திராவிட திமுகவில் இப்படி வளர்ந்தவர்தான் ராமசந்திரன்
எங்கெல்லாம் அதர்தம் வளருமோ அங்கெல்லாம் அதை அறியாமல் தர்மமும் வளரும் உரிய நேரம் வரும்பொழுது அந்த தர்மம் விஸ்வரூபமெடுத்து அதர்மத்தை அழிக்கும்
இது பிரகலாதன், கிருஷ்ணன், அனுமன்,ராவணன் என எல்லோர் பக்கமும் காணகிடக்கும் தத்துவம், பைபிளின் மோசஸ் கூட இச்சாயலே
திராவிட திமுகவில் இப்படி வளர்ந்தவர்தான் ராமசந்திரன்
ஆதியில் நெற்றியில் விபூதியும் கழுத்தில் ருத்ராட்சமுமாக வந்தவர்தான், ஒரு தத்துவம் உண்டல்லவா? “16 வயதுக்கு மேல் ஒருவன் கடவுள் மறுப்பு பேசவில்லை என்றாலும், 30 வயதுக்கு மேல் கடவுளை நம்பவில்லை என்றாலும் அவனுக்கு மனகோளாறு” என்பது போல அன்றைய திராவிட கட்சியில் தன்னை இணைத்தார்
அன்று காங்கிரஸ் நடிகர்களை சேர்க்காது, வேறு கட்சிகள் கிடையாது. நாம் தமிழர் போன்று இருந்த திமுகவே நடிகர்களை அரவணைத்த ஒரே கட்சி
அதில் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்தார் ராம்சந்திரன், ஆனால் தன் படங்களின் ஒரு இடத்திலும் கடவுள் மறுப்போ நாத்திகமோ வராத அளவு மகா கவனமாயிருந்தார்
சோதனைகளும் கொஞ்சம் வாய்ப்புக்களுமாக போராடிய ராமசந்திரனுக்கு 1950களுக்கு பின் காலம் கனிந்தது, கலர் படங்கள் வந்த காலத்தில் தன் பாகவதர் கிராப்பினை வெட்டி நாகரீக உடை அணிந்து அவர் வந்தபின் வெற்றிபடிகட்டுகளில் வேகமாக ஏறினார்
சிவாஜிகணேசனின் புயல்வேக வளர்ச்சியும் அவரை அசைக்கமுடியவில்லை
அண்ணா எல்லோரையும் வளர்த்துவிடும் மனம் கொண்டவர், கருணாநிதி மக்கள் யாரை விரும்புகின்றார்களோ அவரை தன் அருகில் அமர்த்தும் மனம் கொண்டவர், அப்படி உருவான வாய்ப்பு ராம்சந்தருக்கு திமுகவில் நட்சத்திர அந்தஸ்தை கொடுத்தது
அண்ணா மக்கள் அவருக்கு கொடுத்த வரவேற்பில் அவரை இதயகனி என்றார், இவன் நின்றால் பொதுகூட்டம், நடந்தால் ஊர்வலம், பேசினால் மாநாடு என சொல்லும் அளவு அவருக்கு மக்கள் அபிமானம் இருப்பதை கண்டார்
சந்தேகமில்லை அன்று ராமசந்திரனை எம்.ஆர் ராதா சுடவில்லை என்றால் பக்தவத்சலம் ஆட்சி விழுந்திருக்காது, அந்த அனுதாபமே திமுகவினை ஆட்சிக்கு கொண்டுவந்தது
அடுத்து கருணாநிதியினை முதல்வராக்கவும் ராமசந்திரனின் செல்வாக்கு இருந்தது
கருணாநிதி தேர்ந்த ராஜதந்திரி, தன்னை இந்த இடத்தில் அமரவைத்த ராம்சந்திரனுக்கு இதே இடத்தில் அமர நொடிநேரம் ஆகாது என உணர்ந்து, அவரை கட்டுபடுத்த எண்ணிணார்
ஏகவலைவனிடம் கட்டைவிரல் கேட்ட துரோணரை போல , நடிப்பதை நிறுத்து மந்திரிபதவி தருகின்றேன் என்றார், நடிப்பு ஒன்றே ராமசந்திரனின் சுவாசம், மறுத்தார் ராம்சந்தர். முறுகல் தோன்றிற்று
உதயநிதி ரசிகர்மன்றங்கள் போல அன்று ராம்சந்தருக்கு எதிராக முக முத்து மன்றங்கள் தோன்றின
ராம்சந்திரனின் அசாத்திய உள்ளுணர்வு எச்சரித்தது, அப்பொழுதும் தன் பலம் அறியாமல் தனிகட்சி துவங்க யோசித்தார், காமராஜரிடம் தஞ்சம் புக எண்ணிணார். அவரோ இவரை சேர்க்க விரும்பவில்லை. அவர் ஒருமாதிரி
