சுஜாதா

“ஜனரஞ்சகமான எழுத்து என்றால் என்ன?” என்பதை உலகுக்கு சொல்லவந்த அவதாரம் அந்த மனிதன்

அந்த மனிதர் ஒரு அற்புதமான பிறப்பு , ஜனரஞ்சகமான எழுத்துக்கும் நல்ல கற்பனைக்கும் அவரே எக்காலமும் எடுத்துகாட்டு, அவரின் தமிழ் அவ்வளவு அழகு

அவர்மேல் ஒரு பெரும் வருத்தம் எப்பொழுதும் உண்டு, அவர் கதை எழுதினார் விஞ்ஞான தமிழை உருவாக்கினார் இன்னும் என்னவெல்லாமோ செய்தார்

ஆனால் ஆன்மீகத்துக்கும் தேச எழுச்சிக்கும் அவர் ஏதும் எழுதவுமில்லை அன்று அப்படிபட்ட சூழலுமில்லை, சோ ராமசாமி போல தைரியமிக்க எழுத்து அவரிடம் வந்திருக்கும் ஆனால் செய்யவில்லை

ஜெயகாந்தனின் ஞான போதனைகள், பாலகுமாரனின் ஆன்மீகமெல்லாம் அவரிடமும் கொட்டி கிடந்தது ஆனால் எழுதவில்லை

அதற்கு அவரின் காங்கிரஸ் அரசு பணியும், திராவிட பயமும் காரணமாக இருந்திருக்கலாம்

ஆனால் ஒரு விஞ்ஞானியாக அம்மனிதன் வாக்கு எந்திரத்தை உருவாக்கி தேசத்துக்கு கொடுத்ததை நினைவு கூறத்தான் வேண்டும், அந்த பெரும் சாதனைக்காக சேவைக்காக அவரை வணங்கித்தான் தீர வேண்டும்

ஆன்மீகம் தேசியமும் பேசாத குறைகளை தாண்டி அந்த அற்புத எழுத்தாளன் நினைவுகூற படவேண்டியவன்

பணத்திற்கும், புகழுக்கும் எழுதாமல் தன் ஆத்ம திருப்திக்காக இறுதிவரை எழுதிகொண்டிருந்தார் சுஜாதா, அதனால்தான் அவரால் பெரும் புகழ் பெற முடிந்தது,

அவரது எழுத்துக்களில் ஆன்மா இருந்தது, உயிர் இருந்தது அதனால்தான் நிலைத்தன, வரவேற்பு பெற்றன‌

அவரை தேடித்தான் பத்திரிகையும், சினிமாவும் வந்ததே தவிர, அவர் யாரையும் தேடி சென்றதாக செய்திகள் இல்லை

நான் ஒரு எழுத்து சுரங்கம், யார் வேண்டுமானாலும் எதனை வேண்டுமானாலும் எடுத்து செல்லுங்கள் என்ற வகையில் அவர் வாழ்வு இருந்திருக்கின்றது

சங்க இலக்கியம், ஆங்கில இலக்கியம், விஞஞானம், மருத்துவம்,கணிணி முதல் விண்வெளி வரை எல்லா துறையிலும் அவருக்கு ஆழ்ந்த அறிவு இருந்தது மகா ஆச்சரியம்.

அவரின் தேடல் அப்படி இருந்திருக்கின்றது..

பணத்திற்கு எழுதுவதை விட , மனதில் ஊறும் விஷயங்களை ஆத்ம திருப்திக்கு எழுதுவதே எழுத்தாளன் வாழ்வின் சுதர்மம் என சொல்லி சென்ற அந்த சுஜாதாவின் பிறந்த நாள் இன்று

ஜனரஞ்சகமான, யாரையும் நோகடிக்காத, பூக்களை தூவி மயிலராகால் வருடிவிட்ட சுகத்தை அந்த எழுத்துக்கள் கொடுத்தன‌

செய்யுளோ இலக்கியமோ விஞ்ஞானமோ வரலாறோ அவர் விளக்கியது போல் இன்னொருவர் விளக்க முடியாது

ஒரு தமிழறிஞன் பெரும் விஞ்ஞானி ஆன விந்தை அவர் ஒருவரில்தான் நடந்தது.

