காஷ்மீரை தொடர்ந்து அசாமில் கவனம் குவிகின்றது

காஷ்மீரை தொடர்ந்து அசாமில் கவனம் குவிகின்றது, காஷ்மீரில் முழு அமைதியினை நிலைநாட்டு நெருப்பாற்றை தாண்டிவிட்ட பாஜக அரசு அசாமில் மிக கடுமையான சவாலை சந்திக்கின்றது

அதாவது அசாமில் ஏகபட்ட வங்கதேச மக்கள் உண்டு அவர்கள் இஸ்லாமியர் என்பது கூடுதல் விஷயம்

அவர்கள் 1971க்கு முன்பு அதாவது வங்கபோருக்கு முன்பு முறைபடி இங்கு வந்திருந்தால் சிக்கல் இல்லை, வம்சம் வம்சமாக வாழ்ந்திருந்தால் சிக்கல் இல்லை ஆனால் 1971க்கு பின்பு வந்தவர்கள் அவர்களுக்கு பிறந்தவர்கள் முறையான ஆவணம் இல்லாதவர் எல்லோரும் நாடற்றவர்கள் என அறிவிக்கபடுவார்கள் என சொல்கின்றது மத்திய அரசு

மத்திய அரசுக்கு அவர்கள்மேல் என்ன வெறுப்பு?

வெறுப்பு ஒன்றுமில்லை அவர்கள் வங்கதேசமக்கள் , அவர்களுக்க்கு அந்நாடுதான் பொறுப்பு இங்கே இந்தியருக்கு வழங்கபடும் நலதிட்டங்களை அவர்கள் பெற்று அசாமியருக்கு தடையாக இருகின்றார்கள் என்கின்றது இந்திய அரசு

மெக்ஸிகோ மக்கள் மேல் டிரம்ப் காட்டும் கோபம் போன்றது இது

ஆனால் அவர்களோ நாங்கள் அகதிகளாய் வந்தவர்கள் இங்குதான் இருப்போம், இந்தியாதானே போர் நடத்தி எங்களை இப்படி ஆக்கிவிட்டது ஆக இந்தியாதான் பொறுப்பு என்கின்றார்கள்

இல்லை 1971ல் உங்களுக்கு தனிநாடு உருவாக்கி தந்துவிட்டோம் நீங்கள் செல்லாமல் இங்கே இருந்தது இந்திய சட்டபடி தவறு என்கின்றது இந்தியா

பொதுவாக எந்த நாடும் இன்னொரு நாட்டு மக்கள் அதிகமாவதை ஏற்காது அது பல சிக்கலுக்கு வழிவகுக்கும் என அஞ்சும்

மலையக தமிழர்களும் பர்மா தமிழர்களும் திருப்பி அனுப்பபட்டது அப்படித்தான்

எனினும் இங்கு திபெத் அகதிகள் ஈழ அகதிகள் இருக்கும் பொழுது வங்க அகதிகள் ஏன் இருக்க கூடாது என எதிர்குரல்கள் எழ ஆரம்பித்துவிட்டன‌

ஆனால் அந்த எண்ணிக்கையினை ஒப்பிடும் பொழுது அசாமில் வங்கமக்கள் எண்ணிக்கை பல லட்சம் அதிகம் என்கின்றார்கள்

மிக முக்கியமான சிக்கலான இவ்விஷயத்தில் இன்னும் சில நாட்களில் அரசு இவர்கள்தான் இந்திய மக்கள், இதில் இடம்பெறாதோர் அகதிகள், நாடற்றவர்கள் என அறிவிக்க இருகின்றது

நிச்சயம் பெரும் கலவரம் ஏற்படும் என்பதால் பாதுகாப்புகள் பலபடுத்தபட்டிருக்கின்றன‌

அந்த மக்கள் இஸ்லாமியராய் இருப்பதால் இது பாஜகவின் திட்டமிட்ட சதி என வழக்கமான ஒப்பாரிகள் தொடங்கிவிட்டன‌

