சத்ரபதி சாம்பாஜி : 13

சத்ரபதி சாம்பாஜி : 13

ஹாசன் அலிகானை ஔரங்கசீப் பெரிய நம்பிக்கையோடு அனுப்பினான், அவனுக்குந் தனிபட்ட வகையில் ஒரு பெரிய யானையும் சில உயர்தர குதிரைகளும், கிலாட் எனும் பட்டும் தங்கமும் கலந்த மெல்லிய அங்கியும் இன்னும் பல பரிசும் கொடுத்து அனுப்பினான்.

அலிகான் தன் இருபதாயிரம் பேர் கொண்ட படையோடு கல்யாண் பக்கம் புகுந்தான், அவனின் முதல் இலக்கு பெரிய காடும் மலையும் இல்லாத சமவெளி பக்கம் இருந்த ராம்சேஜ் கோட்டையாக இருந்தது. அதை முதலில் கைப்பற்றிவிட்டால் அடுத்தடுத்து எளிது என நம்பியவன் அதனைக் கைப்பற்ற விரைந்தான்.

அது மிகபெரிய கோட்டை அல்ல மாறாக பெரிய கோட்டைக்கு செல்லும் வழியில் இருந்த துணை கோட்டை , சிவாஜி முன்பு அதனை பிஜப்பூர் சுல்தானிடம் இருந்து கைபற்றி தன் நாட்டோடு இணைத்திருந்தான்

அங்குச் சுமார் 800 இந்துராஜ்ய வீரர்கள் இருந்தார்கள், அவர்களுக்கு தலைவனாக கோட்டை காவலனாக சூர்யாஜி ஜாதே என்பவன் இருந்தான். அவனை எளிதில் வீழ்த்திக் கோட்டையினைக் கைபற்றலாம் எனச் சென்றது ஹாசன் அலிகானின் படைப்பிரிவு, சுமார் ஐந்தாயிரம் பேர் கொண்ட படைப்பிரிவு அப்பக்கம் சென்றது.

ஆனால், கோட்டையினை நெருங்குவதோ கைப்பற்றுவதோ மொகலாய சேனைகளால் முடியவில்லை. அந்த அளவு வீரம் காட்டினார்கள் மராத்தியர்கள், முக்கியமாக அவர்களின் வியூகம் பல வியக்க வைத்தது. உண்மையில் அந்நேரம் அவர்களிடம் பீரங்கி இல்லை, ஒரு கோட்டையில் பீரங்கி இல்லை எனத் தெரிந்தால் எது எதிரிக்குப் பெரிய பலமாகும்.

ஆனால், சூர்யாஜி சுதாரித்தான் போரின் முக்கிய வியூகம் தன் பலவீனத்தை காட்ட கூடாது என்பது அதனால் அது வெளித்தெரியாதபடி மரங்களைத் துளைத்து உருளையாக்கி அதன் மேல் ஆட்டுதோல் போர்த்தி பீரங்கி போல் செய்து கோட்டைக்கு மேல் நிறுத்தி அச்சுறுத்தினார்கள். சில வெடிகுண்டுகளை வெடிக்க வைத்து அது பீரங்கி எனப் பிரமை காட்டினார்கள், மொகலாய சேனைகள் அதில் அஞ்சி திணறிப் போயின‌.

இந்தப் படை இங்கே முற்றுகையில் இருந்த நேரம் ஹம்பிராவ் மோதி களமிறங்கினான், அவன் மொகலாயப் படைகளுக்கு உணவும் நீரும் கிடைக்காதபடி தடைகளைச் செய்தான், உணவும் ஆயுதமும் மருந்தும் தொடர்ந்து வராத சேனை வெல்லமுடியாது.

இப்படி அந்த சின்னஞ்சிறிய ராம்சேஜ் கோட்டைக்கே மொகலாயம் திணறத் துவங்கியது, சில நாட்களில் கோட்டை வீழ்ந்துவிடும் என நினைத்த ஷரங்கசீப்புக்கே அது ஆச்சரியமானது.

இரவில் ரகசிய பாதைகளில் வரும் இந்துவீரர்கள் கோட்டை அருகில் குழிகள் வெட்டி வைத்துவிட்டு அதை மறைத்துவிட்டு சென்றுவிடுவர், காலையில் கோட்டைக் கதவினைத் திறப்பதுபோல் பாவனை செய்வார்கள். உடனே மொகலாயப் படை ஓடிவரும், அப்படி வரும் படை குழிக்குள் விழும் கோட்டையின் மேல் இருந்து ஆயுதம் வீசி அவர்களைக் கொல்வார்கள்.

