கீதையின் முதல் அத்தியாயமே எவ்வளவு சரியாய் இருக்கின்றது பார்த்தீர்களா?
பாரதத்தின் மிக பெரும் ஞான பொக்கிஷம் கீதை, அதை கொண்டாடா நாடு இல்லை, அதன் புகழ் பாடாத விஞ்ஞானியும் மேதைகளுமில்லை
படிக்கும் ஒவ்வொருவனும் எந்த மனநிலையில் இருந்து படிப்பானோ அவனுக்குரிய தெளிவினை கீதை வழங்கும், அது விஞ்ஞானியோ நிர்வாகியோ பாமரனோ யாராக இருந்தாலும் சரி
அது யாரையெல்லாமோ எட்டி எங்கெல்லாமோ ஒளி வீசியது, அணு விஞ்ஞானி முதல் மகாத்மா காந்தி வரை அதனால் தெளிவு பெற்றார்கள்
அந்த ஞான தொகுப்பின் தன்மை அப்படியானது , இந்தியாவின் முதல் கவர்ணர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்க்ஸ் சொன்ன மொழி இது
“இந்தியாவினை நாம் சில காலம் ஆட்சி செய்யலாம், நம் ஆட்சி முடிந்த கொஞ்ச நாளில் நாம் ஆண்டோம் எனும் அடையாளமே இருக்காது, ஆனால் தொன்றுதொட்டு அங்கிருக்கும் ஞானமிக்க சிந்தனைகள் நமக்கும் முன்னும் இருந்தது போல நமக்கு பின்னும் எக்காலமும் நிலைத்திருக்கும் பகவத் கீதையினை போல”
ஆம் அவன் ஒரு கொள்கை கொண்டிருந்தான், இந்தியாவினை நிரந்தரமாக ஆள ஐரோப்பிய திணிப்பு, நாகரிகமோ மதமோ எதை திணித்தாலும் நடக்காது,மாறாக ஐரோப்பியரை இந்திய ஞான மரபுக்கும் சிந்தனைக்கும் மாற்றவேண்டும். அப்படி ஏற்று கொள்ளும் அளவுக்கு மிக உயர்ந்த பண்பாடும் கலாசாரமும் தத்துவமும் கொண்டது என்பது அவன் எண்ணம்
இந்தியர் பைபிளை படித்துகொண்டிருந்தபொழுது ஐரோப்பாவில் கீதை கொண்டாடபட்டது, ஐரோப்பாவின் அனைத்து மொழிகளிலும் அது பெயர்க்கபட்டு, விஞ்ஞானி முதல் கம்பெனி நிர்வாகி வரை படித்தார்கள், கூடி கூடி படித்தார்கள்
அதிலும் யூத கூட்டம் மிக ஆர்வமாக படித்தது அப்படி படித்த ஓப்பன் ஹைமர்தான் அணுகுண்டு வெடித்தபொழுது “கீதையின் வரி இது” என உரக்க உற்சாகமாய் சொன்னான்
கீதை என்பது விஞ்ஞானி முதல் பாட்டாளி வரை ஒவ்வொருவனுக்கும் அவன் மனம் தெளிவபெற வழிகாட்டும் நூல், கீதையினை படித்து தெளிந்த மனிதன் குழம்ப மாட்டான். மிக தெளிவான அவனிடம் குழப்பமோ கண்ணீரோ அழுகையோ இல்லை அதீதமான கொடூர மனமோ ஒருகாலமும் வராது
மனிதனை மனிதனாக வழிநடத்தி கடமையினை செய்ய சொல்லும் கடவுளின் மொழி கீதை. சிக்கல்களும் சிரமமும் கலக்கமும் நிறைந்த மானிட வாழ்வில் அவன் முன் வழிகாட்டியாய் இருப்பது கீதை
அது கடவுளின் மொழி, அவன் காட்டிய வழி
கீதை அர்ச்சுனனுக்கு சொல்லபட்டது என சொல்வோர் அதன் தன்மையினை முழுவதும் அறிந்திராதோர், அது அர்ச்சுனனுக்கு அல்ல எல்லா மக்களுக்குமாக சொல்லபட்டது.