அறிக்கை வெளிவரட்டும் அதன் பின் தெரியும் செய்தி

ஒருவேளை பெரும் எண்ணிக்கை மக்களை வெளியேற்ற வேண்டும் என்றால் எங்கு வெளியேற்றுவார்கள்? வங்க தேசம் வெறு வாயே திறக்கவில்லை

பெரும் சிக்கலான பிரச்சினை இது , எனினும் முடிவு எடுத்தே தீரவேண்டும்

எம்மிடம் கேட்டால் அவர்களை இந்தியராக குடியுரிமை கொடுத்து வைக்கலாம்தான், அவர்கள் இங்கே பிறந்து வளர்ந்தவர்கள் வேறு எங்கே செல்வார்கள்?

வங்கதேசம் ஒன்றும் இன்னொரு தேசமல்ல ஒரு காலத்தில் நம் பங்காளிகள், இன்றும் நமக்கு பாதுகாப்பான தேசம்

நாம்தான் அவர்களுக்கு சுதந்திரமும் வாங்கி கொடுத்தோம், அவர்களை சுதந்திரமாக வாழவைத்தோம்

இப்பொழுது அந்த அபலைகளுக்கு இங்கே குடியுரிமை கொடுத்து வாழவைப்பதுதான் சரி

கிட்டதட்ட பல லட்சம் மக்களை விரட்டினால் அக்குடும்பங்கள் எங்கு செல்லும்? எங்கு வாழும்? புதிய நாட்டில் எப்படி வாழ்க்கையினை தொடங்குவார்கள்

ஆக அம்மக்களை இங்கே வாழவிடுவதுதான் சரி

இந்தியாவும் அதைத்தான் செய்யமுடியும் என்கின்றார்கள் , பல லட்சம் மக்களை அடித்து விரட்டினால் பெரும் சிக்கலை சர்வதேச அரங்கில் இந்தியா எதிர்கொள்ளும்

அதனால் வெறும் கணக்கெடுப்பாக இதை நடத்தி ஆவணமின்றி நெடுங்காலம் இருப்போருக்கு ஆவணம் கொடுத்து இங்கே அமர்த்துவதுதான் மனிதாபிமானமும் அறமும் உள்ள செயலாகும்

சரி சர்ச்சையானால் என்ன நடக்கும்?

திமுக போராட்டம் அறிவிக்கும், முக ஸ்டாலின் தீர்மானம் எல்லாம் போடுவார்

வங்கதேச ரேடியோ இந்தியாவின் மூன்றாம் கட்சி எங்களை ஆதரிகின்றது என கிளம்பும்

உடனே மாரிதாஸ் டாக்கா டூ கோபாலபுரம் என்றொரு வீடியோவினை வெளியிடுவார், உடனே ஆர்,எஸ் பாரதி கமிஷணர் அலுவலகம் செல்வார்

அதன்பின் திமுக அந்த மக்களை விரட்டியது தவறென சொல்லவிலை மாறாக கையில் சில ஆயிரம் கொடுத்து அனுப்ப வேண்டும் என்றுதான் சொன்னோம் என பல்டியடிக்கும்

இப்படி தமிழக காமெடி காட்சிகளும் அரங்கேறும்

எனினும் பல லட்சம் குடும்பங்கள் குழந்தைகள் நெடுங்கால வாழ்வு என இங்கே நிலைத்துவிட்ட அம்மக்களை வேரோடு பிடுங்கி எறிவது சரியல்ல‌

எவ்வளவோ இனங்கள் இங்கு இணைந்து வாழ்கின்றோம், அவர்களும் நம்மில் ஒருவராக இணைந்து வாழ்ந்துவிட்டு போவதில் என்ன குறைந்துவிடும்?

சட்டத்தில் கொஞ்சம் தர்மத்தையும் கலந்து அரசு சிந்திக்கட்டும்

அரசு நல்லமுடிவாக எடுக்கட்டும், அம்மக்களுக்கு நல்ல பொழுதாக விடியட்டும்