நடிகர் விஷால் எச்சரிக்கை….

புதிய திரைப் படங்களை ஊடகங்களிலோ சமூகவலை தளத்திலோ கடுமையாக விமர்சித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – நடிகர் விஷால்

இவர்களுக்கு படம் பார்க்க, பால் குடம் எடுக்க, மாலை போட, கை தட்ட எல்லாம் ரசிகர்கள் வேண்டும், ஆனால் விமர்சித்தால் நடவடிக்கை எடுப்பாராம், எப்படி இருக்கின்றது?

கிரிக்கெட் முதல் ராணுவம் வரை விமர்சிக்கும் உலகிது, கிரிக்கெட் என்ன டிரம்ப் முதல் மோடி வரை தொங்கவிடுவார்கள், இது உலக யதார்த்தம்

ஆனானபட்ட டிரம்பினையும், புட்டினையும் அவர்களின் கொள்கைகளையும் விமர்சிக்கும் உலகில் இவர்கள் சினிமாவினை விமர்சிக்க கூடாதாம்

இவர்கள் என்ன கடவுளா?

மிஸ்டர் விஷால், ஒரு கார் வெளிவரும்போதே அதனை அக்குவேறு ஆணிவேராக விமர்சிப்பார்கள், இதில் ஒரு விஞ்ஞான கலைவடிவம் வரும் பொழுது விமர்சனம் வரத்தான் செய்யும்

எந்த நீதிமன்ற கதவுகளை தட்டினாலும் தடுக்க முடியாது, என் ஆட்சியினை விமர்சிக்கின்றார்கள் என நீதிமன்றம் ஓடிய ஜெயலலிதாவிற்கு முன்பு உச்சநீதிமன்றம் தலையில் கொட்டியதை மறந்துவிட்டீர்களா?

மீறி தடுக்க வேண்டுமென்றால் உங்கள் வீட்டு திரையில் படத்தை , வி.கே ராமசாமியும் ஜனகராஜூம் பார்த்தது போல‌ தனியே ஓடவிட்டு பார்த்துவிட்டு பெட்டியினை பாதாள அறையில் புதைத்து வைக்கவும், ஒரு பயலும் விமர்சிக்கமாட்டான்

இல்லை வெளியிட்டுத்தான் தீருவோம், யாரும் விமர்சிக்க கூடாது என்றால்..

திருட்டு விசிடியிலா வெளியிடுவீர்கள்? தியேட்டரில்தானே வெளியிடுவீர்கள்? அது காலியாக இருந்தால் அடுத்த படத்திற்கு பூஜை போடுவீர்கள்???

ரசிகர்கள் இல்லாத எந்த கலையும், கலைஞனும் நிலைக்கமுடியாது மிஸ்டர் விஷால்

வெறும் திரைகலைஞர்கள் நீங்கள், கடவுள்கள் அல்ல..

ஆனானபட்ட கடவுளையே கலாய்க்கும் தமிழகம் திரைபடங்களை மட்டும் விட்டுவிடுமா?

எல்லா தமிழர்களையும் சரத்குமாராக நினைத்தே இவர் பேசிகொண்டிருப்பார் போல..