தனிபெரும் இயக்குனரான அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்
தமிழ்சினிமாவில் நிறைய குப்பை இயக்குனர்கள் வருவார்கள், அவர்கள் மத்தியில் சினிமாவினை புரட்டிபோடும் இயக்குனர்கள் எப்பொழுதாவதுதான் வருவார்கள்
அவரின் இயற்பெயர் அலெக்ஸாண்டர், தன் ஆசிரியர் ஒருவரின் பெயரான மகேந்திரன் எனும் பெயரை சூட்டிகொண்டு சினிமாவுக்கு வந்தார்
வசனகர்த்தாவாகத்தான் அறிமுகமானார் சிவாஜியின் தங்கபதக்கம் உட்பட பல படங்களுக்கு அவர்தான் வசனம்
சினிமா என்பது தமிழக நாடக வடிவின் அடையாளம், நாடகத்திற்கு மிக முக்கிய மூலம் கதை
அந்த கதை அமைய ஒரு இயக்குநர் நல்ல வாசிப்பாளனாக இருக்க வேண்டும், அவனின் இதயத்தை ஒரு நாவலோ கதையோ பாதித்துவிட்டால் அதுவே அற்புதமான படமாக அமையும்
தன் மனதை பாதித்த அந்த கதையினை படமாக எடுத்தார்
அப்படி முதல் படமான முள்ளும் மலரும் படத்தில் கவனிக்கபட்டார் மகேந்திரன்
ரஜினி எனும் மகத்தான நடிகனை பாலசந்தர் படங்களுக்கு பின் திரையில் ஜொலித்து காட்டிய படம் அது
பாசம், வில்லத்தனம், இயலாமை, கோபம், தன்மானம் என ஒவ்வொரு உணர்ச்சியினையும் அட்டகாசமாக செய்திருப்பார் ரஜினி
அந்த கதை பாசமலர் படதின் தழுவல் என்றாலும் பின்னாளைய காதலுக்கு மரியாதை படம் இதன் தழுவல்
இன்று பார்த்தாலும் பலமுறை பார்க்க தூண்டும் படம் அது
மகேந்திரனுக்கு மங்கா அடையாளமாக அமைந்தது “உதிரி பூக்கள்”, அது புதுமை பித்தனின் கதை என்றாலும் தன் அட்டகாசமான வசன இயக்கத்தால் அதை உன்னத படமாக்கினார் மகேந்திரன்
தமிழ் சினிமாவின் முதல் தரமான பத்து படங்களில் அது எல்லா காலமும் ஒன்று
பெண்களின் வலியினை உரக்க சொன்ன படம் அது “நீ நோயாளி அதனால் இரண்டாம் திருமணம் செய்ய போகின்றேன்” என கணவன் சொல்ல
மனகுரலாக “இதையே நான் சொல்லியிருந்தால்” என அந்த நாயகி முகத்தைகாட்டி வசனம் வந்தபொழுது தமிழகம் அதிரத்தான் செய்தது
அதிலும் கடைசி காட்சியில் வில்லனை ஊர்கூடி கொல்ல போகும் நேரத்தில் வில்லன் சொல்வான் அல்லவா?
