சேவல் விருத்தம் : 07
“வீறான காரிகதி முன்னோடி பின்னோடி
வெங்கட் குறும்புகள் தரும்
விடுபேய்க ளேகழுவன் கொலைசாவு கொள்ளிவாய்
வெம்பேய் களைத்துரத்திப்
பேறான சரவண பவா என்னுமந்திரம்
பேசியுச் சாடனத்தாற்
பிடர்பிடித் துக்கொத்தி நகநுதியி னாலுறப்
பிய்ச்சுக் களித்தாடுமாம்
மாறாத முயலகன் வயிற்றுவலி குன்மம்
மகோதரம் பெருவியாதி
வாதபித் தஞ்சிலேற் பனங்குட்ட முதலான
வல்லபிணி களைமாற்றியே
சீறாத ஓராறு திருமுக மலர்ந்தடியர்
சித்தத் திருக்கு முருகன்
சிலைகள்உரு விடஅயிலை விடுகுமர குருபரன்
சேவற் றிருத் துவசமே”
முதல்வரி இதோ
“வீறான காரிகதி முன்னோடி பின்னோடி
வெங்கட் குறும்புகள் தரும்”
இவ்வரி “வீறான காரி கதி முன்னோடி பின்னோடி வெம் கண் குறும்புகள் தரும்” என பிரியும்
அதாவது மிக கம்பீரமான (வீறான) பைரவர் போகும் வழியில் (காரி கதி) முன்னும் பின்னுமாக நடப்பதும் சிவந்த கண்களோடு தொல்லை செய்யும் ..
இரண்டாம் வரி
“விடுபேய்க ளேகழுவன் கொலைசாவு கொள்ளிவாய்
வெம்பேய் களைத்துரத்திப்”
இவ்வரி “விடுபேய்களே கழு வன்கொலை சாவு கொள்ளிவாய் வெம்பேய்களைத் துரத்திப்” என பொருள் தரும்
அதாவது தனியே அலையும் பேய்களையும், கழுமரத்தில் இருந்து உயிர்குடிக்கும் பேய்களையும், நெருப்பை கக்கும் கொள்ளிவாய் பேய்களையும் விரட்டும்..
மூன்றாம் வரி இதோ
“பேறான சரவண பவா என்னுமந்திரம்
பேசியுச் சாடனத்தாற்”
இவ்வரி “பேறான சரவண பவா என்னும் மந்திரம் பேசி உச்சாடனத்தால்”
அதாவது பெரும் பேறான சரவணபவா எனும் மந்திரத்தை உச்சாடனம் செய்து
நான்காம் வரி இதோ
“பிடர்பிடித் துக்கொத்தி நகநுதியி னாலுறப்
பிய்ச்சுக் களித்தாடுமாம்”
இவ்வரி “பிடர் பிடித்துக் கொத்தி நகநுதியினால் உறப் பிய்ச்சுக் களித்து ஆடுமாம்” என பிரிந்து வரும்
அதாவது அவை கழுத்தை பிடித்து மூக்கினால் கொத்தி கூர்மையான நகத்தால் பிய்த்து மகிழ்ந்து ஆடுமாம்
ஐந்தாம் வரி
“மாறாத முயலகன் வயிற்றுவலி குன்மம்
மகோதரம் பெருவியாதி”
இவ்வரி “மாறாத முயலகன் வயிற்றுவலி குன்மம் மகோதரம் பெருவியாதி” என பிரிந்து வரும்
அதாவது குணமாகாத கொடிய நோய்களான காக்காய் வலிப்பு (முயலகன்) , வயிற்று வலி , குன்மம் (குடல்புண்), குடல் இறக்கம் (மகோதரம்), பாலியல் உறவின் நோய்கள் (பெருவியாதி)
ஆறாம் வரி இதோ
“வாதபித் தஞ்சிலேற் பனங்குட்ட முதலான
வல்லபிணி களைமாற்றியே”
இவ்வரி “வாத பித்தம் சிலேற்பனம் குட்ட முதலான வல்ல பிணிகளை மாற்றியே” என பிரிந்து பொருள்தரும்
அதாவது வாதம், பித்தம், சளி (சிலேத்துமம்). தொழுநோய் எனும் குஷ்டம் (குட்டம்) போன்ற கொடிய நோய்களை நீக்குபவனும்
ஏழாம் வரி
“சீறாத ஓராறு திருமுக மலர்ந்தடியர்
சித்தத் திருக்கு முருகன்”
இவ்வரி “சீறாத ஓராறு திரு முகம் மலர்ந்து அடியர் சித்தத்தில் இருக்கு முருகன்” என பிரிந்து பொருள் தரும்
அதாவது கோபமின்றி கருணையே வடிவாக உள்ள ஆறு முகங்களுடன் மகிழ்ச்சியாக அடியாரின் மனதில் வீற்றிருக்கும் முருகன்
இனி எட்டாம் வரி
“சிலைகள்உரு விடஅயிலை விடுகுமர குருபரன்
சேவற் றிருத் துவசமே”
இவ்வரி “சிலைகள் உருவிட அயிலை விடு குமரகுருபரன் சேவற் றிருத் துவசமே” என பொருள் பட பிரியும்
அதாவது ” உறுதியான கல்லை கொண்ட மலையினை (கிரவுஞ்ச மலை) ஊடுருவி அழித்த கூரிய வேலே செலுத்திய குமரகுருபரன் எனும் முருகனின் கொடியில் உள்ள சேவல் அது
ஆக பாடலின் பொருள் இதுதான்
