட்டு மன்னர்கள் அவனுக்கே அள்ளிக் கொடுத்தார்கள்.
மன்னர்கள் ஒரு இடத்தை வெற்றிக்கொள்ளும்போது வெற்றித் தூண்களை அமைத்து தங்கள் முத்திரையினைப் பதிப்பார்கள், ரகுவோ அப்படி ஏதும் செய்யவில்லை காரணம் அவன் பெற்றிக்கு அடையாளமாக திரிகூட மலையே தூணாக நின்றது, அவன் யானைகள் தங்கள் கூரிய தந்தத்தால் குத்தி விளையாடியதால் வந்த கீறல்கள் அங்கு அவன் அடையாளமாயிற்று, மாபெரும் வெற்றிப் பெற்ற அவனுக்குத் திரிகூட மலையினை விடப் பெரிய தூணை எங்ஙனே அமைக்க முடியும்?
கேரளம் கொங்கன் எனும் மேட்டுப் பகுதிகளை அந்தக் கரையோரமாக கடந்த ரகு அடுத்துப் பாரசீக தேசம் செல்ல முடிவெடுத்தான். ஐம்புலன்களையும் பலாத்காரமாக அடக்காமல் அந்தப் புலன்களால் எழும் பாதகங்களை அறிந்து அடக்கும் யோகிபோல அவன் மிகுந்த யோசனை செய்து கடல்வழி அன்றி தரைவழியாக செல்லுதல் என முடிவெடுத்தான்.
மெல்ல சிவந்த தாமரைகள் சூரிய ஒளிபட்டதும் விரிந்து இன்னும் இன்னும் சிகப்பாகி ஜொலிக்கும் அப்படியே இயல்பிலே அழகான பாரசீகப் பெண்கள் இனிய திராட்சை மதுவினை அருந்தி இன்னும் இன்னும் அழகாக ஜொலித்தார்கள். அப்படிப்பட்ட பெண்கள் அந்த அழகான தாமரைகள் சூரியனைக் கண்டு மகிழும்போது இடையே மேகம் வந்தால் எப்படி சுருங்கிப்போகுமோ அப்படி ரகு வரும் செய்தி கேட்டு முகம் சுருங்கிப்போனார்கள்.
ரகுவினைப் பாரசீக மன்னர்கள் தங்கள் பிரசித்தியான குதிரைப் படையுடன் எதிர்கொண்டார்கள், அக்குதிரைகள் எழுப்பிய பெரும் புழுதியில் எதையுமே காணமுடியவில்லை , வில்லின் நாண் எழுப்பும் ஒலியிலேதான் எதிரே பகைவர் இருப்பதை அறியமுடிந்தது, அப்படியான அடர்ந்த புழுதி அது.
ரகு பாரசீகர்களின் தலையினைத் தன் பிறைசந்திரன் போன்ற அம்பினால் வயலில் நெல் அறுப்பது போல் அறுத்துத் தள்ளினான், அவர்கள் தலையினை மழித்து மீசையும் மழித்து தாடிமட்டும் கொண்டபடி தோற்றமளிப்பார்கள், அது மொட்டை பாறையில் தேன் கூடு கட்டியது போல் காட்சியளிக்கும், ரகுவால் வெட்டப்பட்ட தலைகள் கீழே விழுந்து கிடந்த காட்சி தரையெங்கும் தேன்கூடு நிறைந்ததுபோல் இருந்தது.
பெரும் அழிவினைச் சந்தித்த பாரசீகர்கள் தங்கள் தலைப்பாகையினை அகற்றி அவனிடம் மன்னிப்புக் கோரி சரணடைந்தனர், பெரிய மகான்களின் கோபம் மன்னிப்புக் கேட்டவுடன் அகன்றுவிடுவது போல மூர்க்கமாகப் போரிட்ட ரகுவும் அவர்கள் மன்னிப்பு என்றவுடன் சமாதானமடைந்து போரை நிறுத்தினான்.
