தமிழை ஆண்டாள்

இந்தியாவின் இலக்கிய உலகம் இனிமையானது, அங்கு முத்திரையிட்ட கவிஞர்களும் புலவர்களும் ஏராளமானோர் உண்டு எனினும் வெகுசிலரே தனித்து நின்றார்கள்

காளிதாசன் வர்ண‌னைகளால் ஜொலித்தான், கம்பன் உவமைகளால் உயர்ந்தான், இளங்கோ தன் அருவிபோன்ற தமிழால் இனித்தான்

ஒளவையும் வள்ளுவனும் தங்கள் ஞானபோதனையால் நின்றார்கள்

இந்த வரிசையில் வந்து நிற்பவள் அந்த ஆண்டாள், அவளின் பாடலெல்லாம் ஏக்கத்தை கொடுப்பவை, பெரும் எதிர்பார்ப்பில் வந்த ஏக்கம் அந்த ஏக்கத்தில் வந்த கலக்கம், அந்த கலக்கத்தில் அவ்வப்போது அவளே சொல்லிகொள்ளும் ஆறுதல், அந்த ஆறுதலை தேடி அவள்பாடும் பாடல் என ஆண்டாள் தனித்து நிற்கின்றாள்

அவள் ஆழ்வார்களில் தனிபிறப்பு, ஆழ்வார்களில் ஒரே பெண் பிறப்பு, ஆனால் அந்த பாடலும் சுவையும் அழகும் உருக்கமும் ஏக்கமும் எந்த பக்திவரிகளுக்கும் குறைந்தது அல்ல‌

மாணிக்கவாசகர் உருக்கமாக பாடினார் என்றால் அந்த உருக்கத்தை தன் ஏக்கத்தால் அழகாக சமன் செய்கின்றாள் ஆண்டாள்

அவளின் வாழ்வும் தவமும் பாடலும் அவள் ஒரு அவதாரம் என்பதை எளிதாக உணரவைக்கின்றது

பெரியாழ்வார் பாண்டிய மன்னனை வாததில் வென்றதும் அந்த பணத்தில் அவர் ஒரு நந்தவனம் அமைப்பதும் ஆண்டாள் வருகைக்கான முன்னோட்டமாகின்றது, அந்த நந்தவனத்தில்தான் ஆண்டாளை கண்டெடுக்கின்றார் பெரியாழ்வார்

பெரியாழ்வாரின் தமிழும் அவர் காட்டிய கண்ணனும் ஆண்டாளுக்கு உணவும் சுவாசமுமாகின்றன அந்த இரண்டிலுமேதான் அவள் வாழ்கின்றாள்

அக்காலத்தில் சிறுவயதிலே திருமணங்கள் நிச்சயிக்கபடும் பொழுது கண்ணனே தன் கணவன் என அதிர வைக்கின்றாள் ஆண்டாள், அந்த வயதிலே கண்ணன் மேல் அவளுக்கு அவ்வளவு ஈர்ப்பாகின்றது, அந்த ஈர்ப்பு காதலாகின்றது

அந்த காதல்தான் அவளை அவ்வளவு பாடல்களை பாடவைக்கின்றது

அவள் பக்தி எப்படியிருந்தது என்றால் கண்ணனுக்கு கட்டிய பூமாலையினை கண்ணனுக்கு சூடினால் அவன் கழுத்தில் நார்களோ இல்லை வேறு முடிச்சுகளோ குத்துமோ என கவலையுறும் அளவு இருந்தது

அதனால் அவள் அந்த மாலையினை தான் சூடி உணர்ந்து, வலியில்லை என்றபின்புதான் கண்ணனுக்கு அணிவித்தாள்

அந்த அளவு அவள் பக்தியில் மூழ்கியிருந்தாள்

அந்த மாலையில்தான் யசோதையின் தாம்பு கயிறுக்கு பின் கண்ணன் சிக்கினான், அன்பால் அவன் அவள் மாலையில் சிக்கினான்