சில நேரம் பதுங்கியிருந்து துணிச்சலாக மொகலாயப் படைகளைச் சுற்றி வளைத்துவீழ்த்திவிட்டு அவர்கள் ஆயுதங்களைப் பறித்துக் கொண்டு கோட்டைக்குள் ஓடுவார்கள். இன்னொரு பக்கம் ஹம்பிராவ் மோதி இவர்களைத் தாக்க இருமுனை போரில் மொகலாயம் சிக்கிக் கிடந்தது. ஹாசன் அலிகான் தடுமாறினான்.

வெறும் 800 வீரர்கள் மொகலாய சேனை இருபதாயிரம் பேரை எளிதாக சமாளித்துக் கோட்டையினைத் தற்காத்து நின்றது, இன்னும் கல்யான் பீவண்டி பக்கம் மொகலாயச் சேனையினை எளிதாக எதிர்கொண்டான் ஹம்பிராவ் மோதி.

இங்கே நிலைமை இப்படி இருக்க மைசூருக்குத் தென்மேற்கே பன்வார் எனுமிடத்தில் சாம்பாஜி படையும், சிக்க தேவராயரின் படைகளும் மோத இருந்தன. சாம்பாஜி தன் கடைசி நேர மாறுதல்படி ஹார்ஹி மகாதிக்கை செஞ்சிக்கோட்டையின் காவலுக்கு அனுப்பிவிட்டு, பின்புலமாக இருக்கும்படி செய்துவிட்டு தன் தளபதிகளான தாதாஜி கட்கடே, ஜெய்தாஜி கட்கர், மற்றும் சாந்தாஜி நிம்பல்கர் ஆகியோரைக் கொண்டு களத்தில் நின்றான்.

அந்நேரம் இருக்கேரி நாயக்கர்கள் சாம்பாஜிக்குத் துணையாக வந்தது கூடுதல் பலமாயிற்று.

கடைசி வாய்ப்பாக சாம்பாஜி யோசனை சொல்லிப் பார்த்தான். “சிக்கதேவராயா நாமெல்லாம் இந்துக்கள், எதிரி இந்துவாக இருந்தால் முடிந்தவரை போரைத் தவிர்க்கவேண்டும் என்பதே எங்களின் கொள்கை, இங்கு நாமிருவரும் இந்துக்களாக அடித்துக் கொண்டால் அதன் பலம் ஔரங்கசீப்புக்கே செல்லும், அதனால் நமக்குள்ள சிக்கலைப் பேசித் தீர்க்கலாம்.

எமக்கு நீ கப்பம் கட்ட மறுத்துச் சென்றாலும் ஔரங்கசீப் உன்னை விடப்போவதே இல்லை. மாறாக‌ இதைவிட பெரிய கப்பத்தை அவன் கோருவான், அது உன் நிலையினை விட மைசூரின் இந்துக்கள் நிலையினை இன்னும் மோசமாக்கும், ஔரங்கசீப்பின் இஸ்லாமிய வெறி உலகறிந்தது. அவன் இங்கு வந்துவிட்டால் எல்லாக் கோவிலும் தரைமட்டமாகும், இந்துக்கள் வாழமுடியாப் பெரும் கொடுமை ஏற்படும். இதையெல்லாம் சிந்தித்துப் போரை நிறுத்து, எம்மோடு அனுசரித்தால் இந்துக்களுக்கு வாழ்வு” எனச் செய்தி அனுப்பினான்.

ஆனால், ஔரங்கசீப்பின் கையாளாக மாறியிருந்த சிக்க தேவராயன் அதற்குச் செவிசாய்க்கவில்லை, அவன் எண்ணமெல்லாம் ஔரங்கசீப் தனக்கு துணையாக வருவான் என்பது போலவே இருந்தது.

1682 மார்ச் மாதம் ஒட்டி அப்போர் துவங்கிற்று. சிக்கதேவராயன் அவன் தளபதி குமரய்யா, மதுரை சொக்கநாத நாயக்கன் என ஒரு அணி இருந்தது, எதிரணியில் சாம்பாஜியும், இருக்கேரி நாயக்கர்களும் நின்றார்கள்.

போரில் சாம்பாஜி தரப்பு எளிதாக வெல்லும் சூழல் காணப்பட்டது. சில தினங்களாக நடந்த போரில் சாம்பாஜி கையே ஓங்கியிருந்தது. பெரும் வீரத்துடன் அவன் சேனை மைசூர் படைகளை முறியடித்துக் கொண்டிருந்தன‌.

ஒரு பக்கம் தாதாஜி, ஒரு பக்கம் ஜெய்தாஜி, ஒரு பக்கம் நிம்பல்கர் என மும்முனை தாக்குதலை மைசூர் படைகள் மேல் தொடுத்தான் சாம்பாஜி, இவர்களை யுத்தம் செய்ய உத்தரவிட்டு அவன் கட்டளைகளை யானைமேல் இருந்து பிறப்பித்துக் கொண்டிருந்தான், இந்துநாட்டின் காவி கொடி யானைமேல் உயரப் பறந்து கொண்டிருந்தது.

