நவம்பர் 10 திப்பு சுல்தானின் பிறந்தநாள், அன்று சிறப்பாக முன்பு தேசம் கொண்டாடும், இப்பொழுது இந்த எடியூரப்பா போல பலர் கொண்டாட கூடாது என கிளம்பிவிட்டார்கள், உடனே பக்தாஸும் பின் செல்கின்றது. சுயமாக யோசிக்காத கோஷ்டி அது
நவம்பர் 10 நமக்கு மிக முக்கியமான பணி இருப்பதால், அந்த பக்தாஸுக்கு இப்பொழுதே சில விஷயங்களை சொல்லிவிடலாம்
இந்தியாவில் முதன் முதலில் பிரிட்டிசார் முடிசூட்டிகொண்ட இடம் கல்கத்தா, அங்கிருந்தேதான் படை நகர்த்தலை தொடங்கினார்கள்.
எந்த இடத்திலும் அவர்கள் பெரிதாக திணறியதாக சரித்திரம் இல்லை, அசால்ட்டாக அடித்துவிட்டு, முன்னேறிகொண்டிருந்தார்கள்,
வடக்கே பெரும் எதிர்ப்புகள் அவர்களுக்கு அன்று இல்லை. அடிக்கவேண்டும், மிரட்டவேண்டும் அல்லது லஞ்சம் கொடுக்கவேண்டும் அவ்வளவுதான், கம்பெனி கொடி பறக்கும்.
கிளைவ் காலம் வரை அப்படித்தான் இருந்தது, கிளைவிற்கு பின் அவர்களுக்கு பெரும் எதிர்ப்பு , மாபெரும் எதிர்ப்பு இந்தியாவில் வந்தது
ஆம், இந்தியாவில் அவர்கள் சந்தித்த ஒரு பெரும் சவால் மாவீரன் ஹைதர் அலியும், அவரின் மகன் மைசூர் சிங்கம் திப்புசுல்தானும், உண்மையில் ஹைதர் அலி சாதாரண பணியாளர்தான், ஆனால் சீர்கெட்டு கிடந்த மைசூர் சாம்ராஜ்ய நிர்வாகத்தை, ஒரு நாட்டுபற்றாளனாய் நின்று காப்பாற்ற அரியணை ஏறி அதனை செய்தும் காட்டினார்.
ஆங்கிலேயருக்கு பெரும் சிம்மசொப்பணமாய் இருந்தவர் ஹைதர் என்றால், அவர்களுக்கு புலிசொப்பனமாக இருந்தவன் மாவீரன் திப்பு சுல்தான். அவனது ஆட்சி அப்படி, நிர்வாகம் அப்படி,எல்லாவற்றிற்கும் மேல் அவரது மதசகிப்புதன்மை அப்படி.
திப்புவின் மீது சில சர்ச்சைகளை சொல்வார்கள், அதாவது தஞ்சாவூர் பக்கம் மடைகளை உடைத்தான், கொடூரன் என ஏராளம் உண்டு, அந்த கதை வித்தியாசமானது
அதாவது அன்றைய தஞ்சாவூர் அரசர்களிடம் ஒரு பழக்கம் இருந்தது, ஆடிமாதம் காவேரி பொங்கிவந்து டெல்டா பயிர்களை அழித்தால் அதற்கு மைசூர் சமஸ்தானம் நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும், இந்த கொடுமையினை வெள்ளையர் தூண்டிவிட்டனர்
பெரும் நஷ்ட ஈடுகேட்டு மைசூர் திப்புவினை படாத பாடுபடுத்தியதால் திப்புவின் படைகள் சில இடங்களில் கோபம் காட்டியதே தவிர, மதவெறியில் அல்ல
அப்படி காவேரி நீருக்கு நஷ்டம் கேட்ட கதை தொடர்ந்துதான் விஸ்வேரய்யா கிருஷ்ண்டராஜ சாகர் அணையினையே கட்டினார், அன்று நஷ்ட ஈடு கேட்டுவிட்டு காவேரி காய்ந்துவிட்டது என நாமே அழுகின்றோம்.
இன்னும் உண்டு, அக்கம் பக்கம் இந்து சமஸ்தானங்களோடு வம்பிழுத்தான் என்பார்கள், அது வம்பு அல்ல வெள்ளையனுக்கு அவர்கள் சந்தோஷமாக வரிகட்டி திப்புவினையும் கட்ட சொன்ன எரிச்சல்.
விஷயம் காவேரி அல்ல , பக்கத்து சமஸ்தானம் அல்ல திப்பு சுல்தான்
ஹைதருக்கு பின்னால் மைசூர் அவ்வளவுதான் என இளம் திப்புவினை எடைபோட்டு வந்தனர் வெள்ளையர்.
முதல் மைசூர்போரில் அடிபடும்பொழுதே ஆங்கிலேயருக்கு தெரிந்தது, “இவன் வேறமாதிரி” என்று,
இரண்டாம் மைசூர் போரில் வெள்ளையனுக்கு திப்பு உயிர்பிச்சை அளித்தபொழுதே தெரிந்தது இவன் வெல்லமுடியாதவன் என்று.