அந்த 18 அத்தியாயங்களுமே இந்து மதத்தின் அடிப்படை தத்துவமாயின, 18 படிகள் ஏறி தெய்வத்தினை காண் எனும் தத்துவம் அதிலிருந்தே உருவாயிற்று
பாரத யுத்ததின் காரண கர்த்தா திருதிராஷ்ட்ரன், அவனே அந்த பெரும் அழிவின் மூலம். பாகுலி நாசர் சாயலில் (இல்லை நாசர்தான் திருதிராஷ்ட்ரன் சாயல்) கண் இல்லாததாலே எனக்கு அரசு இல்லை என அவன் கருவி கருவி பிள்ளைகளை பெற்றேடுத்தான், அந்த 100 பிள்ளைகளும் அவனை போலவே புத்தியோடு இருந்தன,
அவன் ஏற்றிய விஷ ஊசிதான் பாண்டவர் அழியவேண்டும் ராஜ்யம் முழுக்க எனக்கு எனும் துரியோதனிடம் வேலை செய்தது
அந்த விஷம் வெறியாகி வெற்றியாகி பின் நிரந்தர வெற்றியாகும் மகா முக்கிய களமே குருஷேத்திர யுத்தம்
இந்த யுத்தத்தை தான் பாண்டவ குடும்பம் மொத்தமாக அழிய போகும் செய்தியினை கேட்கத்தான் சஞ்சீவன் என்பவனிடம் காதை கொடுத்திருந்தான் திருதராஷ்ட்ரன்
மனதால் போர்கள காட்சிகளை பார்க்கும் சஞ்சீவன் அதை சொல்லிகொண்டிருந்தான், கீதை உரைக்கபடும் காட்சி இதில்தான் தொடங்குகின்றது
அர்ஜூனனுக்கு மட்டுமல்ல சிக்கலின் மூலமான திருதிராஷ்டிரனுக்கும் சேர்த்தே கீதையினை உரைக்கின்றான் கண்ணன், அது இக்காலம் வரை எல்லா மானிடரையும் அதாவது மனதால் குருடராக அலையும் ஒவ்வொரு மனிதரையும் தொட்டு வழிகாட்டுவதுதான் சிறப்பு
அந்த யுத்தம் கிட்டதட்ட 14 ஆண்டு கடும் தயாரிப்பு, அதற்கு முன்பிருந்தே விதைகள் உண்டு. படாதபாடு பட்டு எதிரியின் மகா மட்டமான புத்தி கண்டு, அவர்களிடம் இருக்கும் பலம் கண்டு, மிக மிக கடினமான தயாரிப்போடு தொடங்க இருக்கும் யுத்தம்
அதுவரை தயாராக இருந்த அர்ஜூனன், பாசுபத கனை முதல் எதெல்லமோ வாங்க சிவனுடனே சண்டையிட்ட அர்ஜூனன், தன் மகன் அரவானையே பலிகொடுத்த அர்ஜூனன் அந்த நேரம் தடுமாறுகின்றான்
தன் ரத்த உறவுகளை பார்த்தவுடன் சோர்ந்து விடுகின்றான், ரத்தம் தண்ணீரை விட கனமானது, தான் ஆடா விட்டாலும் சதை ஆடுமல்லவா? அவனுக்கு ஆடிற்று
உறவினர்கள், ஆசிரியர், குல பெரியவர்களை கண்ட பின் அவன் ஆடிவிட்டான் ( கண்கள் பனித்தது இதயம் இனித்தது) இவர்களையா நான் அழிக்க வேண்டும், குல நாசம் பெரும் பாவம் அல்லவா? வெறும் மண்ணுக்காக உறவுக்குள் போரா? இந்த மண்ணை அவர்களே வைத்து கொள்ளட்டும்
போரிட்டால் என்னாகும்? குலநாச பாவம் என்னோடு வரும், அவர்கள் குலம் அழியும், காலமெல்லாம் பழிவரும் பாவம் வரும், அவர்கள் வீட்டு பெண்கள் நிலை என்னாகும்? இதற்கு அவர்கள் என்னை கொல்லட்டும் என்னால் போரிட முடியாது என ஒதுங்கிவிட்டான்
