கீதையின் இரண்டாம் அத்தியாயம் ஸாங்க்ய யோகம்.

Image may contain: 1 person

கீதையின் இரண்டாம் அத்தியாயம் ஸாங்க்ய யோகம்.

ஸாங்கியம் என்றால் இல்லாத ஒன்றுக்கும் இருக்கும் ஒன்றுக்குமான தொடர்பினை சொல்லும் தத்துவம்

குழம்பி தவிக்கும் அர்ஜூனனிடம் மெல்ல கேள்விகளை எழுப்புகின்றான் கண்ணன் “அர்ஜூனா இம்மாதிரி குழப்பங்கள் உனக்கு வந்ததே இல்லையே, இது உனக்கு சிறப்பை தராது, உயர்ந்த லட்சியத்தில் உள்ளவனுக்கு இக்குழப்பம் வீழ்ச்சியினை கொடுக்கும், இந்த பலவீனத்தை தள்ளிவிட்டு எழு”

அர்ஜூனன் குழப்பத்தின் உச்சியில் சொல்கின்றான் “அவர்கள் அயோக்கியராயினும் பெரியவர்கள், அவர்கள் ரத்தத்தில் நான் வென்று ஆகபோவது ஒன்றுமில்லை, என்னால் அவர்களோடு யுத்தம் புரியவே முடியாது. எதிரியே இல்லா தேவலோகம் கிடைத்தாலும் என்னால் சண்டையிட முடியாது

கண்ணா நான் குழம்பியிருகின்றேன், அவர்கள் அதர்மக்காரர்கள் ஆனால் என்னால் சண்டையிட முடியாது. என் கடமை பற்றி குழம்புகின்றேன், எல்லாம் அறிந்த நீ தீர்த்து வைப்பாயாக..”

அதுவரை பொறுமையாய் இருந்த கண்ணன் அவன் சரணடைந்ததும் புன் சிரிப்புடன் தத்துவத்தை தொடருகின்றான்

“எல்லாம் அறிந்தவன் போல் பேசும் அர்ஜூனனே, இந்த எதிரிகளோ நீயோ நானோ இந்த அரசோ இதற்கு முன் எங்கிருந்தோம், இன்னும் கொஞ்சகாலம் கழித்து எங்கிருப்போம்? எல்லாம் நிலையற்றது

இப்பொழுது நீ அழுகின்றாய் அதற்கு முன் மகிழ்ந்தாய். குளிர்காலமும் வெயில்காலமும் பூமியினை என்ன செய்யும்? உன் உணர்ச்சி ஒன்றே உன் குழப்பத்திற்கான காரணம், குளிரை வெயிலை உன் புலனே உணர்வது போல், உன் உணர்ச்சியே உன்னை நடத்துகின்றது

இதோ இவர்கள் யார் வெறும் மனித கூடுகள், அவர்களுக்குள் இருப்பது ஆத்மா, அந்த ஆத்மாவே ஒருவனை வழிடத்தும், அது சொற்படி ஆடுபவனே மனிதன். அந்த ஆத்மா அழிவற்றது, அது நெருப்பில் எரியாது, மழையில் நனையாது, அது வெட்டமுடியாதது, அழிக்க முடியாதது

ஆத்மா பிளக்க முடியாதது, கரைக்க முடியாதது, நனைக்க முடியாதது, உலர்த்த முடியாதது, என்றுமிருப்பது, அசையாதது, நிலையானது, மாறாதன்மையுடையது

அது மனிதன் உடைமாற்றுவது போல் வேறு வேறு உடலுக்கு மாறி கொண்டே இருக்கும், எங்காவது தன் கடமையினை செய்து கொண்டே இருக்கும்

நீ அழிக்கபோவது உடலையே, அது நீ அழிக்காவிட்டாலும் இன்னொரு நாள் தானாய் அழியும்., ஆனால் இந்த குழப்பத்தில் நீ பின்வாங்கினால் இதுகாலமும் உனக்கிருந்த புகழ் அழியும், உன்னை கண்டு அஞ்சியவரெல்லாம் உன்னை நகைப்பார்கள்