மனதிருப்தி கொடுக்கும் எழுத்துக்களின் விலையினை எந்த தொகையும் நிர்ணயிக்காது என்பதே அவரின் வாழ்வு தத்துவம்

மாபெரும் ஆற்றல் இருந்தும் எந்த சர்ச்சையிலும் சிக்காமல், எந்த அரசியல்வாதியிடமும் எலும்புக்கு கையேந்தாமல், அரசியல் ஆதாயத்திற்காக பச்சை பொய்களை எழுதாமல் வாழ்ந்தவர் அவர்

தன்மானமிக்க பிரபல‌ எழுத்தாளன் தமிழகத்தில் காட்டகூடிய மிக சிலரில் அவரும் ஒருவர்.

புரட்சி, முற்போக்கு, பிற்போக்கு, வயிற்றுபோக்கு, முன் நவீனத்துவம், பின் நவீனத்துவம், பொறம்போக்கு தத்துவம் என அவர் முகமூடி போட்டு எழுதவில்லை

எது யதார்த்தமோ, எது அறிவுடமையோ அதை எழுதினார்

பத்து தலை ராவணன் எழுத வந்தால் எப்படி இருக்கு? தசாவாதரம் எடுத்து பரம்பொருள் தமிழில் எழுத வந்தால் எப்படி இருக்கும் என காட்டிவிட்டவர் சுஜாதா

எப்பொழுதாவது அபூர்வமாக தமிழகத்தில் பிறக்கும் அறிவாளிகளில் ஒருவரான அவரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறலாம்

சாட்சாத் அந்த ஸ்ரீரங்கத்து ரங்கநாதன், எழுதவே அவதரித்த நாள் இன்று

அவரை இன்றும் தேடுகின்றோம்

பத்திரிகையில் தேடுகின்றோம், விஞ்ஞான விளக்கங்களுக்கு தேடுகின்றோம், குறும்பான நகைச்சுவைக்கு தேடுகின்றோம்

சங்க பாடல்களுக்கும் விண்வெளி தத்துவத்திற்கும் அவரின் விளக்கத்தை தேடுகின்றோம்

சினிமாவில் கூட அவர் இல்லாத இடம் பட்டவர்த்தனமாக தெரிகின்றது

பத்திரிகை, இலக்கியம், விஞ்ஞானம், சினிமா, வான்வெளி, தமிழ் ஆழ்வார் பாடல்களின் விளக்கம் என அவரை எல்லா இடத்திலும் தமிழகம் தேடிகொண்டே இருக்கின்றது

இன்னொருமுறை அந்த ஞான‌மகன் பிறந்து வரட்டும், வந்து தேசியத்தை காக்கட்டும்

இங்கு திருச்சியில் எழும்ப வேண்டியது அந்த பெருமகன் சிலை, சென்னையில் அமைய வேண்டியது அந்த ஞானபெருமகன் பெயரில் சாலை

இதெல்லாம் யாரும் சொல்லமாட்டார்கள் நினைவு கூறவும் மாட்டார்கள்

ஒரு காலம் வரும் அன்று தமிழகத்தில் அவர் பெயரில் தெருவும் சாலையும் அமைக்கபடும்

திரையுலகம், எழுத்துலகம், விஞ்ஞானம், சங்க இலக்கியம், கவிதை உலகம், கணிணி உலகம், சர்வதேச் இலக்கியம் என ஒவ்வொரு துறையிலும் ஒரு மனிதன் பெயரில் விருது உருவாகும் என்றால் அது சுஜாதாவினை தவிர யாருக்கும் சாத்தியமில்லை