சகலத்தையும் கற்றுகொடுத்த அதே தெய்வம்…
ஒவ்வொருவனுக்கும் அவனுக்கு முதன் முதலில் எழுத கற்றுகொடுத்த அந்த ஆசிரியரின் நினைவு பசுமரத்து ஆணியாக பதியும், மனதில் தாய்க்கு அடுத்த இடமாக அது அமையும்
தெய்வம் என்பது கூட பிந்தையதே
மாதா பிதா குரு தெய்வம் என்பது அந்த வரிசையே
அறிந்தும் அறியாமல் புதிதாய் முட்டையிலிருந்து வெளிவந்த கோழிகுஞ்சு மலங்க மலங்க விழிப்பது போல, தாயின் அருகாமை விலகும் அந்த வயதில் முதன் முதலில் அணைத்து உலகை காட்டுவது அவர்கள்தான்
வாசிக்க தேவை மொழியினை அறிவது, மொழியினை அறிய தேவை முதல் முதலாக மொழியினை படிப்பது
முதன் முதலாக என்னை அணைத்தபடி சிலேட்டில் அ ஆ எழுதசொல்லிதந்த அந்த ஆசிரியினை மறக்க முடியாது
தன் சொந்த குஞ்சுக்கு கழுகு பறக்க சொல்லிகொடுத்தது போல அவ்வளவு அழகாக கற்றுகொடுத்தார்கள்
தொடக்கபள்ளி ஆசிரிய பணிக்கு முதலில் தேவை தாய்மை, அது அமைந்தால் எல்லா குணமும் தானாக வரும், அவரிடம் அது அமைந்திருந்தது, அந்த தாய்மையில் தெய்வீகம் குடிகொண்டிருந்தது
இந்த கரங்களை அவர்தான் அன்று தொட்டு எழுத வைத்தார்
அந்த உடைந்த ஓட்டு பள்ளியில் ஒவ்வொரு எழுத்தாக அவர் சொல்லிகொடுத்தது இன்றும் நினைவில் உண்டு
அவர் பெயர் ராணி, ராணி டீச்சர்
பாடம், பக்தி, பாடல், ஓவியம் , நடனம் என எல்லாமும் அவரிடம் இயல்பாய் இருந்தன
அவரின் எழுத்து கூட ரவிவர்மனின் ஓவியம் போல அவ்வளவு தத்ரூபம்
அக்கால ஆசிரிய பயிற்சி அவ்வளவு நன்றாக இருந்திருக்கின்றது என்பது பின்னர்தான் புரிந்தது,
காலவோட்டத்தில் அவரை நாமும் மறந்துவிட்டோம், அவரும் ரிட்டையர்டாகிவிட்டார்
பள்ளியினை பார்க்கும் பொழுதெல்லாம் அவர் நினைவு வரும், அந்த நினைவுகள் அக்காலத்துக்கு அழைத்து செல்லும்
நல்ல ஆசிரியினை பாடத்தை போல கடவுள் பக்தியினையும் ஊட்ட வேண்டும்
“எவ்வளவு படித்தாலும், எவ்வளவு அறிவு இருந்தாலும் கடவுள் பக்தியும் பயமும் இல்லாதவன் எங்கு சென்றாலும் உருப்படமாட்டான்” என்ற அந்த வார்த்தை சாதாரணம் அல்ல
அனுதினமும் காதில் ஒலிக்கும் ஸ்லோகம் அது
3ம் வகுப்புவரை அவரிடம் படித்தேன், தமிழும் அதன் அழகும் எப்படி எழுதவேண்டும் என்பதெல்லாம் அவர் போட்ட பிச்சை
4ம் வகுப்பில் இன்னொரு ஆசிரியர் வந்தார், என் வாழ்வினை புரட்டி போட்டவர் அவர்தான். ஒருவகையில் அது சாபம் இன்னொரு வகையில் வரம்
சாத்தானும் அவரே, கடவுளும் அவரே
மனிதர் அந்த பள்ளியில் இருக்க வேண்டியவர் அல்ல. அவரின் தேடலும் ஆர்வமும் உலகளாவிய அறிவும் தேசிய சிந்தனையும் அதிகம்
ஆனால் விதி ஒரு பள்ளிவாத்தியாராக அவரை அந்த ஓட்டு கூடத்தில் அடைத்துவிட்டது
அவர் ஒழுங்காக பாடம் மட்டும் நடத்தியிருந்தால் நானும் உருப்பட்டு இப்பொழுது அரசு வேலைக்கு சென்றிருக்கலாம் இல்லை வேறு எதுவும் ஆகியிருக்கலாம்
ஆனால் அந்த மனிதன் என்ன செய்தான் தெரியுமா?
