சரவணா ஸ்டோர் அண்ணாச்சி நடிக்க வந்துவிட்டார்

எதிர்பார்த்தபடியே சரவணா ஸ்டோர் அண்ணாச்சி நடிக்க வந்துவிட்டார், அவரே தயாரித்து அவரே நடிக்க போகின்றாராம்

அப்படியே அவரே படத்தையும் பார்த்துவிட்டால் நல்லது

சிந்தாமணி செல்வம் என்றொரு சிறுநூல் உண்டு, அதிலொரு பாடல் இப்படி வரும். பரத்தை தோழியிடம் கேட்பாள்

அன்னையே அனைய தோழி!
அறந்தனை வளர்க்கும் மாதே!
உன்னையோர் உண்மை கேட்பேன்
உரைதெளிந்து உரைத்தல் வேண்டும்
என்னையோ புணருவோர்கள் எனக்குப்
பேரின்பம் நல்கி
பொன்னையும் கொடுத்துப் பாதப்
போதினில் வீழ்வ தேனோ?

அதாவது ஏ தோழியே, நீ உண்மை அறிந்தவள் என்பதால் ஒன்று கேட்பேன் தெளிவாய் சொல்வாய். என்னிடம் வருபவர்கள் எனக்கு உடல் இன்பத்தையும் கொடுத்து எனக்கு பொருளும் கொடுத்து என் காலில் விழுந்து கிடப்பது ஏன்?

தோழியின் பதில் இப்படி வரும்

“பொம்மெனப் புடைத்து விம்மிப்
போர்மதன் மயங்கி வீழும்
கொம்மை சேர் முலையினாளே!
கூறுவேன் ஒன்று கேண்மோ!
செம்மையில் அறம் செய்யாதார்
திரவியம் சிதற வேண்டி
நம்மையும் கள்ளும் சூதும்
நான்முகன் படைத்தவாறே..”

அதாவது மன்மதனும் மயங்கும் அழகானவளே, அதன் பொருள் கேள், செம்மையான தானம் தர்மம் அறசெயல்கள் செய்யாதோர் செல்வம் சிதறி அழிய வேண்டி பரத்தையராகிய நம்மையும், கள்ளையும், சூதையும்பிரம்மன் படைத்தான். நல் வழியில் செலவழிக்கா செல்வம் இப்படித்தான் அழியும்

ஆம் இதில் சூது என்பதில்தான் சினிமாவும் வரும். இன்றைய சினிமா தயாரிப்பு நிச்சயம் சூதாட்டம்

அறச்செயல் செய்யா பணமெல்லாம் இப்படி அழிய உலகில் ஏகபட்ட சமாச்சாரங்கள் உண்டு, அதில் ஒன்று சினிமா அதில் வசமாக சிக்குகின்றார் அண்ணாச்சி