போர் முடிந்ததும் யவனர்கள் விரித்த விரிப்பில் அமர்ந்த ரகுவின் வீரர்கள் இனிய திராட்சை மதுவினால் தங்கள் களைப்பினைப் போக்கிக் கொண்டார்கள்.
வடமேற்கு திசையினை வென்ற ரகு அடுத்து வடக்கு நோக்கித் திரும்பினான், அது திக் பாலகர்களின் ஒருவனான குபேரனின் திசையாக இருந்தது. உத்ராயண காலத்தில் சூரியன் வடக்கு நோக்கிச் செல்வது போல ரகுவும் வடதிசை நோக்கிச் சென்றான்.
அங்கே சிந்துநதியில் அவன் குதிரைகள் விளையாடிக் களைப்பைத் தீர்த்தன, பாரசீக யுத்தத்தில் பெரும்பலம் காட்டிய அவன் குதிரைகள் இங்கே நீராடி மகிழ்ந்து ஓய்வெடுத்தன. அப்படியே வளமான சிந்துநதியின் கரையெங்கும் கிடந்த குங்குமப்பூக்களில் தங்கள் பிடரி முடி படும்படி புரண்டு விளையாடி மகிழ்ந்தன.
அங்கே ஆக்கிரமிப்பு செய்திருந்த ஹூனர்களுடன் மோதினான் ரகு. அவன் சேனையால் ஹூனர் கூட்டம் அழிக்கப்பட்டபோது ஹூனர் குல அரசப்பெண்கள் அந்தக் கணவர்களுக்காக தங்கள் முகங்களில் அடித்து அழுதத்தால் அவர்கள் அழகான கன்னம் முழுக்கச் சிவப்பானது.
ரகு அப்படியே நகர்ந்து காம்போஜ தேசம் சென்றான். அங்கே அஷோட மரங்கள் (அசோக மரம்) நிறைந்திருந்தது, அவைகளில் அவன் தன் யானைகளைக் கட்டினான். அந்த யானைகள் அம்மரங்களை வில்லாக வளைத்தன. ரகுவின் யானைகளின் பலம் கண்ட காம்போஜ மன்னர்கள் தாங்களாகவே ரகுவுக்குப் பணிந்தார்கள்.
காம்போஜ மன்னர்கள் பெரிய பொற்குவியலும் நிறைய உயர்சாதி குதிரைகளையும் ரகுவுக்குக் கப்பமாக கட்டினாலும் அது குறித்து வருந்தவில்லை. ரகுவும் தான் பெற்ற கப்பம் பற்றி பெரிய கர்வமேதும் கொள்ளவில்லை.
அங்கிருந்து கிளம்பிய ரகு பார்வதி தேவியின் தந்தையான மலையரசனின் பெரிய மலையினைக் கண்டான்.
(தொடரும்..)
காளிதாசனின் ரகுவம்சம் : 18
பார்வதியின் தந்தையான அந்த மலையரசனின் ஹிமாலய மலையில் குதிரைகளோடு ஏறினான் ரகு, அவனின் குதிரைகள் எழுப்பிய புழுதிப்பொடி ஹிமாலய மலைகளின் சிகரங்கள் மேல் பதிந்து அவற்றை இன்னும் உயரமாக்கின.
மலைக்குகையில் கிடந்த சிங்கங்களின் பார்வையில் தன் மனம் போல் அவற்றின் மனவுறுதியினைக் கண்டான், ரகுவின் பெரும் சேனை கண்டும் சிறிதும் கலங்காமல் அவை அலட்சியமாக இருந்தன.
கங்கா நீரினைச் சுமந்து வந்த ஹிமாலயத்துக் குளிர்க்காற்று பூர்ஜ மரத்தின் காய்ந்த இலைகளிடையே சரசரவென சத்தம் எழுப்பியபடியும், மூங்கிள்களின் நடுவில் புகுந்து இனிய இசையினை எழுப்பியபடியும் வந்து அவனைத் தழுவிக்கொண்டது, அந்த ஏகாந்தத்தில் அவன் சுகமடைந்தான்.