அப்படித்தான் இருந்தார் திப்பு, பிரென்ஞ் மாவீரன் நெப்போலியன் தன் காலத்தில் ஒரு சகவீரனை மதித்து ராணுவ உதவி அளிக்க தயாராக இருந்தார் என்றால் அது திப்பு மட்டுமே,
காரணம் வீரனின் பெருமை வீரனுக்குத்தான் தெரியும்.
ஆனால் ஐரோப்பாவில் பலபோர்களில் அவர் பிசியாக இருந்ததால் உதவிக்கு வரமுடியவில்லை.
கொஞ்சமும் சோர்ந்துபோகாத திப்பு சுல்தான் மூன்றாம் மைசூர் போரில், 500 அடிவரைபாயும் ஏவுகனைகளை பயன்படுத்தி ஆங்கிலேயரை அலறவிட்டார், உண்மையில் அந்தபோரோடு கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவினை விட்டே ஓடும் நிலைக்கு தள்ளபட்டது, திப்புவின் வெற்றி நிலை அப்படி.
படைகளால் வெல்லமுடியாத அம்மாவீரனை வேறுமாதிரி அடக்க எண்ணினர் வெள்ளையர், அதாவது அவன் இஸ்லாமியனாக இருந்தாலும் எல்லா மதங்களையும் நேசித்தார்,மதித்தார். புகழ்பெற்ற சிரிரங்கபட்டினம் ஆலயத்திற்கு அவர் அள்ளிகொடுத்த நகைகளும், சிலைகளுமே அதற்கு சாட்சி.
கிட்டதட்ட 200 இந்து ஆலயங்களுக்கு அவர் நன்கொடை அளித்ததும் வரலாறு. ஒரு மிக சமத்துவமான ஆட்சியினை செய்துகொண்டிருந்ததுதான் அவர் பலம், அவரது படையில் சரிக்குசரி இந்துக்களும் இருந்தனர்.
இங்குதான் வெள்ளையர் சிந்தித்து இந்து முஸ்லீம் வேற்றுமையினை வளர்த்தனர், பல வழிகளில் அவர் இந்துவிரோதி என சித்தரிக்கபட்டு, இறுதி போரில் தான் மிக நம்பிய தனது திவானால் வஞ்சகமாக வீழ்த்தபட்டார்.
சுருக்கமாக சொல்வதென்றால் திப்பு வீழ்ந்தபின் வெள்ளையன் வாய்விட்டு சொன்னான்” இனிமேல்தான் இந்தியா நமக்கானது”
இன்றுவரை அவர் கழுத்தில் பாய்ந்த குண்டினை செலுத்தியது வெள்ளையனா? என்ற சந்தேகம் உண்டு.
ஆனால் இந்த வெற்றியில் வெள்ளையன் ஒரு பாடம் படித்திருந்தான். இந்தியாவினை துப்பாக்கி முனையில் ஆள்வது கடினம், ஆனால் இந்து முஸ்லீம் பிரிவினையில் ஆள்வது மகா சுலபம்.
அந்த சிரிரங்கபட்டிண களத்தில் வெள்ளையன் படித்தபாடம்தான் பின்னாளில் 150 வருடம் அவன் இங்கு ஆளவும், இந்த தேசம் இன்று 3 ஆக உடையவும், இன்று முகநூல் வரை அந்த பிரிவினை வளர்ந்து நிற்கவும் காரணம்.
நிச்சயமாக அவன் மாவீரன், இந்த மண்ணிற்கு கிடைத்தவரம். இன்றும் அவன் பயன்படுத்திய ஏவுகனையின் வடிவம் அமெரிக்காவில் உண்டு.
ஏவுகனை உலகின் பிதாமகன், ஹிட்லரின் வளர்ப்பான வான் ப்ரவுண் நெற்றியில் அடித்தார்போல் சொன்னார் ” நான் ஒன்றும் கண்டுபிடிப்பாளன் அல்ல, திப்புசுல்தான் எனும் இந்தியனின் கண்டுபிடிபினை மேம்படுத்தினேன்”.
அதனாலதான் அமெரிக்கன் அப்துல்கலாமினை அப்படி சொன்னான், இவர் “இரண்டாம் திப்புசுல்தான்”.
இன்று மனசாட்சியே இல்லாமல் அவரை திட்டி தீர்க்கின்றார்கள், அந்தோ பரிதாபம். இவர்களுக்கும் இறுதியுத்ததில் வெள்ளையருக்கு கதவினை திறந்துவிட்ட அந்த தேசதுரோகிக்கும் என்ன வித்தியாசம் இருக்கமுடியும்?
மாவீரன் மருதநாயகம், மாவீரன் திப்புசுல்தான்,சீக்கியர்களின் ரஞ்சித் சிங் இவர்கள் எல்லாம் வெள்ளையரை எதிர்த்த அடையாளம் அல்லவா? இவர்கள் இந்துக்கள் இல்லை என்றால் இந்தியர்கள் இல்லை என்பது நிச்சயம் கண்டிக்கதக்கது.
