தீபத்தின் சக்தி.

அந்த இந்தியா சீனாவுடனான யுத்தத்தில் சோர்ந்திருந்தது, நேரு என்பவர் சத்தமே இல்லை அவர் துண்டிருந்தார், தலைவன் உற்சாகமாக இல்லா சேனையும் தேசமும் தோற்கும்

இதை மிக சரியாக கணக்கிட்டே `1965ல் பாகிஸ்தான் படையெடுத்தது, துவண்ட இந்தியா துவண்டே பலகீனமாஹிவிட்டது, நேருவும் இல்லை அதனால் ராணுவமும் உற்சாகமாக இல்லை என்றுதான் மிக நுட்பமாக வந்தார்கள்

ஆனால் சாஸ்திரி அரணாக எழும்பினார், அவருக்கு துணையாக காமராஜர் எனும் மாபெரும் தியாகசுடரும் எல்லைக்கே சென்றது, “ஜெய் ஜவான்..” என அவர் முழங்கிய முழக்கத்திலே உற்சாகம் கொண்ட இந்தியா பாகிஸ்தானை புரட்டி அடித்து அந்த மாபெரும் வெற்றியினை பெற்றது
மாபெரும் சக்திவாய்ந்த ஹிட்லரை தன் உற்சாகமான உரைகளால் நம்பிக்கையாய் வைத்திருந்து லண்டனுக்குள் வராமல் பார்த்து கொண்டான் சர்ச்சில், அந்நேரம் லண்டனை காத்தவன் அவனே

ஐசன்ஹோவர், கென்னடி போன்றோரின் அழைப்பும் நடவடிக்கையுமே அமெரிக்கர்களை உற்சாகம் கொள்ள வைத்து எத்தனையோ இடர்களில் அவர்களை மீண்டெழ செய்தது

ஆம் தேசத்து தலைமகன் மக்கள் உற்சாகம் இழந்த நேரமெல்லாம் நம்பிக்கை ஊட்ட வேண்டும் அது அவனின் தலையாய கடமை, தேசமும் அவன் பின் நாங்கள் இருக்கின்றோம் என நிற்க வேண்டும்

அன்று சாஸ்திரி போல இன்று நம்மும் நிற்பவர் மோடி

தீபம் ஏற்றுதல் இன்றல்ல நேற்றல்ல எக்காலமும் ஆசியாவில் நிற்கும் மரபு, தீபங்கள் முன்னால் உன் பிரார்த்தனையினை சொல் என்பது வேதங்கள் சொல்லி கொடுத்த மரபு

பைபிளின் மூல தெய்வம் அதைத்தான் சொன்னது, என் உடன்படிக்கை பெட்டிமுன் தீபம் ஏற்று என சொன்னது, இன்றும் யூதர்களின் அடையாளம் அந்த விளக்குதண்டே

அதன் தொடர்ச்சிதான் கத்தோலிக்க பிரார்த்தனைகள் விளக்கு இன்றி நடைபெறா,

யூதருக்கு விளக்கு தண்டு, இந்தியாவில் குத்து விளக்கு மகர விளக்கு என ஏகபட்ட விளக்குகள், தீபம் என எல்லா மானிட இனமும் தீபத்தை போற்றி வணங்கியது

இயற்கையினை வணங்கும் இனத்தில் கடவுளே தீபம் ஒன்றே, அது ஒன்றேதான்

தன் துக்கம், மகிழ்ச்சி, எதிர்ப்பார்பு, நன்றி என எல்லாவற்றையும் தீபத்தின் முன்னாலே சொல்லி அழுது, மகிழந்து, நன்றி சொல்லி வளர்ந்த சமூகம் நம் சமூகம், மறுக்க முடியுமா?

திருமணத்தில் தொடங்கி, பிள்ளை கையால் தீபமேற்ற சொல்லி வாழ்ந்து முடித்ததும் மோட்ச தீபம் ஏற்ற சொல்லி, இந்தியர் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் கூட வரும் விஷயம் தீபம்..

