சேவல் விருத்தம் : 11

“பூவிலியன் வாசவன் முராரிமுநி வோரமரர்
பூசனைசெய் வோர்மகிழவே
பூதரமும் எழுகடலும் ஆடஅமு தூறஅநு
போகபதி னாலுலகமும்
தாவுபுகழ் மீறிட நிசாசரர்கள் மாளவரு
தானதவ நூல்தழையவே
தாள்வலிய தானபல பேய்கள் அஞ்சச் சிறகு
கொட்டிக் குரற்பயிலுமாம்

காவுகனி வாழைபுளி மாவொடுயர் தாழைகமு
காடவிகள் பரவுநடனக்
காரணமெய்ஞ் ஞானபரி சீரணவ ராசனக்
கனகமயில் வாகனனடற்
சேவகன் இராசத இலக்கண உமைக்கொரு
சிகாமணி சரோருகமுகச்
சீதள குமாரகிரு பாகர மனோகரன்
சேவற் றிருத் துவசமே”

இந்த பாடலின் முதல் வரியினை எடுக்கலாம்

“”பூவிலியன் வாசவன் முராரிமுநி வோரமரர்
பூசனைசெய் வோர்மகிழவே”

அதாவது பிரம்மன் (பூவிலியன் என்பது பூவில் அயன் என வரும், இவ்வார்த்தை பிரம்மனை குறிப்பது), இந்திரன் (வாசவன்), திருமால் (முராரி), முனிவர் மற்றும் தேவர்கள் (முனிவோர் அமரர்) மற்றும் நித்தம் பூசை செய்யும் அடியார்கள் (பூசனை செய்வோர்) மகிழும்படி

இரண்டாம் வரி இதோ

“பூதரமும் எழுகடலும் ஆடஅமு தூறஅநு
போகபதி னாலுலகமும்”

அதாவது மலைகளும் ஏழு கடல்களும் ஆட்டம் காண ( பூதரமும் எழுகடலும் ஆட), அமுதமான இன்பம் கிட்ட (அமுதூற) , எல்லாவிதனான இன்பமும் பதினான்கு லோகங்களிலும் கிடைக்க ( அநுபோக பதினாலு உலகமும்)

இனி மூன்றாம் வரி

“தாவுபுகழ் மீறிட நிசாசரர்கள் மாளவரு
தானதவ நூல்தழையவே”

தாவி பரந்த புகழ் விளங்க (தாவுபுகழ் மீறிட). அரசுரர் அழிந்து போக (நிசாசரர்கள் மாள), விளங்கும் ஒழுக்க நெறிகளைக் கூறும் தர்ம இலக்கிய நூல்கள் தழைத்து ஓங்கவும் (வரு தானதவ நூல்தழையவே)

இனி நான்காம் வரி

“தாள்வலிய தானபல பேய்கள் அஞ்சச் சிறகு
கொட்டிக் குரற்பயிலுமாம்”

கேடுகள் செய்யும் வலிமை பொருந்திய பல‌ பேய்கள் பயந்து ஓடவும் (தாள் வலியதான பல பேய்கள் அஞ்ச) தன் சிறகுகளை கொட்டி குரல் எழுப்பும் ( குரற்பயிலுமாம்)

இனி ஐந்தாம் வரி

“காவுகனி வாழைபுளி மாவொடுயர் தாழைகமு
காட”விகள் பரவுநடனக்

சோலைகள் (காவு), கனிகள், வாழை, புளி, மாமரம், உயர்ந்த தாழை மரம், பாக்குமரம் (கமுகு) நிறைந்த காடுகளில் (அடவிகள்) ஆடும்

இனி ஆறாம் வரி

“காரணமெய்ஞ் ஞானபரி சீரணவ ராசனக்
கனகமயில் வாகனனடற்

அதாவது முருகன் ஆட்கொண்ட காரணத்தால் மெய் ஞானத்தை அடைந்த வாகனமானதும், சிறப்பு மிக்கதும், பாம்பை உணவாக கொண்டதுமான மயில்

இனி ஏழாம் வரி

“சேவகன் இராசத இலக்கண உமைக்கொரு
சிகாமணி சரோருகமுகச்”

வலிமை மிக்க வீரன் (அடல் சேவகன்), ராட்சத லட்சணம் கொண்டவனும் பார்வதி தேவிக்கு ரத்தினம் போன்றவனும், தாமரை போல முகம் கொண்டவனுமான (சிகாமணி சரோமுருக)

இனி கடைசி வரி

“சீதள குமாரகிரு பாகர மனோகரன்
சேவற் றிருத் துவசமே”

குளிர்ந்த மனமுள்ள‌ குணாளன் (சீதள குணாளன்), என்றும் இளமையானவன், கருணைகடல் (கிருபாகர) அடியார் மனதில் இருப்பவனான‌ (மனோகரன்) முருகபெருமானின் கையில் இருக்கும் கொடியின் சேவலே அது

ஆக பாடலின் பொருள் இதுதான்

“தாமரைப் பூவில் வாசம் செய்யும் பிரம்மன், இந்திரன், திருமால், தவம் செய்யும் முனிவோர்கள், தேவர்கள், நித்தம் இறைவனை வழிபாடுகள் புரியும் அடியவர்கள், இவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடையும் பொருட்டு

மலைகளும் ஏழு கடல்களும் ஆட்டம் காணவும், பூவுலகில் இன்பம் நிறைந்து விளங்கவும், எல்லாவித அநுபோகங்களைத் தரும் பதினான்கு உலகங்களிலும், பரந்து கிடக்கும் தனது புகழ் முதன்மையாக விளங்கி நிற்கவும், அரக்கர்கள் மடிந்து அழியவும், விளங்கும் ஒழுக்க நெறிகளைக் கூறும் தர்ம இலக்கிய நூல்கள் தழைத்து ஓங்கவும், கெட்ட வலிமை பொருந்திய செயல்களைச் செய்யும் பல பேய்கள் பயந்து ஓடவும், தனது சிறகுகளைத் தட்டி அடித்துக்கொண்டு பெரிய கூக்குரல் எழுப்பும்