எல்லா தயாரிப்பும் வீணாயிற்று, பாண்டவர் பட்டபாடுகள் எல்லாம் நாசமாகும் நேரமது, அக்கிரம துரியன் கும்பல் வெற்றியினை நிரந்தரமாக்கும் நேரமிது, திருதிராஷ்ட்ரன் தன் குருட்டு கண்ணை மகா சந்தோஷமாக மூடும் நேரமது
குழம்பி தவிக்கின்றான் அர்ஜூனன், அவன் மனமொடிந்த இந்த அத்தியாயம் “அர்ஜூன விஷாத யோகம்”
இதில் கண்ணன் ஏதும் பேசவில்லை, அர்ஜூனன் மனமொடிந்து பேசி குழம்பி வில்லை வீசிவிட்டு அமர்ந்திருக்கும் காட்சி மட்டும் வருகின்றது
சற்று சிந்தியுங்கள்.
இது அர்ஜூனனின் மனப்போராட்டம் மட்டுமா? அவன் மனம் மட்டுமா அப்படி தவித்தது?
காலம் காலமாக ஒவ்வொரு மனிதனின் போராட்டமே உறவுகளுடனே, உறவுகளுடன் போராடா மனிதனே இல்லை, எல்லா மனிதனுக்கும் சொந்தம் ஒரு கைவிலங்காகவும் பந்தம் ஒரு கால்விலங்காகவும் போடபட்டிருக்கின்றது
அதில் அவனால் நியாய தர்மம் சீர் தூக்கி பார்க்க முடிவதில்லை, எது சரி எது தவறு என தேர்ந்து வரமுடியவில்லை
அதில் தர்மம் சரிகின்றது அதர்மம் செழிக்கின்றது, உறவுகளின் வலிமை அவ்வளவு வலிமையானது, பாசம் எனும் கயிறை போல கொடும் ஆயுதமில்லை
ஆனால் நல்லோர்களே இதில் தடுமாறி அர்ஜூனன் போல திகைத்து அழுது வீழ்கின்றனர்
கவனியுங்கள் எதிர்தரப்பு கொஞ்சமும் அரசவில்லை, அப்படியே பாண்டவரை நசுக்கிவிட்டு வேறு வேலை பார்க்கும் அவசரத்தில் இருக்கின்றன
தன் சித்தப்பா குடும்பம் எனும் பாசம் துரியனுக்கு கொஞ்சமும் இல்லை
அக்குலம் அழியும் என அர்ஜூனன் அழும் நேரம், தன் குலம் காக்க அதர்மத்தை ஆதரிப்பேன் என நிற்கின்றார் பிதாமகன் பீஷ்மர்
ஆசிரியன் என அர்ஜூனன் அலறி நிற்க, சீடனை கொல்வதும் ராஜதர்மம் என அசையாமல் நிற்கின்றார் துரோணர்
இன்னும் யார் யாரோ நிற்கின்றார்கள், கொஞ்சமும் குழப்பமில்லை, யோசனையில்லை, மிக இயல்பாய் தயாராய் இருக்கின்றார்கள்
ஆனால் அக்கிரமக்காரர்களே தைரியமாய் நிற்கும் பொழுது தனக்கென்ன வந்தது? ஒரு முடிவுக்கும் வராத கூட்டத்தை அழித்தொழிப்பது தர்மம் எனும் நினைவு அர்ஜூனனுக்கும் வரவில்லை
காரணம் அவன் மனம் முழுக்க குழப்பம்
ஆம் தர்மத்தின் ஆத்மா கலங்குகின்றது, அதர்மம் செய்ய வந்த ஆத்மா தன் கடமையினிமித்தம் கொஞ்சமும் கலங்காமல் இருக்கின்றது, ஆக நல்ல ஆத்மாவுக்கே குழப்பமும் திகைப்பும்.