தீபத்தின் சக்தி அது

மின் விளக்கினை விட சூட்சுமம் நிறைந்தது தீபம், மின் விளக்கு செயற்கை அணுகுண்டு சக்தி என்றால் தீபத்தின் சக்தி சுனாமி, எரிமலை போன்ற மகா மகா சக்தி

அதைத்தான் பாரத பிரதமர் கவனமாக ஏற்ற சொல்கின்றார், அதுவும் அவர் சொல்லும் நேரம் கூட்டு பிரார்த்தனைக்கு உகந்த நேரம்

மின் விளக்குகளை ஏன் அணைக்க சொன்னார்? தீபத்தின் மகத்துவமும் அழகும் அதில்தான் தெரியும், பிரார்த்தனைக்கும் பலன் உண்டு

இன்று யூத வழிபாடு இதை செய்கின்றது, கத்தோலிக்க வழிபாடு மெழுகு ஏற்றி செய்கின்றது, இவை எல்லாவற்றின் மூலமும் தொடக்குமான இந்த பூமியின் வேதமும் அதைத்தான் சொல்கின்றது

பாரத பிதாமகனும் அதைத்தான் சொல்கின்றார், அதை செய்யவேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமை

இந்திய தர்மத்து பிரார்த்தனையினை நோக்குங்கள் அது தனக்கென இருக்காது, தன் இனத்துக்காய் இருக்காது அது எல்லா பிரார்த்தனையிலும் உலக நலனை தேடுகின்றது, உலகம், உலக நலன், உலக மாந்தர் என தேடுமே அன்றி எக்காலமும் குறிப்பிட்ட மானிடர் நலனை நாடாது

இது உலகத்துக்காக பிரார்த்திக்கும் நேரம்

சிலர் சொல்வது போல நாளை பாஜகவின் தொடக்க நாள் அதனால் மோடி நயவஞ்சகமாக பிரார்த்திக்க சொன்னார் என்பதெல்லாம் வடிகட்டிய பொய்

நாளை பங்குனி உத்திரம் இன்று இரவே அதற்கான தயாரிப்பு, உத்திரம் என்பது முன்னோர்களையும் ஆன்மாக்களையும் தெய்வங்களையும் வணங்கும் உன்னத நாள்

சீனா ஏப்ரல் 3ம் தேதி துக்க நாள் என்றதே ஏன்? சீன அரசு அறிவிக்காவிட்டாலும் அது அவர்களின் கலாச்சாரமான, நம் பங்குனி உத்திர சாயல் கொண்ட “ஜின் பெங்” எனும் முன்னோருக்கான அல்லது இறந்தோருக்கான் அஞ்சலி

இந்த பவுர்ணமி அவர்களுக்கும் விஷேஷமான பவுர்ணமி, அதைத்தான் சீனா முந்திகொண்டு விஷேஷமாக பிரார்திப்போம் எனும் கம்யூனிச மொழியில் சொன்னது

பாரதமும் அதைதான் சொல்கின்றது

இன்று இரவு அந்த 9 நிமிடங்களும் நிசப்தம் கலந்த அஞ்சலிக்கானது, இந்த பூமியில் கொரோனாவால் பிரிந்த அல்லது பிரிந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு ஆன்மாவுக்குமானது

கொரோனா எனும் காலத்தின் தூதன் சாந்தமாக தன் கடமையினை முடித்து வெளியேற வேண்டிகொள்ளும் நேரமது

இந்தியாவில் தன் கோரகரங்களை அவன் நீட்டாமல் ஒதுங்கி செல்ல மன்றாடும் நேரமது

அதை மகா அமைதியான மனதுடன், ஒன்றுபட்ட மனதுடன் செய்வோம், தனிதனியே விளக்கேற்றினாலும் அந்த ஒன்றுபட்ட ஆன்ம பலன் மிகபெரும் காரியத்தை பூமிக்கு செய்யும்