யுத்தத்தில் தேர்ச்சிப் பெற்றிருந்த இந்துசேனை விரைவிலே வெற்றிமுகம் காட்டிற்று, அவர்களின் வாள்வீச்சுக்கும் ஆவேசமான தாக்குதலுக்கு முன்னால் மைசூர் சேனை குழம்பிற்று.

இன்னொருபக்கம் ஸ்ரீரங்கப்பட்டின பக்கமாக பல பகுதிகளை சாம்பாஜி படை கைபற்றி முன்னேறியது

சிக்கதேவராயனும், குமாரய்யாவும் இனி சாம்பாஜியினை முறியடிப்பது சிரமம் என உணர்ந்தபோது அந்த மும்முனை தாக்குதலை அதனை வழிநடத்திய சாம்பாஜியினை முறியடிக்க தங்கள் கடைசி அஸ்திரத்தை வீசினார்கள்.

அது விஷ அம்பு ஏவும் படை, அம்பின் நுனியில் தடவப்பட்டிருக்கும் விஷம் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். அது உடலை முடக்கிப் போடும். சில நேரம் உயிரினையும் பறித்துவிடும், சிலவகை விஷ மூலிகை கலவை விஷ ஜந்துக்களின் சில பொருட்கள் கொஞ்சம் ரசாயானம் என எல்லாம் கலந்த ஆபத்தான அம்புகள் அவை.

சுமார் 15 ஆயிரம் பேர் கொண்ட அந்தச் சிறப்பு விஷ அம்பு படையினை பிறை சந்திர வடிவில் நிறுத்திய குமாரய்யா முன்னேறிவரும் சேனையினை தாக்கும்படி உத்தரவிட்டான், இந்த அம்புகள் பட்டதும் இந்துசேனை சுருள ஆரம்பித்தது.

யுத்த களத்தில் இதை சாம்பாஜி எதிர்பார்க்கவில்லை. அங்குக் கவச உடைகளும் சிறப்பு காவலும் தளபதிகளுக்கே வழங்கப்படும், எல்லா வீரர்களுக்கும் கவசம் கொடுக்கப்படவில்லை, அதுவும் இருக்கேரி நாயக்கன் வீரர்களுக்கு காவல் இல்லை.

இதனால் சாம்பாஜி சேனை திகைக்க துவங்கிற்று, இந்த விஷ அம்புகள் மழைபோல் பொழிந்ததால் இந்துசேனை தாக்குதலைவிட்டு தற்காப்புக்கு மாறிற்று. அப்போதும் அதன் பாதிப்பு அதிகம் இருந்தது.

போரில் பொதுவாக ரத்தகாயம் இயல்பு அது வீரர்க்கும் யானை குதிரைக்கும் வரும், ஆனால் இந்த அம்புகள் கொடுக்கும் காயம் மயக்கத்தை சாவினைக் கொடுத்தன. இதனால் வீரர்கள் மட்டுமல்ல குதிரைகளும் சரிந்தன‌.

எனினும், இந்துசேனை வீரர்கள் கேடையங்களால் அம்புகளை தடுத்தபடி முன்னேறினர். குமாரய்யாவின் கணக்கு சாம்பாஜியினை வீழ்த்துவதாக இருந்தது, அவன் தன் சிறப்பு படையோடு சாம்பாஜியினை நோக்கி முன்னேறியபோது மூன்று தளபதிகளும் அதை தடுத்து நிறுத்த முயன்றனர், அந்நேரம் அவர்களை வளைத்து கொண்டான் சிக்கதேவராயன், இங்கு உதவியவன் சொக்கநாத நாயக்கன்.

முக்கிய தளபதிகள் மூவர் சிக்கிக் கொண்ட நிலையிலும் சாம்பாஜி போரைத் தொடர்ந்தான். அவன் விஷ அம்புகள் பாயும் தொலைவினை கணக்கில் எடுத்து அவை பாயும் தூரம் வரை தன் சேனையினைப பின்னுக்கு இழுத்து பின் ஈட்டிகளை ஏவ உத்தரவிட்டான், பெரிய ஈட்டிகள் மிக நீண்ட தூரம் பாய்ந்து விஷ அம்பு ஏவலர்களை தாக்க துவங்கிற்று

அதைக்கண்டு அதிர்ந்த சிக்கதேவராயன் பிடிபட்ட தளபதிகளை முன்னால் நிறுத்தி மிரட்டினான், சாம்பாஜி ஆவேசமாக அவர்களை மீட்க போராடி முன்னேறி வரும்போது சில அம்புகள் அவனையும் தாக்கின, அவனின் மெய்காப்பாளர்கள் அவனை அப்படியே சூழ்ந்து காத்து களத்தை விட்டு அகற்றி சிகிச்சை கொடுக்க தொடங்கினார்கள்.

