சென்னை புத்தக கண்காட்சி தொடங்கிவிட்டது
சென்னை புத்தக கண்காட்சி தொடங்கிவிட்டது, பேப்பர் பயன்பாடு காணாமல் போய் சர்வமும் டிஜிட்டலுக்கு மாறிவிட்ட உலகிது, புத்தகங்கள் இன்னும் சில ஆண்டுகளில் விடைபெறலாம், ஓலை சுவடி போல மியூசியத்தில் காணலாம்
அப்பொழுது இப்படி புத்தக கண்காட்சி எல்லாம் நடக்காது, கிண்டில் போன்றவை சும்மா ஆன் லைனில் நடத்தலாம், மற்றபடி இந்த பரவச காட்சியும் அனுபவமும் எதிர்காலத்தில் கிடைக்காது அதனால் சென்னைவாசிகள் தவறவிடாதீர்கள்
எந்த புத்தகம் வாங்க போகின்றீர்கள் என்பது அவரவர் விருப்பம், அவரவருக்கு என்ன அறிவு பெருக வேண்டும் என நினைக்கின்றார்களோ அதை வாங்கட்டும்
நாம் தேசியவாதி என்பதாலும், நம் சிந்தனை தமிழக குறுகிய வட்டத்துக்குள் அடங்காது என்பதாலும் எப்புத்தகம் வாங்கலாம் என கேட்டால் எம் பதில் இதுதான்
பெரும் உலக அறிவும், தெளிவும் பெறவேண்டும் என்றால் திராவிட புத்தகம் இருக்கும் பக்கமே செல்லாதீர்கள், அவை மிக மிக குறுகிய வட்டத்தில் உங்களை அடைத்து சிந்தனையினையே மிக குறுக்கிவிடும், பெரும் சிந்தனை வராது
உலக அறிவு பெரிதும் வேண்டுமென்றால் என்றுமே Pa Raghavan முதல் தேர்வு. அவரின் நிலமெல்லாம் ரத்தம், டாலர் தேசம் , மாயவலை முதல் ஆயில் ரேகை , ஐ.எஸ் என எல்லாமே வரலாற்று கல்வெட்டு
இப்பொழுதெல்லாம் அந்த சுறா மாறிவிட்டது, முன்பு பெரும் கடலில் வேட்டையாடி கரையில் வந்து விஷயத்தை கொட்டும்,
இப்பொழுதெல்லாம் இலக்கிய நாவல் எனும் நீச்சல் குளத்தில் அதன் போக்கில் நீந்துகின்றது
அதன் சுகமும் பரமானந்தமும் நித்தியானந்தமும் நாவல் என்றால் அதைத்தான் அவர் செய்யமுடியும்
இம்முறை இறவான் எனும் இசைகலைஞன் கதையினை இறக்கியிருக்கின்றார், அத்தோடு அவரின் பழைய உலக புத்தகங்களை வாங்கலாம்
சுஜாதாவும் ஜெயகாந்தனும் எக்காலமும் கிளாசிக்
சைவ சிந்த்தாந்த கழக வெளியிடுகள் இன்னும் பல பழைய அதாவது சுதந்திரத்துக்கு முற்ப்ட்ட சமய ஆன்மீக நூல்கள் இருந்தால் விட்டுவிடாதீர்கள்
தொடக்க கால திமுகவினரின் சில வரலாற்று நூல்கள் சிறப்பானவை, உள்ளூர் அரசியலில்தான் பொய் சொல்வார்களே தவிர அவர்களின் அக்கால உலக அரசியல் கிளாசிக்
இனிமையான எழுத்துநடையும் பரந்துபட்ட தமிழும் வேண்டுமென்றால் கண்ணதாசனை விட்டுவிடாதீர்கள்
இந்த தலைமுறையில் Mugil Sivaமுக்கியமானவர், அவரின் ஒவ்வொரு புத்தகமும் அவ்வளவு அதிசயம். அகம் புறம் அந்தபுறம் எனும் அரசர் கதையில் தொடங்கி ஒவ்வொன்றும் அசாத்தியம்
மனிதர் தூத்துகுடிக்காரர், எழுத்து இயல்பாய் வரும் ரகம்
பயண சரித்திரம் முதல் பகுதி இரு வருடம் முன் வெளியிட்டார், இரண்டாம் பாகம் இன்னும் வரவில்லை இப்பொழுதும் வரவில்லை
உலகில் தொலைந்துவிட்ட விஷயங்களை ஆழ புகுந்து தேடி கொண்டுவருவதில் வித்தகர், இப்பொழுதும் பொக்கிஷங்களின் கதை என தொலைந்த பொக்கிஷங்களை பற்றி தொடர் எழுதினார்
நாமும் யூதர்களின் தொலைந்து போன அந்த உடன்படிக்கை பெட்டகம் எனும் பத்து கட்டளை பெட்டி பற்றி எழுதுங்கள் என சொல்லிகொண்டே இருந்தோம் அப்பொழுதும் எழுதவில்லை
சரி அதை விடுங்கள், வருஷம் பதினாறு படத்தில் குஷ்பு பயன்படுத்திய மேக் அப் பெட்டி எங்கிருக்கின்றது தெரியுமா? அதை பற்றியாவது எழுதும் என்றாலும் எழுதவில்லை
அடுத்த ஆண்டு அவரின் பயண சரித்திரம் இரண்டாம் பாகமும், குஷ்புவின் மேக் அப் பெட்டி உட்பட பொக்கிஷங்களின் கதையும் வரலாம்