“நீங்கள் எல்லாரும் நல்லவர்களாக இருந்தீர்கள், என் பாவச்செயலால் உங்களை என்னை கொல்லும் அளவு கெட்டவர்களாக்கிவிட்டேன்
என்னை நீங்கள் கொன்று கொலைகாரர்களாக வேண்டாம், நானே செத்துவிடுகின்றேன்”
எப்படிபட்ட காட்சி அது, உலக சினிமாக்கள் எல்லாம் பார்த்து கைதட்டிய ஒப்பற்ற காட்சி
காந்தியின் மண்ணில் இருந்து அட்டகாசமான படம் என உலகம் கொண்டாடிய காட்சி அது
அப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் இன்றும் திரைகல்வியில் பாலபாடம் , இச்சமூகம் பெண்மையினை எப்படி நோக்கும் என்பதற்கு அப்பெண்ணின் மேல் விரலை கூட பதிக்காமல் பூட்டிய அறையில் இருந்து வெளிவரும் அந்த வில்லன் பாத்திரம் மிக நுண்ணிய காட்சி ,
ஆனால் கொடுக்கும் வலி மிக அதிகம்
தன் படங்களின் காட்சியால் வலிகொடுத்தவர் அந்த மகேந்திரன், அப்படி ஒரு திறமை அவருக்கு இருந்தது
மிக சுருக்கமான வசனங்கள், ஆனால் முகபாவனையிலே விளங்கும் உணர்வுகள் என புதுபாணி அவரால் உருவானது, பின்னாளைய மணிரத்னம் அதை பிடித்து கொண்டார்
ஜாணி படத்தில் ரஜினி ஸ்ரிதேவி என இருவரின் நடிப்பினையும் அற்புதமாக வெளிகொண்டுவந்திருந்தார் மகேந்திரன்
அவர் படத்தின் பாடல்கள் காலத்தை வென்றவை, வசனங்களும் அப்படியே
நல்ல ரசிகனுக்கே இதெல்லாம் சாத்தியம், மனிதர் ரசித்து படமெடுத்திருக்கின்றார்
பல படங்களுக்கு வசனம், சில தொலைகாட்சி தொடர் என அவர் எழுதினாலும் சினிமாவில் அவர் இயக்கிய படங்கள் சொற்பமே
பன்றி பல குட்டி இட்டாலும் யானை ஒன்றுதானே இடும், அப்படி பட்ட இயக்குனர் மகேந்திரன்
சாணக்கியனே ஒரு புத்தகம்தான் எழுதினான், ஷாஜகான் ஒரு மாளிகைதான் கட்டினான்
திறமையானவன் நிலைக்க ஒரு அடையாளம் போதும்
சிலபடங்களில் நடித்தும் இருக்கின்றார் மகேந்திரன்
அந்த மகேந்திரன் இன்று இல்லை, காலமாகிவிட்டார் அவருக்கு ஆழ்ந்த அஞ்சலி
தமிழ் சினிமாவுக்கு புது இலக்கணம் வகுத்த அவருக்கு உலகெல்லாம் வரவேற்பும் இருந்தது
ஈழத்து புலி பிரபாகரனே அவரை வரவேற்று உபசரித்து கதை கேட்ட காலமும் இருந்தது, அதைபற்றி மகேந்திரன் சொன்னதுதான் அங்கிள் சைமன் முதுகுக்கு என்றைக்கும் சவுக்கு
மறைந்த ராமசந்திரனுக்கு மகேந்திரன் மேல் மரியாதை இருந்தது, அதுவும் முள்ளும் மலரும் வெற்றிக்கு பின்னால் ரஜினி மகேந்திரன் பக்கம் செல்லாமல் பாதுகாக்கும் தேவையும் இருந்தது
இதனால் மகேந்திரனை கட்டிபோட ஒரு ஒப்பந்தம் செய்தார் ராமசந்திரன் “பொன்னியின் செல்வன்” கல்கி கதையினை தன்னை வைத்து எடுக்கும்படி கோரிக்கை விடுத்தார்
ராமசந்திரனின் ஆசை எங்கிருக்கின்றது பார்த்தீர்களா?
அப்படி ஒன்று நடந்திருந்தால் நாடு தாங்குமா? ஆனால் ராமசந்திரன் திரும்ப நடிக்க முடியாதபடி மத்திய அரசு தடுத்ததால் அந்த ஆபத்து நீங்கியது
சிவாஜிகணேசனுக்கு தங்கபதக்கம் படத்திற்கு மங்கா வசனம் எழுதியவர் என்ற வகையில் ராமசந்திரனுக்கு அவர்மேல் வன்மமும் இருந்தது
மகேந்திரனும் தப்பினார்
அன்று ராமசந்திரனிடம் தப்பிய மகேந்திரன் இப்பொழுது எமனிடம் தப்பமுடியவில்லை
அவருக்கான காலம் முடிந்துவிட்டது ஆனால் அவரின் படைப்புகளுக்கான காலம் முடிவதே இல்லை
அந்த கலைஞனின் மாபெரும் வெற்றி அது
தனிபெரும் இயக்குனரான அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்
அந்த முள்ளும் மலரும் கிளைமேக்ஸும், அந்த உதிரி பூக்கள் கிளைமேக்ஸும் கண்ணுக்குள் வந்து போகின்றது
அந்த ஷோபா கடைசி காட்சியில் “அண்ணே…” என கதறி அழுது ஓடிவருவார் அல்லவா?
அப்படி அழ தோன்றுகின்றது