இதனால் போர் நின்றது. ஆனால், தனக்கே வெற்றி எனச் சொல்லிகொண்டான் சிக்கதேவராயன், சாம்பாஜியினை வீழ்த்தியவன் நான் என அவன் பெருமைபட்டுக் கொள்ள ஆரம்பித்தான்.

சாம்பாஜி அப்பக்கமே முகாமிட்டிருந்தான், அவனைக் காக்க செஞ்சியில் இருந்து மஹாதீக் வந்தான், தஞ்சாவூரில் இருந்து வெங்கோஜி வந்தான் இன்னும் பலர் வந்து அவனைச் சூழ காப்பாற்றினார்கள், சிலர் ராய்காட் கோட்டைக்கே செல்ல அறிவுறுத்தினார்கள்.

“என்ன நடந்தாலும் சிக்கதேவராயனை வீழ்த்தாமல் செல்லமாட்டேன், அது எனக்கு அவமானம்” என ராய்காட் செல்ல மறுத்தவனை , வெங்கோஜி தஞ்சைக்கு அழைத்தான், சாம்பாஜிக்கு அதுவும் நல்ல யோசனையாகப் பட்டது.

இப்படி இவன் யோசித்துங் கொண்டிருக்கும்போதே பிடிபட்ட தளபதிகள் மூவரையும் கொன்றுபோட்டானர் சிக்கதேவராயனும், மதுரை சொக்கநாத நாயக்கனும், இது இந்த்சேனைக்குள் மிகபெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது

சாம்பாஜி ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றான். ஆனால், போரை உடனே தொடங்கமுடியாதபடி சிக்கதேவராயனின் கை ஓங்கி இருந்தது. இவ்வளவுக்கு சிக்கதேவராயன் துணிந்துவிட்டான் என்றால் அவனுக்கு பின் வேறுதிட்டம் இருக்கலாம் என சந்தேகித்தான் சாம்பாஜி

சில நாட்கள் ஓய்விலும் பின் தஞ்சாவூர்க்குச் செல்லும் திட்டத்திலும் இருந்தவனிடம் வந்தான் சாந்தாஜி, அவனும் ஷாஹாஜியின் மரபில் வந்தவனாய் இருந்தான். சிவாஜிக்குத தோளோடு தோளாக நின்றவன் அவன், இப்போது முதிர்ந்த வயது கொண்ட அவன் தஞ்சாவூருக்கு. செஞ்சி கோட்டைக்கும் இணைப்பாக இருந்தான், அவன் சிவாஜி இப்பக்கம் வந்தபோது அவனோடு இருந்தவன் எல்லாவற்றுக்கும் சாட்சியானவன்.

அவன் சிவாஜியின் நினைவுகளில் மூழ்கிப் பேச தொடங்கினான்.

“சாம்பாஜி, போரில் வெற்றி என்பது மானிட முயற்சியில் கிடைப்பது அன்று. அதற்குத் தெய்வ அனுகிரஹமும் வேண்டும். உன் தந்தைக்குத் தெய்வ அனுகிரகம் நிறைய இருந்ததாலே போர்களில் அவரால் வெல்லமுடிந்தது.

வடக்கே அவர் தொடர்ந்து அந்தத் தெய்பலத்தாலே வென்றார். அதுதான் தமிழகத்தின் பல கோவில்களின் விடிவுக்கும் புனரமைப்புக்கும் வழியாயிற்று. நீ ஏன் இப்போது தோற்றுவிட்டதாய் நினைக்கின்றாய்? உன் தந்தை மீட்ட கோவில்களில் அவர் செய்ய விரும்பி உத்தரவிட்ட திருப்பணிகளின் நிலையினைக காண சிவன் உனக்கொரு வாய்ப்பு தந்ததாக ஏன் கருதமாட்டேன் என்கின்றாய்?

இந்தப் பின்னடைவு உன்னைப் பொறுத்தவரை தோல்வி, ஆனால் சிவனைப் பொறுத்தவரை அவர் உனக்கு ஏதோ சொல்கின்றார், நீ சிவாஜிக்கு மகன் மட்டுமல்ல இந்த இந்துராஜ்யத்துக்கு அரசன், அதனால் சிவாஜியால் மீண்ட கோவில்களின் இப்போதைய நிலையினை நீ காணுதல் அவசியம், என் பின்னே வா, காரணமின்றி காரியமில்லை, நாம் அவற்றைத் தரிசித்துவிட்டு தஞ்சாவூர் செல்லலாம்” என்றான்.

