திருவோணம்

மாந்தோப்பு போன்ற கன்னம்
மயக்கிடும் கண்களோ மீன்கள்
மாதுளை பிளந்தன்ன செவ்வாய்
புன்னகை முத்து பந்தல்
வளர்பிறை நிலவே நெற்றி
தளிர்மேனி குளிர்ந்த தென்றல்
கலைஅமுத கலச முகம்
காட்டிடும் ஆயிரம் ஜாலம்

ஒருபுறம் மன்மத சேனை
மறுபுறம் மாணிக்க மாலை
சீர்பெற்ற வளைவுகள் காட்டும்
திருவிழா தேர்கோலங்கங்கள்
கார்குழல் புரளும் உச்சி
உயிர்மருகி உருளும் காட்சி
பேர்பெற்ற கேரள பெண்கள்
பெண்ணுக்கு அவளே நிகராம்

கடவுளின் தேசத்தில் தேவதைக்கு பஞ்சமுண்டோ
தேவதைகள் கொண்டாட நாளின்றி நியாமுண்டோ
தேவனவன் சித்தம் கொண்டான் வாமணாய் வந்துநின்றான்
தேவதைகள் கொண்டாட மாவலியும் தலைதந்தான்

தேவதை கூட்டம் தேர்போல் நகரும்பொலிவில்
கதையும் கவிதையும் மழைபோல் கொட்டும்
புதியதோர் உவமை அணியாய் பொங்கும்
ரதியினர் நதியில் மதியும் மயங்கும்

இவளுக்கு இவள் அழகென்று
அவளுக்கு அவள் அழகென்று
இயம்பும் அனைத்தும் இயமயமாய் நீளும்
ஆடும் ஊஞ்சலில் மனம் அலைந்தாடும்

திருவோணத்து பண்டிகை போலே
ஓருபண்டிகை உலகில் உண்டோ
தேவலோகம் இதுவென காட்டும்
தேவதை தேசம் திருநாள் இன்னாள்

கேரளத்து பெண்களெல்லாம் கூடிஆடும் நாளிலே
ஈரடியில் உலகளந்த மூன்றிலொரு தெய்வமும்
சீதை கண்ட மானிதென்று கலங்கி நிற்கும்வேளையில்
கீதை கற்ற மாந்தர்கூட மயங்கி நிற்பதுண்மையே