பூமியின் 650 கோடி மக்களுக்காக இந்த 120 கோடி மக்களும் மன்றாடுகின்றார்கள் என்பதை உலக மாந்தரும் தெய்வமும் உணரும் நேரமிது

இந்தியர் தங்களுக்காக பிரார்த்திக்கின்றார்கள் என மேல்நாட்டவர் நம்பிக்கையும் அன்பும் நம்பிக்கையும் கொள்ளும் நேரமிது

நாம் ஒவ்வொரு இந்தியனிடமும் கேட்கின்றோம், நீங்கள் எந்த மதமாகவும் இருங்கள். அது இந்து, இஸ்லாம், கிறிஸ்தவன், சீக்கியன் என எந்த வழியுமாக அந்த பரம்பொருளை தியானிப்பவர்களாக இருங்கள்

ஆனால் இறைவன் ஒளிவடிவானவன் என்பதை உங்கள் வழி ஒப்புகொள்ளும் அல்லவா? மதங்களின் ஒரே இணைப்பு சங்கிலி அந்த தத்துவம் அல்லவா?

அதை தீப ஓளியில் ஏற்றி பார்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

ஓ இந்துக்களே உங்கள் பாரம்பரியபடி விளக்கேற்றி வேண்டுங்கள்

ஓ கிறிஸ்தவர்களே மோசே ஏற்றிய 7 கால் விளக்கினை நீங்கள் ஏற்றாவிட்டாலும் ஒற்றை மெழுகினை ஏற்றி வையுங்கள்

ஓ இஸ்லாமிய சகோதர சகோதரிகளே இன்று மட்டும் கூடுதலாக ஒரு வேளை பிரார்த்தியுங்கள், மெக்கா நோக்கி தொழும் நீங்கள் அந்த மெக்காவுக்கும் மேற்கே கொத்து கொத்தாக சாகும் மக்களுக்காக பிரார்த்தியுங்கள்

ஆன்ம பலத்தின் சக்தி அப்படியானது, 120 கோடி ஆன்மாவும் ஒன்றுபட்டு நிற்கும் பொழுது அந்த குரலின் வலிமைக்கு சக்தி அதிகம்

அந்த சக்திதான் சுதந்திரம் எனும் அதிசயத்தை நமக்கு கொடுத்தது, அந்த ஆத்மபலமே பெரும் போர்களிலும் தேசத்தை காத்து நின்றது

அந்த ஆத்மபலமே தர்மத்தின் பலமாய் இத்தேசத்தை கொரோனாவில் கூட மிக சிறிய சேதாரத்துடன் காத்து வருகின்றது

அது இன்னும் கூடட்டும், தீபங்கள் வழியே அந்த பலம் கடவுளை தொடட்டும், ஒளியில் வசிக்கும் அந்த பரம்பொருள் கோடிகணக்கான தீபங்கள் எரிவதை கண்டு மனமுருகி இங்கே இறங்கி வரட்டும்

ஆலய குருக்களே, ஆலயத்தில் மக்கள் கூடத்தான் தடையே தவிர உங்களுக்கு தடை இல்லை, நீங்களும் ஆலயங்களி ஏற்றுங்கள் அது எந்த ஆலயம் என்றாலும் சரி

எல்லா ஆலயங்களும் தீபத்தால் நிரம்பட்டும்.. குளக்கரை நீரிலும் தீப ஓளி தெரியட்டும்

கடமையில் இருக்கும் காவலரும் டாக்டர்களும் கூட ஏற்றி வைக்கலாம், அவர்கள் கடமையில் இருந்தாலும் கூட காவல் நிலையங்களிலும் மருத்துவ மனைகளிலும் அந்த ஜோதி எரியட்டும்