அதனால்தான் தொட்டுபார்த்த உணவும், சூடிகொண்ட மலரும் பகவானுக்கு படைக்கபட கூடாது எனும் விதியினையும் மீறி அவளை “சூடி கொடுத்த சுடர்கொடி” என்றாக்கினான்

கண்ணனை நோக்கி ஏங்கி ஏங்கி பாடிய ஆண்டாள், அவன் உத்தரவுபடியே திருவரங்க ஆலயத்தில் அவன் சன்னதியில் காயத்தை காற்றில் கரைத்து பாற்கடல் ஏகினாள்

அவள் வெறும் 15 அல்லது 16 ஆண்டுகள்தான் இப்பூமியில் வாழ்ந்திருக்கின்றாள் ஆனால் அந்த குறுகிய வாழ்வுக்குள் கால காலத்துக்கு நிற்கும் காவியங்களை தந்திருக்கின்றாள்

அவள் பாடல்கள் மார்கழி மாதம் பாவைக்கு பாடபடும் பாடல்கள் என்றாலும், தை முதல் பங்குனி வரை காமதேவனுக்கு பாடபடும் பாடல்கள் என்றாலும் அதாவது காதல் ஏக்கத்தில் பாடபட்ட பாடல் என்றாலும் அது முழுக்க தத்துவம், முழு ஆன்மீக ஞான தத்துவம்

காதலனை நோக்கி காதலியாக அவள் பாடியதெல்லாம் ஒரு ஆன்மா இறைவனை நோக்கி ஏங்கிய தத்துவம்

இன்னும் ஆழமாக கண்டால் கீதையின் போதனையினை மிக சுருக்கமாக காதலாக சொன்ன பாடல்கள் அவை

கீதையில் அர்ஜூனனுக்கு கண்ணன் சொன்ன கீதை குரு சிஷ்ய பாவம், அப்படி ஏகபட்ட கீதைகள் உண்டு. உத்தவ கீதை உள்ளிட்ட ஒவ்வொரு கீதைகள் உண்டு

அவ்வகையில் வாழ்வின் ஞான போதனையினை காதல் காடல்களில் கீதையின் சாரத்தை கலந்து தந்தவள் ஆண்டாள்

கண்ணனின் வாழ்வும் பெருமையும் மட்டுமல்ல, காதல் எனும் பெயரில் உன்னத பக்தி மட்டுமல்ல இன்னும் பெரும் வரலாறெல்லாம் அவள் பாடலில்தான் பொதிந்து கிடக்கின்றன‌

அவள் பாடல்கள் வெறுமனே கன்ணன் பெருமையினையும் அதனால் ஆண்டாள் உருகியதையும் சொல்லவில்லை, அக்கால இந்து தமிழகத்தை கண்முன் நிறுத்துகின்றாள்

மார்கழி மாதம் அன்று எப்படி சிறப்பிக்கபட்டது என்பதை அழகாக சொல்லும் அவள் பாடல்தான், தைமாதம் உழவர் திருவிழாவும் அல்ல உழவனுக்கான நாளும் அல்ல என்பதை உறுதியாக தெரிவிக்கின்றாள்

தை மாதம் என்பது காமதேவனுக்கான பண்டிகை என்பதையும் அப்பொழுது கரும்பும் மலரும் பொங்கலும் வைத்து வழிபடுவது இந்துபெண்கள் வழமை என்பதையும் அழகாக எழுதிவைத்தாள்

காமதேவன் என்றவுடன் திராவிட பகுத்தறிவில் இடுப்புக்கு கீழும் கழுத்துக்கு கீழும்தேடி செல்லுதல் கூடாது, அது அவர்கள் கண்ட காமதேவன்

