டிரம்ப் கிம் சந்திப்பு இன்று
ஒரு வழியாக டிரம்பும் கிம்மும் சந்தித்தாயிற்று
கிம்மின் தாத்தா காலத்து சண்டை இது, 60 ஆண்டுகளுக்கு பின் இப்பொழுதுதான் இரு நாடுகளும் கை குலுக்கி இருக்கின்றன
இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும், வடகொரிய மக்கள் நவீன உலகோடு கலக்கட்டும்
உலகின் அமைதி கிழக்கே இருந்து விடியட்டும்…
பாஷா படத்தில் மார்க் அண்டனியும் பாஷாவும் சந்திக்கும் முன்னால் இருவரின் அடியாட்களும் ஓடி ஓடி சென்று பாதுகாப்பு செய்வார்கள் அல்லவா?
அப்படி சிங்கப்பூரில் டிரம்ப் ஆட்களும் கிம் ஆட்களும் இறுதி சோதனை செய்துகொண்டிருக்கின்றார்கள்
டிரம்ப் என்பவர் ஒருமாதிரி கெத்து பிடித்தவர் என்பதால் தலை வெளியில் தெரியவில்லை
ஆனால் முதல் முதலாக வெளிஉலகை காணும் கிம் கடும் உற்சாகமாக இருப்பதாகவும், சிங்கப்பூர் உணவுகளை வெளுத்துவாங்கி அனேகருடன் செல்பி எடுத்துகொண்டிருப்பதாகவும் செய்திகள்
அவரை பார்ப்பவர்கள் எல்லாம் “பச்ச மண்ணுயா மனுஷன், அவர போய் வில்லனாக்கிட்ட்டு” என சொல்லிகொண்டே வருகின்றார்களாம்
உலகில் எத்தனையோ ஒப்பந்தங்கள் நடந்தன புஷ் எல்ட்சின் அணு ஆயுத குறைப்பு ஒப்பந்தம், இந்தியா பாகிஸ்தானின் முதலில் அணுகுண்டை பயன்படுத்தமாட்டோம் ஒப்பந்தம் என ஏராளம்
ஆனால் முதன் முதலில் ஒரு நாடு தவமிருந்து பெற்ற பிரம்மாஸ்திரமான அணுகுண்டை கைவிடுவது என்பது இப்பொழுதுதான் நடக்கின்றது
இன்னும் சற்று நேரத்தில் இருவரும் சந்திப்பார்கள், அவர்கள் சந்தித்து ஏதும் முடிவிற்கு வரும் வரை ஒன்றும் உறுதியாக சொல்லமுடியாது
டிரம்ப் என்பவரை நம்ப முடியாது, என்ன நடக்கின்றது என பார்க்கலாம்
“போடா எல்லாம் விட்டு தள்ளு,
பழசை எல்லாம் சுட்டு தள்ளு
புதுசா இன்று பொறந்தோமுண்ணு எண்ணி கொள்ளடா”
(இருவரும் ஒப்பந்தம் செய்திருக்கின்றார்கள், ஆனால் அது பன்னீருக்கும் பழனிச்சாமிக்கும் உள்ள ஒப்பந்தம் போல மகா ரகசியம்)