அவனை மிக ஆச்சரியமாக நோக்கினான் சாம்பாஜி.

“சாம்பாஜி, உன் தகப்பன் சிவாஜி இங்கு வந்து மீட்ட ஆலயங்கள் நிறைய உண்டு. சோணகிரி எனும் திருவண்ணாமலை ஆலயம், முஷ்ணம் ஆலயம், விருத்தாச்சலம் ஆலயம் என அவன் மீட்டு திருப்பணிகளை தொடங்க்கி வைத்தான், அப்படியே வழிபாடு இன்றி கிடந்த ருக்மாதீப் எனும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தையும் அவனே மீட்டுத் தீட்சிதர்களைப் பாலகாட்டில் இருந்து வரவழைத்து வழிபாட்டைத் தொடங்கினான்.

மாலிக்காபூரால் கொள்ளையிடப்பட்ட அந்தத் தங்கக் கூரையினை அவன் மீளக் கட்டித்தர உத்தரவிட்டான். இப்பக்கம் எல்லாக் கோவில்களும் அவனால் மீண்டன, அவன் வழிபட்ட ஆலயங்களில் நீ. வழிபடாமல் என்ன ராஜபரிபாலனம் செய்துவிட முடியும்? அதனால் இந்த வாய்ப்பு இறைவனால் உருவாக்கப்பட்டு உன்னை வந்தடைந்திருக்கின்றது, என்னோடு கிளம்பு” என்றான்.

சாம்பாஜி அதை ஏற்றுக்கொண்டு போரைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு அவனோடு கிளம்பினான். செஞ்சி கோட்டைக்கு வந்து அதன் காவலை பலத்த ஏற்பாடுகளைக் கண்டவன் சில ஆலோசனைகளை ஹார்ஜிக்குச் சொன்னான். அப்படியே கோட்டை இன்னும் பலமாயிற்று.

திருவண்ணாமலைக்கு வந்த சாம்பாஜி பயபக்தியுடன் வழிபட்டான், நெற்றியில் நீறு பூசிகொண்டான், அங்கு காணிக்கையும் பெரிதாக அளித்தான். அந்த மலை அவனோடு மவுனமாக பேசிற்று. அது உள்ளுக்குள் அவனுக்கு ஏதோ செய்தது

அங்கிருந்து பல சிவாலயங்களை வழிபட்டு விருத்தாச்சலம் அடைந்து விருத்தகிரீஸ்வரரை வணங்கினான்.

அவன் தமிழகத்தின் பிரமாண்ட ஆலயங்களைக் கண்டு மெய்மறந்தான். காரணம் வடக்கே இருந்த ஆலயங்களெல்லாம் ஆப்கானிய கும்பலால் தரைமட்டமாக்கப்பட்டுவிட்டன என்பதால் பெரிய கல் ஆலயத்தை அவன் கண்டதில்லை, இவற்றைப் பார்க்க பார்க்க அவனுக்குள் ஒரு பரவசம் எழுந்தது.

நிச்சயம் நாயக்கர்களின் வருகையும் தன் தந்தையின் போராட்டமும் இல்லை என்றால் இவை எல்லாம் அந்நிய கும்பலால் அழிக்கப்பட்டிருக்கும். ஆனால், இன்னும் ஆபத்து தீரவில்லை எனும் நிலையில் இந்தச் சிக்கதேவராயனின் அடாவடிகள் பற்றிக் கவலை கொண்டு அந்தச் சிவனிடமே பிரார்த்தித்தான்.

அப்படியே சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் மெய் உருக மனம் உருக நின்றான் சாம்பாஜி. தீட்சிதர்கள் அவனுக்கு பெரும் மரியாதை செய்து அழைத்துச் சென்று அவன் தந்தை செய்த உதவிகளை எல்லாம் சொல்லிச் சிலிர்த்தார்கள்.

சாம்பாஜி அந்தத் தில்லை அம்பலத்தானைந் தரிசித்தான், தபப்பனின் விருப்பபடி அந்த நடராஜ பெருமானுக்குரிய தங்கக்கூரையினை உடனே செய்து கொடுக்கும்படி தன் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டான், அந்தப் பொற்கூரை வேயப்பட்டு விரைவில் கும்பாபிஷேகம் நடத்தும்படியும் அதற்குத் தான் எங்கிருந்தாலும் வந்து கலந்து கொள்வேன் என்றும் உறுதி அளித்தான்.

