ஜேசுதாஸின் காந்தகுரல்

காலையும் மாலையும் ஜேசுதாஸின் சபரிமலை பாடல்களை ஒலிக்கவிட்டு அதிலே உருகி கிடக்கின்றான் அறை நண்பன்

காலை அவனை ஜேசுதாஸே எழுப்புகின்றார், அவரும் அவனுடனே அய்யப்பனை வணங்குகின்றார், அவரே உறங்கவும் வைக்கின்றார்

ஒரு தெய்வீக குரல் அவருடையது, ஏதோ ஒரு பரிவார தேவதையின் குரலாக அது இங்கு ஒலிக்கின்றது, அப்படி ஒரு உருக்கம், தெய்வீகம்

நிச்சயம் அய்யப்பனின் ஆசிபெற்றவர் ஜேசுதாஸ் இல்லையெனில் அப்படி பாடல்கள் வாய்ப்பே இல்லை

ஜேசுதாஸ் உருகுகுகின்றார் நாமும் உருகுகின்றோம்

ஜேசுதாஸ் கலங்குகின்றார் நாமும் கலங்குகின்றோம்

ஜேசுதாஸ் ஆனந்தமாகின்றார் நாமும் ஆனந்தமடைகின்றோம்

அவர் “சரணம் அய்யப்பா..” என மருகும் பொழுது அந்த அய்யப்பனுக்கே கண்ணீர் வந்துவிடும் போலிருக்கின்றது

தெய்வங்கள் மானிடரின் பாடல்களுக்கு கட்டுபட்டு ஓடிவந்த கதை எல்லாம் பொய்யல்ல என்பதை ஜேசுதாஸின் பாடல்கள் மூலம் உணர்ந்து கொள்ளலாம்

அவரின் குரலுக்குத்தான் எத்தனை வசீகரம்.. அப்படியே மனதை அய்யப்பன் சன்னிதானத்துக்கு இழுத்து செல்லும் ஆற்றல் அந்த குரலுக்கு இருக்கின்றது

சபரிமலையும் தமிழும் இருக்கும் வரை ஜேசுதாசும் இருப்பார். ஒரு நல்ல கலைஞன் இறைவன் தனக்கு அளித்த வரத்தை அதே தெய்வத்திற்கு காணிக்கை ஆக்கியதால் கிடைத்த ஆசீர்வாதம் அது..

எம்.எஸ் சுப்புலட்சுமி அதை திருப்பதிக்கு செய்து பெற்றார், ஜேசுதாஸ் அதை சபரிமலைக்கு செய்து பெற்றார்

இப்பொழுதெல்லாம் காலை பொழுது ஜேசுதாஸின் காந்தகுரலில் விடிகின்றது, இரவு பொழுது அவரின் அரிவராசனம் ஒலிக்க தொடங்குகின்றது..

அய்யப்பன் பொன்னம்பல மேட்டில் ஜோதிவடிவில் தரிசனமாகின்றான், அது கண்களுக்கு தெரிகின்றது


ஜேசுதாஸ் குரல் வடிவில் நம் காதுகளாலும் அவனை உணர முடிகின்றது,