கம்பீரமாக பைரவர் போகும் வழியில், முன்னும் பின்னும் ஓடி தொடர்ந்து வந்து, சிவந்த கண்களை உடையனவாய் நடப்பதும், தனித்திருக்கும் பேய்களையும் வன்மையான கொலைகளுக்கும் சாவுகளுக்கும் காரணமானதும் , நெருப்பைக் கக்கும் வாய்களை உடைய, கொடிய போய்களைத் துரத்திச் சென்று
தவத்தால் கிடைப்பதான, சரவணபவா என்கிற சடாட்சர மந்திரத்தை, சொல்லி, உட்சாடத்தினால் பிரயோகம் செய்யும் வகையில், அவைகளுடைய கழுத்தைப் பிடித்து மூக்கினால் கொத்தி, கூர்மையான நகமுனையினால் பிய்த்து, மகிழ்ச்சியுடன் நடனம் புரியும் சேவல் எது என்றால்
நீங்காத வியாதியான காக்காய் வலிப்பு, வயிற்று வலி, வயிறு உளைப்பு (சூலை நோய்), பெரு வயிறு, பால் வினை நோய்கள், வாதம் பித்தம், சிலேத்துமம், குஷ்டம், இவை போன்ற, கொடிய நோய்களை நீக்குபவரும், சாந்தமான தனது ஆறு திருமுகங்களும் மகிழ்ச்சியுடன், தியானிக்கும் அடியவர்களின் உள்ளத்தில் வீற்றிருக்கும் முருகன், கிரவுஞ்ச கிரியினை உருவிச் சென்று அழித்த, கூரிய வேலாயுதத்தைச் செலுத்திய, குமாரகுருபரனின் கொடியில் வீற்றிருக்கும் சேவலே தான் அது.
இந்தபாடல் ஒரு நுணுக்கமான விஷயத்தை குறிக்கின்றது
அதாவது துர்சக்திகளும் துர்தேவதைகளும் மனிதனுக்கு பெரும் இடர்பாடுகளை விளைவிக்கின்றன, மானிடனின் பல சாவுக்கும் துன்பத்துக்கும் அவை காரணமாகின்றன, ஒருவனை கழுவேற்றுதல் எனும் மரணதண்டனை வரை பேய்கள் இழுத்தும் செல்கின்றன
விளக்கில்லா அறையில் இருள் இருப்பது போல ஞான வெளிச்சமில்லா மனதில் துர்சக்திகள் புகுந்து ஆட்டுவிக்கின்றன அவை ஒருவனின் வாழ்வையே திசைமாற்றி கொன்றும் விடுகின்றன
அப்படிபட்ட கொடிய பேய்களை “சரவணபவ” எனும் மந்திரம் விரட்டும் என்கின்றார் அருணகிரியார்
“சரவண பவ” எனும் திருமந்திரம் இருளை அகற்றும், இருள் அகலும் இடத்தில் ஒளிஅரும், அந்த ஞான ஒளியில் துர்சக்திகள் செயல்படாது ஓடும் என்கின்றார் அடியார்
வீணான கொலைக்கும், ரத்தபழிக்கும், கழுவேற்றி கொல்லும் தண்டனைக்கும் பேய்கள் காரணமாகும் அவை மானிட மனதை ஆக்கிரமித்து அப்படி இழுத்து செல்லும் அந்த பேய்களை ‘”சரவண பவ” எனும் மந்திரம் காக்கும், காரணம் அது ஞானஒளி கொடுக்கும் திருமந்திரம்
அந்த திருமந்திரம் இன்னும் என்னென்ன நலனையெல்லாம் கொடுக்கும் என பட்டியலிடுகின்றார் பட்டர்
இந்த துர்சக்திகளும், பிசாசுகளும் மானிட மனதை குழப்பும், குழப்பம் மிஞ்சும் இடத்தில் கவலையும் பயமும் அச்சமும் வரும் அந்த அச்சமும் குழப்பமும் உடலை ஆட்டிவைக்க பல நோய்கள் வரும்
அது காக்காய் வலிப்பு, வயிற்று வலி, சூலை நோய், பெரு வயிறு, பால் வினை நோய்கள், வாதம் பித்தம், சிலேத்துமம், குஷ்டம் என பல வகையில் வரும்
“சரவண பவ” எனும் மந்திரம் சொல்ல சொல்ல மனதில் இருந்து பேய்கள் அகலும், அந்த இடத்தில் முருகபெருமான் குடிவருவார், அவர் வந்த இடத்தில் அமைதியும் நிம்மதியும் சூழும்
அந்த நிம்மதியான மனம் நோயினை குணபடுத்தும்
ஆக பாடலில் அருணகிரியார் போதிப்பது இதுதான்
துர்சக்திகள் மனதை குழப்பி தீரா சிக்கலில் கொலையாகவும் பகையாகவும் சாவாகவும் இழுத்து செல்லும், அப்படியே பெரும் நோய்களை கொடுக்கும்
“சரவண பவ” எனும் திருமந்திரம் ஒலிக்கும் இடத்தில் முருகபெருமான் வருவார், அவர் வரும் மனதில் நிம்மதியும் அமைதியும் ஞானமும் வரும் அது உடலை குணபடுத்தும்
எப்பொழுதும் “சரவண பவ” எனும் திருமந்திரத்தை முழங்கும் அடியார்க்கு எந்தவிதமான இடையூறும் நோயும் அச்சமும் பயமும் வரவே வராது என்பது பாடலின் பொருள்