இதுவரை நீ பட்ட பாடும், ஏந்திய வில்லும் அர்த்தமற்று போகும், அஞ்சி ஓடினான் அர்ஜூனன் என்ற குரல் உன் காதில் ஒலிக்க நீ வாழ்வதை விட சாவது மேல்

மனிதனால் கொல்லபடமுடியாத ஆத்மாவுக்கு ஏன் அஞ்சுகின்றாய், ஆத்மா பற்றி அறிவோர் சிலரே, அதிலும் வியப்பாக கவனிப்போர் சிலரே

ஆத்மா கண்ணுக்கு எட்டாததும் சிந்தனைக்கு அப்பாற்பட்டதும் மாற்றமுடியாததுமாகும் , இதனால் உடலுக்கு வருந்தாதே, ஆத்மா புது உடலில் புகுந்து வெளியேறுவது பற்றி சிந்தித்தாலும் அதில் நீ கவலைபட என்ன உண்டு?

எதை நீ மாற்றமுடியும், நீ இல்லாவிட்டாலும் ஒரு காலம் எதிரிகள் அழிவார்கள், அவர்கள் உடல் மண்ணாகும் ஆனால் நீ உன் கடமையினை செய்யாவிட்டால் பெரும் பழி உன்னையே சேரும்

ஆத்மா என்பது அழிவில்லாத பொழுது நீ அழிக்க ஒன்றுமில்லை, உடல் எனும் கூடு அழிய கூடிய ஒன்று அதைத்தான் உன் கடமை செய்ய சொல்கின்றது

அர்ஜூனா இன்னும் தெளிவாக சொல்கின்றேன், ஒரே சிந்தனையுடன் இரு, கிளைகள் போல் சிந்தனையினை பரவவிட்டால் அது பலனளிக்காது

குறைந்த அறிவுள்ள மானிடருக்கு இதெல்லாம் புரிவதில்லை , புலன்களின் இன்பத்தையும் செல்வ வாழ்வினை விடவும் உயர்ந்தது எதுவுமில்லை என நினைக்கின்றனர், இந்த உலககாரியங்களிலும் சந்தோஷங்களிலும் அவர்கள் மனம் லயிக்கும் பொழுது ஆத்மா பற்றியோ பரம்பொருள் பற்றியோ அவர்கள் சிந்திப்பதில்லை

அர்ஜூனா வேதங்கள் சொல்லும் குணங்கள் என்ன? சத்வ குணம் ரஜோ குணம் தமோ குணம் எனும் அந்த மூன்று குணங்களையும் கடந்த நிலைக்கு செல்வாய், இதில் சிக்கியோர் இங்கேதான் சுற்றுவர் அவர்கள் பரம்பொருளை அறிந்து கொள்ளமாட்டார், மாயை அவர்களை மேகம் போல் மறைக்கும்

கிணற்றுக்கும் கடமை உண்டு, ஆற்றுக்கும் கடமை உண்டு, பெரும் கடலுக்கும் கடமை உண்டு இம்மூன்றுக்கும் எல்லையும் உண்டு வேறுபாடுகளை அறிவாய், கடல் கிணற்றை போல் சிந்தித்தால் உலகம் இயங்காது

ஆம் உனக்கு விதிக்கபட்ட கடமையினை செய்ய மட்டும் உனக்கு அதிகாரம் உண்டு,

இந்த ஆத்மா இதற்காக இந்த உடலில் புகுந்ததென்றால் அதைத்தான் செய்தாக வேண்டும், மனம் தெளிவு கொள்.

அந்த ஆத்மாக்கள் அதர்ம கூட்டமாயின் தர்மாத்மா குடியேற ஒரு உடல் வேண்டுமா இல்லையா? அதுதான் நீ

ஒவ்வொரு மனிதனையும் இயக்கும் சக்தி ஆத்மா, அந்த ஆத்மாவினை யார் இயக்குகின்றார் என்றால் அது மானிடனுக்கு புரியா விதி. எங்கிருந்தோ ஆட்டபடும் ஆத்மா இங்கு அவனவனை ஆட்டுகின்றது, இதில் நீ குழம்ப்ப என்ன இருக்கின்றது?

