திராவிட கட்சிகளை அழிக்க அசுவமேத யாகம் செய்தனர் பாஜகவினர் : செய்தி

திராவிட கட்சிகளை அழிக்க அசுவமேத யாகம் செய்தனர் பாஜகவினர் : செய்தி

எப்படிபட்ட காரியம் இது? இம்மாதிரி விஷயங்களால் சாதிக்கமுடியுமென்றால் பாகிஸ்தானை ஒரு யாகத்தால் சரித்துவிட முடியாதா? இல்லை சீனாவினை ஓட அடிக்க முடியாதா?

இவ்வளவு பெரும் ராணுவமும் அணுகுண்டெல்லாம் எதற்கு?

இல்லை ஒரே யாகத்தால் காவேரி வராதா? இலங்கை தமிழக மீணவர்களுக்கு சாப்பாடு போட்டு அனுப்பாதா? ஏன் இவ்வளவு சர்ச்சைகள்

வீரசிவாஜி இந்த யாகத்தை செய்துதான் இஸ்லாமியரை விரட்டினாராம், எங்கு விரட்டினார்? எங்கும் இல்லை

சிவாஜியின் ராஜ்யம் இந்தியா முழுக்கவா இருந்தது? அவர் பகுதியில் இருந்தது அதுவும் அவர் காலத்திற்கு பின்பு இஸ்லாமியர் ஆட்சிக்கு வந்தது, வெள்ளையன் வந்து மொத்தமாய் பிடித்தான்

இந்த யாகமெல்லாம் நாட்டை காக்குமென்றால் கஜினியும் கோரியும் வந்திருப்பானா? பாபர் வந்திருப்பானா? 
இல்லை ராபர்ட் கிளைவ்தான் நிலைத்திருப்பானா?

விதிக்கபட்டதை தடுக்கும் சக்தி எந்த யாகத்திற்கும் இல்லை.

பெரியாருக்கும் இப்படியான யாகங்களை செய்தார்கள், அவரோ 96 வயதுவரை “மதத்தை நம்புகிறவன் காட்டுமிராண்டி பயல், மதத்தை சொல்பவன் அயோக்கிய பயல்” என பேசிகொண்டே இருந்தார்

இந்த யாகம் உண்மையென்றால் இந்தியா என்றோ வல்லரசாகியிருக்கும், பட்ஜெட் முதல் செயற்கை கோள்வரை எல்லாவற்றையும் யாகமே செய்திருக்கும், எல்லோரும் வாழ்வாங்கு மகாபலி காலத்தில் வாழ்ந்தது போல் வாழலாம்.

இதே யாகங்கள் பல செய்து பிரதமர் பதவி பிடிக்க கிளம்பிய ஜெயலலிதா கல்லறைக்கு சென்றுவிட்டார், அவருக்கு துணை இருந்த சசிகலா சிறையில் இருக்கின்றார். இப்படி செய்தால் பிரதமராகலாம் என ஏமாற்றி யாகம் செய்தவனை மன்னார்குடி குடும்பம் துப்பாக்கி முனையில் தேடிகொண்டிருக்கின்றது

இப்பொழுது எதற்கு யாகமாம், திராவிட கட்சிகள் அழியவாம்

திராவிட கட்சிகளே இல்லாவிட்டாலும் இங்கு பாஜக ஆட்சிக்கு வரவா போகின்றது? அதற்கு விசுவாமித்திரரே யாகம் நடத்தினாலும் முடியுமா?

வேண்டுமானால் ஒரு யாகம் செய்யுங்கள், அக்காலத்தில் தூத்துகுடியில் முத்தெடுக்கும்பொழுது சுறா கடிக்காமல் இருக்க அதன் வாயினை அந்தணர் வேதம் ஓதி கட்டுவார்களாம்

எடுக்கும் முத்தில் 20ல் ஒருபங்கு அவர்களுக்காம், முத்துகுளிப்போர் கரையேறியதும் அந்த கட்டை அவிழ்பார்களாம்

அப்படி யாகம் வளர்த்து இந்த எச்.ராசா தமிழிசை போன்றோரின் வாயினை கட்டுங்கள், தமிழகம் மகா அமைதியாக இருக்கும்