(அது எது என வினாவினால்)

சோலைகள், நல்ல பழங்களைத் தரும் வாழை மரங்கள், புளிய மரம், மா மரம் இவைகளுடன், வானளாவ உயர்ந்த தென்னை மரங்கள், பாக்கு மரங்கள் (இவைகளுடன் கூடிய), அடர்ந்த காடுகளில், பரந்த நடன வகைகளைக் காட்டும், முருகன் ஆட்கொண்ட காரணத்தால் மெய் ஞானத்தை அடைந்த வாகனமானதும்

சிறப்பு மிக்கதும், பாம்பை உணவாகக் கொள்வதுமான செம் பொன் மயிலை வாகனமாகக் கொண்டவன், வலிமை மிக்க மா வீரன், இராசத இலட்சணம் பொருந்திய, பார்வதி தேவிக்கு ஒப்பற்ற சிரோ ரத்னம், தாமரை போன்ற முக அழகு கொண்டவன், தண்மையான குணாளன் என்றும் இளையவன், கருணைக் கடல் அடியார்கள் மனதில் அனுதினமும் மகிழ்ச்சியைத் தருபவன் (ஆகிய கந்தக் கடவுளின்), கொடியில் உள்ள சேவலேதான் அது”

இந்த பாடல் நேரடியாக இப்படி பதில் சொன்னாலும் அதன் சூட்சும விளக்கம் கொஞ்சம் ஆழமானது, முடிந்தவரை புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்

முருகபெருமானின் வேல் என்பது ஞானமாகவும், மயில் என்பது ஆத்மாகாவும், சேவல் என்பது ஆத்மாவின் குணமாகவும் கொண்டு நோக்க வேண்டிய விருத்தபாடல் இவை

அவ்வகையில் இந்த குண்டலினி சக்தி உடலின் சக்கரங்களை விரியசெய்து மேல் எழுவதை முதல் வரி சொல்கின்றது, உடலின் ஒவ்வொரு சக்கரத்திலும் ஒரு தெய்வம் வாசம்செய்யும் அல்லது அந்த சக்கரத்தில் அந்த தெய்வத்தின் சக்தி பெருகும் என்பது யோக தத்துவம்

அப்படி யோகத்தினால் குண்டலினி உச்சம் அடைந்து அமுதநிலை எனும் பெரு ஞான நிலை கிடைப்பதை பாடலின் முதல் நான்கு சொல்கின்றன, ஏழு சக்கரங்களும் துலங்கும் நிலையில் அமுதம் ஊறும் என்பதை சொல்கின்றது

அந்த ஞானநிலையில் நல்ல விஷயங்களை போதிக்கவும் எழுதவும் முடியும், அந்த ஞானம் முருகனால் வழங்கபடும் என்பதை அடுத்த நான்கு வரிகளும் சொல்கின்றன‌

இனி அடுத்த வரியானது லவுகீக வாழ்வில் அதாவது ஆறுசுவை எனும் ஆறுகுணங்களில் ஊறிவிட்ட மானிட வாழ்வின் ஆத்மாவினை சொல்கின்றது

புளி, வாழை, மா, பாக்கு என அவர் வரிசைபடுத்துவது ஒவ்வொன்றும் மானிட் குணங்களின் சாயல், லவுகீக சுகங்களின் சாயல்

அறுசுவை போல ஐம்புலன்களாலும் இழுக்கபடும் உணர்ச்சிக்கு ஆத்மா அடிமை, அதைத்தான் இங்கு மிக நுணுக்கமாக இம்மரங்களையும் அவற்றின் கனி சுவையினையும் சொல்லி ஆத்மா உலக விஷயங்களுக்கு அடிமை என்பதை சொல்கின்றார் அருணகிரியார்

அப்படியே அடுத்தவரியில் பாம்பை தின்னும் மயில் என்கின்றார்

இங்கு பாம்பு என்பது குண்டலினி சக்தியினை குறிப்பது, அது மேல் எழ மே எழ ஆத்மா ஒரு நிறைவை எட்டும் என்பதே மயிலுக்கு பாம்பு உணவு என இங்கு கவித்துவ உருவகமாகின்றது

முருகனை வழிபட்டு யோகத்தில் அமர்ந்தால் யோகம் சித்தியாகும் , யோக சித்தியில் அமிர்தம் சுரக்கும் அந்த அமிர்தத்தில் ஞானம் கிடைக்கும், அது ஏழு சக்கரங்களும் துலங்கும்பொழுது கிடைக்கும், அந்த நிறைவில் ஆத்மா பெரும் நிம்மதி கொள்ளும், அந்த ஆத்மா முருகபெருமானை சுமக்கும் அந்த ஆத்மாவின் சாயல் முருகனின் வெற்றிகொடியில் அடையாளமாக, முருகனால் மாயையினை வென்ற ஆத்மாவின் அடையாளமாக வீற்றிருக்கும் என்பது பாடலின் பொருள்

சேவல் என்பது ஆத்மா மாயையினை வென்ற வெற்றிநிலையினை குறிப்பது

(இத்துடன் சேவல் விருத்தம் நிறைவு பெற்றது

வேல் விருத்தம், மயில் விருத்தம்,சேவல் விருத்தம் என மூன்று பாடல்தொகுப்பினை நாம் நிறைவு செய்திருகின்றோம்)