திமுக ஆட்சிக்கு வரணும், ஸ்டாலின் முதல்வராகணும்

இப்பொழுதெல்லாம் அறை நண்பன் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துவிடுகின்றான், எழும்பிய பின் ஐயப்பன் பாடலை ஓட விட்டு ஒரே ஆட்டம்

இதென்ன? ஸ்டாலின் நள்ளிரவிலே முதல்வராகிவிட்டாரா? இல்லை ஸ்டாலினை மோடி ரகசியமாக மாறுவேடத்தில் தேடிவந்து சிக்கிவிட்டாரா என பதறியபடியே கேட்டால் அவனோ ஒன்றுமே சொல்லாமல் ஒரே ஆட்டம்

சாமியே ஐயப்போ என பாடல் ஒலிக்க அவன் உருண்டான், புரண்டான் , சோபாவில் சாய்ந்து கொண்டு குழந்தை போல காலை ஆட்டிகொண்டான் இன்னும் ஏக அழிச்சாட்டியம்

விஷயம் என்னவென்றால் அவன் கார்த்திகை மாதம் சபரிமலைக்கு மாலையிட போகின்றானாம், அதற்கு இப்பொழுதே தயாரிப்பாம், பாலையா நாகேஷிடம் கதை கேட்பது போல அவனின் விரத அனுபவங்களை மெதுவாக கேட்டாயிற்று

லேய் கடும் விரதமா?

அண்ணாச்சி , விரதம்ணா சும்மா இல்ல, கடுங்குளிர்ல குளிக்கணும் 4 மணிக்கு. நான் சரியா 4 மணிக்கு குளிப்பேன் மலேசியா குளிராது, இதனால ஐஸ் கட்டி போட்டு தண்ணிய குளிர வச்சி குளிக்கணும்

அட அப்புறம்?

5 மணிக்கு பூஜை மணி வரை

அப்புறம் விரதம் கடுமையா ஆரம்பிக்கும் கருப்பு உடை மாலை நெற்றில விபூதி செருப்பு கூட போட கூடாது, ஒரு நேரம்தான் சாப்பாடு அதுவும் சொந்த சமையல், தண்ணி கூட வேற இடத்துல குடிக்க கூடாது

அப்புறம்

சுத்த சைவம், வீடெல்லாம் எப்பவும் சாம்பிராணி புகையும், நீர் இந்த குஷ்பு படமெல்லாம் பார்த்துட்டு இருந்தா விரட்டியே அடிச்சிருவேன்

அட வேற‌

சாயங்காலம் மறுபடி குளிச்சிட்டு பூஜை, நைவேத்தியம் பண்ணிட்டு சாப்பிட்டு உடனே தூங்கணும்

நீ இப்பவும் அப்படித்தானடா தூங்குற‌

இல்ல அண்ணாச்சி, பொண்டாட்டிய வீடியோ கால் பாக்குறது இதெல்லாம் கூடாது

வேற‌

நம்ம ஊர்ல பொண்ணுங்க முகத்தையே பார்க்க கூடாது, இங்க எல்லாம் டவுசரோட வரும்,அதெல்லாம் சாமியேன்னு மனச கட்டுபடுத்தி கடந்து போகணும்

அடேய் எவ டவுசரோட வந்தா உன்னக்கென்ன?

ஆமா எனக்கென்ன? சொன்னேன் அண்ணாச்சி அதெல்லாம் கடந்து போகணும்னு

நீ சும்மா இருந்தாலே போதும், அவளுக கடந்து போயிருவாளுக‌

அண்ணாச்சி சும்மா பேசபுடாது

சரி சொல்லு

அப்புறம் ஊருக்கு போகணும் முதல்ல தமிழ்நாட்டு கோவில் எல்லாம் சுத்தணும் திருச்செந்தூர் வரைக்கும்

அப்புறம்

விரதம் முடிஞ்சி சபரிமலைக்கு போகணும், சும்மா இல்ல அண்ணாச்சி கடுமையா இருக்கும்

பம்பையில குளிர்ல 3 மணிக்கு குளிச்சா, பல்லெல்லாம் நடுங்கும்

அப்புறம்

எருமேலிதான் ஆடனும், ஆட்டம்ணா இப்படி ஆடணும்..

அப்புறம் ஆடு இப்போ சொல்லு

அப்புறம் நடக்கணும் சாமி, நீலிமலை வழியெல்லாம் கல்லும் பாறையுமா கிடக்கும் நடக்கணும், நான் அதுலதான் நடப்பேன், கால் கிழிஞ்சி ரத்தமெல்லாம் வரும்

அடேய் பாதை சரியில்லையா?

அதை சரி பண்ண கூடாது அண்ணாச்சி, பக்தன்னா அப்படிததான் இருக்கணும் , சரங்குத்தி தாண்டி கஷ்டபட்டும் மலைய அடைஞ்சி அய்யன தரிசனம் பண்ற சுகம் இருக்கே

அவ்வளவு பெரிய பக்தனா நீ

அண்ணாச்சி 5 வயசு மகளையே சபரிமலைக்கு கூட்டிட்டு போயிட்டு வந்து வளத்துட்டு இருக்கேன், அடுத்தால மகனை கூட்டிட்டு போகணும்

நல்லது

அண்ணாச்சி, அய்யப்பன் அண்ணாச்சி எனக்கொரு ஆசை அண்ணாச்சி

என்னடா?

நம்பியார் அங்க பெரிய மண்டபம் கட்டி போட்டிருக்கார், அப்படி நானும் ஒரு காலத்துல கட்டி கொடுக்கணும், அய்ய்யன் காலத்தை கொடுப்பார் அண்ணாச்சி, எனக்கு இல்லண்ணாலும் என் பரம்பரையில யாராவது கட்டி வைக்க அருள் கொடுப்பார் அண்ணாச்சி

சொல்லும் பொழுது அவன் கண்கள் கலங்கின‌

சரி இவ்வளவு கஷ்டபட்டு விரதம் இருந்து சபரிமலையில‌ என்ன வேண்டிப்ப?

அது வழக்கமான வேண்டுதல்தான் அண்ணாச்சி

என்ன?

திமுக ஆட்சிக்கு வரணும், ஸ்டாலின் முதல்வராகணும்

எப்போடா மலைக்கு போற?

கார்த்திகை மாசம் மாலை போட்டு மார்கழி மாசம்

பம்பையில பெரிய வெள்ளம் வரும்போது போடா பிளீஸ்