சிதம்பரம் கோவிலில் நீண்ட நேரம் தங்கி இருந்து பூஜை செய்தவன் பின் தஞ்சைக்கு விரைந்தான். காவேரியினைக் கடந்து செல்லும்போது அவனுக்குள் ஒரு சிலிர்ப்பு வந்தது, மைசூரில் இருந்து வரும் அந்நதி இங்கு இவ்வளவு பெரிய நதியாக பரந்து கிடப்பதையும், அதை அக்கால சோழ மன்னர்கள் பல கால்வாய்களாக பிரித்து நெற்களஞ்சியமாக மாற்றியிருப்பதையும் கவனமாக பார்தவன், இவை எல்லாம் எல்லா நதிகரையிலும் வரவேண்டும் என நினைத்துக் கொண்டான்.

தஞ்சையில் அவன் சித்தியும் வெங்கோஜியின் மனைவியுமான‌ தீபாபாய் அவனை வரவேற்றாள், அவனுக்கென நல்ல ஆடைகளும் பெரும் பரிசும் கொடுத்தாள், தன் மகன் வந்தான் என அவள் கொண்டாடிய விதத்தில் தாய்பாசம் அறியாத சாம்பாஜி அவள் அன்பில் உருகிப்போனான்.

வெங்கோஜி இன்னும் பெருமையாக வரவேற்றான்.

செம்பியன் மாதேவி போலவே தீபாபாய் தஞ்சை பக்கம் பல கோவில்களைப் புனரமைத்துக் கொண்டிருந்தாள் தஞ்சை வரலாற்றில் அவளை மறக்க முடியாது, எத்தனையோ ஆலயக்களைத் துலக்கி பூஜைகளும் விழாக்களும் கொண்டாட ஏற்பாடு செய்தாள்.

தீபாபாய் அவனுக்கு நிறைய விஷயங்களைச் சொன்னாள். தமிழக ஆலயங்களின் முக்கியத்துவம் அக்கால இந்துமன்னர்கள் வாழ்ந்த இந்துவாழ்வு என எல்லாமும் போதித்தாள், இதனைக் காக்கவேண்டிய பெரும் அவசியத்தையும் ஆனால் மதுரை நாயக்கர்கள் தங்களோடு இணக்கமாக இல்லாததையும் சொல்லி வருந்தினாள்.

அப்போதே தமிழக ஓலைச்சுவடிகளைக் காக்கும் பெரும் பணியினை அவள் தொடங்கியிருந்தாள், அந்த நூலின் பெரும் நுணுக்கமான அறிவியல் ஆன்மீகம் என எல்லாமும் அவனுக்குச் சொன்னாள். இன்னும் பல நுணுக்கமான விஷயங்களைப் போதித்தவள் அரசியலும் ஆன்மீகமும் தமிழகத்தில் அடைந்திருந்த பெரும் உச்சத்தை, கலைகளும் வழிபாடும் கல்லிலும் சொல்லிலும் கண்ட பெரும் ஞானத்தை சொன்னபோது அவன் வியந்து போனான்.

சாம்பாஜி ராமதாஸர் தொடங்கிய தஞ்சாவூர் மடம் பற்றி விசாரித்துச் செல்ல விரும்பினான். அது மிக அழகாக நடக்கின்றது இன்னும் கும்பகோணம் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள மடமெல்லாம் மிகச் சரியாக நல்ல நிதியுடன் நடத்தப்படுகின்றது என்பதைத் தீபாபாய் விளக்கினாள்.

மடங்கள் கோவிலின் இதயங்கள், மடங்கள் வாழ வாழ கோவில்கள் வாழும், ஒரு அரசன் நாட்டை வழிநடத்தும் கடப்பாடு கொண்டவன், அவன் எல்லா விஷயத்தையும் பிரித்தே நிர்வகிக்க முடியும், அவ்வகையில் மடங்களே கோவிலின் ஜீவநாடிகள் என்பதால் அவைகளை அரசு காக்கும் முறை அனைத்தும் விளக்கினாள்.

எல்லாம் சொன்னவள் இன்னும் சொன்னாள்.

“சாம்பாஜி, நாம் இன்று பெரிய சாம்ராஜ்யத்தைக் கொண்டிருக்கின்றோம், வடக்கே நர்மதா நதிக்கரை முதல் இங்கே காவேரி வரை நாமே ஆட்சி செய்கின்றோம், எல்லாம் சிவாஜி எனும் அவதாரத்தால் வந்தது. ஆனால், அந்த அருள் இந்தத் தஞ்சாவூர் சிவனால் வந்தது.

நீ உன் தாத்தா ஷாஹாஜி பற்றி அறிந்திருப்பாய், அவர்தான் இந்துக்களுக்கு ஒரு ராஜ்ஜியம் வேண்டுமென விரும்பியவர். அந்த மிகச்சிறிய ராஜ்ஜியத்தை இந்தத் தஞ்சையில்தான் அவர் ஸ்தாபித்தார், இந்த ஊரின் பிரகதீஸ்வரர் ஆலயம் மகா பிரசித்தியானது, அதிசயமுமானது. இனி எக்காலத்திலும் எந்த மன்னனும் கட்டமுடியாதபடி சவாலானது, அதனை மாலிக்காபூர் முடிந்த அளவு சிதைத்துப் பார்த்துவிட்டுச் சென்றுவிட்டான்.