வழியில் நமேரு மரத்தின் அடியில் கஸ்தூரி மான்களால் இனிய நறுமணம் ஊட்டப்பட்ட பாறைகளில் அமர்ந்த அவன் வீரர்கள் கொஞ்சம் அவ்வப்போது ஓய்வெடுத்துக் கொண்டார்கள்.
அங்கே ஒளிவிடும் செடிகளில் இருந்து வந்த வெளிச்சம் எண்ணெயில்லாத் தீபம் போல் வெளிச்சம் கொடுத்தன, அவை சரண மரத்தில் கட்டப்பட்டிருந்த யானைகளின் பெரிய சங்கிலி மேல் பட்டு இன்னும் பிரகாசமான சூழலை இரவில் கொடுத்தன.
ரகுவின் யானைகள் சென்ற வழிகளில் அவை தங்கள் கழுத்துச் சங்கிலியால் தேவதாரு மரங்களை உரசிச் சென்றன, அப்படி அவை பட்டை உரிக்கப்பட்ட உயரம் கண்ட வேடுவர்கள் யானையின் உயரத்தைக் கணக்கிட்டு பார்த்து வியந்தனர்.
ரகுவின் சேனையினைக் கண்ட மலைவாசிகள் மூர்க்கமாகத் தாக்கத் தொடங்கினர், அவர்கள் கற்களை வீச பதிலுக்கு ரகுவின் சேனை உலோக ஆயுதங்களை வீச கல்லும் இரும்பும் மோதியதால் எழுந்த தீ அச்சத்தைக் கொடுக்கும் யுத்தமாய் வெடித்தது.
ரகு தன் பராக்கிரமத்தால் உத்சவர், சங்கேதர் என இரு வகை மலைவாசிகளையும் வென்றான், அவர்கள் மகிழ்ச்சியற்று போகும்படி நடந்த ரகுவின் பெரு வெற்றியினைக் கிங்கணர்கள் மகிழ்ந்து இனிய இசையில் பாடினார்கள்.
தோற்றுப்போன மலைவாசிகள் ஹிமாலயத்தின் சிறந்த செல்வங்களை எல்லாம் ரகு முன் கொண்டு வந்தார்கள், அப்போதுதான் அவன் ஹிமாலயத்தின் செல்வங்களை அறிந்தான், ஹிமாலயமும் ரகுவின் பராக்கிரமத்தை முழுக்க அறிந்தது.
அசைக்கமுடியாப் புகழினைக் கொண்ட ரகு அங்கே அவன் ராவணனால் அசைக்கப்பட்ட அந்தக் கைலாசமலையினைக் கண்டான், அசையாப் புகழைக் கொண்ட தான் அசைந்துவிட்ட அம் மலைக்குத் தான் செல்வது தன் புகழுக்கு இழுக்கு என்பதை உணர்ந்தவன் அந்த வெண்ணிறக் குன்றினை தன் வெற்றித் தூணாக நிறுத்திவிட்டு நகர்ந்தான்.
அவன் லௌஹத்யா (பிரம்மபுத்ரா) நதியினைக் கடந்து பரக்யதிஷ தேசத்தை (அசாம் பக்கம்) அடைந்தான், அங்குள்ள கார்கில் மரங்களில் கட்டப்பட்ட ரகுவின் யானைகள் அம்மரங்களை ஆட்டும் பலத்தைக் கண்டதுமே அத்தேசத்து மன்னன் நடுங்க ஆரம்பித்தான்.
ரகுவின் சேனையினால் எழுந்த புழுதி சூரியனை மறைத்து மழையற்ற காலத்திலும் பகலில் இருளை உண்டாக்கின, பிரமாண்டமாக நின்ற அந்தச் சேனையின் பழுதியினையே தாங்கமுடியாதவன் எப்படி அந்தச் சேனையினை எதிர்கொள்வது எனக் கலங்கினான்.