தேசவிரோதிகளை எல்லாம் மதத்தின் பெயரால் கண்டிக்க தயங்குபவர்களுக்கு, எல்லா மதத்தினரையும், எல்லா ஆலயங்களையும் மிக சமமாக கருதி, குறிப்பாக இந்து ஆலய அடையாளங்களை பாதுகாத்த அந்த மாவீரனை பழிக்க ஒரு தகுதியும் இருப்பதாக உண்மையான தேச அபிமானிகள் நினைக்கவே மாட்டார்கள்.
பெரும் வீரனாயினும், ஒரு பக்கபலம் இல்லாமல் போரிட்டான் திப்பு. மராட்டியர் உதவிக்கு வரவில்லை, மலையாள மன்னர்களும் உதவிக்கு வரவில்லை, அப்படி ஒற்றுமையாக வந்திருந்தால் அன்றே வெள்ளையன் கதை முடிந்திருக்கும், இந்திய வரலாற்றில் பெரும் தவறு இது.
தூரத்தில் நெப்போலியன் உதவ தயாராக இருந்தும், பக்கத்து நாட்டுகாரர்கள் முகம் திருப்பி வெள்ளையரோடு கைகோர்த்தார்கள் அல்லவா? இங்குதான் இந்தியாவின் தலைவிதி திருத்தி எழுதபட்டது.
அந்த தவறினை செய்துதான் இந்நாடு இப்படி பின் தங்கிவிட்டது, இன்னும் அவன் இஸ்லாம் என்றே சொல்லி அதே தவறினை செய்வீர்களாயின் இந்நாடு இன்னும் 100 வருடம் நிச்சயம்
பின்னோக்கி சென்று, ஆப்கன் நிலையினைத்தான் அடையும்.
இவர்கள் சொல்வதனால் எல்லாம் அம்மாவீரனின் புகழ் மங்காது. இந்தியாவின் புலி என வெள்ளையன் எழுதிவைத்த சரித்திரமும். அவன் அடக்க சடங்குகளில் வெள்ளையர் காட்டிய உயர் மரியாதையும் காலத்தின் கல்வெட்டு பக்கங்கள்.
அவன் உருவாக்கிய அந்த ஏவுகனை அவனின் அறிவுதேடலுக்கு பெரும் சாட்சி.
அவ்வளவு ஏன் அவர் இறந்த பின் அந்த வாளினை வீசிபார்த்தோர் ஆச்சரியத்தில் உறைந்தனர், அது பல மூலிகை இன்னும் பல உலோகளால் ஆன எடை மிக குறைந்த மகா உறுதியான வாள், அதிலே அவனின் ஆற்றல் தெரிந்தது.
திப்புசுல்தான் மங்கா புகழ்பெற்ற மாபெரும் உச்ச வரலாற்று நட்சத்திரம்,
விஜய்மல்லையா மீது ஆயிரம் விமர்சனம் இருக்கலாம், ஆனால் வெள்ளையன் பாதுகாத்த திப்புவின் வாளினை அவர்தான் ஏலத்தில் எடுத்து இந்தியா கொண்டுவந்தார்..
பாகுபலி போல மிக பிரமாண்டமாக எடுக்க கூடிய இந்திய கதைகளில் முதலிடத்தில் இருப்பது ஹதர் அலி, திப்பு சுல்தான் கதைதான், நிச்சயமாக அது மிக மிக விறுவிறுப்பான வரலாறு, சில படங்கள் வந்தன ஆனால் பெரும் தாக்கமில்லை.
மருதநாயகம் படம் வந்தால் கூட ஹைதர் அலி நிச்சயம் வருவார், காரணம் ஹைதர் அலியினை ஒருமுறை வெள்ளையனுக்காக மருதநாயகம் தோற்கடித்திருந்தான், அவனும் வீரனல்லவா?
ஆனால் பின்பு மருதநாயகம் வெள்ளையனை எதிர்க்கும்பொழுது ஓடி வந்து உதவிகரம் நீட்டியவர் ஐதர் அலி, அவரின் பெருந்தன்மை அது, கொண்டாடபடவேண்டிய விஷயம் அது
பாகுபலி போல, ஜோதா அக்பர் போல எடுத்தால் மிக நன்றாக இருக்கும், ஒருவகையில் அது ஹைதர் அலி திப்புவிற்கான நன்றிகடன் கூட
ஆனால் இத்தேசத்தில் எடுக்கமுடியும் என நினைக்கின்றீர்கள்? ஒருகாலமும் முடியாது, அதுவும் இன்றிருக்கும் நிலையில் நிச்சயம் முடியாது
நவம்பர் 10, திப்புவின் நினைவுநாள், ஒரு இந்திய மன்னனுக்கு இந்தியராக வீரவணக்கம் செலுத்தலாம்.
இங்கு சிலர் வாள்வாள் என கத்துவதால் அவனின் வாளுக்கான பெருமை கூட மங்காது
வரலாற்றில் நின்றுவிட்ட மைசூர் புலி திப்பு .
[ November 8, 2018 ]