தனிகட்சி கண்டு திண்டுக்கல் இடைதேர்தலில் சில மாதங்களிலே மாபெரும் வெற்றி அடைந்தார், அந்த வெற்றி அடுத்த 5 வருடத்திலே அவருக்கு முதல்வர் பதவி கொடுத்தது
அடுத்த 11 வருடங்கள் அவர் தமிழகத்தின் சக்கரவர்த்தி, தேர்தல் சும்மா ஒரு சம்பிரதாயம்
சுருக்கமாக ராமசந்திரனின் வரலாற்றை சொன்னால் இப்படி சொல்லலாம்
தமிழகம் பகுத்தறிவு மண், ராம்சாமி மண் அல்லவே அல்ல. அது ராமசந்திரனை நல்ல நடிகனாக ஏற்று அப்படியே அவருக்காக திமுகவுக்கு வாக்களித்தது
கருணாநிதியும் அவரின் நாத்திகமும் தமிழகத்துக்கு வெறுப்பானவை, அந்த வெறுப்பு ராமசந்திரனுக்கும் அவருக்கு பின் ஜெயாவுக்கும் இப்பொழுது பழனிச்சாமிக்கும் ஆதரவாயிற்று
கருணாநிதி நிச்சயம் மாபெரும் அறிவாளி, ஆனால் அதர்மத்துக்காரனின் மாபெரும் அறிவும் ஒரு இடத்தில் சறுக்கும், ஒரு இடம்தான் சறுக்கும் ஆனால் அதிலிருந்து மீளமுடியாது
இது தெய்வத்தின் விதி
கருணாநிதி துரியோதனன் கர்ணணை வைத்தது போல் ராமசந்திரனை வைத்திருக்கலாம் ஆனால் அவரை குறைத்து எடைபோட்டதும், சினிமாவினை விட சொன்னதும் , முக முத்துவினை சரிக்கு சரி நிறுத்தியதும் பெரும் தவறு
அவரின் விதி அந்த காரியத்தை சரியாக செய்யவைத்தது,
துரியோதனன் விதுரரை இழந்தது போன்றது அது.
அந்த தவறு ராமசந்திரனை உயர்த்தியது முக முத்துவினை ஒழித்துகட்டியது, நடிகனாக இல்லாவிட்டாலும் பாடகனாக உயர்ந்திருக்கவேண்டிய முத்து தன் இடம் இழந்தார்
அவர் உருப்படியாக உருவாகியிருந்தால் அரசியலில் சர்வாதிகாரி ஏது? அழகிரி ஏது? கனிமொழி ஏது?
ராமசந்திரனுக்கு எதை செய்ய விரும்பினாரோ அது அவர் எதிர்பாராமல் அவர் மகனுக்கே நிகழ்ந்ததுதான் கடவுளின் விளையாட்டு
எப்படி அவரை தீர்க்க நினைத்தாரோ அப்படி தன் மகன் தீர்வதை பார்த்து கொண்டிருந்தார் கருணாநிதி.
ராம்சந்தர் மட்டும் இல்லையென்றால் இன்று ஜோதிபாசுவின் சாதனையினை முறியடித்து 50 ஆண்டுகள் தமிழக முதல்வராக இருந்து மரித்திருப்பார் கருணாநிதி , அடுத்த 30 ஆண்டுகளுக்கு அவர் மகன் இருந்திருப்பார்
தமிழகம் பெரும் சீரழிவினை சந்தித்திருக்கும், இந்து மதமே விடைபெற்றிருக்கும்
காலம் இதை எல்லாம் காக்க 1940களிலே ஒரு சக்தியினை அவர்களுடன் பழகவிட்டு பின் அதனையே எதிர்சக்தியாக்கி என்ன விளையாட்டெல்லாமோ ஆடிற்று
இன்று ராம்சந்தருக்கு பிறந்த நாள்
நாமும் கவனிக்கின்றோம், அண்ணாவினை சீண்டுவார் யாருமில்லை, கருணாநிதி மக்கள் மனதில் இருந்து உடனே அகன்றுவிட்டார்
ஆனால் மறைந்து 33 வருடமானாலும் அதே புகழுடன் அப்படியே நிற்கின்றார் ராம்சந்தர், எப்படி?
அவர் நாத்திகம் பேசாதவரும், பெண்களை மதிப்பவரும், ஏழைகளுக்கு இரங்குபவரும், ஆலயங்கள் திருப்பணி செய்தவரும் எல்லாவற்றுக்கும் மேல் பிரிவினை பேசாமல் இந்திய தேசியத்தை ஏற்றவருமாயிருந்தார்
அவரின் கட்சியே அனைத்திந்திய அதிமுக.
இதுதான் அவரின் வெற்றிக்கெல்லாம் காரணம் அவரின் நீடித்த நிலைப்புக்கும் காரணம்
“வாழ்ந்தவர் கோடி , மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்?
நாத்திகம் எதிர்த்தோர், திமுக எதிர்த்தோர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்..”