எந்தப் பலமான யானைகளைக் கொண்டு பகைவர் பலரை அந்த காமரூப நாட்டின் மன்னன் வென்றானோ அதே யானைகளைப் பரிசாகக் கொடுத்து ரகுவிடம் அம்மன்னன் பணிந்து நின்றான், மலர்களிட்டு ரகுவின் பாதங்களை வணங்குவதற்கு பதில் நவரத்தினங்களை அவன் காலில் கொட்டி அவனை அர்ச்சித்தான், பொற்பீடத்தில் நின்ற அதிதேவதையின் பாதம்போல் ரகுவின் கால்கள் அப்போது விளங்கின.
இப்படி எல்லா அரசர்களையும் வென்ற ரகு தன் ஒற்றைக் குடையில் எல்லாத் தேசத்தையும் கொண்டுவந்தான். அதனால் எல்லா அரசருக்கும் குடை இல்லாமல் போயிற்று. குடை இல்லாததால் ரகுவின் தேர்கள் எழுப்பிய புழுதி அவர்கள் கீரிடத்தில் படிந்திருந்தன.
மேகம் பூமியில் நீரெடுத்துப் பூமிக்கே மழையாய்க் கொடுப்பது போல் திக்விஜயம் செய்த ரகு விஸ்வஜித் எனும் யாகத்தை உலகநலனுக்காய்ச் செய்து தானம் பல செய்தான், அவன் தனக்கென எதுவும் வைத்திருக்காமல் எல்லாவற்றையும் தானமாய்க் கொடுத்தான், அந்த யாகம் அவனுக்கான வாய்ப்பாயிற்று.
அவனால் வெல்லப்பட்ட சிற்றரசர்கள் அந்த யாகத்துக்கு வந்திருந்தாலும் ஒரு அவமானமாக அதை முதலில் உணர்ந்தார்கள், ஆனால் ரகு அவர்களை மிகுந்த மரியாதையுடன் நடத்தியதைக் கண்டபோது தோல்வியின் அவமானம் அவர்களை விட்டு நீங்கிற்று, அவர்கள் பிரியமனமின்றி அங்கேயே இருந்தார்கள், ரகு அவர்களின் குடும்பத்தாரை நினைவுப்படுத்தி அவர்களை நல்லபடியாக திரும்பச் செய்தான்.
அவர்கள் செல்லுமுன் சாம்ராட் எனக் கொடியுடன் வெண்கொற்ற குடையுடன் கும்ப கலசத்துடன் வீற்றிருந்த ரகுவின் கால்களில் விழுந்து வணங்கியதால் அவர்களின் கிரீடத்தில் சூட்டப்பட்டிருந்த மலர்களிலிருந்து விழுந்த மகரந்தப்பொடி அவன் கால்களில் குவியலாகப் பெருகி அவன் பாதங்களைச் சிகப்பாக்கிற்று.
இப்படி அவன் எல்லாச் செல்வத்தையும் தானமாக கொடுத்தபின் ஒன்றுமில்லாமல் இருந்த போது, பதினான்கு வகை தானம் செய்து அவன் செல்வமின்றி இருந்தபோது வரதந்த மகரிஷியின் சீடரான கௌத்சர் தன் குருவுக்கான தட்சனையினை வாங்க வந்து நின்றார்.
(தொடரும்..)
காளிதாசனின் ரகுவம்சம் : 19
குற்றம் குறை சிறிதும் காணமுடியாதவனும், பெரும் புகழைக் கொண்டவனும், விருந்தினர்களை மிகுந்த மரியாதையுடன் உபசரித்து மகிழ்பவனான ரகு அந்த யாகத்தில் எல்லாருக்கும் எல்லாமும் கொடுத்து இனி கொடுக்க எதுவுமில்லை எனும் நிலையிலும் கௌத்ஸரைக்
கண்டதும் தங்க தட்டும் தனமும் இல்லாமல் மண் பாத்திரத்தில் கனிவகைகளையும், பூக்களையும் இன்னும் பூஜிக்கும் பொருளெல்லாம் வைத்து அவரை எதிர்கொண்டு வரவேற்கத் தயாரானான்.