4ம் வகுப்பிலே செய்திதாள்களை வாசிக்க வைத்தார், சோவியத் யூனியன் என அன்றே வந்த ரஷ்ய பத்திரிகையின் தமிழாக்கத்தை வாசிக்க வைத்தான்
புதிய உலகத்தை அந்த ஓட்டுபள்ளியிலே திறந்து காட்டினான்
1986களில் அமைதிபடை மோதலில் இருந்தபொழுது தேசிய சிந்தனை சொல்லிகொடுத்தவனும் அவனே
ராஜிவ் கோர்பசேவ், கொர்பசேவ் ரீகன் சந்திப்பினை எல்லாம் அன்றே விளக்கியவனும் அவனே
அலெக்ஸண்டர் முதல் எம்ஜி ராமசந்திரன் வரை மன்னர்களை அடையாளம் காட்டியதும் அவனே
உலகம், ஆயுதம், விமானம், ராணுவம், வியூகம், போர் , அரசியல் , ராஜதந்திரம், இஸ்ரேல், கம்யூனிசம் என எல்லாமும் அவர் போட்டு வைத்த புள்ளி
சுருக்கமாக சொன்னால் ஒவ்வொரு புத்தகத்திலும் இதழிலிலும் செய்தியிலும் இந்த உலகின் ஒவ்வொரு புள்ளியினையும் நோக்க சொல்லி எம்மை திசை திருப்பிவிட்டவனும் அவனே
அவர் பெயர் சூசைமாணிக்கம்
தமிழும் உலகமும் இவர்கள் இருவருமே சொல்லிகொடுத்தது, ஆசிரியர் தினத்தில் மட்டுமல்ல, ஒரு காலமும் மறக்கமுடியாதது.
சூசைமாணிக்கம் முன்பே இறந்துவிட்டார்,
அந்த அற்புதமான தேசியவாதியின் தேவை அப்பொழுது விட இப்பொழுதுதான் அதிகம் இருப்பதாக கருதுகின்றேன்.
ராணி டீச்சரை சில ஆண்டுகளுக்கு முன் சந்தித்தேன், வயதாகி இருந்தது ஆயினும் அடையாளம் கண்டுகொண்டார்
கையினை பிடித்து கொண்டார், ஆம் அன்று எழுத சொல்லிதந்த அதே கைகள் மீண்டும் அணைத்தபொழுது மழை பெய்தபின் தானாக முளைக்கும் செடி போல நினைவுகள் அக்காலத்துக்கு சென்றன
அதே கைதான் எழுத கற்றுதந்தது
இன்று கணிப்பொறி நிரல், அறிக்கை, இன்னும் தொழில் ரீதியாக எழுதினாலும். முகநூல் பிளாக் என எங்கெல்லாம் எழுதினாலும் அதை தொடங்கி வைத்த கரம் அது
ராசியான கரங்களும் கூட.
அவர் கரங்களை பற்றியபின் தானாக இரு சொட்டு கண்ணீர் விழுந்தது,
அவருக்கான நன்றியின் கண்ணீர் அது
நலம் விசாரித்தேன் “நீங்கெல்லாம் நல்லாயிருந்தா நான் தானாக நன்றாயிருப்பேன்” என்றார் ஆயிரம் அர்த்தம் உள்ள வார்த்தை அது
வார்த்தை அதிகம் வரவில்லை, நெடுநாள் பிரிந்துவிட்ட உறவுகள் சந்திக்கும் பொழுதான தயக்கம் அது. அழுகையும் விம்மலுமே முந்துமே தவிர வார்த்த பிந்தும்
“கிறுக்கு பயலே அழாதே, உன் மகளை கூட்டிட்டு வீட்டுக்கு வா” என்றார்கள்
“அடுத்த வருடம் அழைத்து வருகின்றேன், எனக்கு எழுத சொல்லிகொடுத்தது போல அவளுக்கும் சொல்லி கொடுப்பீர்களா..” என்றேன்
“:கண்களில் நினைவுகள் மின்ன மெல்ல புன்னகைத்து சரி” என்றார்கள், தளர்ந்திருந்திருந்த அவரிடம் ஆசிபெற்றுவிட்டு வந்தாயிற்று.
மறுமுறை மகளை அழைத்து கொண்டு அவரை சந்திக்க சென்றால் அவருக்கு மேல் இருந்து அழைப்பு வந்தாயிற்று
அவர் இனி இல்லை என்றார்கள்
எனக்கு கொடுத்து வைத்ததெல்லாம் என் மகளுக்கு கொடுத்து வைக்கவில்லை.
எனினும் அவரின் முதிர்ந்தவயதில் கடைசியாக பெற்றுவிட்ட அந்த ஆசி வாழ்வின் மிகசிறந்த தருணங்களில் ஒன்று, அவ்வகையில் தெய்வம் என்னை கருணையாக வழி நடத்தியிருக்கின்றது
சிறுவயதிலே அவர் உருவில் வந்து சகலத்தையும் கற்றுகொடுத்த அதே தெய்வம்…