சில பிம்பங்களை உடையாமல் காத்தலும் அவசியம்

ஒரு பிரிட்டிஷ்காரனிடம் பேசும் பொழுது நாம் கேட்டோம்

“இது ஜனநாயக காலம், மக்களாட்சி காலம். இந்த காலத்திலும் தான் வாழ உங்களை எல்லாம் அடிமைபடுத்தி, உன் முன்னோர்களின் சுயமரியாதையினை இழிவுபடுத்தி, உன் நாட்டின் உழைப்பை உறிஞ்சி சுகபோகமாக வாழ்ந்த அந்த பிரிட்டிஷ் அரச குடும்பத்தை இன்னும் ஏன் கொண்டாடுகின்றீர்கள்? உங்களுக்கு சுயமரியாதை, பகுத்தறிவு எல்லாம் கிடையாதா?

உங்களை அடிமைபடுத்தி வைத்திருந்த ஒரு அடிமைசின்னத்தை கொண்டாடும் இழிபிறவியா நீங்கள்? அதிகார வர்க்கத்தை தூக்கி எறியும் புரட்சியினை நீங்கள் செய்யவில்லையா? எம் திராவிட பூமிக்கு வந்து பார்”

அவன் அமைதியாய் சொன்னான்

இந்த ராஜகுடும்பம் உலகெல்லாம் ஆண்டு அங்கிருக்கும் செல்வத்தை எல்லாம் இங்கே கொண்டு வந்து எங்களை வாழ்வாங்கு வாழவைத்தது, அந்த பெருமைக்கும் நன்றிக்கும் உரிய கவுரவத்தை எக்காலமும் கொடுப்போம்

இல்லையே, அவன் உன்னை அடக்கி உன் உரிமையினை பறித்து, அவன் மன்னன் என்றும் நீ அடிமை என்றும்….

இடையில் நிறுத்தி கேட்டான் , ஒரு புரட்சியும் செய்யாமல் மன்னரை ஒழிக்காமல் எங்கள் போக்கில் நாங்கள் இருந்து நாங்கள் இன்னும் நலமாகவே இருக்கின்றோம், புரட்சி புண்ணாக்கில் மன்னனை ஒழித்து இன்னும் யாரையெல்லாமோ ஒழித்த நீங்கள் என்ன கிழித்துவிட்டீர்கள்

மன்னனை ஒழி என்பது அந்நாளில் குழப்பம் ஏற்படுத்தும் செயல் அன்றி வேறல்ல, ரஷ்யாவில் ஜார் மன்னை ஒழித்து புரட்சி செய்தார்கள் என்னாயிற்று இன்று புட்டீன் அதே அரச தோரணையில் அமர்ந்திருக்கின்றார்

மேய்ப்பனை வெட்டு ஆடுகளை சிதறடி என்பதுதான் புரட்சிகள் சொல்வது, தலைவனில்லா தேசம் குழம்பி நாசமாகும் என்பதுதான் அதன் மறைமுக சித்தாந்தம்

மானிட இனத்தில் சில விஷயங்கள் அவசியம், மன்னனும் அவன் வழிகாட்டலும் அவசியம் அப்படி இருக்கும் சில பிம்பங்களை உடையாமல் காத்தலும் அவசியம், தேசத்தின் சில பெருமைகள் அவர்களாலேதான் காத்துவரபடுகின்றன‌

அவன் சொன்னதில் அர்த்தம் இருக்கலாம்

ஓமான் மன்னரும் இன்னும் பல நாட்டு நல்ல மன்னர்களும் கண்ணுக்குள் வந்து செல்கின்றார்கள்