துயரங்களில் எல்லாம் பெரும் துயரம்

துயரங்களில் எல்லாம் பெரும் துயரம் பெற்றோர் கண் முன்னால் பிள்ளைகள் சாவது

அதுவும் அந்த பிஞ்சுகள் தீயிலே கருகிசாவதை காண்பதென்பது மாபெரும் துயரம், தாளா வலி. ஆண்டாண்டு அழுதாலும் தீரா சோகம்

அந்த சோகத்தை கும்பகோணம் பெற்றோர்களுக்கு கொடுத்தது நிச்சயம் அந்த தமிழக அரசும் அதன் கல்வி கொள்கைகளும்

விபத்து என்று சொல்லி தப்பமுடியாத குற்றம் அது

கும்பகோணத்தில் 97 குழதைகளை தீயில் தள்ளிவிட்டு இன்று வரை கும்பகோணம் “தீவிபத்து” என்று விபத்தாகவே பார்க்கபடுமே ஒழிய அது பெரும் குற்றம் என்றோ?, படுகொலை என்றோ சொல்லபடுவதில்லை.

அது அரசின் அலட்சியத்தால் நிகழ்ந்த படுகொலை, அதுவன்றி வேறு பெயரில் அழைக்கபடவே முடியாது

கல்வி அதிகாரிகளும் அவர்களுக்கான சட்டதிட்டங்களும் கடுமையாக இருந்தால் அந்த பலி சாத்தியமே அல்ல‌

ஆனால் லஞ்சத்தால் காந்தியினை கூட கோட்சே என சொல்லவைக்கபட கூட இந்தியாவில் எல்லாமே சாத்தியம்

அப்படித்தான் அந்த கொலைகாரர்கள் தண்டனையின்றி வெளியே வந்தனர்

கும்பகோணம் பள்ளி எரிந்து குழந்தைகள் பலியான வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை என்பது ஒருகாலமும் ஏற்றுகொள்ளமுடியாத ஒன்று

நீதிமன்றம் இரு குற்றவாளிகளை அடையாளம் கண்டது ஆனால் அவர்களை தண்டிக்க முடியாமல் நீதிமன்றம் கையினை பிசைந்து நின்றது

ஒன்று பாழாய்போன தேசத்தில் பிறந்த அந்த குழந்தைகள். அடுத்து அந்த பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பிய அந்த பெற்றோர்.

இதில் குழந்தைகள் இல்லை அதனால் அந்த பெற்றோரை பிடித்து நீதிமன்றம் தண்டித்திருக்க வேண்டும். ஆனால் பெருந்தன்மையாக விட்டுவிட்டது

எப்படி இப்படி குற்றவாளிகள் தப்பிக்கலாம்?

நீதிதுறையினை நிச்சயம் மறுசீரமைப்பு செய்து அந்த பெற்றோரை தண்டித்தே தீரவேண்டும்.

இப்படிதான் சொல்ல வேண்டி இருக்கின்றது, அவ்வளவு பெரும் அநியாயம் இது.

பெரும் தவறான முன்னுதாரணத்தை அந்த நீதிமன்றம் செய்திருக்கின்றது. நீதிதுறையின் மிக பெரும் கருப்பு பக்கங்களில் அதன் கருப்பு தினங்களில் அந்த தீர்ப்பும் ஒன்று

பரிதாபத்துகுரிய தமிழ்நாட்டில் ஒவ்வொரு பாதுகாப்புக்கும் பல உயிர்களை தியாகம் செய்தே பாடம் கற்க வேண்டும் என்பது விதி

அது எல்லா விஷயங்களிலும் உண்டு

அப்படி மற்ற குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக கும்பகோணத்தில் 97 குழந்தைகள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த தினம் இன்று

அந்த மாபெரும் தியாகத்தாலே மற்ற பள்ளிகளில் ஓரளவு பாதுகாப்புகள் செய்யபட்டன‌

இன்றும் இந்நாளில் அந்த கொடூரத்தை நினைத்து ஓரளவாவது பள்ளிகள் குழந்தைகள் பாதுகாப்பினை உறுதி செய்யும்

மாபெரும் தியாகத்தை செய்த, மற்ற பிஞ்சுகளை காக்க தங்கள் இன்னுயிர் நீத்து பேரவலத்தை உலகுக்கு சொன்ன அந்த பிஞ்சு மொட்டுகளுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

அவர்களின் பெற்றோருக்கு கண்ணீரை தவிர வார்த்தை இல்லை, எந்த வார்த்தையும் அந்த சோகத்துக்கு ஈடாகா

ஆற்றா கண்ணீர் ஒன்றே அவர்களுக்கான ஆறுதல் மொழி

ஆம், தெய்வங்களிடமே அதற்கு பதில் இல்லை. அவைகளும் நம்முடன் சேர்ந்து கண்ணீர் வடிக்கும் நேரமிது