உன் கடமையினை உணர நீ யோக மனப்பான்மைக்குள் செல், வேதங்களை கடந்து நன்மை தீமையினை கடந்து கடவுளிடம் சரணடைபவன் யோகி, அந்த மனப்பான்மைக்கு வா..யோகம் உன் கடமையினை உனக்கு உணர்த்தும்”

நெல்லில் இருந்து உமி மெல்ல நீங்குதல் போல் தெளிவுறும் அர்ஜூனன் கொஞ்சம் தெளிந்து கேட்டான் “கண்ணா, யோகத்தில் மூழ்கி எல்லாம் கடந்து சரணடைந்தவன் எப்படி இருப்பான்?

கண்ணன் அர்ஜூனன் தன் வசம் வருவதை அறிந்து சொன்னான் “அவன் எல்லாம் கடந்த நிலையில் இருப்பான்., வெற்றி தோல்வி அவனை பாதிக்காது. அவனிடம் அழுகை கண்ணீர் சிரிப்பு இருக்காது

அவன் தன் கடமையினை மட்டும் செய்வான், வெற்றியில் சிரிப்போ தோல்வியில் அழுகையோ அவனை பாதிக்க்காது, கடமை ஒன்றே அவன் கர்மமாயிருக்கும்

அர்ஜூனா புலன்களை அடக்க கற்றவனை எதுவும் தாக்காது, ஆமை தன் உறுப்புக்களை உள்ளே இழுப்பது போல் ஒருவன் எல்ல உணர்ச்சிகளையும் உள்ளடக்கி காக்க வேண்டும்

ஏதாவது ஒன்றில் அவன் உணர்வு சிக்கினால் கூட அதில் ஆசை வரும், ஆசை பற்றாகும், பற்று காமம் ஆகும், காமம் பேராசையாகும், பேராசை அவனை வீழ்த்தும்

கடும்காற்றால் படகு இழுக்கபடுவது போல ஒரு சிறிய விஷயமும் ஒருவனை மூழ்கடிக்கும் அதன் பின் அவன் மானிட சுழலில் சுழல்வானே அன்றி பகவானை அடைய முடியாது

நீ இப்பொழுது பாசம் , ரத்தம் சொந்தம், குரு, குடும்பம் எனும் சுழலில் சிக்குகின்றாய். அர்ஜூனா அது உன்னை வீழ்த்தும், நீ யோகியின் மனநிலைக்கு வா, உணர்ச்சிகளை அடக்கு, உறுதி கொள், கடமையினை நினைத்து யோகி போல் எழு

அர்ஜூனா ஆத்மாவினை நினை, ஆத்மாவில் இருந்து சிந்தித்து பார், உணர்ச்சிகளில் வீழாதே, யோகியாக மாறு, யோக நிலை ஒன்றே பாசத்தை வேறறுத்து மயக்கம் தெளிவித்து உன் கடமையினை செய்ய வைக்கும்”

இரண்டாம் அத்தியாயத்தின் சுருக்கம் இதுதான் இதற்கு மேலும் சுருக்க முடியாது

எனினும் ஸ்லோகங்கள் பல பொருட்களை தருவதால் இதை ஆழ ஆராய்ந்த மேதைகள் கூட்டம் இந்த அத்தியாயம் சில நிர்வாக விஷயங்களை தருவதாகவும், அது மானிட வாழ்வுக்கு அடிப்படை என்றும் குறித்தது

அது என்ன? ஆம் ஆத்மா அழியாதது அது காலத்துக்கு ஏற்க கூடுகளுக்கு மாறுமே தவிர அது அழியாது

