சிரியாவில் விஷவாயு குண்டு வெடித்திருக்கின்றது…

17796434_10208826936565844_2824296672808950184_n.jpg

எங்கெல்லாம் இரு நாடுகள் மோதுகின்றதோ அங்கெல்லாம் அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்கள் ஆயுதங்களை சோதிப்பது ஹிட்லருக்கு பின் உலகில் நடக்கும் விஷயம்

ஆயுதங்களை சொந்த மக்கள் மீதா சோதிக்கமுடியும்? அடுத்த நாட்டில்தான் சோதிக்க முடியும்.

சில நாடுகள் இந்த் ஆபத்தை தவிர்க்கின்றன, ஈரான் போன்றவை ஒரு மாதிரி சமாளிக்கின்றன, வடகொரியா ஏதாவது சீறி, மிரட்டியாவது தன்னை தற்காத்துகொள்கின்றது

இந்தியாவின் பங்கு இதில் பாரட்டதக்கது, பெரும்பாலும் இன்னொரு நாடு தன் விஷயத்தில் தலையிட வாய்ப்பளிக்காது

சீன போரில் கூட இந்தியா உலகநாடுகளை அழைத்து பெரும் போராக்க விரும்பவில்லை, வங்கப்போரில் இந்தியா வெளிநாடுகளை தவிர்த்தது, இலங்கையில் இந்தியாவினை மீறி உலகநாடுகள் நேரடியாக வராததால் பெரும் அழிவு இல்லை

இந்தியா கொஞ்சம் கண்ணசைத்திருந்தால் ஈழம் வல்லூறுகள் கையில் சிக்கிய புறாவாக கிழிந்திருக்கும், யாழ்பாணம் முதல் வவுனியா வரை கிழித்துபோட்டிருப்பார்கள்

இந்திய தலையீடும், அதன் பின் அதன் முறைப்பும் இருந்ததால் அழிவு இத்தோடு போயிற்று, இல்லை என்றால் இன்னும் மகா பயங்கரமாக இருந்திருக்கும்.

யார் கேட்பார்கள் ஒருவரும் கேட்கமாட்டார்கள், அதுதான் உலகம்

இந்த வல்லரசுகளின் கொரிய போர், வியட்நாம், பாலஸ்தீன், ஈராக், ஆப்கன் வரிசையில் இப்பொழுது சிரியாவில் சோதித்துகொண்டிருக்கின்றார்கள், அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்கள் ஆயுதங்களை பரிசோதிக்கின்றன, நாள்பட்ட குண்டுகளை கொட்டி தீர்க்கின்றன‌

உச்சமாக விஷவாயு எனும் கொடூர தாக்குதலில் 100 பேர் வரை பலி என்கின்றன செய்திகள், சிரிய அரசிடம் அப்படிபட்ட ஆயுதங்கள் உண்டு , அவற்றிற்கு நாங்கள் பொறுப்பு எங்களை மீறி அதனை சிரியா பயன்படுத்தாது என ரஷ்யா சொல்லியிருந்தது

கொஞ்சநாளைக்கு முன்பு நடந்த ரஷ்யா ராணுவ விமான விபத்து, நேற்று நடந்த பீட்டர்ஸ்பர்க் குண்டுவெடிப்பிற்கு பின் ரஷ்யாவின் தாக்குதல் சிரியாவில் தீவிரமாயிற்று

இந்நிலையில்தான் சிரியாவில் விஷவாயு குண்டு வெடித்திருக்கின்றது, இறந்திருப்பது பெரும்பாலும் பிஞ்சுகள். அவைகள் செய்த தவறு ஒன்றுமே இல்லை, சிரியாவில் பிறந்து தொலைத்தது மட்டும்தான், அதற்குத்தான் இந்த சாவு

யார் வீசினார்கள் என தெரியாது, யாரையும் நம்ப முடியாது ஆளாளுக்கு கைகாட்டுகின்றார்கள். விஷயம் பெரிதாகின்றது

சில நாடுகளில் வாழ்வதற்கென்றெ மக்கள் பிறக்கின்றார்கள், சிரியா போன்ற நாடுகளில் சாவதெற்கென்றே பிறக்கின்றார்கள்

குண்டுவெடிப்பு, கொலை, கொத்து குண்டு, பஞ்சம், பசி என அவர்கள் செத்துகொண்டே இருந்தார்கள்

இப்பொழுது விஷவாயுலும் சாக தொடங்கியிருக்கின்றார்கள்

சாத்தான் கூட மனம் திருந்தும் காட்சிகள் சிரியாவில் அரங்கேறிகொண்டிருக்கின்றன,

இனி அவன் ஆண்டவனை நரகத்திற்கு அழைக்க உரிமை உள்ளவன் என்பது போன்ற சாட்சிகள் அவை