மாறாக உண்மையான காமதேவன் என்பவன் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஆத்மார்த்தமான பிணைப்பை ஏற்படுத்தும் சக்தி கொண்டவன், கணவன் மனைவி இடையே அந்த ஆத்மார்த்தமான அன்பு வேண்டும் பிணைப்பு வேண்டும்

அந்த வரத்தை வழங்குபவன் காமதேவன் என்றானான், அவனை வணங்கிஅந்த வரத்தை பெறுவது காமனின் நோன்பாய் இருந்தது

ஆண்டாளும் கண்ணனை நினைந்து அந்த நோன்பை இருந்தாள், அப்பொழுது அவள் பாடியதுதான் நாச்சியார் திருமொழி

அவள் அந்த காமன் நோன்புடன் இன்னொரு சூசாகமான தகவலும் சொல்கின்றாள், அது அன்று வழமையில் இருந்த பலராமன் வழிபாடு

கண்ணனும் பலராமனும் சாதாரணம் அம்சம் அல்ல, அவர்கள் அடிதட்டு மக்களான மேய்ப்பர்களையும் உழவர்களையும் ராஜ்ஜியம் அமைத்து காத்து வாழவைத்தவர்கள்

இதனால் பலராமனின் ஆயுதம் ஏர் கலப்பை என்றானது

கண்ணனை நினைத்து வணங்கும் இடத்திலெல்லாம் பலராமனும் வணங்கபட்டான், இந்தியா முழுக்க பலராமன் வழிபாடும் இருந்தது. அந்த பலராமனை தைமாதம் நன்றியோடு வணங்குவது இந்துக்கள் இந்துவிவசாயிகளின் வழமையாய் இருந்தது

இன்றும் யாதவருக்கு கண்ணன் போல உழவருக்கு பலராமன் இருந்தான்

சங்க இலக்கிய பரிபாடலும் இன்னும் பலவும் அதனை விளக்குகின்றன, பனைமர கொடியுடன் அவனை வணங்குதல் வழமையாய் இருந்தது

பனைக்கொடியையும் கலப்பையையும் ஆயுதமாகக் கொண்ட பலராமனுக்கு மதுரையில் கோயில் இருந்ததை “மேழிவனுயர்த்த வெள்ளை நகரமும் என்ற வரிகள் மூலம் இளங்கோவடிகள் எடுத்துக்காட்டுகிறார்.

இன்றும் சுசீந்திரம் கோவில் முதல் சென்னை பேராலயங்கள் வரை பலராமனுக்கு சிலைகள் உண்டு

அந்த வரலாற்றைத்தான் இன்று தமிழர் திருநாள், உழவன் திருநாள் என திசைமாறிவிட்ட அல்லது 18ம் நூற்றாண்டுக்கு முன்பு எந்த இடத்திலும் இல்லாத பொங்கல் விழா, தமிழன் விழாவினை அது இந்து பண்டிகை என்றும் காமதேவனுக்கும் பலராமனுக்குமான விழா என்பதையும் அழகாக அவள் பாடல் தெரிவிக்கின்றது

ஆம், காமன் எனும் அணங்க தேவனுக்கு கரும்பு படைத்தும் உழவர்கள் காவலனான பலராமனுக்கு கலப்பை வைத்து வழிபட்டதும், எல்லா உணவுக்கும் தாயான சூரியனை வழிபட்டதுமே அன்றைய மரபு

அதை இக்காலத்தில் “தமிழ், தமிழர்” என திசைதிருப்பினாலும் அதன் மூலம் இந்து பண்டிகை என்பதை அவளே தன் பாடல்களில் தெரிவிக்கின்றாள்

அப்பாடல்களில் தத்துவம் உண்டு, அழகு தமிழ் உண்டு, ஆன்மீகம் உண்டு, விஞ்ஞானம் உண்டு, அதிசய தகவல் உன்டு, இன்னும் அக்கால நடைமுறை அத்தனையும் உண்டு