கண்காட்சியில் இவரை தவறவிடாதீர்கள்
ஈழ தமிழர்களின் புத்தகங்கள் சில நன்றாயிருக்கும், கலையரசன், ராஜ்சிவா அவ்வகையில் ஞானவான்கள்
ஈழதமிழரில் ரிஷி என்பவர் ஜாம்பவான், உலக விஷயம் அவருக்கு அத்துபடி. விறுவிறுப்பு என தளம் நடத்தியபொழுது அவர் எழுதிய கட்டுரைகளை புத்தகமாக்கினால் ஒரே நாளில் அவர் கோடீஸ்வரர்
ஆனால் தமிழக புலிகும்பலும் இன்னபிறவும் விடாது என அஞ்சி யூ டியூபில் பரபரப்பு என பிசியாகிவிட்டார்
அவரின் புத்தகம் வந்தால் அது நிச்சயம் அதிர்வுகளை கொடுக்கும், அவர் அடுத்த வருடமாவது யோசிக்கலாம்
மதன், சுஜாதா, ஜெயகாந்தன், பா.ராகவன், முகில் போன்றோரின் புத்தகங்கள் உலக அறிவினை அள்ளி கொடுக்கும் சிந்திக்க வைக்கும்
ஆன்மீக புத்தகங்களும் சைவ சிந்தாந்த கழக புத்தகங்களும் தவிர்க்க கூடாதவை
அரவிந்தன் நீலகண்டன் தவறவிட கூடாதவர், அப்படியே அந்த ஆழி சூல் உலகும் படிக்க வேண்டியது
கம்யூனிஸ்ட் இம்சைகள், திராவிட இம்சைகள் பக்கம் சென்று அவர்களின் உளரல்களை படித்து நள்ளிரவில் ஏ பார்ப்பானியமே என கம்பு சுற்றினால் சங்கம் பொறுப்பல்ல
அமைதியான மனதை தொடும் ஆன்மீக நூலுக்கு கண்ணதாசனும் பாலகுமாரனும் இரு கண்களை போன்றவர்கள், இரு சித்தர்கள் அவர்கள்
ஆக காலத்தால் விரைவில் விடைபெறும் கண்காட்சிக்கு சென்று இனி கிண்டிலிலும் கிடைக்க வாய்ப்பே இல்லா நல்ல புத்தகங்களை வாங்கி வீட்டில் வையுங்கள்
கருணாநிதி மேல் ஆயிரம் குற்றசாட்டுகளை எம்ம்மால் சுமத்த முடிந்தாலும் அவரிடம் குறிப்பிட தக்க விஷயம் வாசிப்பு
அவரின் படங்களை எல்லாம் பாருங்கள், வீட்டில் தன் அறையில் புத்தக அலமாரி முன்புதான் அமர்ந்திருப்பார், யார் வந்தாலும் புத்தகம் நடுவில் இருந்துதான் சந்திப்பார்
ஆம் எல்லோரும் வாசிக்க வேண்டும் என குறிப்பால் சொன்ன தலைவர் அவர், அவரிடம் உள்ள நல்ல விஷயம் அதுதான், ஆனால் அவர் மகனே அதை செய்யவில்லை என்பது வேறு விஷயம்
வாசிப்பு ஒரு மனிதனை உருவாக்கும், முழுமைபடுத்தும், தலைவனாக்கும், அப்படி இல்லாவிட்டால்
சிந்திக்க வைத்து நல்ல தலைவனை உருவாக்க வைக்கும்
சிந்தனைக்கு புத்தகமே தீபெட்டி புத்தகமே எண்ணெய் புத்தகமே திரி
நிரம்ப வாசியுங்கள் தெளிவும் ஞானமும் அறிவும் தானாய் பிறக்கும்
சங்கம் எப்பொழுது புத்தகம் எழுதும் என ஏராளமானோர் கேட்கின்றார்கள் , சங்கத்திடம் சில கதைகள் உண்டு, வரலாறுகளும் உண்டு
அதில் சில கதைகள் கள்ளிகாட்டு இதிகாசம் போல உருக்கமானவை, எழுதினால் நிச்சயம் அவை மிக சிறந்த நாவலாக வரும்
அதை தவிர்த்து வரலாற்றிலும், அரசியலிலும் எவ்வளவோ இருக்கின்றது, மலேசிய அனுபவங்களை தொகுத்தாலே ஒரு புத்தகம் வரும்
யூத இந்து தொடர்பு, இந்து சீன தொடர்பு என எவ்வளவோ ஆய்வுகள் செய்து எழுதலாம்
வாய்பிருந்தால் பார்க்கலாம்
அதற்குமுன்பு தெய்வகாணிக்கையாக ஒன்றை படைக்க வேண்டுமல்லவா? அதனால் தமிழகம் கண்ட தனிபெரும் தாரகையின் வாழ்வினை புத்தகமாக எழுத சங்கம் தீர்மானித்திருக்கின்றது
அவரின் வாழ்வு ஆச்சரியமும் அற்புதமும் ஏமாற்றமும் வலியும், திடீரென எங்கெங்கோ இழுத்துசென்று ஓடும் ஒரு கர்மபலனும் கொண்ட வாழ்வு
அதை அவரின் ஒப்புதலுடன் எழுதலாம், அவரிடம் பேசாமல் நடக்காது, ஆனால் தெய்வம் பேசாது
நிச்சயம் அதற்கான வாய்ப்பே இல்லை என்பதால் பிள்ளையாரை பிடிக்க போன சனி போல மறுநாளை நோக்கியபடியே நாட்களை கடத்திகொண்டிருக்கின்றது சங்கம்