அவன் எல்லா சாஸ்திரங்களை அறிந்தவன் அதனால் பழிக்கு அஞ்சுபவன், மானத்தை மட்டுமே பெரும் செல்வமாகக் கொண்டு அதைக் காத்து நிற்பவன், ஒவ்வொரு காரியத்தையும் செய்யும் முறையினை அறிந்தவன் அதனால் அவன் மிக்க மரியாதையுடன் ஆசனத்தில் அமரவைக்கப்பட்ட கௌத்ஸ்ரை முறைப்படி பூஜித்துக் கை கூப்பியபடி சொல்லத் துவங்கினான்.
தர்ப்பை புல்லின் நுனி போல் கூரிய அறிவுடைய முனிவரே, இந்த உலகம் சூரியனிடமிருந்தே உணவு , உணர்வு என எல்லாமும் பெற்றுக் கொள்வதைப் போல வரதந்து மகரிஷி எனும் ஞானசூரியமிடமிருந்து நீர் எல்லா ஞானமும் ஒளியும் பெற்றுத் திகழிகின்றீர் எனப் போற்றிய ரகு வரதந்தரின் நலம் பற்றி விசாரிக்கத் தொடர்ந்தான்.
இந்திரனே அஞ்சும்படி வாக்கினாலும் மனதினாலும் உடலினாலும் தவம் செய்பவர் அவரின் தவத்துக்கு இடையூறுகள் வருகின்றதா? அப்படி வந்தால் அவைகளெல்லாம் நீங்கும்படி காவல்கள் உள்ளனவா?
சாஸ்திர நியதிகளைக் காட்டி புத்திரர்களை வளர்ப்பது போல் பாத்தி கட்டி அன்போடு வளர்க்கப்படும் ஆசிரம மரங்களும் செடி கொடிகளும் எப்படி இருக்கின்றன, முதிய காலத்தில் பெற்றோரைப் பராமரிக்கும் பிள்ளைகள் போல் அவை உரிய காலத்தில் மலர்களும், கனிவகைகளும் நிழலும் தந்து உங்களை ஆதரிக்கின்றன, அவைகளுக்குப் பெரும் காற்றினால், காட்டு நெருப்பினால் ஆபத்து ஏதும் இலை அல்லவா?
கர்மாவினை அனுஷ்டிக்கும் முனிவர்கள் கையில் தர்ப்பையினை வைத்திருப்பார்கள், அவர்களின் பெரிய செல்வம் அது. ஆனால், மான்குட்டிகள் அந்தத் தர்ப்பையின் நுனியினைக் கடிக்கவரும்போது அன்போடும் கருணையோடும் அனுமதிப்பார்கள், அங்கு மான்கள் மேல் அவர்கள் கொண்ட அன்பு அலாதியானது, புதிதாக பிறந்த மான்குட்டிகள் கூட தொப்புள் கொடி புரள அவர்கள்மடியில் கிடக்குமே அன்றி தாயினைப் பெரிதும் தேடாது, அப்படியான மானினங்கள் அங்கே எப்படி இருக்கின்றன?
எந்தப் பரிசுத்தமான நீரோடையில் இருந்து பூஜைகளுக்கும் இதர புனிதமான ஆசிரம பணிகளுக்கும் நீர் எடுக்கப்படுமோ அவை எப்படியிருக்கின்றன, அந்த நீரோடையின் கரையில் பொறுக்கி எடுக்கப்படும் தானியங்களிலும் அரசனுக்கு ஆறில் ஒருபங்கை ஆசிரமவாசிகள் எடுத்து தனியே வைப்பார்களே, அப்படியான நீரோடைகளெல்லாம் சுத்தமாக இருக்கின்றதா?
காட்டில் தானாக விளையும் திணை வகைகளே ஆசிரம வாசிகளுக்கும் முனிவர்களுக்கும் உணவு, அங்கு வரும் விருந்தினருக்கும் உணவு, அந்தத் திணை பயிர்கள் மேய்ச்சலுக்காய் வரும் கிராமத்தின் ஆடுமாடுகளால் அழிக்காமல் காக்கப்படுகின்றதா?
