திருக்குவளை திருமகனே

திருக்குவளை திருமகனே
தமிழர்குல மருத்துவனே
திருக்கையில் எழுதுகோலெடுத்து
தீயொன்றை ஏற்றிவைத்தாய்

தமிழாள பிறந்தவனே
தமிழரின் தலைமகனே
தமிழால் நீவாழ்ந்தாய் உன்னால்
தமிழகமும் செந்தமிழும் வாழ்ந்தது

எண்பத்து வருடம் உனக்கு பொதுவாழ்வு
ஏற்றிவைத்தாய் சமூகத்துக்கு பெருவாழ்வு
நிச்சயமாய் அது புதுவாழ்வு
யாருக்கு உன்னால் தாழ்வு?

தலைமகனே தமிழ்மகனே
தரணியிலோர் தனிபிறப்பே
மறைவாழ் தெய்வமெல்லாம் கூடினாலும்
அருமகனே உன்னைபோல் யார் வருவார்?

மலைநதி கிளைபிரிந்து செழிக்கசெய்யும்
கலைநதியே நீ எத்தனை கிளைபிரிந்தாய்
அலைஅலையாய் எத்துனை வடிவம்
சிலையானவனே கொஞ்சம் பாராய்

அதைபாட கவிஞனுண்டோ? உன்
கதை சொல்ல புலவனுண்டோ
எழுதினால் ஏடு தாங்குமா
அதை வடித்தால் முடிவுண்டோ?

பத்திரிகை எழுத்து சினிமா ஒருபுறம்
அரசியல் கவியரங்கம் மறுபுறம்
சூழும் சதியும் துயரமும் முப்புறம்
ஆயினும் நீ ஒளிர்ந்தாய் எப்புறமும்

ஓயாது உழைத்தாய்
உறங்காமல் விழித்தாய்
ஓராயிரம் ஆண்டு காரியத்தை
ஓர் பிறப்பில் செய்து சென்றாய்

ஆண்டொன்று ஆயிற்றாம் நீ மறைந்து
ஆதவனுக்கு ஏது மறைவு?
அனுதினமும் எம்மொடு நீ வாழ்வாய்
அந்தமுகம் தவிர எதை காண்போம்

உழைக்க சொன்னாய், உண்மை சொன்னாய்
தழைக்க சொன்னாய், நிலைக்க சொன்னாய்
தமிழை சொன்னாய், தகமை சொன்னாய்
பிழைக்க வைத்தாய், தமிழகத்தை வாழ வைத்தாய்

முரசொலியாய் முழங்கி நின்றாய்
அறநெறிகள் காத்து நின்றாய்
பொல்லுலகில் இருந்த விதிமாற்றி
நல்லுலகாய் மாற்றி தந்தாய்

இன்னல்சூழ் நிலையெல்லாம்
புன்முகத்தால் கடந்துவந்தாய்
தந்திரம் செய்தாய் நல்சாகசம் செய்தாய்
அந்திவான் மின்னலாய் அடிக்கடி சிரித்தாய்

கால்பட்ட இடமெல்லாம் செழிக்கசெய்யும் காவேரி போல்
நீ தொட்ட இடமெல்லாம் துலங்கி நின்றதய்யா
காவேரியால் அமைந்தது சோழநாடு
முத்தமிழே மூவேந்தே உன்னால் வாழ்ந்தது தமிழ்நாடு

நெல்லுக்கும் புல்லுக்கும் கொடுக்கும் ஆறுபோல‌
நல்லோர்க்கும் பொல்லார்க்கும் பெய்யும் மழைபோல‌
நல்லுலகில் எல்லோருக்கும் வாழ்வளிக்க பாடுபட்டாய்
பொல்லாரும் அதை மறுப்பாரோ முடியுமோ?

உன்போல் துரோகத்தை கண்டவனுமில்லை
உன்போல் அதை கடந்தவனுமில்லை
எந்நாளும் வலிகண்டாய் பழிகொண்டாய்
ஒருநாளும் அதனால் முடங்கினாயில்லை

அண்ட சாஸ்திரம் உன்னில் அடக்கம்
கலைஞர் என்பவர் அரசியல் தொடக்கம்
கண்ட மானிடர் கைகள் குவியும்
கலைஞரென்றால் பகையும் வணங்கும்

கலையாய் எழுந்தவனே தீயாய் சுட்டவனே
மலையாய் நின்றவனே சிலையாய் போனாலும்
தலைமுறையாய் உன் பெயர் நிற்கும்
அலைஅலையாய் உன் புகழ் பரவும்

எந்தையே எம் தகையே
சிந்தையே நீ, சிரிப்பும் நீ
கந்தையாய் மனம் உடையும்பொழுதெல்லாம்
மந்தை கன்றாய் மனதை துள்ளவைத்தவன் நீ

ஓராண்டல்ல, ஒருநூறு ஆண்டல்ல‌
ஆயிரம் ஆண்டானாலும் உனக்கு அழிவில்லை
தஞ்சை கோவில் போல் தரணியில் நிலைத்திருப்பாய்
தரணிவாழ் தமிழர்மனதில் வாழ்த்திருப்பாய்

கல்லணையால் வாழும் தஞ்சை போல‌
நைல்நதியால் வாழும் எகிப்து போல‌
எந்நாளும் எம்மோடு கலந்திருப்பாய்
நினைவோடு வாழ்ந்திருப்பாய்