ஆம், இது போலத்தான் கம்பெனியோ, குடும்பமோ, வாழ்வோ பிரச்சினைகளின் வடிவம் மாறுமே தவிர பிரச்சினை ஒரு காலமும் ஓயாது, அது உருமாறி வந்து கொண்டேதான் இருக்க்கும், மானிடன் இருக்குமிடமெல்லாம் சிக்கலும் இருக்கும் அது இயல்பு

காலம் மாற மாற பிரச்சினைகளும் மாறும், புது புது சவால்கள் வரும், உடனிருந்தோர் மாறுவர், சூழல் மாறும் சகலமும் மாறி கொண்டே இருக்கும் அதில் சோர்ந்துவிட ஒன்றுமே இல்லை, எதிர்கொண்டே ஆக வேண்டும்

மானிட சிக்கலை எல்லாம் கடவுளிடம் விட்டுவிடு, உன்னால் தீர்க்க முடியா சிக்கலுக்கெல்லாம் அவனே பொறுப்பு

இந்த பூலோகத்தில் எந்த சுதர்மம் உன் மேல் குடும்பத்திலும் சமூகத்திலும் சுமத்தபடுமோ அதை முழு ஆன்ம சுத்தியோடு செய் , சுமக்க முடியாதவனிடம் சுமைகள் கொடுக்கபடுவதில்லை, சக்தி கண்டே பரம்பொருள் கடமையினை கொடுப்பான்

பந்த்பாசமும், ரத்த பாசமும், பழகிய பாசமும் உன் கடமைக்கு குறுக்கே வருமாறு அனுமதிக்காதே அதில் யோகியின் மனநிலையில் இரு, வெற்றியோ தோல்வியோ இரண்டுக்கும் கலங்காதே, காரணம் கடமை உன்னுடயது விளைவு உன் முடிவு அல்ல, அது பரம்பொருளுடையது

மேதைகள் இப்படி குறிக்க விஞ்ஞான கூட்டம் ஆத்மாவினை பற்றி கண்ணன் சொன்ன வரிகளை இப்படி குறித்தது

ஆத்மா பற்றி கண்ணன் சொன்ன வரிகளை பார்த்தோம், ஆம் ஆத்மா அழிவற்றது அதை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. அது பிறப்பு இறப்பு அற்றது எக்காலமும் எங்கும் நிலைபெற்றிருக்கும்

அறிவியலின் இயற்பியல் சொல்வதென்ன?

ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது ஒரு ஆற்றல் இன்னொரு ஆற்றலாக மாறும்.

அறிவியலின் உயிரியில சொல்வதென்ன?

இங்கு எல்லா உயிர்களும் வாழும் அவை வாழ்ந்து முடியும் பொழுது அவை தன் வாரிசுகளை விட்டு செல்லும், ஆம் உயிர்கள் அழிவதில்லை அது இன்னொரு உயிராக பரிணமித்து கொண்டே இருக்கும், இந்த இயக்கத்தில்தான் தாவரம், விலங்குகள் மனிதன் என எல்லா உயிரும் காலம் காலமாக நிலைத்திருகின்றன‌

அறிவியலின் அணு தத்துவம் சொல்வதென்ன?

அறிவியலின் வானியல் சொல்வதென்ன?

பிரபஞ்சம் என்பது ஆக்கவோ அழிக்கவோ முடியாதது, அது ஏதோ வகையில் புது புது வடிவெடுத்தபடியே இருக்கும்.

அணுவினை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, அது ஏதோ ஒரு வகையில் நிலைபெற்று கொண்டே இருக்கும், ஆற்றலை காட்டியபின்னும் அது அழியாது, கால காலத்தும் நிலையய நீடித்து கொண்டே இருக்கும்

உளவியல், ஆன்மீகம், மருத்துவம், நிர்வாகம் , வானியல்,அறிவியல் என எல்லாம் ஒரே புள்ளியில் சங்கமிக்குமோ அதுதான் இந்துமதம்

அந்த இந்துதத்தின் தலைசிறந்த பொக்கிஷமான கீதை அதை தெளிவாக சொல்கின்றது