எல்லா வகையிலும் உம்மைச் சிறந்தவராக உருவாக்கும் உம்முடைய குரு உம்மை கிரகஸ்தன் எனும் இல்லறத்துக்கு அனுமதி கொடுத்துவிட்டாரா? நால்வகை நிலைகளான பிரம்மசாரி, கிரகஸ்தன், வனப்பிரஸ்தர், சந்நியாசி எனும் நிலைகளில் இரண்டாம் நிலைக்கு நீர் வந்துவிட்டீரா?
முனிவரே நான் உங்களுடைய வருகையால் மட்டும் மகிழ்ச்சி அடையவில்லை, உங்கள் உத்தரவு எது என்றாலும் நிறைவேற்றியபின்பே முழு மகிழ்ச்சிக் கொள்வேன், தாங்கள் உங்கள் காரியத்துக்கு வந்தீரா, இல்லை குரு சொன்ன கட்டளையினை எமக்கு உரைக்க வந்தீரா? எனச் சொல்லுங்கள் என்றான்.
அவன் ஏந்தி நின்ற மண்பாத்திரத்தைக் கண்டதும் நம்பிக்கையற்ற கௌத்சர் அவனின் வள்ளல்தன்மையான வார்த்தைகளுக்குப் பதிலாக கூறினார்.
சூரியன் பிரகாசிக்கும் பொழுதில் பூமியில் இருள் எங்ஙணம், அப்படி உமது ஆட்சியில் மக்களுக்கும் எங்களுக்கும் எப்படித் துன்பம் வரும்?
மன்னா, பெரியோரிடம் பணிவாய் நடந்து வேண்டியன செய்தல் உங்கள் குலவழக்கமே, ஆனாலும் நீர் உமது அன்பாலும் பண்பாலும் பணிவாலும் அவர்களை எல்லாம் மிஞ்சி விடுகின்றீர், இப்படிப்பட்ட உம்மிடம் நான் உரிய காலத்தில் வராமல் குளம் வற்றிய பின் வரும் பறவை போல் தாமதமாக வந்துவிட்டேன், அந்த ஒரு வருத்தமே என்னில் மிஞ்சியிருக்கின்றது.
உமது நிலையினைக் காண்கின்றேன், விளைந்த திணையினைப் பறித்தபின் எஞ்சியிருக்கும் தண்டு போல் இப்போது நீர் எனக்குத் தெரிகின்றீர்.
ஈடு இணையில்லாத அரசரான நீர் உமது செல்வத்தையெல்லாம் தான தர்மம் செய்தே ஏழையாக மாறினீர், இதுவும் உமக்கு நல்லதே. ஆம், பெரும் செல்வம் கொண்டு தானம் செய்யாமல் வாழ்வதை காட்டிலும் தான தர்மம் செய்து ஏழையாவது சாலச் சிறந்தது.
சந்திரனின் பதினாறு கலைகளைத் தேவர்கள் பருகியே அவன் கரைந்துவிடுவான், ஆனாலும் அமாவாசையில் சூரியன் அவனுக்கு எல்லாவற்றையும் மீளக் கொஞ்சம் கொஞ்சமாக கொடுப்பார். அப்படித் தேவர்களுக்கான யாகத்தை செய்து நீர் கரைந்தாலும் எல்லாமும் மீளப் பெற்றுக்கொள்வீர்.
தாகம் மிகுந்த சாதகபட்சியும் நீரற்ற மேகத்திடம் எதுவும் எதிர்பாராது, இனியும் நான் உம்மிடம் பொருள் எதிர்பார்ப்பது எப்படி? உம்நிலை கண்டு இனி அதனை இன்னொரு மன்னனிடம் பெற்றுக்கொள்வேன், அதுவன்றி என்னிடம் சொல்ல எதுவுமில்லை. நீர் நீண்ட சுகத்தோடு வாழ பிரார்த்திக்கின்றேன் எனச் சொல்லி நகர்ந்தார்.
நகர்ந்தவரைத் தடுத்து மன்னிப்புக் கோரிய ரகு, அப்படி உம் குருநாதர் எவ்வளவு பொருளைக் கேட்டார், என்ன அவசியமென சொல்லுங்கள் என்றான்.