ராணுவ முகாம்களில் எரியட்டும்

ஒவ்வொரு இந்தியனின் வேண்டுதலும் இன்று ஜோதியாய் எரியட்டும்

முதியோர் முதல் மழலைகள் வரை தீபம் ஏற்றட்டும், குறிப்பாக அந்த வருங்கால தலைமுறையின் நாட்டுபற்றினை வளர்க்கும் ஜோதியாக இத்தீபம் அமையட்டும்

குழந்தைகள் கள்ளங்கபடமின்றி ஏற்றி வைக்கும் ஜோதிக்கு தெய்வம் தானாய் இறங்கி வரும், குழந்தையும் தெய்வமும் வேறல்ல‌

இங்கு ஜோதி எரியும் பொழுதெல்லாம் நன்மை விளைந்திருக்கின்றது

ஒரு நாள் அயோத்தி எங்கும் விளக்கெரியத்தான் ராமன் நாடு திரும்பினானாம், இந்தியா எங்கும் விளக்கு எரியத்தான் மகாவீரர் சொர்க்கம் எய்தினாராம்

நல்ல விஷயங்களை விளக்கேற்றி வணங்குதல் மரபு, இன்றும் அந்த மகாபலி சக்கரவர்த்திக்காக ஓணமன்று கேரளத்தில் குத்துவிளக்கு எரியாத வீடு இல்லை

சுதந்திரம் அன்று இந்தியா எங்கும் விளக்கொளி பிரகாசித்ததாம்

இந்தியா இன்றிரவு நட்சத்திர கூட்டமாய் மின்னட்டும், அதை பார்க்கும் தெய்வ கூட்டம் இங்கே இறங்கிவரட்டும்

நிச்சயம் இது போர், மாபெரும் போர் ஆனால் கண்ணுக்கு தெரியாத போர். மருத்துவரும் காவலரும் நிகழ்த்தும் மாபெரும் போர்

அந்த 9ம் நிமிடம் முடிந்ததும், அன்று சாஸ்திரி “ஜெய் ஜவான்” என முழங்கியது போல தேசமெங்கும் “ஜெய் டாக்டர்ஸ், ஜெய் போலீஸ், ஜெய் ஹெல்பெர்ஸ்” என முழங்கட்டும்

அது இந்தியா எந்த சவாலையும் எதிர்கொள்ளும் என்ற நம்பிக்கையினை கொடுக்கட்டும்

கொரோனா நோயாளிகளுக்கு தேசம் நம்மோடு என்ற நம்பிக்கை பிறக்கட்டும், நாடு முழுக்க தேசம் பழைய நிலையினை எட்டும் என்ற நம்பிக்கை பிறக்கட்டும்

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, குஜராத் முதல் அசாம் வரை இந்த பெரும் ஜோதி எரியட்டும்

நமக்கொரு தலைவன் இருக்கின்றான், அவன் வழிகாட்டுகின்றான் அவன் வழியில் நாடு நலம்பெறும் என இந்த இக்கட்டான நிலையில் இருந்து மீண்டெழுவோம் என்ற உற்சாகம் பிறக்கட்டும்

ஏற்றிய தீபத்தில் இம்மானிட இனம் மனதை வைத்து தன்னை தேடும் பிரார்த்தனையில் பரம்பொருள் இறங்கி வந்து உலகுக்கு நலம் கொடுக்கட்டும்

ஏற்ற போகும் அந்த ஜோதி மிக பெரும் ஒளியினை தேசத்துக்கு கொடுக்கட்டும், அந்த முழக்கம் “”ஜெய் டாக்டர்ஸ், ஜெய் போலீஸ், ஜெய் ஹெல்பெர்ஸ்” முழு உற்சாகத்தை கொடுக்கட்டும்.

அந்த ஒன்பது நிமிடம் ஒரு கோடி நம்பிக்கையினை நாட்டுக்கு வழங்கட்டும்

ஜெய் ஹிந்த், வந்தே மாதரம்