கூவத்தூர் வேண்டாம், சுவிட்சர்லாந்து வேண்டும்…
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் அடிமைகளை விற்க செல்லும் கப்பலில் அடிமைகள், தங்கள் குடிநீர் கோரிக்கைக்காக அந்த காவலர்களிடம் கேட்பார்கள், அது கூட கிடைக்காத பட்சத்தில் மிரட்டுவார்கள்
நாங்கள் கடலில் குதித்தோ அல்லது பட்டிணி கிடந்தோ செத்துவிட்டால் எங்களை அடிமைகளாக விற்க முடியாது, எனவே எங்களை நன்றாக கவனித்தால் உங்களுக்கு லாபம் என மணிமாறன் வேடத்தில் ராமச்சந்திரன் தொடங்க, நாகேஷ் அழிச்சாட்டியம் தொடங்கும்
முதலில் தண்ணீர் கேட்ட அவர், அதன் பின் பாயாசம் வேண்டும், கால் அமுக்க வேண்டும், அது இது என என கடும் அழிச்சாட்டியம் செய்வார்.
இந்த கூவத்தூர் எம் எல் ஏக்களுக்கு எல்லாம் அந்த நுட்பம் தெரியவில்லை போலும், அப்படி விவரமாக இருந்தால் எப்படி கேட்பார்கள்?
கூவத்தூர் வேண்டாம், சுவிட்சர்லாந்து வேண்டும்
புரட்சி தலைவர் கால்பட்ட அமெரிக்கா முதல் ஜப்பான் வரை நாங்கள் சுற்றுபயணம் செல்லவேண்டும், தாய்லாந்தில் பஞ்சாயி பட பாடலை நாங்களும் தாய்லாந்து பெண்ணோடு பாடவேண்டும்
லண்டனை சுற்றிபார்த்து, பக்கிங்காம் அரண்மனை வேலைக்காரியிடம் உனக்கும் எதிர்காலம் உண்டு என சொல்லவேண்டும், டாக்டர் பீலேயினை கண்டு கை கைகுலுக்க வேண்டும்.
ரோமாபுரியினை சுற்றிவிட்டு, பார்சிலோனா கிளப்பில் மெஸ்ஸியினை சந்தித்துவிட்டு, எகிப்து சென்று பிரமிடுகளையும் கிளியோபாட்ரா அரண்மனையும் பார்த்துவிட்டு.
ரஷ்யாவின் செஞ்சதுக்கம் சென்று, ஸ்டாலின் நினைவிடம் சென்று செருப்பு தைத்த நீர் ரஷ்ய அதிபர் ஆனது உங்கள் வரலாறு என்றால், பால்காரி தெரஸ்கோவா விண்வெளிக்கு சென்றது ரஷ்ய வரலாறு என்றால், வேலைக்காரி முதல்வராவது எங்கள் வரலாறு என சொல்லவேண்டும்
பிரெஞ்சு ஒயினை பிரான்சில் சென்று குடிப்போம், ஆல்ப்ஸ் மலையில் சறுக்குவோம், சுவிஸில் சென்று ஆட்டம் போடுவோம், ஜெருசலேமின் பழமையில் அயர்ந்திருப்போம், சீன பெருஞ்சுவரில் 3 நாள் நடப்போம்
இப்படி எல்லாம் 2 மாதம் அப்படி சுற்றிவிட்டு அதன் பின் ஆட்சி அமைக்கலாம், ஒன்றும் கெட்டு போவதில்லை
இப்படி எப்படி எல்லாம் அந்த எம் எல் ஏக்களால் மிரட்டலாம், ஓசியில் உலகம் சுற்றலாம், எப்படி எல்லாம் பரந்த உலகினை அணு அணுவாக ரசிக்கலாம்?
அதனை விட்டு இப்படியா கூவத்தூரில் அடைந்து கிடப்பது? அவர்களுக்கு புத்தி கொஞ்சம் மங்கல் போலும்.
சொல்லமுடியாது, வால்டர் வெற்றிவேல் நாசர் போல எத்தனைபேர் உருவாகிகொண்டிருக்கின்றார்களோ?
இருக்கட்டும்
நாம் எம்.எல்.ஏ வாக இருந்தால் நமது கோரிக்கைகள் இரண்டு
ஒன்று பெரும் உலக சுற்றுலாவிற்கு எம்மை முதலில் அனுப்பவேண்டும், அண்டார்டிக்கா கூட விடுபட்டுவிட கூடாது, காலதாமதம் சிக்கல் இல்லை, நிச்சயம் ஆளுநர் இப்போதைக்கு நம்மை அழைக்கபோவதில்லை
இரண்டாவது குஷ்பூ துணை முதலமைச்சராகவோ அல்லது சபாநாயகராகவோ நியமிக்கபட வேண்டும்