கௌத்ஸ முனிவர் சொன்னார், “நான் என் வித்யாபியாசம் எனும் என் பாடமெல்லாம் அவரிடம் கற்றுமுடித்தபின் அவரிடம் குரு தட்சணை கொடுக்கும் நிலைக்கு உள்ளானேன், அவரிடம் என்ன தட்சணை வேண்டும் எனக் கேட்டேன். அவரோ என்னைப் பார்த்து என் பணிவிடைக்கு மகிழ்ந்து குருபக்தியினைத் தட்சணையாகத் தரும்படிக் கேட்டார்.
நானோ இல்லை நீங்கள் ஏதாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியதால் ஆத்திரமடைந்த அவர் அப்படியானால் 14 கோடி பொன் கொண்டுவா எனச் சொல்லிவிட்டார்.
நான்கு வகை வேதம், ஆறுவகை வேதாந்தம், மீமாம்சம், நியாயம், புராணம், தர்மசாஸ்திரம் என 14 கலைகளைக் கற்றுதந்த அவர் 14 கோடிப் பொன்னை கேட்டுவிட்டார்.
நானும் உம்மிடம் அதைக் கேட்டுவிடத்தான் வந்தேன். ஆனால், உமக்கு எஞ்சியிருப்பதோ அரசன் எனும் பெயர் மட்டுமே என்ற நிலையில் நான் என்ன செய்வேன்? உங்களை நிர்பந்திக்கவும் என்னால் முடியவில்லை என்றார்.
(தொடரும்)
காளிதாசனின் ரகுவம்சம் : 20
வேதமறிந்த சிறந்த பிராமணர் அப்படிச் சொன்னவுடன் சந்திரன்போல ஒளியுடைவனும் ஐம்புலன்களாலும் குற்றத்தை அறவே ஒதுக்கியவனுமான அந்த ரகு அவரை நோக்கிச் சொன்னான்.
“முனிவரே, சாஸ்திரக் கடலில் கரை கண்டவரும் தன் குருவுக்காக யாசகம் கேட்டவருமான ஒருவரை ரகு அரவணைக்காமல் இன்னொரு மன்னனிடம் அனுப்பினான் எனும் அவமானம் எனக்கு இதுவரை இல்லாத அளவு புதியதாக வேண்டாம்.
நீங்கள் எனக்காக சில தினங்கள் பொறுத்திருப்பீர், என் யாகச் சாலையில் தங்கியிருங்கள், அங்கே மூன்று அக்னி உண்டு. நீங்கள் நான்காம் அக்னியாக தங்கியிருங்கள், அதற்குள் நான் உங்களுக்குரிய வழியினைச் செய்வேன்” என்றான்.
முனிவரும் அவனுடைய வார்த்தையினை ஏற்று அப்படியே அமர்ந்தார், பூலோக மன்னரின் செல்வத்தையெல்லாம் முன்பே பெற்றுக்கொண்ட ரகு இம்முனிவருக்காக குபேரனைச் சந்திக்க எண்ணினான்.
காற்றைப் போல, மேகத்தைப் போல எதனாலும் தடுக்கமுடியாத ரதத்தை வசிஷ்டரின் அருளால் பெற்றிருந்த ரகு அதிலேறிக் குபேரனிடம் சென்றான்.
அவன் குபேரனை தேவர்களில் ஒருவனாக கருதவில்லை. மாறாக, சிற்றரசர்களில் ஒருவனாகவே கருதினான், பயணத்தை எப்போதும் முன்னிரவிலே தொடங்கவேண்டும் என்பதற்காக அவன் காலைவராமல் காத்திராமல் முன்னிரவிலே ரதத்தில் ஏறி அமர்ந்தான்.
காலையில் அவன் தேர் கிளம்பும் முன்பே ஓடிவந்த அலுவலர்கள் அங்கே தங்கமழை பொழிந்ததை சொன்னார்கள், குபேரன் தன்னைத் தேடிவந்து பொன்னைக் கொட்டியதை ரகு அறிந்து கொண்டான்.
