சம்மனசுகள் செத்துகிடப்பது போல் கிடக்கின்றது அந்த தளிர்கள்

எத்தனையோ பேரழிவுகளையும் போர் காலங்களையும் கொத்து கொத்தான பலிகளையும் பார்த்தாலும் கொழும்பு தாக்குதல் கண்ணுக்குள்ளே நிற்கின்றது

40 குழந்தைகள் ஆலயத்துள் கொல்லபட்டிருக்கின்றார்கள்

குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள் என சொன்ன இயேசுவின் ஆலயம், கையில் குழந்தையோடு அந்தோணியார் சொரூபம் இருக்கும் அந்த ஆலயம்

கொல்லவரும் புலியும் கொத்தவரும் பாம்பும் கூட அந்த மொட்டுக்களை கண்டால் மனமிரங்கி திரும்பியிருக்கும்

அந்த சண்டாளருக்கு அந்த இரக்கமுமில்லை

அந்த குழந்தைகளை கண்டபின்பாவது திரும்பியிருக்க வேண்டாமா? இரக்கமற்ற அரக்கர்களின் வெறியேறிய கொடூரர்களிடம் அதை எல்லாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

தன் குழந்தையினையே கொன்றுவிட்ட அக்கும்பல் இந்த அடுத்தவர் குழந்தையினை விடுமா?

அது திருப்பலிதான் , அதற்கு இந்த பிஞ்சுகளை பலி கொடுத்திருக்கின்றார்கள் சண்டாள பாவிகள்

கோவிலில் மெழுவர்த்தி ஏற்ற வேண்டிய நேரம் இந்த வெள்ளை தேவதைகளையே எரிய வைத்திருக்கின்றார்கள்

அப்பம் பிய்க்கும் நேரம் அந்த அழகு கிளிகளையே கிழித்தெறிந்திருக்கின்றார்கள்

ஆலய மணி அவர்களுக்காக அழுகின்றது, உடைந்த சொரூபங்கள் அவர்களுக்காக அழுகின்றன‌

சம்மனசுகள் செத்துகிடப்பது போல் கிடக்கின்றது அந்த தளிர்கள்