அதுவும் அந்த தமிழ் அவளைதவிர யாருக்கும் சாத்தியமில்லை

அவள் அழுதால் நாம் அழுவோம், அவள் சிரித்தால் நாமும் சிரிப்போம், அவள் ஏங்கினால் நாமும் ஏங்குவோம், அவள் கொஞ்சினால் நாமும் கொஞ்சுவோம்

அப்படி ஒரு தமிழும் அந்த தமிழில் தன் மன ஏக்கத்தை ஆன்ம தவிப்பினை அவள் சொன்னதுபோல் யாரும் சொல்லியிருக்க முடியாது

தமிழின் அருமையினை சொல்லவந்தவள் ஆண்டாள், ஏக்கமும் உருக்கமுனான தவிப்பை தமிழ்மொழி தவிர இன்னொரு மொழியில் சொல்ல வழியில்லை என பரம்பொருள் அனுப்பிய அவதாரம் அந்த ஆண்டாள்

அவள் பாடல்களெல்லாம் ஆன்மீக தத்துவங்கள், காதல் எனும் பெயரில் சொல்லபட்ட ஞான ரகசியங்கள்

அத ஆழ்வாருக்கு, தனி தமிழ் புலவருக்கு, கீதையினை காதலாய் சொன்ன மேதைக்கு இன்று ஆடிபூரம் எனும் அவதார பெருநாள்

தமிழும், அதன் அழகும், இந்து தமிழர் வாழ்வின் பாரம்பரியமும், இந்துக்களின் ஆன்மீகமும் அவள் பாடல்களிதான் முழுக்க இருக்கின்றன‌

இந்த ஆடிபூர நாளில் அவளை நோக்கி வணங்குவது ஒவ்வொரு இந்துக்களின் நன்றி கடமையாகின்றது, காலத்தால் ஏற்படும் சவால்களையெல்லாம் இந்துமதம் அவள் பாடல்களாலும் அவள் பெயராலும் எதிர்கொண்டு வெற்றி பெறுகின்றது

இந்துமதம் பெண்ணடிமை மதம் என்றால் அங்கே ஆண்டாள் முன்னுக்கு வருவாள்

இந்துசமூகம் பெண்களை படிக்கவைக்கவில்லை என்றால் அங்கே அவள் வருவாள், பெண்கள் வழிபட உரிமை இல்லை என்றால் அவள் வருவாள், ஆச்சாரமும் அனுஷ்டாங்கமும் மூடநம்பிக்கை என்றால் “சூடி கொடுத்த சுடர்கொடியான” அவள் வந்து வாதிடுவாள்

ஆன்மா இறைவனை நோக்கி எவ்வடிவில் தவமிருந்தாலும் அது காதல் என்றாலும் பாசம் என்றாலும் பரம்பொருள் இறங்கி வந்து தன்னோடு அணைத்துகொள்வான் என்பதே ஆண்டாள் வாழ்வு

ஆடிபூரத்தில் உதித்த மஹாலஷ்மியும் உமாதேவியும் மட்டுமல்ல அந்த சக்தியாய் அவதரித்த ஆண்டாளும் தன் தவத்தால் இறைவனை அடைந்தாள் என்பதுதான் அவள் பக்தி வாழ்வின் முத்தாய்ப்பு அவள் ஒரு அவதாரம் என்பதை சிறப்பித்து சொல்லும் நிகழ்வு

கீதையினை காதல்பாட்டு வடிவிலும் ஏக்கவடிவிலும் சொல்ல வந்த அந்த ஞானமகளுக்கு, கண்ணனை பாடவே அவதரித்த அந்த ஞானபெருமகளுக்கு, அழகு தமிழில் உருக்கமாக பாடிய பக்தி புலவரான பெருமகளுக்கு ஆடிபூரநாளில் அஞ்சலி செலுத்துவது ஒவ்வொரு தமிழ்பேசும் இந்துவும் பெற்ற பெரும் பாக்கியம்