குபேரன் கொட்டிய அத்தனை பொற்குவியலையும் முழுக்கக் கௌத்ஸிருக்குக் கொடுத்தான், அந்தப் பொற்குவியலின் பளபளப்பானது இந்திரனின் வஜ்ராயுதத்தால் வெட்டப்பட்ட மேரு மலையின் சிகரநுனி போல் மின்னிக்கொண்டிருந்தது.
தன் குருவுக்குச் சேரவேண்டிய 14 கோடி பொன்னை மட்டும் கௌத்ஸிகர் எடுத்துக்கொண்டு மீதியினை விட்டுவிட்டார், ரகுவோ அவருக்காய் வந்த பொன் மொத்தமும் அவருக்கு என்பதைச் சொல்லி எல்லாமும் அவருக்கே கொடுக்க விரும்பினான், இப்படி ஒருவர் பொன்னை பெற மறுக்க இன்னொருவர் பொன்னைக் கொடுத்தே தீருவேன் என நிற்கும் அதிசயத்தை அயோத்தி நகரம் அப்போதுதான் கண்டது.
ரகு கொடுத்த செல்வத்தையெல்லாம் ஒட்டகத்திலும் பெண்குதிரைமேலும் ஏற்றிய கௌத்ஸிகர் தன் வேண்டுதல் இவ்வளவு விரைவில் பலித்ததில் மகிழ்ந்தார், உலகில் யாராலும் கொடுக்கமுடியாத செல்வத்தை அவன் கொடுத்தபின்னும் கொஞ்சமும் கர்வமில்லாமல் நின்றது கண்டு வியந்த அவர் அவன் கைகளைப் பற்றிச் சொன்னார்.
“மன்னா, நெறி தவறாமல் ஆளும் அரசனுக்கு இந்தப் பூமி அவன் விரும்பிய எல்லாமும் தரும், உமக்கோ ஆகாயமும் அள்ளித் தருகின்றது எனில் உம்பெருமையினை நினைவால் உருவகப்படுத்தமுடியா அளவு பெரிது.
அரசனின் கடமையான பொருள் ஈட்டலும், ஈட்டியதைப் பெருக்குவதும், பெருக்கியதைக் காப்பதும், காப்பதை தக்க சமயம் உபயோகிப்பதும் உமக்கு எளிதான காரியமாயிருக்கின்றது.
எல்லா வரமும் ஐஸ்வர்யமும் பெற்றுள்ள உம்மை இனி நானும் வாழ்த்தி ஆசீர்வதிக்க என்ன இருக்கின்றது? அப்படிச் செய்தால் அது புனருக்தம் எனும் குற்றமாகும், ஆனாலும் ஒன்று சொல்வேன் உமது தந்தை உம்மைப் பெற்றதுபோல் உமக்கும் உமது உயர்குணங்களெல்லாம் கொண்ட மகன் அமையட்டும், நிச்சயம் பெற்றெடுப்பீர்”
இப்படி வாழ்த்தியபின் முனிவர் தன் குருநாதரை நோக்கிச் சென்றார், முனிவர் சென்றாலும் அவர் விதைத்த நல்வாக்கு ரகுவுக்கு மகனாய் முளைத்து வந்தது.
சூரியன் உதிக்குமுன் மூன்றரை நாழிகை நேரமுள்ள காலம் பிரம்மமுகூர்த்தம். அந்த நேரத்துக்கு பிரம்மனே அதிபதி, அந்தப் பிரம்ம முகூர்த்தத்தில் பிறந்த மகன் என்பதால் பிரம்மனின் பெயரான “அஜய்” என்பதை அவனுக்குச் சூட்டி மகிழ்ந்தான் ரகு.
உருவம், பலம், பெருந்தன்மை, வீரம், குணம் என எல்லாவற்றிலும் தந்தையினைப் போலவே அஜய் இருந்தான், ஒரு விளக்கு இன்னொரு விளக்கில் இருந்து ஏற்றப்பட்டாலும் தீபம் ஒன்றாகவே இருப்பதுபோல் தந்தையும் மகனும் ஒன்றாகவே இருந்தார்கள்.
(தொடரும்)