நாயக்கர்களும் அதன் பின் நாங்களும் முடிந்த அளவு சீரமைத்து வைத்திருக்கின்றோம், உன் தாத்தா இந்தஞ் சிவனிடம் வேண்டித்தான் வரம் பெற்றார், அவர் கேட்ட வேண்டுதல்தான் சிவாஜி எனும் அவதாரத்திற்குக் காவலாய் அமைந்தது, இந்தச் சிவனே நம்மையெல்லாம் எழுப்பி வாழவைத்து ஆளவும் வைத்தார்.

சாம்பாஜி நாம் இந்துக்கள், முற்பிறவியினை நம்புகின்றவர்கள், நான் தீர்க்கமாக நம்புகின்றேன். நமக்கும் சோழ வம்சத்துக்கும் ஏதோ ஜென்ம கணக்கு உண்டு, அதனாலே சிவன் நம்மை இங்கு வரவழைத்து இந்த ஆலயபராமரிப்புக்குத் தேந்தெடுத்துக் கொண்டார், அவரே இந்தப் பெரும் ராஜ்ஜியத்தை நமக்குத் தந்து காவலாய் இருக்கும்படியும் இந்த நாட்டை மீட்கும் பெரும் பொறுப்பையும் தந்தார்.

காசியினை மீட்கும் பெரும் பணி நமக்கு இந்தச் சிவனாலே கொடுக்கப்பட்டது, இந்துக்களின் காவலாக நாம் இந்த ஆலயத்தில் இருந்துதான் மாறினோம், அவர்தான் அப்பெரும் பணியினை நமக்குத் தந்து காவலும் இருக்கின்றார், இந்தச் சிவனே நமக்கு குலதெய்வமுமானார். இந்துக்ளுக்காக போராடும் ஒவ்வொருவருக்கும் அவர் எப்போதும் துணையிருப்பார்.

வரலாற்றில் பௌத்த சமண கும்பல்களை ஒடுக்கவும் சைவத்தை தழைக்க செய்யவும் அந்த மாமன்னன் ராஜராஜசோழன் இந்த அதிசய கோவிலைக் கட்டினான், இன்று ஆப்கானிய மிலேச்சரிடமிருந்து இந்நாட்டை காக்கவும் இந்த சிவனே பெரும் காவலாக நிற்கின்றார், உன்னை இங்கு அழைத்து வந்ததும் அவரே, நீ கண்டிப்பாக அந்தப் பெருவுடையாரைத் தரிசிக்க வேண்டும்

சிவனுக்காக போரிடும் எல்லோருக்கும், சிவனின் தேசத்தை காகக் முயலும் எல்லோருக்கும் இந்த சிவனும் அவரோடு அந்த ராஜராஜசோழனும் காவலாக இருப்பார்கள், நான் அதை பூரணமாக உணர்ந்து சொல்கின்றேன், அவர்கள் அருள் உனக்கு அவசியம்” எனச் சொன்னாள்.

சாம்பாஜி சிறிய ஓய்வுக்கு பின் மறுநாள் தாயாரானான். தஞ்சாவூரின் குளிர்ச்சியான காற்றும் அதில் கலந்திருந்த சிவபக்தியும் அவனுக்குப் புத்துணர்ச்சிக் கொடுத்தது.

பெரிய காணிக்கையுடன் யானைமேல் ஏறிச் செல்ல மணிமுடியுடன் தயாரான அவனை நோக்கி புன்னகைத்து சொன்னாள் தீபாபாய்.

“சாம்பாஜி இந்த ஆலயம் மற்ற ஆலயங்களை விட வித்தியாசமான நடைமுறை கொண்டது, இங்கு வரும் அரசன் மணிமுடியுடன் வருதல் கூடாது, தான் எனும் அகங்காரம் கொண்டுவரக் கூடாது, கோவிலுக்குள் இருந்து அரச கட்டளை பிறப்பிக்க கூடாது.

அவன் மணிமுடி இழந்த மன்னனாக, வெறும் அடியாராக பதவியும் ஆடம்பரமும் படோபகரமும் ஆட்களும் இல்லாத ஒருவனாக, சேனைகளும் அதிகாரமும் இல்லாதவனாக தனியே ஒற்றை ஆளாய் வரவேண்டும், நீறுபூசி அடியாரில் ஒருவனாய் பராரியில் ஒருவனாய் வரவேண்டும், இங்கு அவரே அரசன் நாமெல்லாம் அடியார்கள்” என்றாள்.