இந்த அத்தியாயத்தை படித்த இந்திய ஞானிகள் என்ன அர்த்தம் சொன்னார்கள் என்பது இந்துக்களாக தங்களை உணர்ந்த எல்லோருக்கும் தெரியும், ஆம் குழப்பமே ஞானத்தின் முதல்படி. குழம்பி தெளியும் ஞானம் ஆழமானது
முதல் அத்தியாயம் சொல்லும் தத்துவம் அதுதான், லட்சியமே முக்கியம் என செயலாற்றும் மனிதன் பந்த பாசங்களில் சிக்க கூடாது, பந்த பாச சங்கிலியில் சிக்கும் மனிதன் தன் பிறப்பின் நோக்கத்தை செய்யவே முடியாது
அதை செய்யாத ஆன்மா மறுபடி மறுபடி பிறந்து துன்புறும். மாய பாச வலைகளை உடைத்தெறிந்து தர்மத்தை செய்து கடமையினை முடிக்கும் ஆத்மா மறுபடி பிறக்காது
இன்றும் நிர்வாக இயலின் முதல் பாடம் பகவத் கீதையின் இந்த முதல் அத்தியாயமே., உலகின் வெற்றிபெற்ற நிறுவணங்கள் எல்லாம் இப்படித்தான் இயங்கியிருக்கும்
ஆனால் எல்லாவற்றையும் நிர்வாகமாக பார்க்கும் மேற்கத்திய கூட்டம் உட்பொருளை அவ்வளவு அழகாக கொடுத்தது, நிர்வாக இயலின் அடிப்படை தத்துவத்தை இதில் இருந்தே எடுத்தது
அது என்ன?
இலக்கினை குறி வைத்த பின் பந்த பாசத்துக்கு இடம் கொடுக்காதே, எது இலக்கோ எது லட்சியமோ அதை நோக்கி போ, மானிட உறவுகள் மேலான பாசம் ஒரு கை விலங்கும் தடைகல்லுமாகும்
ஆம், நல்ல அமைப்போ நிறுவணமோ தன் இலக்கினை நோக்கி செல்ல திறமையானவர்கள் வேண்டுமே தவிர மாமன், மச்சான், மகன், மருமகன் என உறவுகளை உள்ளே வைத்தால் நிறுவணம் உருப்படாது
வாழ்வின் லட்சியத்தில், முக்கியமான வேலைகளில் உறவுக்கு இடம் கொடாதே, அந்த சிந்தனையினை அகற்று, பந்த பாசத்தில் சிக்கிய மனிதனுக்கு வெற்றியில்லை, அதை அனுமதிக்கும் அமைப்பும் நிர்வாகமும் சிறக்காது..
மிகபெரும் உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் பகவத் கீதையினை படித்த பாஜக உறவு வலையில் சிக்காமல் வெற்றியினை எளிதாக பறிக்கின்றது
பந்த பாசத்தில் சிக்கிய காங்கிரசும் திமுகவும் தவித்து கொண்டிருக்கின்றன
ஏன்?
காங்கிரஸில் கீதை போதிக்க ஆளே இல்லை, திமுக அதை தீண்டாமை போதிக்கும் நூல் என சொல்லி விலக்கி வைத்து உறவுக்கு இடம் கொடுத்து பாதாளத்துக்கு சரிகின்றது
கீதையின் முதல் அத்தியாயமே எவ்வளவு சரியாய் இருக்கின்றது பார்த்தீர்களா?