சாம்பாஜி உடனே அரச கோலம் களைந்தான், தன் மணிமுடியினைக் களைந்து கொண்டையினை உயர்த்தி கட்டிக் கொண்டான், உடலின் நகைகளை களைந்து திருநீறும் ருத்திராட்சமும் அணிந்து கொண்டான், அரச அடையாளம் நீங்கி வெள்ளை ஆடை ஒன்றை மட்டும் இடுப்பில் சுற்றிக் கொண்டு அடியாராய் நடந்தான்.

தொலைவிலே அவனை வசீகரித்த கோபுரம் அருகே நெருங்க நெருங்க பிரமாண்டத்தைக் காட்டியது, ஒரு மலையினையே கோவிலாக செதுக்கினார்களோ எனும் அளவு அது பிரமாண்டத்தைக் காட்டிற்று.

அவன் உள்ளே செல்லும் போது தான் கயிலாயத்தில் இருப்பது போல் உணர்ந்தான், தீபாபாய் அவனிடம் இக்கோபுரம் முழுக்கத் தங்கத்தால் போர்த்தபட்டிருந்ததைச் சொன்னாள், அதை நினைத்துப் பார்த்தவன் கயிலாயக் காட்சியினை மனதில் கண்டு கொண்டான்.

பெரிய மேளமில்லை, அறிவிப்பு இல்லை, ஆண்டி பண்டாரம் ஒருவன் நடப்பது போல் மெல்ல நடந்தான், நடக்கும்போதே அவனுக்குச் சோழ மன்னர்கள் நாயக்க மன்னர்கள், தன் தாத்தா தந்தை நினைவெல்லாம் வந்தது.

ஆலயத்தின் உள்ளே நுழையும்போது அந்த மகா பெரிய லிங்கம் கண்டு அதிசயித்தான். உலகின் மிகப்பெரிய லிங்கம் முன் தான் நிற்கின்றோம் எனும் பிரமையில் அவன் மயங்கிப்போனான், தளும்பும் விழிகளுடன் நடுங்கும் கால்களுடன் அந்தப் பிரமாண்ட லிங்கம் முன் நின்றவன் கைகளைக் குவித்துச் சிவனே என வீழ்ந்து வணங்கினான்

இந்துக்களுக்காக போராடும் எனக்கு சக்திகொடு, மாபெரும் மொகலாயத்தை எதிர்க்கும் எனக்கு வல்லமை கொடு, பெரும் போரை துவக்கியிருகும் எனக்கு காசியினை மீட்கும் வரை போராடும் வல்லமை கொடு, காசி மீளவேண்டும் அந்த ஆலயம் துலங்க வேண்டும் என போராடும் எனக்கு எல்லா பலமும் கொடு என சொல்லி சொல்லி மன்றாடினான்

அவன் மெல்ல‌ எழும்போது அவனுக்கோர் நல்ல செய்தி காத்திருந்தது.

ஆம், அவனுக்கோர் ஆண்மகவு பிறந்த செய்தி அப்போது தெரிவிக்கப்பட்டது. சிவனே உன் அருளில் நல்ல செய்தி பெற்றேன் அம்மகன் நீண்டகாலம் இந்நாட்டைஇந்து மன்னனாக ஆளவேண்டும். மாபெரும் காரியங்களை அவன் செய்து காசியினை மீட்க காரணமாய் அமைய வேண்டும் என அவன் மனமுருகி வேண்டியபோது ஆலய மணி ஒலித்தது, பசுக்கள் கத்தின‌.

“சிவனே…” என மீண்டும் விழுந்து வணங்கினான் சாம்பாஜி, பெருவுடையார் பிரகதீஸ்வரர் எனப் பொருள்படும் “சாகு” எனும் பெயரைத் தன் மகனுக்கு அவன் அந்த இடத்திலே சூட்டினான்.

(தாராபாய் காலத்தில் இருந்து 40 ஆண்டுகள் சாகு நல்லாட்சி நடத்தினான், அவன் கொடுத்த பெரும் பலத்தில்தான் இந்து எழுச்சியும் இந்து அரசின் விரிவாக்கமும் நடந்து காசியும் மீட்கப்பட்டது, மொகலாயத்தை முடித்து வைத்தவன் அவனே.)

அங்கேயே கண்ணீரோடு அவன் அமர்ந்து பிரகதீஸ்வரருக்கு நன்றி சொல்லிப் பெரும் பூஜைகளைக் கண்டு கொண்டிருந்த நேரம் அவன் உளவாளிகள் திருச்சிராபள்ளியில் அந்தப் பலமான மலைகோட்டையினைக் கண்டு உளவெடுத்துக் கொண்டிருந்தனர், சிக்கதேவராயனுடனான அடுத்தப்போர் அங்கிருந்துதான் தொடங்க இருந்தது.

(தொடரும்..)